No menu items!

32 மாடிகள் – 3700 கிலோ வெடி மருந்து – என்ன நடக்கப் போகிறது?

32 மாடிகள் – 3700 கிலோ வெடி மருந்து – என்ன நடக்கப் போகிறது?

நாளை இரண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட இருக்கின்றன. அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்படுவதை இந்தியாவே ஆச்சர்யமாக பார்க்கப் போகிறது.

என்ன காரணம்?

நொய்டாவில் சூப்பர்டெக் என்று இரட்டை கோபுர கட்டிடங்கள் உள்ளன. சுமார் 103 மீட்டர் உயரம். ஒரு கோபுரத்தில் 32 மாடிகள் இருக்கின்றன. மற்றொரு கோபுரத்தில் 29 மாடிகள் இருக்கின்றன. இந்தியாவில் இதுவரை இத்தனை உயரமான கட்டிடம் இடிக்கப்பட்டதில்லை.

முதல் முறையாக இத்தனை உயரமான கட்டிடம் இடிக்கப்படுகிறது. மொத்தம் 3700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்படப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தைத் தகர்ப்பதற்கு மட்டும் 20 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

இத்தனை பிரமாண்டமாய் ஏன் ஒரு கட்டிடத்தை இடிக்க வேண்டும்? என்ன நடந்தது? எப்படி இடிக்கப் போகிறார்கள்? பாதுகாப்பாக இடிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?

கட்டிடத்தின் நதிமூலம்:

கடந்த 20 ஆண்டுகளாக தலைநகர் டெல்லிக்கு அருகில் மிக வேகமாக உருவாகிவரும் நகரம் நொய்டா. சுற்றுச்சூழல் காரணமாக டெல்லியில் புதிய கட்டுமானப் பணிகளை அதிகம் மேற்கொள்ள முடியாது என்பதால் பல புதிய நிறுவனங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும் நொய்டாவில் கட்டப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட இந்நகரம் இன்று டெல்லியைவிட வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இந்த சூழலில்தான் நொய்டா நகர நிர்வாகம் செக்டார் 93A-வில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட முடிவு செய்தது. சூப்பர்டெக் என்ற நிறுவனம் இங்கு 40 மாடிகளைக் கொண்ட இரண்டு அடுக்குமாடிகளை கட்டுவதற்கு நொய்டா நிர்வாகம் அனுமதி வழங்கியது.

100 மீட்டர் உயரம் கொண்ட இக்கட்டிடத்தை கட்டும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், இது நொய்டா பகுதியின் புவியியல் சார்ந்த நிலைக்கு ஏற்றதாக கட்டப்படவில்லை என்றும் , கட்டுமானம் சட்டவிரோதமானது என்று கூறி, குடியிருப்போர் நலச் சங்கம் (RWA) சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, 2014 ஏப்ரல் 4 இல், இரட்டை கோபுரங்களை 4 மாதங்களுக்குள் சொந்த செலவில் இடிக்க, அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பிறகு ஏகப்பட்ட அப்பீல்கள், ஏகப்பட்ட நீதிமன்றங்கள் என்று சுற்றிவந்த இந்த வழக்கில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. 28-ம் தேதி்க்குள் இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 28-ம் தேதி மதியம் சரியாக 2.30 மணிக்கு இந்த கட்டிடத்தை இடிக்க நேரம் குறித்துள்ளனர்.

கட்டிடத்தின் மதிப்பு என்ன?

இந்த கட்டிடத்தில் உள்ள 3 படுக்கை அறைகளைக் கொண்ட ஒரு பிளாட்டின் மதிப்பு 1.13 கோடி ரூபாய். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 915 பிளாட்டுகள் உள்ளன. அதன்படி பார்த்தால் இந்த பிளாட்களை விற்பதன் மூலம் சூப்பர்டெக் நிறுவனத்துக்கு 1,200 கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். இதைத்தவிர சில கடைகளும் இங்கு கட்டப்பட்டுள்ளன. ஆனால் இப்போது அத்தனையும் பணால்.

