No menu items!

திருக்குறள் – சர்ச்சையான ஆளுநர் ரவி பேச்சு – ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

திருக்குறள் – சர்ச்சையான ஆளுநர் ரவி பேச்சு – ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, டில்லியில் திருக்குறள் பற்றி பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. ஆளுநர் பேச்சு குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டோம்.

டில்லியில் லோதி சாலையில் உள்ள டெல்லி தமிழ் கல்விக் கழகத்தின் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 25-08-2022 அன்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, “திருக்குறள் தர்ம வேதத்தை உள்ளடக்கியது. திருக்குறளில் முதலாவது குறளே ஆதிபகவன் பற்றியது. அதன் தொடர்ச்சியாக வரும் 10 குறள்களிலும் அடிப்படையாக இருப்பவை ‘அந்த ஆதிபகவன் மீதான பக்தியை’ பற்றியது. ரிக் வேதத்திலும் ஆரம்பத்தில் ஆதிபகவன் என்றே தொடங்குகிறது. அந்த ஆதிபகவன்தான் ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சத்தை படைத்தார். பிறகு இந்த புவியைப் படைத்து அதன் எல்லாவற்றிலும் நிலைத்திருக்கிறார். இதைத்தான் திருவள்ளுவர் சாமானிய மனிதனுக்கும் புரியும் வகையில் தமது குறளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார்த்தையின் முதலாவது மொழிபெயர்ப்பை செய்தவர் ஜி.யு. போப். அவர் ஆதிபகவன் என்ற வார்த்தையை ‘முதன்மை தெய்வம்’ (ப்ரைமல் டெய்ட்டி) என்று மொழிபெயர்த்திருக்கிறார். ‘ப்ரைமல் டெய்ட்டி’ என்பது பழம் சமய சமூகத்தை குறிக்கும். ஆனால், ஆதிபகவன் என்பது பழம் சமூகத்தால் கருதப்பட்ட வெறும் முதன்மை தெய்வம் மட்டும் கிடையாது. அதை விட சக்தி வாய்ந்த ஆதிபகவன்.

ஆனால், ஜி.யு.போப் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். ஜி.யு. போப் ஒரு மதபோதகர். அவர் சுவிஷேசத்தை பரப்பும் சொசைட்டியின் (எஸ்பிஜி) உறுப்பினர். இந்தியாவுக்கு ஊழியம் செய்வதற்காக வந்தார். ஒட்டுமொத்த திருக்குறளையும் அவர் ஆன்மிகமற்றதாக ஆக்கியிருக்கிறார். தனது மொழிபெயர்ப்பில் திருக்குறளில் இருந்த ஆன்மிக தாக்கத்தை அவர் தவிர்த்திருக்கிறார். திருவள்ளுவர் ஒரு பழுத்த ஆன்மிகவாதி” என்று கூறினார்.

ஆளுநர் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ், “ஜி.யு. போப் தமிழ் இலக்கியத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும். வருணாசிரமதாரர்களின் இத்தகைய கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழ் பண்பாட்டிற்கும் எதிராக விடுக்கப்பட்டிருக்கும் சவால்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் கூறுவது சரியா? அமைச்சர் சொல்வது சரியா?

இது பற்றி தமிழ் பேராசிரியர் அ. ராமசாமியிடம் பேசினோம். “திருக்குறளில் கடவுள் பற்றி, மதம் பற்றியெல்லாம் இருக்கிறதுதான். ஆனால், திருவள்ளுவர் குறிப்பிடும் கடவுளும் மதமும் ஆளுநர் குறிப்பிடும் கடவுளும் மதமும் வேறுவேறு. இந்து மதம் பற்றி திருக்குறளில் எங்கேயும் எந்த குறிப்பும் கிடையாது. திருக்குறள் பேசும் மதம் சமணமும் பெளத்தமும்தான். அதுபோல் திருவள்ளுவர் பேசும் பிரபஞ்சத்துக்கும் ஆளுநர் பேசும் பிரபஞ்சத்துக்கும்கூட தொடர்பில்லை. கடவுள், பிரபஞ்சம், ஆன்மீகம் பற்றியெல்லாம் இன்று அறிவியலாளர்கள் பேசுவதைப் போல்தான் அன்று திருவள்ளுவர் பேசுகிறார். இந்நிலையில், இது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் ஒரு அரசியல்வாதி போல் ஆளுநர் பேசுகிறார். அதை பொருட்படுத்த தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்” என்றார்.

