No menu items!

எச்சரிக்கை –  விலை உயர்வது பெட்ரோல், டீசல் மட்டுமல்ல

எச்சரிக்கை –  விலை உயர்வது பெட்ரோல், டீசல் மட்டுமல்ல

ஐந்து மாநில  சட்டசபைத் தேர்தல்கள் முடிந்ததும் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் உயர்ந்து வருகிறது. மார்ச் 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 7 முறை விலை உயர்த்தப்பட்டு சென்னையில் இன்று (29-03-22) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94-க்கும், டீசல் ரூ. 96.00-க்கும் விற்பனையாகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் மட்டுமல்ல சத்தமில்லாமல் நம் பார்வைக்கு வராமல்  பல்வேறு பொருட்களின் விலையும் கடந்த சில வாரங்களில்  உயர்ந்துள்ளது. என்னென்ன பொருட்கள், எவ்வளவு உயர்ந்துள்ளது? விவரம் இங்கே…

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இம்மாதம் மட்டும் ரூ. 50 உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி சேர்ந்து தற்போது ரூ. 1,034-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்த வருட ஜனவரியில்  ரூ. 900.92 என்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களில் 134 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

பால் & பால் பொருட்கள் விலை உயர்வு

ஒரு மாதத்துக்கு முன்பு அமுல், திருமலா, ஹெரிடேஜ், ஜெர்சி, டோட்லா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பால் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தின. 3% கொழுப்புச் சத்துள்ள பாலின் விலை லிட்டர் ரூ. 48-லிருந்து ரூ. 50-ஆக உயர்ந்தது. 4.5% கொழுப்புச் சத்து கொண்ட தரப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.58-லிருந்து ரூ.60 ஆகவும், 6% கொழுப்புச் சத்து கொண்ட நிறை கொழுப்பு பாலின் விலை ரூ.62-லிருந்து ரூ.66 ஆகவும் உயர்ந்தது.

இந்நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் ஆவின் நிர்வாகம் பால் பொருட்கள் விலையை உயர்த்தியது. ஆவின் நெய் ஒரு கிலோ ரூ. 515-க்கு விற்பனையாகி வந்தது, ரூ. 20 அதிகரித்து, தற்போது ரூ. 535-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் தயிரின் விலை ரூ. 6 அதிகமாகி ரூ. 54-இல் இருந்து ரூ. 60-ஆக உயர்ந்துள்ளது.

சமையல் எண்ணெய் விலை உயர்வு

சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய ரீபைண்ட் ஆயில், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலை கடந்த ஒரு மாதத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் ரூ.130-க்கு விற்பனை ஆனது, 30 ரூபாய் விலை உயர்ந்து, ரூ.160-ஆக அதிகரித்தது. பின்னர் மேலும் அதிகரித்து தற்போது நிறுவனம் சார்ந்து ரூ. 190 முதல் ரூ. 215 வரை விற்பனையாகிறது.

ரீபைண்ட் ஆயில் விலை உயர்வுக்கு உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், தமிழகத்திலேயே உற்பத்தியாகும் கடலை எண்ணையும் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலை எண்ணெய் ரூ. 175, ரூ. 180 என்று உயர்ந்து தற்போது நிறுவனம் சார்ந்து ரூ. 250 முதல் ரூ. 400 வரை வந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் ரூ. 180-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் இப்போது நிறுவனம் சார்ந்து ரூ. 190 முதல் ரூ. 300 வரை எகிறியுள்ளது. நல்லெண்ணெய் விலையும் ரூ. 322 வரை எகிறியுள்ளது.

மளிகைப் பொருட்கள் விலை உயர்வு

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மளிகைக் கடையில் பிஸ்கட், நூடுல்ஸ், டீத்தூள் போன்றவற்றின் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இத்துறையில் முன்னணி நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே உள்ளிட்ட FMCG நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதனால், மளிகை பொருட்களுக்காக மக்கள் செலவிடும் தொகை கடந்த 6 மாதங்களில் மட்டும் 9.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

வேளாண் உரங்கள் விலை கடும் உயர்வு

மூன்று மாதங்களுக்கு முன்பு பொட்டாஷ் உரம் 50 கிலோ மூட்டை ரூ. 1040-க்கு விற்பனை செய்யப்பட்டது ரூ. 1,700-ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் ஒரு மூட்டைக்கு 660 ரூபாய் அதிகரித்தது. சில இடங்களில் இது ரூ.1800 முதல் ரூ.1950 வரை விற்கப்படுகிறது.

இதுபோல் ரூ.1175-க்கு விற்ற காம்ப்ளக்ஸ் அடி உரம் தற்போது ரூ. 1470-க்கு விற்பனையாகிறது.

சல்பேட் உரம் 50 கிலோ மூட்டை ரூ. 925-ஆக இருந்தது ரூ. 200 அதிகரித்து ரூ. 1,125-க்கு உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை போல் உரம் விலையையும் நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால்தான் இந்த உயர்வு எனக் கூறப்படுகிறது. உரம் விலை உயர்வால் காய்கறி, பழங்கள் உட்பட வேளாண் பொருட்கள் விலை உயரும் என்பது கவனிக்கத்தக்கது.

டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் விலை இம்மாதம் ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளது. ரூ. 120-க்கு விற்கப்பட்ட குவாட்டர் மதுபாட்டில் தற்போது ரூ.130-க்கு விற்கப்படுகிறது. மற்ற ரக மது பாட்டில்கள் குவாட்டருக்கு ரூ. 20, ஆஃப் மதுபாட்டில்களுக்கு ரூ. 40, ஃபுல் மது பாட்டில்களுக்கு ரூ.80 வரை அதிகரித்துள்ளது.

மருந்து, மாத்திரைகள் விலை அதிகரிக்கப் போகிறது

மருந்து நிறுவனங்களுக்கு 10.77 சதவிகிதம் வரை விலையை உயர்த்திக்கொள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 850 மருந்துகளின் விலை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, காய்ச்சல், இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு, தோல் நோய், வலி மற்றும் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகளின் விலை 10 சதவிகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தத்தில் ஒரு குடும்பத்துக்கான செலவு கடந்த 6 மாதங்களில் மட்டும் 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...