915 பிளாட்டுகளில் 633 பிளாட்டுகளை ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். கட்டிடத்தை இடிக்கப்போகும் சூழலில், இதை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் தந்த முன்பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எப்படி இடிக்கப் போகிறார்கள்:

இந்த கட்டிடத்தை இடிக்க மொத்தம் 3700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப் போகிறார்கள். கட்டிடத்தின் 32 மாடிகளில் 9,400 இடங்களில் துளைகள் போடப்பட்டு இந்த வெடிமருந்துகளை வைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தள்ளி நின்று பட்டனை அழுத்திய சில வினாடிகளில் வெடிகுண்டுகள் வெடித்து கட்டிடம் உட்புறமாக சரியும் என்று இப்பணியில் ஈடுபடும் வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். இதற்காக மட்டுமே 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இக்கட்டிடத்தை சுற்றி 100 மீட்டருக்குள் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் காலை 7 மணிக்கு தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டும். கட்டிடத்தை இடிக்கும் பணிகள் முடிந்த பிறகு மாலை 4 மணிக்கு பிறகுதான் தங்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த இரட்டை கோபுரத்துக்கு அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பெரிய அளவில் துணிகளைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன.

கட்டிடத்தை இடித்தால் என்ன நடக்கும்?

இந்த இரட்டை கோபுரத்தின் ஒரு அடுக்கு 103 மீட்டரும், இரண்டாவது அடுக்கு 97 மீட்டரும் உயரம் கொண்டவை. இந்த இரட்டை கோபுரத்தை இடித்தால் 55 ஆயிரம் டன் குப்பை உருவாகும் என்று கருதப்படுகிறது.

இதில் 4 ஆயிரம் டன் இரும்பும் அடக்கம். இந்த குப்பைகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் கட்டிட இடிபாடுகளை 15 கோடி ரூபாய்க்கு விற்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் கட்டிடத்தை இடிக்கும் பணி 200 கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இடிபடப் போகும் கட்டிடத்துக்கு மிக அருகிலேயே, அதாவது 9 மற்றும் 12 மீட்டர் இடைவெளிகளிலேயே மற்ற அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் இப்போது அச்சத்தில் இருக்கிறார்கள். அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்கும்போது, தங்கள் கட்டிடங்களில் எந்த விரிசலும் வந்துவிடக்கூடாதே என்பது அவர்களின் அச்சமாக உள்ளது. பலரும் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

கட்டிடத்துக்கு பாதிப்பில்லாமல் போனாலும், இடிபாடுகளால் தூசி பறக்கதா? அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தங்களுக்கு ஆபத்து வராதா என்று கவலைப்படுகிறார்கள்.

கட்டிடத்துக்கு ஆபத்து வராவிட்டாலும் ஜன்னல் கண்ணாடிகளில் விரிசல் ஏற்பட்டு உடைந்துபோகலாம் என்றும், டிவி போன்ற சுவரில் தொங்கும் பொருட்கள் அதிர்வால் உடையலாம் என்றும் அச்சப்படுகிறார்கள். சுவர்களில் எந்தப் பொருளையும் தொங்க விட்டிருந்தால் அவற்ற கழற்றி வைத்து விடுங்கள் என்று உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இது தேவையற்ற அச்சம் என்று இதை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. “இரட்டை கோபுரத்தை இடிக்கும்போது 30 மீட்டர் சுற்றளவுக்கு மட்டும் மெல்லிய அதிர்வு இருக்கும் இது ரிக்டர் அளவுகோலில் 4 டிகிரி அளவுக்கு மெல்லியதாக இருக்கும். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது” என்று தெரிவித்துள்ளது.

அவர்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் மக்களின் அச்சத்தைப் போக்க முடியவில்லை. அவர்கள் பயந்ததுபோல் ஏதும் நடக்காமல் கட்டிடத்தை இடித்தால் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...