No menu items!

மிஸ் ரகசியா: ரஜினி – பாஜக தமிழ் நாட்டு வியூகம்

மிஸ் ரகசியா: ரஜினி – பாஜக தமிழ் நாட்டு வியூகம்

“தமிழ்நாடு அரசியல் திரும்பி சூடாகும்போல” என்று கேட்டோம் ரகசியாவிடம், அப்போதுதான் அலுவலகத்துக்குள் நுழைந்திருந்தாள்.

“என்ன… ரஜினி மேட்டரா? ரஜினி அவர் வீட்டு கேட்டுக்கு வந்தாலே தமிழக அரசியல் மாறுதானு கேள்வி வந்துருது. இதெல்லாம் டூ மச்” என்று அலுத்துக் கொண்டாள் ரகசியா.

“உண்மைதானே. கவர்னருடன் அரசியல் பேசினேன். அத உங்ககிட்ட சொல்ல முடியாதுனு ரஜினி சொல்லியிருக்கார். அதுல விஷயம் இருக்குல.”

“கண்டிப்பா நிறைய விஷயம் இருக்கு. ஆனா அரசியல் பேசினேன்ன்னு ரஜினி சொன்னதை ஆளுநர் தரப்புல ரசிக்கலனு ஒரு செய்தி இருக்கு. ஏன்னா குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் அரசியல் பேசக் கூடாது என்பது மரபு. இந்நிலையில், கவர்னரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி சொன்னது தர்மசங்கடத்தை ஆளுநருக்கு கொடுத்திருக்கு. ஏற்கனவே இங்க அரசியல் பண்றார்னு கவர்னர் ரவி மேல புகார் இருக்கும்போது ரஜினி இப்படி சொல்லியிருக்கிறது, கவர்னர் அரசியல் பண்றார்ங்கறதை உறுதிபடுத்துது.”

“திரைமறைவுல நடக்கிறத ரஜினி வெளிப்படைய வெளில சொல்லிட்டார். அவர் எப்பவும் வெளிப்படையா பேசுறவர்தானே.”

“அவர் எல்லாத்தையும் வெளிப்படைய பேசுறது இல்லையே..உங்க கிட்ட சொல்ல முடியாதுனு அவரே சொல்லிட்டாரே?

“ஆனா அவர் சொல்லாத தகவல்லாம் உனக்கு தெரிஞ்சிருக்குமே… ரஜினி – கவர்னர் சந்திப்புக்கு காரணம் என்ன?”

“போன சனிக்கிழமை காலைல டெல்லி போனார் ரஜினிகாந்த். ஜெயிலர் பட ஷூட்டிங்னு சொல்லப்பட்டது. ஆனால், டெல்லியில் சுதந்திர தினம் தொடர்பான விழாவில் கலந்துகொண்டு ஞாயிறு மதியம் திரும்பினார். டெல்லில பிரதமர் மோடியை அவர் சந்திக்கிறதா இருந்தது. ஆனால், மோடியால் ரஜினிக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. அதை பிரதமரே போனில் ரஜினிக்கு சொல்லியிருக்கிறார். கவர்னரைப் பார்க்குமாறு சொன்னதும் பிரதமர்தான் என்று டெல்லி வட்டாரங்கள் சொல்லுகின்றன. அதனால்தான் ஞாயிறு சென்னை திரும்பிய ரஜினி மறுநாளே கவர்னரை சந்தித்திருக்கிறார்.”

“அத்தனை அவசரம் ஏன்? தலை போகிற விஷயங்கள் இருக்கிறதா?”

