No menu items!

சல்மான் ருஷ்டி போல் இவர்களும் தடுக்கப்பட்டுள்ளார்கள்

சல்மான் ருஷ்டி போல் இவர்களும் தடுக்கப்பட்டுள்ளார்கள்

‘த சாத்தானிக் வெர்சஸ்’ நாவலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டி மீது 34 ஆண்டுகளுக்குப் பிறகு கொடூரமாக கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இருந்து வந்த எதிர்ப்பையடுத்து உலகில் முதன்முதலில் இந்த நாவலை தடை செய்த நாடு இந்தியாதான். அதன்பின்னர் இந்தியாவை பின்பற்றிதான் பாகிஸ்தான் உள்பட பல இஸ்லாமிய நாடுகள் இந்நாவலை தடை செய்தன. ஆனால், இன்றும் உலகளவில் சிறந்த இலக்கிய படைப்புகளில் ஒன்றாக இந்நாவல் மதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் உலகளவில் பல நாடுகளில் பல புத்தகங்கள் என்னென்னவோ காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி தடை செய்யப்பட்ட சில முக்கியமான புத்தகங்களைப் பார்க்கலாமா?

பைபிள் & குரான்

ஆம், பைபிளும் குரானும் கூட தடை செய்யப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஒன்றிணைந்த சோவியத் யூனியனில் 1926 முதல் 1956 வரை இந்த இரண்டு புனித நூல்களும் தடை செய்யப்பட்டிருந்தன. தடை செய்தது மட்டுமல்லாமல் பல்வேறு நூலகங்களில் இருந்த பழைய பிரதிகளையும் உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும் என்றும் சோவியத் யூனியன் அரசு உத்தரவிட்டது.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது, சோவியத் யூனியனில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக ‘பைபிள்’ தடை செய்யப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

மேடம் பவாரி – குஸ்தாவ் பிளாபர் (1856)

உலகின் முதல் நாவல் ‘மேடம் பவாரி’. இன்றும் உலகம் முழுமைக்கும் மிகவும் விரும்பிப் படிக்கப்படும் நாவலும்கூட. தொலைந்துபோன கனவுகள், ரொமான்ஸ், காதல் களியாட்டங்கள்தான் இந்நாவல் விரும்பி படிக்கப்படக் காரணம். இதே காரணங்களாலேயே வெளியான சில வருடங்களுக்குள் தடை செய்யப்பட்டது. அதேநேரம், இன்று உலகின் தலை சிறந்த க்ளாஸிக்குகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. தமிழிலும் இந்நாவல் வெளியாகியுள்ளது.

தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஹக்கிள் பெரி ஃபின் – மார்க் டிவைன் (1884)

மார்க் டிவைனின் முதல் புத்தகம் வெளியான ஆண்டிலிருந்து இன்று வரை உலக அளவில் மிகவும் அதிகமாக சர்ச்சைக்குள்ளான எழுத்தாளர் அவர்தான். மார்க் டிவைன் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்று வரை தடை நீக்கப்படாமலும் சர்ச்சைக்குள்ளானதாகவும் இருக்கும் புத்தகம் ‘The adventures Hucckle of berry Finn’தான்.

பலநாடுகளிலும் பொது நூலகங்கள், பள்ளி – கல்லூரி நூலகங்களில் இருந்த இந்தப் புத்தகத்தின் பழைய பிரதிகள் தேடி எடுத்து நீக்கப்பட்டன. இளைஞர்களிடையே மோசமான ஒரு முன் மாதிரியாக இந்நாவலின் கதாநாயகன் பாதிப்புகளை செலுத்துவதாக இதற்கு காரணம் கூறப்பட்டது. இதே காரணத்தை முன்னிட்டுதான் மார்க் டிவைனின் மற்ற இரண்டு பிரபலமான் நாவல்களான ‘Tom Sawyer’, ‘Eve’s Diary’ இரண்டும்கூட தடை செய்யப்பட்டன.

