வித்தியாசமான கான்செப்ட்களை கையிலெடுக்கும் அருள்நிதி, இந்த முறை ‘Recreation Capture’ கான்செப்ட்டில் ஒரு த்ரில்லராக ‘டைரி’ படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு இரட்டைக் கொலை. அந்த கொலையைச் செய்த கொலையாளிகள் பயணிக்கும் பேருந்து பயணம். அந்தப் பயணத்தின் போது எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்து. இந்த மூன்று சம்பவங்களை வைத்து இரண்டு மணி நேரம் பன்னிரெண்டு நிமிடங்கள் பரபரக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இன்னாசி பாண்டியன்.
பொதுவாகவே சஸ்பென்ஸ், த்ரில்லர், ஹாரர் வகையறா படங்களின் கதையை சொல்லிவிட்டால் பிறகு படம் பார்க்கும் சுவாரஸ்யம் இல்லாமலே போய்விடும். அதனால் மற்ற விஷயங்களுக்கு வருவோம்.
த்ரில்லர் சப்ஜெக்ட் என்பதால் அருள்நிதி நடிப்பைப் பற்றி ஐந்தாறு வரிகளுக்கு நீட்டி முழக்க வேண்டிய அவசியமில்லை. த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை. ’அருள்நிதி அப்படியே வந்து பெர்ஃபார்ம் பண்ணினாலே போதும்’ என்று இயக்குநர் ஸ்கிரிப்டில் செட்டிலாகிவிட்டார் போலும்.
பவித்ரா மாரிமுத்து, ஊட்டி குளிரிலும் காக்கிச் சட்டையில் விறைப்பாக மிரட்டுகிறார். காதல் டூயட் காமெடி என வேறெதுவும் இல்லாததால் முதல் படத்தில் தான் கற்றுக்கொண்ட வித்தைகளை இறக்கி விட பவித்ராவுக்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை.
காமெடிக்காக சாம்ஸ். இவர் அடிக்கும் சில கமெண்ட்களுக்கு திரையரங்குகளில் சிரிப்பு எழுகிறது. இவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எல்லோருமே கொஞ்சம் தெரிந்த, அதிகம் தெரியாத முகங்கள். அதுதான் இந்த டைரியில் ப்ளஸ்.
அருள்நிதி ஆரம்பத்தில் கேஸை தேர்ந்தெடுக்கும் போது கண்களை மூடி ஃபைலை தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தை, ஃப்ளாஷ்பேக்கில் அவரது அப்பா கிஷோர் சொல்லும் வார்த்தைகளை வைத்து நகர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.
இறுதியில் இறந்து போன அம்மாவையும், வளர்ந்து பெரியவனான மகனையும் மீண்டும் அந்த திகில் பேருந்தில் சந்திக்க வைப்பது எமோஷனல் டச்.
படம் பரபரப்பாக தொடங்கும் கொஞ்ச நேரத்திலேயே அருள்நிதிக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டார்கள் போல. அரை மணிநேரம் ஆளையே பார்க்க முடியவில்லை.
ஊட்டியின் 13-வது ஹேர் பின் வளைவில் அடிக்கடி விபத்து நடக்கும் என்று ஒரு விபத்தைக் காட்டுகிறார்கள். அடுத்து இருபது வருடத்திற்கு முன்பு நடந்த கொலை பற்றிய துப்பு கிடைக்கவில்லை என்கிறார்கள். இப்படி அடுக்குவதால் படத்தின் முதல் பாதியில் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஒரு திகில் நமக்கு வருகிறது.
ரெஸ்ட் எடுத்துவிட்டு, பஸ்ஸில் அருள்நிதி செட்டிலானதும்தான் இரண்டாம் பாதி வேகமெடுக்கிறது. ஊட்டியில் நடக்கும் கதை என்பதாலோ என்னவோ. ஊட்டி டவுன் பஸ்ஸிற்குள் பாதி படத்தை எடுத்திருக்கிறார்கள்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற வகையில் இரவின் குறைந்த வெளிச்சத்தை அழகாய் படம் பிடித்திருக்கிறது. ஃபேண்டம் ப்ரதீப்பின் ஆக்ஷன் ஊட்டி குளிருக்கான ஹாட் சாய் போல ஆவி பறக்க செய்கிறது. ரான் எத்தன் யோஹனின் இசை பின்னணியில் பயத்தைக் கிளப்புகிறது.
நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் டெம்போவை தக்கவைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
டைரி –இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதியிருக்கலாம்.