“கவர்னர் ரவிக்கிட்ட ரஜினி போன் தொடர்புல இருக்கிறார். ஆனால், நேர்ல போனதுக்கு ஒரு காரணம் இருக்கு. செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சிக்கு ரஜினி போயிருந்தார். அவர் பக்கத்துல உதயநிதி ஸ்டாலின் உட்கார்ந்திருந்தார். திமுகவுடன் பாசமாய் இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தன. தான் பாஜகவுடன் நெருக்கமாய் இருக்கிறேன் என்பதை வெளிப்படையாக காட்டிக்கொள்வதற்காகவும் இந்த நேரடி சந்திப்பு. ஆனா இதை தாண்டி இன்னொரு முக்கியமான செய்தி இருக்கிறது. அடுத்து வரும் வருடங்களில் தமிழ்நாடு அரசியல் எந்த வழியில போகப் போகிறது அதற்கு ரஜினி எப்படி உதவப் போகிறார் என்பதெல்லாம்தாம் இப்போ ஹாட் டாபிக்.”

“ரஜினிதான் அரசியலுக்கு வரலனு சொல்லிட்டாரே… அப்புறம் எப்படி தமிழக அரசியல் வேறு வழில திரும்பும்?”

“பிரஸ் மீட்ல ரஜினி சொன்ன ஒரு விஷயத்தை கவனிச்சிங்கலா? இங்க இருக்கிற ஆன்மீக உணர்வு கவர்னருக்கு பிடிச்சிருக்குனு சொல்லியிருக்கார். இந்த வரியை ஈசியா கடந்து போக முடியாது. நம்ம கவர்னரும் தொடர்ந்து ஆன்மீகம் குறித்து மேடைகள்ல பேசிட்டு வரார்.”

“இதுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?”

“இவ்வளவு நாள் சம்பந்தம் இல்லாமதான் இருந்தது. இனிம ஆன்மீகம் அரசியலாகப் போகுது. இதை ரஜினி செய்யப் போகிறார்.”

“அவர்தான் ஆன்மீக அரசியல்னு சொல்லி அது ஃபெயிலியராயிருச்சே.”

“ஆமா. இதற்கு முந்தியும் பாஜக தலைவர்கள் ஆன்மீக அரசியல் பத்தியும் பேசியிருக்காங்க. ஆனா, இந்த முறை அதை பெருசா பண்ணப் போறாங்க. அதுக்கு ரஜினி உதவப் போறார். தீபாவளிக்கு முன்னாடி சென்னையில இல்லனா சிதம்பரத்துல இல்லனா திருவண்ணாமலைல மிகப் பெரிய அளவுல ஆன்மீக மாநாடு நடத்தப் போறாங்க. ஜக்கி வாசுதேவ்லருந்து இந்தியாவுல இருக்கிற அத்தனை ஆன்மீகவாதிகளையும் அழைக்கப் போறாங்களாம். மூணு நாள் நடக்கப் போற மாநாட்டுல பிரதமரும் கலந்துக்கப் போறார். இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கப் போறது ரஜினிகாந்த்.”

“அவர் ஜெயிலர் ஷூட்டிங்லல இருப்பார்.”

“ஒருங்கிணைக்கப் போறதுனா அவரா டேபிள் சேர்லாம் எடுத்துப் போடப் போறார்? அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மாநாடு நடக்கும். ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் கூட்டப் போறாங்க.”

“அரசியல் பாதையே மாறும்னு சொன்னியே.”

“ஆமாம். ஆன்மீகப் பூமியான தமிழ் நாட்டிலிருந்து ஆன்மீகத்தை திராவிடக் கட்சிகள் அழிச்சிட்டாங்க. ஆன்மீகத்தை மீட்டெடுக்கனும், எல்லோரும் ஒன்று சேருவோம்னு சொல்லப் போறாங்க. தமிழ்நாட்டு அரசியலை ஆன்மீகமா திராவிட அரசியலான்ற ஒற்றை புள்ளில கொண்டு வந்து நிறுத்தனுங்கிறது திட்டமாம்.”

“பெரிய திட்டமால இருக்கு. தமிழ்நாடு இதுக்கு சரிபட்டு வருமா?”

“வரும்ங்கிற நம்பிக்கை பாஜக கிட்ட இருக்கு. வெளிலருந்து ரஜினி ஆதரவு தந்தா ஈசியா ஜெயிச்சுரலாம்னு நினைக்கிறாங்க.”

“ஓ… அதான் தமிழருவி மணியன் மீண்டும் சீனுக்கு வராரா? கட்சிப் பேரையெல்லாம் மாத்தியிருக்காரே?”

