No menu items!

ஆதிச்சநல்லூர் அதிசயம்: 3000 ஆண்டுகள் முன்பே தங்கம் வைத்திருந்த தமிழன்

ஆதிச்சநல்லூர் அதிசயம்: 3000 ஆண்டுகள் முன்பே தங்கம் வைத்திருந்த தமிழன்

உலகின் தொன்மையான மொழி தமிழ். அது போலவே தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் மிகத் தொன்மையானதே என்பதை நிரூபிக்கும் இலக்கியச் சான்றுகளும் வெளிநாட்டவர் குறிப்புகளும் நிறையவே உள்ளன. இப்போது இதற்கு மேலும் வலுசேர்த்து வருகின்றன தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுகள். குறிப்பாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு.

இந்தியாவிலேயே முதல்முதலில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில்தான் இரும்பு பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 3.5 சென்டிமீட்டர் நீளம் கொண்ட தங்க துண்டு ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தமிழர்கள் 3000 – 4000 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு முன்னேறிய நாகரிகமாக இருந்திருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. உற்சாகத்தில் இருக்கிறார்கள் தமிழறிஞர்கள்.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், இருபத்தி நான்கு கி.மீ. தென்கிழக்கில், தாமிரபரணி ஆற்றின் வட திசையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் மேல் திசையில் இருக்கிறது ஆதிச்சநல்லூர். அழகிய சிற்றூர். கறுப்பு, சிவப்பு மண்மேடுகள் களிமண் மணலாய் வியாபித்திருக்கும் பரந்த நிலப்பகுதி. தாமிரபரணி ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பித்தான் இப்பகுதியில் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் சமீபத்தில் கிடைத்துள்ள அரிய சான்றுகள், மிகவும் முற்கால தமிழர் நாகரிகம் ஆதிச்ச நல்லூர் தான் என்பதை உறுதி செய்துள்ளது.

முதலில் ஜெர்மானியர்கள்தான் ஆதிச்சநல்லூரில் வந்து ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். இனங்களின் வேர்களைக் கண்டறிவதுதான் அவர்களின் அக்கறை. இது தொடர்பாக நம்முடன் பேசிய பேராசியரியர் எஸ். ராமச்சந்திரன், “ஆங்கிலேய அரசு, மதராஸ் அரசாணை 867 – நாள்: 13.08. 1876 மூலம் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு பற்றிய ஒரு குறிப்பினைப் பதிவு செய்தது. அந்த ஆணையில் அரசு செயற்பொறியாளர் ஜே.டி. கிரான்ற் என்பவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி, தூத்துக்குடிக்கு மேற்கே புதுக்கோட்டை என்ற ஊரையடுத்து அமைந்துள்ள நல்லமலை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதையுண்ட நிலையில் காணப்படுவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் என்ற மானிடவியலாளர் ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் அகழாய்வு செய்து, ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களை பெர்லின் நகருக்கு எடுத்துச் சென்றார். அவை தற்போது Volkar Kunde அருங்காட்சியத்தில் உள்ளன” என்கிறார்.

ஜாகோரைத் தொடர்ந்து பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்.லோனிசு லாபிக்கு என்பவர் 1903-04 ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து பல மட்கல வகைகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள், தொங்கு விளக்குகள், இரும்பு வாட்கள் போன்றவற்றை கண்டெடுத்தார்.

இதனிடையே, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களும் இந்தியப் பண்பாட்டின் தொன்மையை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். எனவே, இந்தியா முழுவதும் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல அகழாய்வுகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக தொன்மை எச்சங்கள் பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தின் சென்னை பல்லாவரத்தில் 1863ஆம் ஆண்டு நிலப்பொதியியல் அலுவலரான இராபர்ட் புரூஸ் புட் என்னும் அறிஞர் பழங்கற்கால கோடாரி ஒன்றைக் கண்டுபிடித்தார். மேலும் அத்திரம்பாக்கத்தில் உடைந்த புதை வடிவ மனிதக் கால் எலும்பு ஒன்றையும் கண்டுபிடித்தார். இராபர்ட் புரூஸ்தான் தமிழ்நாடு, கற்கால மனிதன் வாழ்ந்த பல தொன்மையான இடங்களைக் கொண்டுள்ளது என முதன்முதலில் உலகுக்கு உணர்த்தியவர்.

