No menu items!

முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? சென்னை மேயர், ஆணையர் விளக்கம்

முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? சென்னை மேயர், ஆணையர் விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் காரில் தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  உயரிய பொறுப்பான மேயர் பதவியில் உள்ளவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் காரில் தொங்கியபடி சென்றது ‘தவறான முன்னுதாரணம்’ என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சென்னை மேயர் பிரியா ராஜன், “காசிமேட்டில் இரு இடங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓரிடத்தில் ஆய்வு முடித்த பின்னர் மற்றோர் இடத்திற்கு முதலமைச்சருக்கு முன்பாகவே விரைந்து சென்று ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும். இரு இடங்களுக்கும் தொலைவு அதிகமானதாக இருந்தாலும் நான் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது, கான்வாய் வந்துகொண்டிருந்ததால் அதிலேயே சென்றுவிடலாம் என்று எண்ணித்தான் அவ்வாறு சென்றோம். இது இவ்வளவு சர்ச்சையாகும் என தான் நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இடத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் அவ்வாறு சென்றேன். கான்வாயில் அவ்வாறு செல்லுமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிட்டது. 

என்னை யாரும் வயதில் குறைந்தவர் என ஒதுக்கவில்லை. மேயர் என்கிற மரியாதையை அனைவரும் தருகின்றனர். முதலமைச்சரும் எனக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். எந்த பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கான்வாயில் தொங்கி சென்றது குறித்து பேசியுள்ள மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை. எங்களுடைய வாகனம் மிகவும் பின்னால் இருந்தது. அதனால் கான்வாயில் செல்லலாம் என முடிவெடுத்தோம். கடமைதான் மிகவும் முக்கியம். நாங்கள் சென்ற கார் முதலமைச்சருடையது அல்ல. அவருடைய கார் பின்னால் வந்துகொண்டிருந்தது.  கார் மிகவும் மெதுவாகத்தான் சென்றது. மாநகராட்சி ஆணையராக வெள்ளத்தில் இறங்கிக்கூட பணி செய்ய வேண்டியிருக்கும். இதுவும் அதுபோன்றதுதான். இதில் யாரும் ‘ஈகோ’ பார்க்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

வங்கக்கடலில் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் வரும் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அது புயலாக மாறுமா? என்பது குறித்த அதன் நகர்வை பொறுத்துதான் தெரிவிக்க முடியும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய கணிப்பின்படி, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி, இலங்கை மற்றும் அதனையொட்டிய தமிழ்நாடு பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

டுவிட்டரில் மீண்டும் ‘புளூ டிக்’ வசதி

டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க், டுவிட்டரில் ‘புளூ டிக்’ வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.659) கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின. இதன் காரணமாக டுவிட்டரில் ‘புளூ டிக்’ வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று (12-12-2022) முதல் டுவிட்டரில் மீண்டும் ‘புளூ டிக்’ வசதி கிடைக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வணிக கணக்குகளுக்கான சரிபார்ப்பு தொடங்கும் எனவும், அதன் பின்னர் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்ப்பு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ஊரில் இல்லை; ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் – லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மழையையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை முதலே ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் சார்பாக எல்லாருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து ரசிகர்களைச் சந்தித்திருப்பார். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...