யூலிஸிஸ் – ஜேம்ஸ் ஜாய்ஸ் (1920)

உலகப் பெரும் படைப்புகளுள் ஒன்றாக மதிக்கப்படும் நாவல் இது. ‘மாடர்ன் லைப்ரரி’யால் இருபதாம் நூற்றாண்டின் சிறப்பு புத்தகங்களுக்குள் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நூல் அமெரிக்காவில் இளைஞர்களிடையே காம இச்சைகளைத் தூண்டுவதாகக் காரணம் சொல்லப்பட்டு, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தது. அதே காலகட்டத்தில் தலைமறைவாகப் பெருமளவில் விற்பனையாகி பலராலும் வாசிக்கப்பட்டது.

ஜேம்ஸ் ஜாய்ஸ் இந்த நாவலில் கையாண்டிருந்த ‘நனவோடை உத்தி’-யை அதன்பின்னர் உலகளவில் பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் பயன்படுத்தினர்.

லேடி சேட்டர்லியிஸ் லவ்வர் – டி.எச். லாரன்ஸ் (1928)

டி.எச். லாரன்ஸை தெரியாதவர்களுக்குக்கூட அவருடைய இந்த நாவலைத் தெரிந்திருக்கும். அந்தளவு உலகம் முழுவதும் இந்நாவல் விரும்பிப் படிக்கப்பட்டது. இந்தியாவிலும் மலிவு விலைப் பதிப்புகள் வெளியாகி பெரிய அளவில் விற்பனையானது.

இந்த நாவலில், செக்ஸில் திருப்தியடையாத மேல் தட்டு வர்க்கப் பெண்கள், இளைஞர்கள் மேல் கொள்ளும் வேட்கையை மிகவும் வெளிப்படையாக எழுதியதாக டி.எச்.லாரன்ஸ் சர்ச்சைக்குள்ளானார். இதே காரணங்களுக்காக நாவல் தடை செய்யப்பட்டது. ‘லேடி சேட்டர்லியிஸ் லவ்வர்’ மட்டுமல்லாமல், பொதுவாக டி.எச். லாரன்ஸின் பெரும்பான்மையான எழுத்துகளும் இது போல் சர்ச்சைக்குள்ளாகின.

ஆனால், ‘லேடி சேட்டர்லியிஸ் லவ்வர்’ காதலை மிகச் சிறப்பாகக் கூறும் க்ளாஸிக் இலக்கியமாக உலகம் இன்றும் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அனிமல் பார்ம் – ஜார்ஜ் ஆர்வல் (1945)

கம்யூனிஸ இயக்கம் உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வந்த காலகட்டத்தில், குறிப்பாக ஸ்டாலினின் ஆட்சி ரஷ்யாவில் இருந்த போது எழுதப்பட்ட இந்நாவல், கம்யூனிஸ இயக்கத்தைக் கடுமையாகத் தாக்குகிறது என சர்ச்சைக்குள்ளானது. ஒரு விலங்குப் பண்ணையில் பன்றிக் கூட்டங்கள் மனிதர்களுக்கு எதிராகச் செய்யும் புரட்சிதான் நாவல். இதனால், பல்வேறு கம்யூனிஸ நாடுகள் இந்நாவலைத் தடை செய்தன.

கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் ஜார்ஜ் ஆர்வலை உலக அளவில் பிரபலமாக்கியது இந்தப் புத்தகம்தான். இந்நாவல் தமிழிலும் வெளியாகியுள்ளது. க.நா. சுப்பிரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார்.

லோலிதா – விளாடிமிர் நபகோவ் (1955)

உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராக இன்றும் கருதப்படும் ரஷ்ய எழுத்தாளர் விளாடிமிர் நபகோ. இவரது இந்த நாவல் வெளியானதும் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. இளம்பெண்ணின் இச்சைகளையும் காம வேட்கைகளையும் வெளிப்படையாகப் பேசுகிறது என்கிற காரணத்துக்காக பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது.

நாற்பது வயது ஹம்பர்ட்ருக்கும் பள்ளி மாணவியான பதினான்கு வயது லோலிதாவுக்கும் இடையேயான உறவுதான் நாவலின் மையம். ஆங்கில எழுத்தாளர் எட்கர் ஆலன் போவின் வாழ்வுதான் இந்த நாவலுக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நாவலை படித்துப் பெற்ற பாதிப்பில்தான் தமிழ் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் அவரது ‘அபிதா’ நாவலை எழுதினார்.