“காந்திய மக்கள் இயக்கம் இனி காமராஜர் மக்கள் இயக்கமாக செயல்படும்னு சொல்லியிருக்கார். ஆனா அது ரஜினி, பாஜகவுக்கு ஆதரவாக இருக்காது. முக்கியமா பாஜகவுக்கு ஆதரவாக இருக்காதுனு அவர் கூட இருக்கிறவங்க சொல்றாங்க.”

“அவர் கூட இன்னும் ஆட்கள் இருக்காங்களா?”

“உங்களுக்கு ஜோக்கா இருக்குல” என்று சிரித்தாள் ரகசியா.

“நாடாளுமன்றத்துல நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழிக்கும் நேரடியா மோதல் நடந்திருக்கே. முரசொலில நிதியமைச்சரை விமர்சிச்சு கட்டுரை எழுதியிருக்காங்களே?”

“விலைவாசி உயர்வு தொடர்பா கனிமொழி பேசுனதுல நிதியமைச்சர் கடுப்பாகிட்டாங்க. குறிப்பா திமுக தரப்பிலிருந்து வாவ் என்று ஒரு குரல் வந்ததும் அவங்க சூடாகிட்டாங்க.”

“அவங்க பதில் கொடுத்துக்கிட்டு இருக்கும்போது திமுகவினர் வெளிநடப்பு செஞ்சதை பயந்து ஓடிட்டாங்கனு கிண்டல் பண்றாங்களே.”

“ஆமா, இந்த விஷயத்துல முதல்வர் கொஞ்சம் அப்செட். நிதியமைச்சருக்கு பதில் சொல்லியிருக்கணும்னு சொல்லியிருக்கார். டி.ஆர்.பாலுவைக் கூப்ட்டு விசாரிச்சிருக்கார். எனக்கு அன்னைக்கு உடம்பு சரியில்ல, அதனால் போகல. வெளிநடப்பு முடிவை யார் எடுத்ததுனு தெரியலைனு அவர் சொல்லியிருக்கார். காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவுனு முதல்வர் கிட்ட திமுக நாடாளுமன்றக் குழு தரப்புல விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கு. காங்கிரஸ் வெளிநடப்பு செய்ததால திமுகவும் வெளிநடப்பு செய்ய வேண்டியதாயிற்றுனு சொல்லியிருக்காங்க. அதை முதல்வர் புரிஞ்சிக்கிட்டதால முரசொலில நிர்மலா சீதாராமனை விமர்சித்து தலையங்கம் எழுதுனாங்களாம். இதைவிட முக்கியமான விஷயம் முதல்வர் எம்.பி.க்களை எச்சரித்தது.”

“முதல்வர் எச்சரித்தாரா?  எதற்கு?  பாஜககூட மோதக் கூடாதுனா?”

“இல்லை. பாஜககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். மகாராஷ்ட்ரவுல சிவ சேனா நடந்தது டெல்லில திமுக எம்.பி.களுக்கு நடந்திரக் கூடாது. உஷாரா இருங்கனு கூறியிருக்கிறார்.”

“ஆச்சர்யமா இருக்கு. கூட்டணிக் கட்சிகளால்தான் நான் முதல்வர் ஆனேன்னு முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்காரே?”

“இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டுலதானே. முதல்ல திருப்பூருக்கு நேர்ல போய் கலந்துக்கிறதாதான் இருந்துச்சு. ஆனா கடைசில வீடியோவுல பேசினார். திமுகவுடன் நெருக்கம் குறைகிறதுனு செய்திகள் வருது, கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கலனு புகார்கள் வருது… இதையெல்லாம் கவனிச்சுதான் முதல்வர் அப்படி பேசினார். இது திமுக அமைச்சர்களுக்கும் புரிஞ்சிருக்கும். இப்போ கூட்டணிக் கட்சிகள் ஹேப்பி அண்ணாச்சி” என்று சிரித்தாள் ரகசியா.

