“சுதந்திர தினத்துக்கு கொடியேற்றி அதை இணையத்தில் பதிவிட்டீர்களா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ரகசியா.
“பண்ணலனா என்னை தேசபக்தன்னு ஏத்துக்க மாட்டிங்களா? என்று எதிர் கேள்வி கேட்டதும் சிரித்தாள் ரகசியா.
”சத்தமா சொல்லாதிங்க. முத்திரை குத்துறதுக்கு ஒரு குரூப் காத்துக்கிட்டு இருக்கு” என்று சொல்ல ஒரு கப் டீயை நீட்டினோம்.
“கவர்னர் டீ பார்ட்டி பத்துன நியூஸ் கேக்குறதுக்காக டீ கொடுக்கிறீங்களா?” என்ற ரகசியா செய்திகளை சொல்ல ஆரம்பித்தாள்.
“போன ஏப்ரல் மாசம் கவர்னர் மாளிகைல நடந்த பாரதியார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால். அந்த நிகழ்ச்சியை ஆளுங்கட்சி அமைச்சர்களும் அதிகாரிகளும் புறக்கணிச்சுட்டாங்க. ஆனா இப்போ, சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் முதல்வரும் அமைச்சர்களும் கலந்துகொண்டதோடு கூட்டணிக் கட்சிகளையும் முதல்வர் கலந்துக்கொள்ள சொன்னாராம். அதனால்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார்.”
“முதல்வரின் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?”
“நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாம வச்சிருந்ததனால கடந்த முறை ஆளுநர் விழாவில் கலந்துக்கல. இப்ப நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு கவர்னர் அனுப்பிட்டாரு. இது ஒரு காரணம். ஆனா ஆளுநருடன் இன்னும் முழு இணக்கம் வரவில்லை. சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர், சில விளக்கங்களை கேட்டுள்ளார். இதற்கு என்ன எதிர்வினையாற்றலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டதற்கு வீண் மோதல் வேண்டாம் இப்போதைக்கு அவர் கேட்ட விளக்கங்களை அனுப்பி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவோம் என்று சொன்னாராம் முதல்வர்.”
“டீ பார்ட்டில பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லையே?”
“தமிழ்நாட்டு பாஜகவுக்கு 25 அழைப்பிதழ்கள் கேட்டிருந்தாராம் அண்ணாமலை. ஆனால், ராஜ்பவன் அதை மறுத்துவிட்டது. அத்தனை அழைப்பிதழ்களை ஒரே கட்சிக்கு கொடுக்க இயலாதுனு சொல்லியிருக்காங்க. இதுல அண்ணாமலைக்கு வருத்தம்னு பாஜகவுல பேசிக்கிறாங்க. திமுக அமைச்சர்கள் மீது தான் கொடுத்த புகார்களின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியும் அண்ணாமலைக்கு இருக்கு. அண்ணாமலைக்கு பதில் பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றார். இந்த விருந்தில் பாரதிய ஜனதா என்று கட்சிப் பெயர் குறிப்பிட்டு தனியாக இருக்கைகள் ஒதுக்கி இருந்தார்களாம். இதை திமுகவினர் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துள்ளனர். ஒருவேளை பின்னால் தோழமை கட்சியைவிட்டு கருத்து சொல்ல வைக்கலாம். இந்த தேநீர் விருந்தில் ஓபிஎஸ் கலந்துகொண்டார், எடப்பாடியோ அல்லது அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோ கலந்துகொள்ளவில்லை.”
“டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகியிருக்கிறாரே?’
“அதற்கு பழனிவேல் தியாகராஜன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு வீசியது மட்டும் காரணம் இல்லை என்கிறார்கள். மதுரைல பாஜகவுல இருக்கிற கோஷ்டி மோதல்னு சொல்றாங்க. அங்க சரவணனுக்கும் பாஜக மூத்த தலைவர் சீனிவாசனுக்கும் ரொம்ப நாளாகவே பிரச்சினை. சீனிவாசனுக்கு டெல்லில செல்வாக்கு அதிகம். கட்சியிலும் அவர் சீனியர். அதனால் மதுரைல அவர் வச்சதுதான் சட்டமாக இருந்தது. சீனிவாசன் டாமினேஷன் தாங்க முடியாமதான் சரவணன் இருந்தார். எதாவது ஒரு சான்ஸ் கிடைச்சா வெளிய போயிறலாம்னு இருந்தவருக்கு இந்த செருப்பு சம்பவம் வசமா மாட்டிக்கிச்சு.”
“ஆனா காலைல செருப்பு சம்பவம் நடந்தபோது அமைச்சர் பிடிஆரை விமர்சித்த்து பேட்டி கொடுத்துவிட்டு அதுக்குள்ள மாறி ராத்திரி போய் மன்னிப்பு கேட்டிருக்கிறாரே… அதுக்குள்ள என்ன நடந்தது?”