டாக்டர் ஜிவாகோ – போரிஸ் பாஸ்டர்னாக் (1957)

சோவியத் யூனியனில் 1903 முதல் 1943 வரை நடைபெற்ற வரலாற்று சம்பவங்கள்தான் இந்நாவலின் மையம். சோவியத் யூனியனில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான இந்நாவல், குறிப்பாக கம்யூனிஸ்ட்களால் பெரும் தாக்குதலுக்கு உள்ளானது. பின்பு தடை செய்யப்பட்டது. 1958ஆம் ஆண்டு பாஸ்டர்னாக்குக்கு இந்நாவலுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ் எதிர்ப்பு நாவல் என்கிற ஒரே காரணத்திற்காக இப்பரிசு வழங்கப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் கூறினர்.

லஜ்ஜா – தஸ்லிமா நஸ் ரீன் (1993)

இஸ்லாமியர்களிடையேயும் இந்துக்களிடையேயும் வகுப்பு வாதமும் மதவெறியும் ஏற்படுத்தும் அவலத்தையும் அவமானத்தையும் பற்றி பேசுகிறது இந்த நாவல். 1993இல் வெளியான சில நாட்களிலேயே 60,000 பிரதிகள் விற்பனையானது. இந்நிலையில் மதத் தலைவர்கள் சிலரால், ‘இது முஸ்லிம் விரோத நாவல்’ என்று கூறப்பட்டதால் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

இந்த நாவலுக்கு எதிராக பங்களாதேஷின் டாக்கா நகரில் முஸ்லிம் தலைவர்கள் ஊர்வலம் நடத்தி தஸ்லிமா நஸ்ரினுக்கு ‘ஃபட்வா’ வழங்கினர். சல்மான் ருஷ்டிக்கு அறிவிக்கப்பட்டதைப் போலவே, தஸ்லிமா நஸ்ரினை கொல்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரச்சினை கைமீறிப் போய் விடவே அச்சமடைந்த பங்களாதேஷ் அரசாங்கம் இந்த நாவலைத் தடை செய்தது.

இனி… இதுபோல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில புத்தகங்கள்

ஆறில் ஒரு பங்கு – பாரதியார் (1911)

மகாகவி பாரதியாரின் கதைகள் தொகுப்பு ‘ஆறில் ஒரு பங்கு.’ அக்காலத்தில் வெறும் மூன்றணா விலை வைத்து பாரதியாராலேயே வெளியிடப்பட்ட இந்த கதைத் தொகுப்பை தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு என்று சில விமர்சகர்கள் சொல்கிறார்கள். அன்றைய பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், இந்நூலை மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டக்கூடிய கருத்தாக்கங்களை விதைக்கக் கூடியது என்று சொல்லி தடை செய்தது. இந்தியாவில் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட முதல் தடையாக இதை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக அரசு அதிகாரத்திலிருப்பவர்கள் தங்களுக்கு எதிரான அரசியல் நடவடிக்கையின் பகுதியாக வெளிவரும் புத்தகங்களைத் தடை செய்வது அக்காலத்தில் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது. அதேநேரம் சுதந்திரத்திற்கு பின்பும் கம்யூனிஸ்ட் இயக்க வெளியீடுகளும் தமிழ்நாட்டில் திராவிடர் கழக வெளியீடுகளும் தடை செய்யப்பட்டன. பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அத்தடை நீக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பல புத்தகங்களை அரசே வெளியிட்டது வேறு கதை.

ரங்கீலா ரசூல் (1924)

பெயர் குறிப்பிடப்படாத எழுத்தாளர் ஒருவரது உருது நூல் இது. பஞ்சாப்பில் ஆர்ய சமாஜத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலின் போது வெளியிடப்பட்டது. முகமது நபிக்கு பெண்களுடன் இருந்த தொடர்பை முன்வைத்து விஷமத்தனமாக விமர்சித்து எழுதப்பட்டதாக இந்நூலுக்கு எதிர்ப்பு வந்தது. இதன் வெளியீட்டாளர் இஸ்லாமிய இளைஞன் ஒருவனால் கொலை செய்யப்பட்டார். கொலையாளிக்கு பிரிட்டிஷ் அரசு தூக்கு தண்டனை விதித்ததோடு, நூலை தடை செய்தது.

