No menu items!

சிஎஸ்கேவின் கதை -7: சிங்கங்களுக்கு வந்த சோதனை

சிஎஸ்கேவின் கதை -7: சிங்கங்களுக்கு வந்த சோதனை

2013-ம் ஆண்டின் ஐபிஎல்லுக்குப் பிறகு, அடுத்த 2 தொடர்களில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறினாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால் வீரர்களும் ரசிகர்களும் சோர்ந்தனர். அதே நேரத்தில் சூதாட்டம் தொடர்பான விசாரணையும் சூடுபிடிக்கத் தொடங்கியது. விசாரணை வளையத்தில் குருநாத் மெய்யப்பன் சிக்கியிருந்ததால், எங்கே அந்த நெருப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொசுக்கிவிடுமோ என்று அதன் நிர்வாகிகள் கவலைப்பட்டனர்.

சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. பல்வேறு காரணங்களால் அவருக்கு எதிர் தரப்பில் இருந்த சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒன்றுகூடி பொதுக்குழுவில் நெருக்கடி கொடுத்தன. இந்த எதிர்க்குழுவுக்கு சரத் பவார் தலைமை தாங்கினார்.

சீனிவாசனை பதவியில் இருந்து இறக்கி, தனது ஆதரவாளரான சஷாங்க் மனோகரை அந்த இடத்தில் அமரவைப்பது சரத்பவாரின் லட்சியமாக இருந்தது.

சீனிவாசன் தரப்புக்கும், சரத்பவார் தரப்புக்கும் இடையே பிசிசிஐ முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா பாலமாகச் செயல்பட்டார். இரு தரப்புடனும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருந்த அருண் ஜெட்லி, ராஜீவ் சுக்லா, அனுராக் தாக்குர் உள்ளிட்டோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

மிக நீ…ண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சூதாட்ட புகார் தொடர்பான விசாரணை முழுமையாக முடியும்வரை பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சில காலம் ஒதுங்கியிருக்க (பதவி விலக அல்ல, பதவியில் இருந்து ஒதுங்கி இருக்க) சீனிவாசன் ஒப்புக்கொண்டார்.

ஆனால் சரத்பவார் தரப்பினரிடம் பதவியை ஒப்படைக்க முடியாது என்பதிலும் பிடிவாதமாய் இருந்தார். இதனால் இடைக்கால பொறுப்பாளராக ஜக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டார். பிசிசிஐ நியமித்த குழு, மெய்யப்பனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ராவும் சூதாட்ட விஷயத்தில் தவறு ஏதும் செய்யவில்லை என அறிக்கை சமர்ப்பித்தது.

மும்பை உயர் நீதிமன்றம் இந்த அறிக்கையை நிராகரிக்க, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது பிசிசிஐ. இடைப்பட்ட காலத்தில் மூவர் கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து பிசிசிஐ தலைவராக மீண்டும் சீனிவாசன் பொறுப்பேற்றார். அதை எதிர்த்தும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

அதே நேரத்தில் சூதாட்ட புகார் பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முட்கல் கமிட்டி, 2014-ம் ஆண்டில் தனது அறிக்கையை அளித்தது. அதில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணமானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்தியாவில் கிரிக்கெட்டை மேம்படுத்த 10 அம்ச திட்டத்தையும் பரிந்துரைத்தது. “சூதாட்ட ஊழல் கண்காணிப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ, போலீஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தலாம், விளையாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இந்த 10 அம்ச திட்டத்தில் இருந்தன. இந்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றம் மூக்கை நுழைக்கத் தொடங்கியது.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் மீண்டும் கீழிறக்கப்பட்டார். அப்போதே அடுத்த அடி தங்கள் மீதுதான் விழும் என்று சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்த்தது.

சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்த்ததைப் போலவே, சென்னை சிங்கங்களுக்கு சோதனை வந்தது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தோனியும், தோழர்களும் கலங்கிப் போனார்கள்.

(வெள்ளிக்கிழமை மீண்டும் சிங்கங்கள் கர்ஜிக்கும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...