பணவீக்கம் காரணமாக உப்பு முதல் தங்கம் வரை அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறி வருகிறது. ஜிஎஸ்டியால் சுடுகாடு வரை எல்லா வழிகளிலும் அரசு வரியை ஏற்றிக்கொண்டிருக்க, நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அரிசி, மளிகை சாமான் என்று பெரியவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்குத்தான் விலை உயர்கிறது என்றால் சிறு குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில் போன்ற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் 1-ம் வகுப்பில் படிக்கும் ஒரு பெண் குழந்தை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரம்மாவ் நகரில் வசிக்கும் கிருதி துபே என்ற குழந்தைதான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியில் அந்த குழந்தை எழுதியுள்ள கடிதத்தில், “என் பெயர் கிருதி துபே. நான் ஒன்றாம் வகுப்பில் படித்து வருகிறேன். மோடிஜி, பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கு நீங்கள் காரணமாகி இருக்கிறீர்கள். நான் பயன்படுத்தும் பென்சில், ரப்பர் போன்றவற்றின் விலைகூட ரொம்பவே உயர்ந்துவிட்டது. அவற்றின் விலைதான் உயர்ந்ததென்றால் நான் விரும்பிச் சாப்பிடும் மேகியின் விலையும் உயர்ந்துவிட்டது. அதனால் இப்போதெல்லாம் நான் பென்சிலைத் தொலைத்துவிட்டு புது பென்சில் கேட்டால் அம்மா என்னை அடிக்கிறார். மற்ற குழந்தைகள் என் பென்சிலைத் திருடினால் நான் என்ன செய்ய முடியும்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து அக்குழந்தையின் அப்பாவும் வழக்கறிஞருமான விஷால் துபே கூறும்போது, “இது என் மகளின் ‘மனதின் குரல்’. பள்ளியில் பென்சிலை தொலைத்ததற்காக அவளை என் மனைவி திட்டியுள்ளார். இதனால் தனது ஆதங்கத்தை இந்த கடிதம் மூலம் என் மகள் தெரியப்படுத்தியுள்ளார்” என்றார்.
இந்த கடிதம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்னும் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.