No menu items!

நியூஸ் அப்டேட்: பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்

நியூஸ் அப்டேட்: பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்

சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசு 4 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அவற்றில் பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்களை தேர்வு செய்து, இதில் ஒன்றை மாநில அரசு இறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பரந்தூர்.  இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் இந்த பதிலை தெரிவித்துள்ளார். மேலும் இறுதி செய்யப்பட்ட இடத்திற்கு மாநில அரசு இட அனுமதியை வழங்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கடலுக்குள் கலைஞர் பேனா சின்னம்: அனுமதி பெறும் பணிகள் தொடக்கம்

கலைஞர் மு. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில், ரூ. 81 கோடி செலவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. நினைவு சின்னம் சென்றடையும் வகையில் 290 மீ தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது.

இது திராவிட மாடல் அரசா அல்லது ஆரிய மாடல் அரசாசீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம், தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக் கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக அப்பகுதியில் நடத்தி வரப்பட்ட மாட்டிறைச்சி உணவுக் கடையை, இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, திடீரென மூட உத்தரவிட்டிருக்கும் திமுக அரசின் எதேச்சதிகார செயல்பாடு வெட்கக்கேடானது.

ஏற்கெனவே, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிரியாணி உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது பேசுபொருளாகி எதிர்ப்புக்கு உள்ளான நிலையில், உணவுத் திருவிழாவையே மொத்தமாக ரத்துசெய்து மதவாத அமைப்புகளை நிறைவடையச்செய்த திமுக அரசு. இப்போது மாட்டிறைச்சி உணவுக்கடைக்கு அனுமதி மறுத்து மூடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மாட்டிறைச்சி உணவின் பெயரால் பாஜக அரசும், அதன் ஆட்சியாளர்களும், செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடல் அரசா? இல்லை ஆரிய மாடல் அரசா? என்பதை தமிழக அரசு தெளிவுப்படுத்த முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

5ஜி அலைக்கற்றை ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடிக்கு விற்பனை

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் , அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. 7 நாட்களாக தொடர்ந்த ஏலத்தில் இன்று ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி தொகைக்கு 5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரியான தொகை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

இதுகுறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல  சுழற்சி காரணமாக, இன்று (01.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும்,  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும்  விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்  மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (02.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும்  விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்  மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...