“முதல்வர் எல்லா தரப்பையும் ஹேப்பியா வச்சுக்கணும்னு நினைக்கிறார் போல. சரி, நாடாளுமன்றத்துல அதிமுக எம்.பி.யா ஓபிஎஸ் பையன் ரவீந்திரநாத்தே இருக்கிறாரே… இவங்க கொடுத்த லெட்டரை சபாநாயகர் ஏத்துக்கலையா?”

“ஆமாம். ரவீந்திரநாத்தை சுயேச்சையாக அறிவிக்கணும்னு எடப்பாடி தரப்பு தீவிரமா முயற்சி செய்யுது. தம்பிதுரை இது சம்பந்தமா நாடாளுமன்ற சபாநாயகரை சந்திச்சு பேசியிருக்கிறார். நீதிமன்ற உத்தரவுகளையெல்லாம் காட்டியிருக்கிறார். ஆனால், சபாநாயகர் எல்லாத்தையும் வாங்கி வச்சுக்கிட்டு அனுப்பிட்டாராம். டெல்லி இன்னும் ஓபிஎஸ் பக்கம்தான் இருக்குங்கிறதை இது காட்டுது. ஆனாலும் எடப்பாடி தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.”

“சசிகலா- ஓபிஎஸ் இணைப்புனுலாம் பேசிக்கிட்டு இருந்தாங்க… என்னாச்சு? ஒண்ணும் நடக்கலையே?”

“கோர்ட் கேஸ்லாம் முடியட்டும் அப்புறம் சேர்ந்துக்கலாம்னு ஓபிஎஸ் சொல்லிட்டாராம். ஆனா நிச்சயம் இணைப்பு இருக்குனும் உறுதிப்படுத்தியிருக்கார்.”

“முதல்வர் மருமகன் சபரீசன் திருச்செந்தூர்ல யாகம் வளர்த்தார், அது எதிரிகளை அளிக்கும் யாகம்னுலாம் செய்தி வந்ததே?”

“அப்படிலாம் இல்லை என்கிறார்கள் சம்பந்தப்பட்ட ஆலயத் தரப்பினர்.பொதுவாவே சபரீசம் கடவுள் நம்பிக்கை உள்ளவராம். வழக்கமான கோயில் பூஜைதான் பெருசாயிடுச்சு என்று நண்பர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் வந்த சமயத்தில் அதிகாரிகள் காட்டிய கெடுபிடிகளும் அவருக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள். அமைதியாக வந்து அமைதியாக போவதைதான் அவர் விரும்பினாராம். ஆனால், சமூக ஊடகங்களில் பாஜகவினரால் அது பெரிதுப்படுத்தப்பட்டு விட்டது என்பது திமுகவினரின் வாதம்.”

“5ஜி ஏலப் பிரச்சினை என்னவாகும்? ஆ.ராசா பரபப்பாக பேசியிருக்கிறாரே.”

“ஆமாம். ஆனால், திமுக அதற்கு அழுத்தம் தராது என்றே கூறப்படுகிறது. 5ஜி விவகாரத்தில் காங்கிரஸ் ஆர்வமாய் இல்லையாம். திமுகவுடன் இணைந்து போராட அது தயாராக இல்லாத பட்சத்தில் நாம் பேச வேண்டாம் என்று திமுக முடிவெத்திருப்பதாக அறிவாலயத் தகவல் சொல்கிறது. சரி, நான் செஸ் போட்டி நிறைவு விழாவுக்கு போகணும் கிளம்புகிறேன்” என்று அவசரப்பட்டாள் ரகசியா.

“குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருவார்னு சொன்ன… ஆனா அவர் வரலையே?

“அவரை கேட்டுக்கிட்டு இருக்காங்கனுதான் சொன்னேன். ஆனா குறைந்த கால அவகாசத்துல குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாதுனு டெல்லில சொல்லிட்டாங்க. அமித்ஷாவை கூப்பிடலாம்னு திமுகவுல சிலர் சொல்லியிருக்காங்க. ஆனால், அந்த யோசனை ஏற்கப்படவில்லை” என்று சொல்லி ஓடிப் போனாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...