No menu items!

பேரறிவாளன் விடுதலை: நேரடி பார்வையாளனின் வேண்டுகோள் – ஆர். மணி

பேரறிவாளன் விடுதலை: நேரடி பார்வையாளனின் வேண்டுகோள் – ஆர். மணி

இந்தியாவின் அன்றைய இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை ஒளிக் கீற்றை உருவாக்கிய இளம் தலைவர் ராஜீவ் காந்தி. 1991 மே 21 அன்று மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட போது அவருக்கு வயது 46-தான். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாள், அவருடைய வாழ்வின் கடைசி மூன்று மணி நேரம் நான் அவருடன் இருந்தேன். அன்று மட்டுமல்ல, அதன்பின்னர் இந்தக் கொலைக்காக நீதிமின்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளின் போதெல்லாம் நான் செய்தி சேகரிப்பாளனாக குறிப்பிட்ட இடங்களில் இருந்திருக்கிறேன்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த 1984 – 1989 ஆட்சிக்காலம் பற்றி ஓராயிரங் குறைகள் இருந்தாலும், ராஜீவ் காந்தி புதிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத்தான் இருந்தார். முதல் இரண்டு ஆண்டுகள், 1986 வரையில் அவரை ‘மிஸ்டர் கிளீன்’, அதாவது ‘திருவாளர் பரிசுத்தம்’ என்றுதான் தேசீய ஆங்கில ஊடகங்கள் எழுதின. 1987இல் போஃபர்ஸ் விவகாரம் வெடித்துக் கிளம்பிய பின்னரே ராஜீவ் காந்தியின் பெயர் நாசமாகத் தொடங்கியது.

1991ஆம் வருடம் ‘விடிவெள்ளி’ என்ற காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஒரு நாளிதழில் நான் நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். மே 21ஆம் தேதி மதியம்தான் ‘விடிவெள்ளி’ ஆசிரியரும், எனது பத்திரிகையுலக குருநாதருமான தெள்ளூர் மு. தருமராசன் எனக்கு பத்திரிகையின் நிருபர் அடையாள அட்டையை கொடுத்திருந்தார்.

மாலை 6 மணியளவில் காங்கிரஸ் தலைமையலுவலகமான சத்தியமூர்த்த பவனில் இருந்து இரண்டு வேன்களில் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலில் விமான நிலையம்.

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த ராஜீவ் காந்தி சுமார் 30 நிமிடங்ஙள் தாமதமாக வந்தார். வந்தவுடன் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, டாய்லெட் போய்விட்டு வந்த அவர், பத்திரிகையாளர்களின் சரமாரியான கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

முதல் கேள்வி அப்போது பிடிஐ செய்தி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செய்தியாளர் ரங்கராஜனிடம் இருந்து வந்தது. அது மேற்கு வங்கத்தில் சிபிஎம்முடன் காங்கிரஸ் தேர்தல் உறவுக்காக பேசிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த நேரம். “வாட் அபவுட் யூவர் டாக்ஸ் வித் தி லெஃப்ட்?’’ இது கேள்வி. ராஜீவின் பதில், ’நோ ஐ ம் நாட் டாக்கிங் வித் தி லெஃப்ட்.’’ மீண்டும் ரங்கராஜனின் கேள்வி, “நோ… நாட் யூ.. இட்டீஸ் தி காங்கிரஸ் பார்ட்டி?’’ ராஜீவின் பதில், “நோ தி காங்கிரஸ் பார்ட்டி இஸ் நாட் டாகிங் வித் தி லெஃப்ட்’’. வரிக்கு வரி எனது நினைவுகளில் இருந்து நான் இதனை சொல்லுகிறேன். காரணம் பசுமரத்தாணி போல் ஒரு இளம் செய்தியாளனின் நெஞ்சில் பதிந்த வாசகங்கள் அவை.

நான் இரண்டு கேள்விகளை கேட்டேன். ஒன்று, “இலங்கை பிரச்சனையில், அங்கு நடக்கும் ரத்தக் களறியைத் தடுக்க, நீங்கள் ஏதாவது ஏன் செய்யக் கூடாது?” இதற்கு ராஜீவ், “நாங்கள் எங்களால் ஆனதை செய்து கொண்டிருக்கிறோம். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் உரிமைகளுக்காக எங்களால் ஆனதை செய்வோம்” என்றார். இரண்டாவது, அந்த தேர்தலில் பாஜக அதிகமாக பணம் செலவு செய்து கொண்டிருப்பது பற்றி வந்த தகவல்கள் குறித்தது. அதற்கு ராஜீவ், “ஆம் இந்த தேர்தலில் பாஜக செலவு செய்வது போன்று வேறு எவரும் செலவு செய்து கொண்டிருக்கவில்லை’’ என்றார்.

அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ராஜீவ் போரூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசினார். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் பொதுக்கூட்ட மேடைக்கு எதிரே தேசீய நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டிருந்த இந்திரா காந்தியின் சிலையை திறந்து வைத்தார். அதன்பிறகு கூட்ட மேடைக்கு அருகே சென்று காரில் இருந்து இறங்கினார்.

விமான நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையில் ராஜீவ்காந்தியே காரை ஓட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன், காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி நடராஜன், ‘கல்ஃப் டைம்ஸ்’ பத்திரிகையின் பெண் செய்தியாளர் ஆகியோர் அவருடன் காரில் இருந்தனர். அப்போது அந்த பெண் செய்தியாளர் கருவுற்றிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் கூட்ட மேடைக்கு அருகில் காரிலிருந்து இறங்கி மேடையை நோக்கி நடக்கத் தொடங்கிய ராஜீவ், தன் பின்னால் வந்த ஜெயந்தி நடராஜனை பார்த்து, “நீங்கள் அந்த பெண் செய்தியாளருக்கு உதவியாக இருங்கள்; அவர் கருவுற்றிருக்கிறார்” என்று கூறினார். இதனால், ஜெயந்தி நடராஜன் மீண்டும் ராஜீவ் ஓட்டி வந்த காருக்குத் திரும்பினார். அதுதான் ஜெயந்தியின் உயிரை காத்தது.

பின்னர் நடந்தது வரலாறு. என் கண் முன்னால் ஒரு மஞ்சள் ஒளிப் பிழம்பு தரையிலிருந்து வானில் சுமார் 50 அடி மேலே எழும்பியதை கண்டேன். எங்கும் பதற்றம். பொது மக்களும் போலீசாரும்கூட ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சில நிமிடங்களில் உணர்ந்துகொண்டேன், ராஜீவ் கொல்லப்பட்டு விட்டார்.

என்னுடன் வந்த பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கவும் புகைப்படங்கள் எடுக்கவும் மேடையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். சில அடிகள்கூட எடுத்து வைத்திருக்கமாட்டேன். என்னுடன் வந்த, காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவுத் தலைவர் உதயபானு, “மணி நாம் நம்முடைய வேனிலேயே தப்பித்து விடலாம். எங்கேயெல்லாம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாது’’ என்றார். அச்சத்தினால் நானும் அவர் சொல் கேட்டு வேனுக்குத் திரும்பினேன். நாங்கள் 50 நிமிடத்தில் சத்தியமூர்த்தி பவனுக்குத் திரும்பினோம்.

அப்போது டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் ஹாட் லைன் தொலைபேசி இணைப்பு இருந்தது. செல்பேசிகள் கிடையாது. சத்தியமூர்த்தி பவனின் மேனேஜர் வள்ளியப்பன், “என்ன நடந்தது? சொல்லுங்கள்” என்றார். அரசல்புரசலாக அவர்களுக்கு அதற்கு முன்பே தகவல் கசிந்து விட்டிருந்தது. “ராஜீவ் கொல்லப்பட்டு விட்டார்’’ என்று கூறிவிட்டேன்.

அங்கு என்னருகில் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் சத்தியமூர்த்தி பவன் முன் வாயிலில் இருந்த மணல் வெளியில், அந்த நடு இரவில் புரண்டு, புரண்டு கதறி அழுததை என் வாழ்வில் மறக்க முடியாது.