இந்நிலையில், இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் சர் மார்டிமர் வீலர் என்பவர் அறிவியல் சார்ந்த அகழாய்வு முறைகளை இந்தியத் தொல்லியல் துறையில் புகுத்தினார். சர் மார்டிமர் வீலர் காலகட்டத்தில்தான் தட்சசிலம், ஹராப்பா, தமிழ்நாட்டில் அரிக்கமேடு அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அரிக்கமேடு அகழாய்வு மூலம் தமிழ்நாடு, உரோமாப்புரி நாட்டுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு அறியப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்விடப் பகுதிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ என்பவர் மேற்கொண்ட அகழாய்வுகள் மிகச் சிறந்த பண்பாட்டினை தமிழகம் கொண்டிருந்திருக்கிறது என்று வெளிஉலகுக்கு தெரியப்படுத்தின. அலெக்சாண்டர் ரீயின் முக்கிய இரண்டு அகழாய்வுகள் ஆதிச்சநல்லூர் மற்றும் பெரும்பேர் ஆய்வுகள். இவரது ஆய்வில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் அப்பகுதியில் தொன்மையான நாகரிகம் ஒன்றிருந்ததை உறுதிப்படுத்தின.

ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரீ சேகரித்த வெண்கலப் பொருட்கள், சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த தாய் தெய்வ அமைப்புடைய வெண்கலத் திருவுருவம் போன்றவை. “ஆதிச்சநல்லூருக்கு அருகில் உள்ள கொற்கையின் பண்பாட்டுக் காலத்துக்கும் முற்பட்டதாக இது இருக்க வேண்டும். கரிமம் 14 முறைப்படி கண்டுபிடிக்கப்பட்ட கொற்கையின் காலம் கி.மு. 785. கொற்கையிலிருந்து வடக்காக ஒன்பது கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. எனவே, முற்காலத்தில் சிறந்த வாணிக நகரமாக இருந்து, கடல் பின்னோக்கிச் சென்ற பின் தனது சிறப்பை இவ்வூர் இழந்திருக்க வேண்டும்” என்கிற முடிவுக்கு அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வுகள் வந்தன.

சங்க இலக்கியங்களின் காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்களைத் தேடுவதுதான் அலெக்ஸாண்டர் ரீயினுடைய நோக்கம். ஆனால், அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆதிச்சநல்லூரில் அவருக்கு நிறையப் பொருட்கள் கிடைத்தன. ஜாகோரைவிட அதிக தாழிகளை இவர் கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 1872க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இவரது சேகரிப்பில் உள்ளன. இவரது அகழாய்வின் போதே ஆதிச்சநல்லூரில் தங்கம் மற்றும் வெண்கல கலைப்பொருட்கள் மூடியுடன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வெண்கல எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, கொம்பினையுடைய மறிமான், சேவல், புலி, யானை முதலியவையும் கிடைத்தன.

மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் பாகங்களாகவும் கிடைத்தன. விலங்கு உருவங்கள், இரும்புப் பொருட்கள், எண்ணற்ற பானை ஓடுகள் என்று அகழாய்வில் கிடைத்த அனைத்தையும் அலெக்சாண்டர் ரீ அட்டவணைப்படுத்தி பதிப்பித்தார். மேலும், “இந்த ஆய்வு மூலம் சங்ககாலத்துக்கு நம்மால் தேதி குறித்துவிட முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில், கண்டெடுக்கப்பட்டுள்ள புதை குழிகளில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் அடக்க முறைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன” என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி பகுதிகளில் மட்டும்தான் இதுபோல் புதைகுழிகள் அதிகம் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஈமச் சடங்குக்கு கல் நடுகிற பழக்கம் உள்ள புதைகுழிகள் தமிழகத்தின மற்ற இடங்களில் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், கல்நடுகிற பழக்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. கேரளாவில் மாங்காட்டு அகழாய்வில் கிடைத்துள்ளவற்றைவிட முற்காலத்தைச் சேர்ந்தது.

‘ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தாழிகள் சிவப்பு, நிறத்தில் கூம்பு வடிவத்தில் 3 அடி விட்டமும் சிறிதளவு உயரமும் சொரசொரப்பான அமைப்பும் உடையவை. தாழிகளின் ஓரங்களில் விரல் பதிந்த வேலைப் பாடுகளும் ஆழமான முக்கோண வடிவப் புள்ளிகளும் காணப்படுகின்றன. தட்டையான கூம்பு வடிவ மூடிகள் உள்ளன. ஈமத்தாழிகளின் உள்ளே கறுப்பு, சிவப்பு நிற மட்பானைகள் காணப்படுகின்றன. சில தாழிகளின் உட்புறத்தில் ஆணி போன்ற அமைப்பு நீட்டிக் கொண்டிருக்கிறது. இது உட்புறம் பொருட்களை தொங்கவிடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள தங்கத் துண்டையும், தாழிகளில் நிறைய பொருட்களை வைத்துள்ளதையும் பார்க்கும்போது அக்கால முக்கியஸ்தர்களை புதைக்கும் இடமாக இது இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. பொதுவாக எல்லா இடங்களிலும் மண்ணில் தோண்டிதான் தாழிகளை புதைத்திருப்பார்கள். ஆனால், ஆதிச்சநல்லூரில் பாறைகளை உடைத்தும் தாழிகளை வைத்துள்ளார்கள். மிகவும் முற்பட்ட நாகரிகமாக இது இருந்திருக்க வேண்டும்” என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்.