“கட்சி மாறுவது சரவணனுக்கு புதுசு இல்லை. அவர் மதிமுக, பாஜக, திமுக மீண்டும் பாஜக என மாறிமாறிதான் வந்திருக்கார். அதனால் இப்படி மாறுவதையெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது. ஏற்கனவே தனது உறவினர் ஒருவர் மூலம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். இந்த காலணி வீச்சு சம்பவம் அவருக்கு சாதகமாகி விட்டது என்கிறார்கள் காவிக் கட்சியினர்.”
“அவர் மீதான வழக்குகளும் ஒரு காரணம் என்று சொல்கிறார்களே?”
“ஆமாம். அப்படியும் சொல்கிறார்கள். மதுரையை பொறுத்தவரை திமுக, அதிமுக என்று இரண்டு கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்திவந்தன. இந்த சூழலில் பணத்தை வாரி இறைத்து பாரதிய ஜனதா கட்சியை பிரபலப்படுத்தினார் சரவணன். அதே சமயம் அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. திமுக அந்த வழக்குகள் மீது தீவிரம் காட்ட ஆரம்பித்தது. இந்த சமயத்தில் காலணி வீச்சு தனக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என்று பயந்து போய்த்தான் நள்ளிரவில் நிதி அமைச்சரைச் சந்தித்து தனக்கும் அந்த நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை என்று சரவணன் விளக்கம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.”
“திமுகவில் சேர்ந்தால் அவருக்கு பழைய செல்வாக்கு கிடைக்குமா?”
“திமுகவில் அவரை சேர்த்துக் கொள்வது பற்றி அமைச்சர் மூர்த்திதான் முடிவு செய்ய வேண்டும். நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைப் பொருத்தவரை அவரை ஆட்சிக்கு மட்டும்தான் திமுக பயன்படுத்துகிறது. கட்சிக்கு அல்ல. கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஏற்கெனவே அவர் வைத்திருந்த ஐடி விங் பொறுப்பைக்கூட டிஆர்பி ராஜாவிடம் மாற்றிவிட்டது தலைமை. எனவே, பழனிவேல் தியாகராஜனின் சிபாரிசு எடுபடுமா என்பது தெரியவில்லை. அதேசமயம் திமுகவில் முன்னாள் எம்எல்ஏவாக இருந்த கு.க. செல்வம் பாரதிய ஜனதாவில் சேர்ந்தபிறகு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு மீண்டும் திமுகவில் சேர்ந்தார். அங்கு அவருக்கு எந்த முக்கிய பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. சரவணன் திமுகவில் சேர்ந்தால் அவருக்கும் அதே நிலைதான் ஏற்படும்.”
“பழனிவேல் தியாகராஜன் மீது நடந்த தாக்குதலுக்கு திமுகவில் பெரிதாக எந்த ரியாக்ஷனையும் காணோமே?”
”ஆமாம். செருப்புத் தாக்குதல் திமுகவினரை ஏகத்துக்கு டென்ஷானக்கிவிட்டது. உடனடியா பதிலடி கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க. ஆனால், தலைமை உடனடியா எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. பதிலடி கொடுத்து கலாட்டாவானா அது சட்டம் ஒழுங்கு பிரச்சினைல கொண்டு போய்விட்டுடும்கிறது திமுக தலைமையோட கவலை. அதைதான் பாஜக விரும்புது; அதை செய்யக் கூடாதுனு முடிவு பண்ணியிருக்காங்க.”
“திமுகவுக்கு பெரிய தலைவலியா பாஜக இருக்கும்போல. திமுக தலைவர் அறிக்கையே லேட்டாதானே வந்தது?”
“ஆமா. லேட்டா வந்தாலும் ஹாட்டா வந்தது. முதல்ல துரைமுருகன் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னோட அறிக்கைல, இந்த அரசியல்லாம் தமிழ் நாட்டுல செல்லுபடி ஆகாதுனு சொல்லியிருந்தார்.”
“பாஜக சைட்ல என்ன ரியாக்ஷன்?”
“செருப்பத் தூக்கி அடிச்சிருக்கக் கூடாதுனு பாஜக சீனியர் தலைவர்கள் சொல்லியிருக்காங்க. அண்ணாமலைனாலே அடாவடி அரசியல்னு சொல்ற மாதிரி ஆகிடுச்சுனு வருத்தப்பட்டிருக்காங்க. முக்கியமா பிடிஆர் குடும்பம் மதுரைல பாரம்பர்யமான குடும்பம். கோயில்களுக்கு உதவுவது, ஏழைகளுக்கு உதவுவதுனு அவங்க தொடர்ந்து மக்கள் கிட்ட கனெக்ட்ல இருக்கிறாங்க. அந்த குடும்பத்தை சேர்ந்த பிடிஆர் மீது செருப்பை வீசுனது மதுரைல பாஜகவுக்கு பின்னடைவைத் தரும்னு சொல்லியிருக்காங்க.”
“அண்ணாமலை என்ன சொன்னாராம்?”
