No menu items!

நெட்ஃப்ளிக்ஸ் – ஜெயித்தது எப்படி?

நெட்ஃப்ளிக்ஸ் – ஜெயித்தது எப்படி?

அது ஒரு காலை நேரம்.

எஸ்ப்ரஸ்ஸோவின் மணம் அந்த அறை முழுவதும் ஆக்ரமித்து இருந்தது.

பீத்தோவனின் மெல்லிய இசை காற்றில் கலந்து காதுகளில் ஒலித்து கொண்டிருந்தது.

மார்க் ராண்டால்ஃப் [Marc Randolph] தீவிர சிந்தனையில் இருந்தார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ரீட் ஹேஸ்டிங் மார்க்கை [Reed Hasting] உற்று நோக்கி கொண்டிருந்தார்.

இந்த இருவருக்கும் பெரும் குழப்பம் இருந்தது.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். ஆனால் எந்த தொழிலில் இறங்கினால் பணம் சம்பாதிக்க முடியும். வெற்றிகரமாக இருக்கமுடியும். ஆனால் அது எந்த தொழில் என யோசித்தபடி இருந்தார்கள்.

ஆனால் ராண்டால்ஃப்புக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகி இருந்தது. ’எந்த தொழிலாக இருந்தாலும் ஆன்லைனில் விற்கவேண்டும். இதுதான் எதிர்காலத்தில் எடுபடும்’ என்று ஹேஸ்டிங்கிடம் கூறினார்.

அப்பொழுது ஹேஸ்டிங், பணம் கட்ட வேண்டிய குறிப்பிட்ட தேதியில் பணம் கொடுத்து வாடகைக்கு டிவிடி எடுத்து படம் பார்க்கும் விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அங்கே தட்டியது நெட்ஃப்ளிக்ஸூக்கான பொறி.

டிவிடி-யை வாடகைக்குவிடும் ஒரு நிறுவனமாக 1997-ல் கலிஃபோர்னியாவில் இருக்கும் ஸ்காட்ஸ் வேலியில் ’நெட்ஃப்ளிக்ஸ்’ [Netflix] தனது பயணத்தைத் தொடங்கியது.

நெட்ஃப்ளிக்ஸின் வெற்றிக்கதையில் இதுதான் முதல் படி.

30 பேர் அடங்கிய குழு. வாடகைக்கு விட 925 படங்கள். ஒரு வெப் பேஜ். 1998-ல் நெட்ஃப்ளிக்ஸ் இப்படிதான் ஒரு நிறுவனமானது.

ஒரு வருடத்திலேயே ஏதாவது செய்து மார்க்கெட்டை பிடிக்க வேண்டுமென நினைத்தது ராண்டால்ஃப் – ஹேஸ்டிங் ஜோடி. அப்பொழுது அவர்களுக்கு ஃப்ளாஷ் அடித்த ஐடியா ‘மாதாந்திர சந்தா’ [Monthly Subscription]. அதுவரையில் இருந்த பே பெர் ரெண்டல் மாடலில் இருந்து மந்த்லி சப்ஸ்க்ரிஷ்ப்சன் முறையை அறிமுகப்படுத்தியது நெட்ஃப்ளிக்ஸ்.

அப்பொழுது விஹெச்எஸ். [VHS] வீடியோக்களை பயன்படுத்தும் முறைதான் புழக்கத்தில் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் உச்சத்தில் இருந்தது. ஆனாலும் ராண்டால்ஃப் – ஹேஸ்டிங் இருவரும் மிகத் தைரியமாக டிவிடி ரெண்டல் பிஸினெஸில் இறங்கினர்.

புதுமையான சந்தா. பிரச்சினையில்லாத வாடகை பஞ்சாயத்து. உயர் தரத்திலான வீடியோக்கள். அவ்வளவுதான் சூடுப்பிடித்தது இவர்களின் டிவிடி ரெண்டல் பிஸினெஸ்.

2000-களின் ஆரம்ப காலக்கட்டத்தில் நெட்ஃப்ளிக்ஸ் அடுத்தடுத்து சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக பணத்தை சம்பாதிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.

ஆனால் அதை எப்படி சாத்தியப்படுத்துவது? என்னென்ன செய்தால் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும். வாடிக்கையாளர்களை தங்களைத் தேடி வரவழைக்க முடியும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அமைந்தன நெட்ஃப்ளிக்ஸின் சலுகைகள்.

நெட்ஃப்ளிக்ஸ் செய்த முதல் காரியம். ஒரே முறையில் வாடகை செலுத்தும் சிங்கிள் ரென்டல் முறைக்கு குட்பை சொன்னது. அதற்கு பதிலாக ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை கட்டினால் போதும், எத்தனை படங்களை வேண்டுமானாலும் டிவிடியாக வாடகைக்கு எடுத்து பார்க்கலாம். இதற்கான ஷிப்பிங் சார்ஜ் எதுவும் கிடையாது. அதற்கான செயலாக்க கட்டணமான ஹேண்டிலிங் ஃபீஸ் எதுவும் கிடையாது என்றது நெட்ஃப்ளிக்ஸ்.

