No menu items!

நியூஸ் அப்டேட்: பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நியூஸ் அப்டேட்: பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு வெளியான நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் இல்லத்தில், அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். மேலும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை: அற்புதம் அம்மாள்

பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம் அம்மாள், “என்ன சொல்றது, என்ன பேசுறது என்கிற தடுமாற்றத்தால் கடந்த சில தினங்களாக ஊடகங்களை சந்திக்க முடியவில்லை. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 32 ஆண்டுகால போராட்டம் இது. பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. என் மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த முகம் தெரியாத நபர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி. நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை” என்றார்.

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது

காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து, 250 சீனர்களுக்கு விசாக்கள் வாங்கித் தர கார்த்திக் சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் சி.பி.ஐ தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் பாஸ்கர ராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ காவலில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிவாரணப் பொருட்களுடன் இலங்கை செல்லும் கப்பல்: முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து இன்று அனுப்பி வைக்கிறார்

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக ‘டான் பின்-99’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கப்பலில் கடந்த 2 நாட்களாக மருந்து பொருட்கள், பால் பவுடர்கள், நிவாரண பொருட்கள் கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மருந்து பொருட்களை பொருத்தவரையில் முதல் கட்டமா க ரூ.8 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 593 மதிப்பில் 55 வகையான அத்தியாவசிய மருந்துகளும், 2 சிறப்பு மருந்துகளும் 700 அட்டை பெட்டிகள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் 15 கிலோ எடை கொண்ட பால் பவுடர்கள் சுமார் 200 டன் வரை ஏற்றப்பட்டு உள்ளது. அதேபோல் 50 கிலோ எடையுள்ள அரிசி பைகள் 5 ஆயிரம் டன் அளவுக்கு ஏற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்று நிறைவடைந்து, மாலை 5 மணிக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை கொழும்பு துறை முகத்திற்கு ‘டான் பின்-99’ கப்பல் புறப்படுகிறது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது ஒருநபர் ஆணையம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018-ல் மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணைய விசாரணையின் இடைக்கால அறிக்கையை அருணா ஜெகதீசன், கடந்த ஆண்டு மே 14-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதல்வரிடம் இன்று சமர்பித்துள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...