“அவருக்கு இது பப்ளிசிட்டிதானே. தமிழ்நாட்டுல திமுகவுக்குப் போட்டி பாஜகனு கொண்டு வருவதற்கு இந்த சம்பவங்கள்லாம் உதவும், மதுரை மக்களை வேறு விதமா கவனிச்சுக்கலாம்னு சொன்னதா பாஜக வட்டாரங்கள் சொல்லுது. இப்படி ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொரு நியூஸும் வருது.”
”என்னது?”
“பாஜகவை ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்த சில மர்மத் தலைவர்கள் ஆட்டி வைக்கிறார்கள். அவர்களால்தான் மதுரையில் சரவணன் கட்சியைவிட்டு வெளியே போனார்னும் சொல்றாங்க.”
“ஆர்.எஸ்.எஸ்க்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்”
“சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என எல்லா முக்கிய மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பாஜகவை தங்கள் கைப்பிடியில் வைத்திருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் ரகசியத் தலைவர்கள். இவர்களை மிஞ்சி கட்சித் தலைமை எதுவும் செய்ய முடியாது. ஒருமுறை சென்னையில் பாஜக முக்கிய தலைவர்களின் கூட்டம் நடந்தது. அப்போது மர்மத் தலைவர், ‘இங்கே யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்றவர்கள்? கை தூக்குங்கள்’ என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரு சிலரே கை தூக்கியுள்ளனர். கை தூக்காதவர்களில் அண்ணாமலையும் ஒருவர். இதனால் மர்மத் தலைவர் எரிச்சல் அடைந்தாராம். மதுரையில் டாக்டர் சரவணன் பல்டி அடித்தற்கும் இந்த மர்மத் தலைவர்களே காரணம் என்று சொல்கிறார்கள்.”
“அப்படி அவர்கள் என்னதான் செய்தனர்?”
“நிதியமைச்சரை எதிர்த்து பேட்டியளித்த சரவணன், ‘என்னோடு தேர்தலில் போட்டியிட தயாரா என்று சவால் விட்டார். இதைக்கேட்ட மர்மத் தலைவர்கள் அவரை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்கள். ‘மதுரையில் நீங்கள் நிற்க விடுவோமா? இது பாஜகவின் முக்கிய பகுதி. அடுத்த தேர்தலில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப் போகும் நகரங்களில் ஒன்று. விமான நிலையத்தில் நிதி அமைச்சருடன் உரசிவிட்டு சவால் வேறா என்று டோஸ் விட்டுள்ளனர். இதுவும் அவர் கட்சியில் இருந்து வெளியேற ஒரு காரணம் என்கிறார்கள். நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை என்று எல்லோருமே மர்மத் தலைவர்களால் அடக்கி ஆளப்படுகிறார்கள்.”
“எடப்பாடி தரப்பும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதே?”
“எடப்பாடி அணி இப்போது பாரத ஜனதா பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. இதனால்தான் மதுரை சம்பவத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டித்துள்ளார். மதுரையில் பாரதிய ஜனதாவின் செயல் வேதனை அளிக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.”
“பாஜக சும்மா இருக்குமா?”
“பாரதிய ஜனதாவுக்கு பீஹாரில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இனிமேல் மற்ற கட்சிகளின் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறதாம். ஓபிஎஸ் – அமித் ஷா சந்திப்புக்காக ஒரு முக்கிய பிரமுகர் அமித் ஷாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ‘இது அவர்கள் கட்சிப் பிரச்சனை. தேர்தல் கமிஷன், நீதிமன்றம் என்று போய்விட்டார்கள். அவர்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். இப்போது எந்த சந்திப்பும் வேண்டாம்’ என்று தவிர்த்து விட்டாராம் அமித் ஷா”
”பாஜக பத்தியே பேசிக்கிட்டு இருக்கியே…காங்கிரஸ்னு ஒரு கட்சி இருக்கிறதையே மறந்துட்டியா?”
”காங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம் தலைவராகப் போவதாக அவரது ஆதரவாளர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். சுசீந்திரத்தில் ராகுல் காந்தி தொடங்கப்போகும் பாதயாத்திரைக்கு 50 ஆயிரம் தொண்டர்களை திரட்ட வேண்டும் என்று அங்குள்ள கட்சிப் பிரமுகர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. ‘அவ்வளவு கூட்டத்தை திரட்ட பணத்துக்கு எங்கே போவது? இங்கே பைசா கிடையாது’ என்று கன்னியாகுமரி தலைவர்கள் அலறுகிறார்களாம்.”
”பாவம்தான்”
”கடைசியா ஒரு நியூஸ். கேக்கிறதுக்கு நம்ப முடியாத மாறிதான் இருக்கும்”
”அப்படி என்ன நியூஸ்?”
“கமலின் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் இணைகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துக் கொண்டிருக்கிறது”
“நம்பமுடியவில்லையே”
“இதைதானே நான் முதல்ல சொன்னேன் நம்புறதுக்கு கஷ்டமா இருக்கும்னு” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.