நான் பத்திரிகையாளனாக தொழிலுக்கு வந்த புதிது. என்னுடைய அலுவலகம் கோடம்பாக்கத்தில் இருந்தது. நான் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருந்தேன். இரண்டு நாட்கள் கழித்துத்தான் அலுவலகம் சென்றேன். ஆசிரியரும் ஏன் வரவில்லை என்று கேட்கவில்லை. எந்தளவுக்கு ஒரு தொழில்முறை சாராத, ஆங்கிலத்தில் சொன்னால் ஒரு ‘அன் புரஃபஷனல்’ பத்திரிகையாளனாக நான் இருந்தேன் என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சிரியமாக இருக்கிறது. ராஜீவ்காந்தி படுகொலையின் போது, சம்பவ இடத்தில் இருந்து, அந்த செய்தியை என்னுடைய பத்திரிகையில், நான் நேரடியாக ரிபோர்ட் செய்ய முடியாமல் போனது, இன்றளவும் எனக்கு ஒரு மனக் குறைதான்.

அந்த மனக்குறை எட்டாண்டுகளுக்குப் பிறகு நீங்கியது. ஜனவரி 28, 1998… பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றம் ராஜீவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்ததை அந்த நீதிமன்றத்தின் வாயிலில் நின்று நான் செய்தி சேகரித்திருக்கிறேன். அப்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்தச் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க உதவினேன்.

பின்னர் 1999ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் 19 பேரை விடுதலை செய்தும், நால்வருக்கு தூக்கு தண்டனையும், மூவருக்கு ஆயுள் தண்டனையும் கொடுத்து தீர்ப்பளித்த போதும் நான் சென்னை மத்திய சிறைச்சாலை வாயிலில் இருந்து செய்தி சேகரித்திருக்கிறேன்.

அந்த தீர்ப்பினை ஒட்டி அப்போது சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்த புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம் விடுதலையானார். இவர் ராஜீவ் வழக்கில் கைதாகியிருந்தார். சுபா சுந்தரத்தின் மகன் அருண் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காமிராமேனாக பணியாற்றிக் கொண்டிருந்தார். 1998ஆம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சுபா சுந்தரத்துக்கும் சேர்த்து தூக்கு தண்டனை விதித்த போது அங்கு பணியில் இருந்தார் அருண்.

தீர்ப்பினை கேட்டதும், காமிராவை தரையில் வைத்துவிட்டு, தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். “அப்பாவின் தூக்கு தண்டனையை செய்தியாக சேகரிக்கும் ஒரே மகன் உலகிலேயே அனேகமாக நான் ஒருவனாகவே இருப்பேன்’’ என்று அவர் உடைந்து கூறியதை கண்ணார கண்டேன்.

அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நிராகரித்தார். 2011 செப்டம்பர் 9ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட நாள் குறிக்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு தடை விதித்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின் சகோதரிகள் வானை நோக்கி கைகளை உயர்த்தி, “இறைவா அறிவையும் மற்றவர்களையும் காத்தமைக்கு நன்றி’’ என்று கண்கலங்கி நின்றதை கண்டேன்.

என் வாழ்வில், ஒரு பத்திரிகையாளனாக கடந்த 31 ஆண்டுகளில் நான் கண்ட இந்த சம்பவங்கள் என் நினைவுகளில் நீக்கமற நிறைந்து, ஆழமாக புதைந்து கிடக்கின்றன. எவற்றையும் நான் குறிப்பேடுகளில் எழுத்தில் வடித்து வைக்கவில்லை. மாறாக என் நினைவலைகளில் இருந்தே இவற்றை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஆனால், இதுவல்ல முக்கியம்… அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ன நடக்க வேண்டும்? அதுவே முக்கியம்.

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அவரைப் போலவே 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுவிக்கப்பட வேண்டும். ராஜீவ் காந்தி கொலையில் இந்த எழுவருக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்ற வாதமே தற்போது தேவையற்றது என்று நான் நினைக்கிறேன்.

31 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒரு மனிதன் எந்தளவுக்கு பண்பட்ட மனிதனாக மாறியிருப்பான் என்பது மனித உளவியிலின் அடிப்படையை தெரிந்தவர்களும்கூட அறிந்த எளியதோர் உண்மை. இந்திய சிறைச்சாலைகளில் ஆயுள் கைதிகளாக இருப்பது என்பது மரண தண்டனையைவிட பன் மடங்கு கொடூரமானது என்று ஒரு முறை கூறினார் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. அதுதான் உண்மை.

ஆனால், இந்த கோரிக்கை அதாவது ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரும் கோரிக்கை வெறும் இந்த ஆறு பேருடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. இந்தியா முழுவதிலும் 25 ஆண்டுகளை சிறையில் கழித்த அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையாக இது வலுப்பெற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...