ஹிண்டு ஹெவன் – மேக்ஸ் வில்லி (1934)

இந்தியாவில் அக்காலத்தில் கோலோச்சிய கிறிஸ்தவ மிஷினரிகளின் ஆதிக்கம் மற்றும் அவர்களின் இந்தியச் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நூல் இது. பல காட்டமான கேள்விகளையும் எழுப்பி இருந்தது. எனவே, இந்த நூலை அன்றைய பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. இன்றளவும் அந்தத் தடை நீடிக்கவும் செய்கிறது.

தி ஃபேஸ் ஆஃப் மதர் இந்தியா – காத்ரின் மேயோ (1927)

மகாத்மா காந்தி குறித்த தவறான தகவல்களை முன் வைத்ததால் இந்நூல் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இதுபோல், காந்தியை எதிர்மறையாக சித்தரித்ததாக ‘தி லோட்டஸ் அண்ட் தி ரோபோட்’ (1960) என்ற நூலும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த நூலின் ஆசிரியர் ஆர்தர் கோஸ்ட்லர், இந்தியா மற்றும் ஜப்பானில் தனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களை இதில் பதிவு செய்திருந்தார்.

தி லேண்ட் ஆஃப் லிங்கம் – ஆர்தர் மில்ஸ் (1936)

இந்துக்களின் லிங்க வழிபாட்டு முறையை ஆபாசமாகச் சித்தரித்ததாக இந்நூல் 1936ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தடை செய்யப்பட்டது.

இதுபோல், சுதந்திரத்துக்கு பின்னர், ராமாயணத்தை கேலி செய்யும் வகையில் உள்ளதாக ஆபுரே மேனனின் ‘ராமா ரீடோல்டு’ என்ற நூல் 1955ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

விண்டி டூனிகர் எழுதிய ‘தி ஹிண்டுஸ்: ஆன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ என்ற நூலும் இந்துக் கடவுள்களை கேலிக்குரிய வகையில் சித்தரிப்பதாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

ஹார்ட் ஆஃப் இந்தியா – அலெக்ஸாண்டர் காம்பெல் (1959)

இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக முதன்முறையாக தடை செய்யப்பட்ட நூல் இது. இந்திய அதிகார வர்க்கம் மற்றும் அவர்கள் உருவாக்கிய பொருளாதாரக் கொள்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொண்டிருப்பதாக இந்நூல் தடை செய்யப்பட்டது.

இதுபோல், இந்திய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை சி.ஐ.ஏ. இன்ஃபார்மராகச் சித்தரிப்பதாகக் குற்றம்சாட்டி, சீமர் ஹெர்ஷ் எழுதிய ‘தி ப்ரைஸ் ஆஃப் பவர்’ என்ற நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

இந்திய – சீனப் போரை கதைக்களமாகக் கொண்டு வெளியான பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘அன் ஆர்ம்டு விக்டரி’ (1963) நூலும் அரசியல் காரணங்களுக்காக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற வி.எஸ். நைபாலின் ‘ஆன் ஏரியா ஆஃப் டார்க்னஸ்’ என்ற நூல், இந்தியாவை மட்டரகமாகச் சித்தரிக்க முற்படும் விஷமத்தனமான முயற்சி என்ற பெயரில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

மதம், அரசியல் காரணங்கள் அல்லாமல் தனிப்பட்ட ஒருவரை பற்றிய தவறான கோணத்தில் சித்தரிப்பதாக தடை செய்யப்பட்ட நூல் ஹாமிஷ் மெக்டொனால்டின் ‘தி பாலியெஸ்டர் பிரின்ஸ்.’தொழிலதிபர் திருபாய் அம்பானியின் குடும்பத்தை மோசமாக சித்தரிப்பதாக இந்நூல் தடை செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...