ஆனால், இதை மறுத்த, தமிழக பாஜக பத்திரிகையான ‘ஒரே நாடு’ இதழின் ஆசிரியர் நம்பி நாராயணன், “ஆளுநர் ஒரு நல்ல விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார். அதனை நான் வரவேற்கிறேன். தமிழ் மொழி ஆன்மிக செறிவுள்ள இலக்கியங்கள் தழைத்தோங்கிய மொழி, திருப்புகழ், கம்பராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் என பல உதாரணங்களை சொல்ல முடியும். அதுபோல் திருக்குறளும் ஆன்மிக நூல்தான். இது தொடர்பாக மறைந்த தொல்லியல் அறிஞர் நாகசாமி ‘திருக்குறள் சொல்லும் ஆன்மிக நெறிகள்’ என்று நூலே எழுதியுள்ளார். திருக்குறளையும் பகவத் கீதையையும் ஒப்பிட்டு மறைந்த ஓங்காரநந்தா சுவாமிகள் நூல் எழுதியுள்ளார்.

திருக்குறளுக்கு தவறாக உரை எழுதிய திராவிட கழகத்தினர்தான் அதிலிருந்த பக்தியை நீக்கிவிட்டார்கள். இப்போது இதை ஆளுநர் சுட்டிக்காட்டியதும் திருக்குறள் சமண நூல் என்கிறார்கள். சைவ மடங்களில் பன்னெடுங்காலமாக திருக்குறள் ஓதப்பட்டு வருகிறது. எந்த ஜைன கோயில்களிலாவது திருக்குறளை ஓதுகிறார்களா?

ஆளுநர் பேச்சில் நியாயமும் உண்மையும் இருக்கிறது என்பதை வரும் காலங்களில் ஆய்வாளர்கள் நிரூபிப்பார்கள். ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’, ‘குண்டலகேசி’, ‘வளையாபதி’, ‘சீவக சிந்தாமணி’ என்னும் ஐம்பெருங் காப்பியங்களும் எந்த காலத்தில் மாற்றப்பட்டது; பக்தி நீக்கம் செய்யப்பட்டது என ஆய்வுக்குட்படுத்த வேண்டும்” என்றார்.

தமிழ் இலக்கிய ஆய்வாளர் சித்தானையிடம் கேட்டோம். “திருக்குறளை இந்துத்துவ நூலாக மாற்றும் முயற்சி சில வருடங்களாகவே நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநர் பேச்சு அமைந்துள்ளது. உண்மையில் இந்துத்துவத்துக்கு எதிரான கருத்துக்கள்தான் திருக்குறளில் நிறைய உள்ளது.

கனடாவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்தவர் ஜி. யு. போப். கிறிஸ்தவ சமய போதகராகத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றாலும், இங்கே வந்து தமிழ் கற்றபின், தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். 1886ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். அதன்பின்னர் நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். சில ஆங்கில இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உள்ளவர். ஆனால், இறப்புக்குப் பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று கூறினார். அந்தளவு தமிழ் மீது பெரும் பற்று கொண்டவர். அப்படிப்பட்ட அறிஞரை பற்றி ஆளுநர் கூறியுள்ளவை அவர் பதவிக்கு அழகு சேர்ப்பவை அல்ல.

திருவள்ளுவர் சொல்லும் ஆதிபகவன் ஆளுநர் சொல்லும் ஆதிபகவன் அல்ல. திருவள்ளுவர் குறிப்பிடும் ஆதிபகவன், ஆதிநாதர். அதாவது ரிஷிபநாதர். இவர் தமிழர். மேலும் திருக்குறள் ஒரு இந்து மத நூல் அல்ல, சமண நூல். சார்பு நிலை அற்றது சமண மதம்; அதுபோல் திருக்குறளும் சார்பு நிலை அற்றது.

திருக்குறள் குறிப்பிடும் ‘என் குலத்தான்’ என்ற வார்த்தை திருமாலை குறிக்கிறது; ‘மலர்மிசை ஏகினான்’ என்பது தாமரையை குறிக்கிறது என்று வைணவ பிராமணர்கள் தங்கள் மதத்துக்கு ஏற்றி சொல்லி வருகிறார்கள். ஆனால், திருவள்ளுவர் சொல்லும் ‘என் குலத்தான்’ தீர்த்தங்கரர்; அருகன் தான் ‘மலர்மிசை ஏகினான்’.

அறிவை பொதுவுடமை ஆக்குவது திருக்குறள்; ஆனால், இவர்கள் செயல்பாடு அதற்கு எதிரானது. அப்படியிருக்கும்போது எப்படி திருக்குறள் இவர்கள் மத நூலாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...