பாகிஸ்தானுக்கு ஒரு சாபக்கேடு உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பிரதமரும் அங்கு 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாது. இடையிலேயே ஆட்சி கவிழ்க்கப்படும். இம்ரான் கானுக்கும் இப்போது அதுதான் நடக்கிறது. பாகிஸ்தான் அரசியலிலும், மக்கள் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறி பிரதமர் பதவிக்கு வந்த இம்ரான்கான் இப்போது ஆட்சி இழக்கப் போகிறார்.
இம்ரான் கானுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் பற்றி படிக்கும் முன் பாகிஸ்தான் அரசியலைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் எப்படியோ அப்படித்தான் பாகிஸ்தான் அரசியலிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள். எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தலைமையிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி பெனாசிர் புட்டோவின் குடும்பத்தின் தலைமையிலும் இயங்கி வருகின்றன. அங்கு ஆட்சியைப் பிடிப்பதும் இந்த இரண்டு கட்சிகள்தாம்.
இந்த அரசியல் சூழலில்தான் தாரிக் இ இன்சாஃப் என்ற கட்சியை 1996-ல் இம்ரான் கான் தொடங்கினார். 1992-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு சாம்பியன் பட்டம் பெற்றுக் கொடுத்ததால் இம்ரான் கானுக்கு மக்களிடையே நல்ல பெயர் இருந்தது. இதை தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள கட்சி தொடங்கினார். ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் வேறு பாகிஸ்தான் அரசியல் வேறு என்பது ஆரம்பத்திலேயே அவருக்குப் புரிந்துவிட்டது. தொடர் தோல்விகளைச் சந்தித்தார்.
அவரது அரசியலுக்கு திருப்பு முனையாக அமைந்தது பெனாசிர் பூட்டோவின் மரணம். அதே சமயத்தில் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் பெரிய அளவில் வெளிவர இம்ரான் கானுக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு கூடியது.
2018-ல் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் அதிக இடங்களை வென்ற இம்ரான் கானின் தாரிக் இ இன்சாஃப் கட்சி, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. இம்ரான் கான் பிரதமரானார்.
பாகிஸ்தானில் மாற்றத்தை கொண்டுவருவதாக சொல்லி ஆட்சியைப் பிடித்த இம்ரான் கானால் ஆட்சியை திறமையாக நடத்த இயலவில்லை. அதற்கு முக்கிய காரணம் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த நெருக்கடி. பாகிஸ்தானைப் பொறுத்தவரை மக்களாட்சி என்று கூறப்பட்டாலும் ராணுவத் தலைமையுன் ஆதிக்கமும் அரசில் இருக்கும். ராணுவத் தலைமையுடன் இணக்கமாக செல்லாமல் அரசியலில் நீடிக்க முடியாது.
இம்ரானுக்கு ராணுவ நெருக்கடிகளும் அதிகரித்தன. இந்த சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருந்த சூழலில் கொரோனாவும் வர பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிந்தது. விலைவாசி விண்ணை முட்டியது.
இம்ரானை எதிர்க்க பாகிஸ்தான் அரசியலில் இரு துருவங்களாக இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கும் ஒன்றிணைந்தன. சில சிறிய கட்சிகளையும் சேர்த்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கின. பொருளாதாரத்தில் இம்ரான் கான் அரசின் தோல்விகளைக் கண்டித்து போராட்டங்களை நடத்தின. இந்த போராட்டங்களுக்கு பாகிஸ்தானின் முன்னாள் முதல்வர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோவும், நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷேபாஸ் ஷெரீப்பும் தலைமை தாங்கி வருகிறார்கள்.
போராட்டங்களின் உச்சகட்டமாக இம்ரான் கான் அரசு மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானின் தாரிக் இ இன்சாஃப் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கூட்டணி பலத்துடன் சேர்த்து தனக்கு 179 பேரின் ஆதரவு இருப்பதாக இம்ரான் கான் சொல்லிக்கொள்கிறார். இதில் ஏற்கெனவே ஒரு உறுப்பினர் தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்துவந்த முத்தாஹிடா குவாமி மூவ்மெண்ட் என்ற கட்சியும் எதிர்க்கட்சிகள் பக்கம் சாய்ந்துள்ளது. இக்கட்சிக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனட். மேலும் ஒரு கட்சி ஊசலாட்டத்தில் இருக்கிறது.
தங்களுக்கு 172 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன. இம்ரான் கானின் கூட்டணியில் உள்ள சில கட்சிகளே தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர்கள் சொல்லிவருகிறார்கள். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதங்கள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது.
இப்படி ஒருபுறம் எதிர்க்கட்சிகள் இம்ரான் கானின் கழுத்தை இறுக்க, பாகிஸ்தான் ராணுவமும் தன் பங்குக்கு இம்ரான் கானின் முதுகில் குத்துகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் இம்ரான் கான் ஆட்சியைப் பிடித்ததற்கு, ராணுவத்தின் ஒத்துழைப்பும் ஒரு காரணமாக கூறப்பட்டது. ஆனால் நாளடையில் அவர்களிடையே விரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு தன்னைக் கேட்காமல் புதிய இயக்குநர் ஜெனரலை இம்ரான் கான் நியமித்ததை ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா ரசிக்கவில்லை. இம்ரான் கானை கவிழ்க்க தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு, இப்போது எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் அல்வா சாப்பிடுவதைப் போல் ஆகிவிட்டது.
இம்ரான் கானை முதலில் பதவியில் இருந்து நீக்குவது. பின்னர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் அமர்த்துவது என்ற குறைந்தபட்ச செயல்திட்டம் மூலம் எதிர்க்கட்சிகளும் ராணுவமும் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது. நாட்டு மக்களுக்கு உரையாற்றக் கூடாது என்று இம்ரான் கானுக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது என்று இப்போது தகவல்கள் வருகின்றன.
தனக்கு பாதகமாக பல விஷயங்கள் நடந்து வரும் சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினார் இம்ரான் கான். தன்னை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதாக கூட்டத்தில் முழங்கிய இம்ரான் கான், அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் பேசினார். மேலும் பாகிஸ்தானில் நடப்பதையெல்லாம் பார்த்து லண்டனில் ஒருவர் சிரிப்பதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் வசித்துவரும் நவாஸ் ஷெரீப்பைத்தான் இம்ரான் கான் இப்படி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியிருக்கிறது. விவாதங்களின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் இம்ரான் தோற்பார் என்றே இன்றைய சூழல் இருக்கிறது.
பாகிஸ்தானின் சீரழிவுகள் மேலும் அதிகரிக்கப் போகிறது.