No menu items!

மொயின் வருகையால் சிஎஸ்கே உற்சாகம்

மொயின் வருகையால் சிஎஸ்கே உற்சாகம்

மொயின் வருகையால் சிஎஸ்கே உற்சாகம்

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கேகேஆர் அணியிடம் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு கூடுதல் உற்சாகத்துடன் தயாராகி வருகிறது. இந்த கூடுதல் உற்சாகத்துக்கு காரணம் மொயின் அலி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இன்னொரு ஜடேஜாவாக மொயின் அலி பார்க்கப்படுகிறார். அதற்கு 2 காரணங்கள். தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது முதல் விக்கெட் விழுந்ததும் வரும் 3-வது பேட்ஸ்மேனாகவோ சென்னை அணிக்கு கைகொடுக்கும் நபராக மொயின் அலி இருக்கிறார் என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம் அவரது சுழற்பந்து வீச்சு.

டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற வகையில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்களை வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்தவராக மொயின் அலி இருக்கிறார்.

இந்த 2 காரணங்களுக்காத்தான் ஐபிஎல் ஏலம் நடப்பதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயின் அலியைத் தக்கவைத்தது. தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இணையாக அணியின் முக்கிய வீரராக மொயின் அலி கருதப்படுகிறார். ஆனால் விசா கிடைப்பதில் ஏற்பட்ட சில சிக்கல்களால் கேகேஆர் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் மொயின் அலியால் ஆட முடியவில்லை. இந்தச் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நேற்று மொயின் அலி இணைந்துள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. சென்னை அணி வீரர்கள் எப்போதும் ஒரு குடும்ப உணர்வுடன் ஆடுவார்கள். இந்த சூழலில் பழைய உறுப்பினர் ஒருவர் மீண்டும் தங்களுடன் இணைந்துள்ளது அவர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது.

மொயின் அலி வந்துள்ளதை அடுத்து, அணியில் சில மாற்றங்களைக் கொண்டுவர ஜடேஜா – தோனி கூட்டணி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் விஷயமாக சாண்ட்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மொயின் அலி அணியில் சேர்க்கப்படுவார் என்கிறார்கள்.

அடுத்ததாக கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சோபிக்காத துபே நீக்கப்பட்டு, அவருக்கு பதில் முகமது ஆசிப் அல்லது ஹங்கர்கேகர் சேர்க்கப்படலாம். இந்த இருவரில் ஹங்கர்கேகர் பேட்டிங்கிலும் கெட்டிக்காரர் என்பதால் அவருக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது.

மொயின் அலியைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள நபர் பிரிட்டோரியஸ். அவர் ஒரு ஆல்ரவுண்டர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர்களையே பெரிதும் விரும்புகிறது. எனவே அடுத்த மாற்றமாக ஆடம் மில்னேவுக்கு பதில் பிரிடோரியஸ் களம் இறக்கப்படலாம்.

இந்த மாற்றங்களை அடுத்து மாறுபட்ட ஒரு புதிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த போட்டியில் களம் இறங்க உள்ளது.

அதே நேரத்தில் தங்கள் முதல் போட்டியில் தோற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சென்னையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதிரடி பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல், குவிண்டன் டி காக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக உள்ளது. அதே நேரத்தில் அந்த அணியின் பல்வீனமாக மிடில் ஆர்டர் பேட்டிங் இருக்கிறது. மிடில் ஆர்டருக்காக அந்த அணி மணிஷ் பாண்டே, குருனால் பாண்டியா, ஹூடா ஆகிய வீரர்களை வைத்துள்ளது. ஆனால் இந்த மூன்று வீரர்களும் கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கவில்லை. அது தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுலுக்கும் குயிண்டன் டி காக்குக்கும் நிச்சயம் கூடுதல் சுமையை அளிக்கக்கூடும். லக்னோவின் இந்த பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டால் சென்னை அணி நிச்சயம் வெல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...