ஆதிச்சநல்லூரில் பெரும்பாலான தாழிகளில் முழுமையான எலும்புக் கூடுகளும் கிடைத்துள்ளன. இந்த எலும்புகூடுகளின் ஆய்வு முடிவுகள் இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடையை உடையவர்கள் என்று தெரிவிக்கிறது. எலியட் ஸ்மித் என்பவர் இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மினிய மக்கள் எனக் கூறியுள்ளார். திராவிட இனத்தின் ஒரு கலவைக் கூறாக இந்த ஆர்மினிய இனக்கூறு கருதப்படுகிறது.

‘ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள வெண்கலப் பொருட்கள் சிறந்த வேலைப்பாடுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. வாள், கத்தி, உளி போன்ற இரும்புச் சாமான்களும் பெருமளவில் காணப்படுகின்றன. பானையின் வெளிப்புறத்தில் மென்புடைப்பு சிற்பமாக பெண் உருவமும் மான், பறவை மற்றும் செடிகளும் உள்ளன. புடைப்பு சிற்ப பெண் உருவங்கள் தாய் தெய்வமாகக் கருதப்படுகின்றன. மேலும் வனப் பகுதியாக இருப்பதால் வள்ளிக் குறத்தியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. புடைப்பு சிற்பத்தின் வரி வடிவம் சிந்து சமவெளி பானை ஓடுகளில் காணப்படும் சிற்ப வரி வடிவ ஓவியங்களுக்கு நிகராக உள்ளன. இதுவும் கிடைக்கப்பெற்றுள்ள பானைகளின் வகைகளும் ஆதிச்சநல்லூர் கலாச்சாரத்தின் தொழில் நுட்ப மேலாண்மையைக் காட்டுவதாக உள்ளன. மேலும் வெண்புள்ளி அலங்கார வேலைப்பாடுகளும் பானை மேல் தீட்டப்பட்டுள்ளன. இது அக்கால படைப்பாளியின் அழகியல் மற்றும் படைப்புத்திறன் நேர்த்தியையும் மக்களின் ரசனையையும் காட்டுவதாக உள்ளது.

பொதுவாக மட்பாண்டங்கள், தாழி, கிண்ணம், தட்டு, நீண்ட கழுத்துடைய ஜாடி, மூடி, சிறிய பானைகள், பானை தாங்கும் நாற்காலிகள், வட்டிகள் போன்றவை மூன்று கால நிலைகளிலும் கிடைத்துள்ளன. ஆரம்ப கால மட்பாண்டங்கள் சிறப்பாகவும் நன்கு சுடப்பட்டவையாகவும் உள்ளன. பிற்காலங்களில் உள்ளவற்றில் இது காணப்படவில்லை. மூன்று அடுக்குகளிலும் ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவை வண்ணங்கள், உள்ளடக்கம், மற்றும் அமைப்பியல் வகைகளில் மாறுபட்டு உள்ளன. புதைக்கும் விதத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் வேறுபாடுகள் உள்ளன. உடலை அப்படியே கட்டி நிற்கும் நிலையில் தாழிக்குள் வைத்து புதைத்துள்ளார்கள்” என்கிறார், தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி.

ஆதிச்சநல்லூரின்  முக்கியத்துவம் கருதி இந்த ஊரிலேயே மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டுதான், மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் மட்டும் 90 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 3 மீட்டர் ஆழத்தில் 160 செண்டி மீட்டர் நீளமுள்ள நீளமான ஈட்டி போன்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் அருகே இரும்பு பாத்திரம் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இரும்பு பாத்திரத்தின் மீது நெல் உமியின் படிமங்கள் ஒட்டிய நிலையில் காணப்படுகிறது. இப்போது அலக்ஸாண்டர் ரீக்குப் பின்னர் மீண்டும் தங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

“ஆதிச்சநல்லூரில் கிடைக்கும் தடயங்களை வைத்து நம் முன்னோர்களின் கலாசாரத்தையும் சமூக பொருளாதார கட்டமைப்பையும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். தமிழ்நாடு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிறப்பிடம் என்பதும் தமிழகம் தொன்மையான நாகரிகத்தினை உடைய ஒரு பிரதேசம் என்பதும் பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. என்றாலும், இப்போது ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ள தடயங்கள் கிட்டத்தட்ட கி.மு. 1000 வரைக்கும் அல்லது அதற்கும் முன்பும் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது 3000 வருடங்களுக்கு முந்தையவை. இது தமிழர்களின் மிகவும் முற்கால நாகரிகம் என்பதுடன், மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழகமும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும்” என்கிறார் சத்தியமூர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...