No menu items!

Condom வாங்குவது பெண் சுதந்திரமா?

Condom வாங்குவது பெண் சுதந்திரமா?

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (Acham Madam Naanam Payirppu) – விமர்சனம்

மிகவும் துணிச்சலான திரைப்படம், பெண்கள் பிரச்சினைகளுக்கு பேசும் படம், முற்போக்கு எண்ணங்களை விதைக்கிறது போன்ற கருத்துக்களுடன் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது அக்‌ஷாரா ஹாசன் நடித்த அச்சம் நாணம் பயிர்ப்பு திரைப்படம்.

உண்மையில் இது துணிச்சலான திரைப்படமா, பெண்கள் பிரச்சினைகளை பேசுகிறதா?
பார்ப்போம்.

இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசனுடன் உஷா உதுப், மால்குடி சுபா, சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இயக்கியிருப்பவர் ராஜா ராமமூர்த்தி.

ஒரு நடுத்தர, பிராமண குடும்பத்தில் ஆச்சாரமாக வளர்க்கப்படும் அக்‌ஷரா, தன் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டாலும், தன் குடும்பத்தின் பாரம்பரியமும் கௌரவமும் தன்னால் கெட்டுவிடக் கூடாதென்றெண்ணி தவிக்கும் வெகுளியாக நடித்திருக்கிறார்.

இவருடைய காதலன் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். இவருடன் உறவு கொள்ள அக்‌ஷாரா ஹாசன் ஆசைப்பட்டாலும் திருமணத்திற்கு முன் இது தவறு என்று நினைத்து காம இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்.

தன் விருப்பத்தை இரு தோழிகளிடம் பகிர்கிறார். அதில் ஒருவர், உன் விருப்பப்படி வாழ்தல் தவறில்லை என்றும், மற்றொருவர் நல்ல குடும்பத்தில் இருந்து வரும் பெண், திருமணம் செய்யாமல் உறவு வைத்துக்கொள்ள மாட்டாள் என்றும் அக்‌ஷராவிற்கு அறிவுரை கூறுகிறார்கள்.

இந்த இரண்டு அறிவுரைகளில் கதாநாயகி எடுத்துக்கொண்ட அறிவுரை எது என்பதே மீதி கதை.

காண்டம் வாங்குவதும் மீன் சாப்பிடுவதும் பெரிய சாதனைகளாகவும் பெண்களின் சுதந்திரமாகவும் காட்டப்படுகிறது. இன்றைய காலக் கட்டத்தில், இவையெல்லாம் சர்வ சாதாரணமாக நம்மைச் சுற்றி அரங்கேறுவதை நம்மால் பார்க்க முடியும்.

முக்கியமாய் இந்தக் கதை ஏதோ ஒரு குக்கிராமத்தில் நடக்கவில்லை என்பதால் இந்த சம்பவங்களுக்கு அழுத்தம் கிடைக்கவில்லை.

இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது பிற்போக்குத்தனமான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

படத்தில் இருக்கும் ஒரு நல்ல காட்சி உஷாவும் அக்‌ஷராவும் பேசிக்கொள்வது தான். அதில் உஷா, நீ நீயாக இருப்பதுதான் முக்கியம் என்று புத்தி சொல்லி அக்‌ஷராவை ஆறுதல் படுத்துகிறார்.

படத்தின் பல காட்சிகள் அமெச்சூர்தனமாக இருக்கின்றன. இந்த அமெச்சூர்தனம் இருப்பதால் படம் நாடகத் தன்மையுடன் நகர்வது போன்ற உணர்வு வருகிறது.

மால்குடி சுபா வரும் காட்சிகள் அனைத்துமே செயற்கைத் தனத்தின் உச்சம். அவர் பேசுவதும் அழுவதும் நம்மை அந்நியமாய் உணர வைக்கின்றன.

அக்‌ஷரா, நீரிலிருந்து வெளிவந்த மீன் போல் படம் முழுவதிலும் தவிப்பிலேயே இருக்கிறார்.

திரைப்படம் முழுவதும் ஒரு செயற்கைத் தன்மை தென்படுவதால், எந்தக் காட்சியிலும் நம்மால் ஒன்ற முடியவில்லை என்பது படத்தின் பலவீனம்.

பெண் சுதந்திரம் குறித்து படமெடுப்பவர்கள் காண்டம் வாங்குவதும், காம உணர்ச்சிகளை பேசுவது மட்டுமே பெண் சுதந்திரம் என்று எண்ணி படமெடுப்பதில் இருந்து வெளி வரவேண்டும். உண்மையான பெண் சுதந்திரம் என்பது வேறு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...