அடுத்து வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களை ஒரு பேக்கேஜ்ஜாக வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். அதையெல்லாம் பார்த்த பிறகு புதிய படங்களைப் பார்க்க வேண்டுமென்றால், ஏற்கனவே வாடகைக்கு எடுத்த படங்களின் டிவிடி-களை கொடுத்துவிட்டு புதிய படங்களின் டிவிடி-களை வாங்கி கொள்ளலாம் என்று பேக்கேஜ் முறையை கொண்டு வந்தது நெட்ஃப்ளிக்ஸ்.

ஏகப்பட்ட வரவேற்பு. வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமாகி போனது.

பொழுதுபோக்கு என்றால் அது டிவிடிதான் என்று ட்ரெண்ட் மாறியது. வி.ஹெச்.எஸ். கேசட்கள் புழக்கத்தில் இல்லாமல் போனது.

இதை ராண்டால்ஃப்பும், ஹேஸ்டிங்கும் மிகச்சரியாக புரிந்து கொண்டார்கள். அதாவது பொழுதுபோக்கு துறை என்றாலும் அதற்கும் தொழில்நுட்பம் முக்கியம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளையும், தேவைகளையும் எதிர்கொள்ள தொழில்நுட்பம்தான் ஒரே வழி.

2006-ல் ஆன்லைன் மீடியா ஸ்டீரிமிங் சர்வீஸை [online media streaming service] ஆரம்பித்தது நெட்ஃப்ளிக்ஸ்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இனி நமக்கு போட்டியே இருக்க கூடாது என்பதில் நெட்ஃப்ளிக்ஸ் தீர்மான இருந்தது. புதிய மாற்றங்களையும் எந்தவித தாமதமும் இல்லாமல் தனது சேவைகளில் களமிறக்கியது.

வாடிக்கையாளர்களுக்கான தனது ஆன்லைன் லைப்ரரியில் சூப்பர் ஹிட் வீடியோக்கள், திரைப்படங்கள், டாக்குமெண்டரிகள் என அட்டகாசமான கலெக்ஷன்களை குவித்தது. இதில் ஸ்டார்ஸ் எண்டர்டெயின்மெண்ட், லயன்ஸ் கேட் எண்டர்டெயின்மெண்ட், எம்ஜிஎம், பாரமெளண்ட் பிக்சர்ஸ் போன்ற திரையுலக ஜாம்பவான் நிறுவனங்களின் பல மில்லியன் மதிப்புள்ள படங்களும் அடங்கும். 2008 முதல் அடுத்த இரு வருட படங்களும் இதில் சேர்ந்தன.

ஏதாவது ஒரு முயற்சியில் இறங்கும் போது ஒவ்வொரு முறையும் கண்டெண்ட் மார்க்கெட்டிங் மற்றும் சோஷியல் மீடியாவில் பல ஆச்சர்யங்களுடன் அதிர வைத்தது நெட்ஃப்ளிக்ஸ்.

அடுத்து என்ன என்று யோசித்தார்கள் ராண்டால்ஃப்பும், ஹேஸ்டிங்கும்.
மற்றவர்களிடம் இருந்து வீடியோக்களை, திரைப்படங்களை வாங்கி வெளியிடுவதற்கு பதிலாக நாமே ஏன் தயாரிக்க கூடாது. நம்முடைய ஒரிஜினல்ஸ் என்று மார்க்கெட்டில் இறக்க கூடாது என்று ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேள்வி கேட்டனர்.

அந்த கேள்விகளுக்கான பதில்தான் இன்றைய ‘நெட்ஃப்ளிக்ஸ்’.

நாமே ஒரிஜினல்ஸை தயாரித்து அது நஷ்டத்தைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தது நெட்ஃப்ளிக்ஸ். தோல்வியோ நஷ்டமோ வரக்கூடாது என்றால், கவனம் தேவை. ஷார்ப்பான, ஸ்மார்ட்டான அணுகுமுறை அவசியம் என்பதை புரிந்து கொண்ட இந்நிறுவனம் அதை செயல்படுத்தி தயாரிப்பிலும் இறங்கியது.

விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை நம்பியிருக்காமல், தாமாகவே தயாரிக்கும் ஒரிஜினல் கண்டெண்ட், நெட்ஃப்ளிக்ஸிடம் மட்டுமே இந்த திரைப்படமோ, ரியாலிட்டி ஷோவோ அல்லது டாக்குமெண்டரியோ இருக்கிறது என்கிற அதன் தனித்துவம் இவை இரண்டும் நெட்ஃப்ளிக்ஸை அடையாளப்படுத்தின.

2016-ல் நெட்ஃப்ளிக்ஸ் தனது ‘த ஸ்மார்ட் டவுன்லோட்ஸ்’ [The Smart Downloads] வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த வசதி, நெட்ஃப்ளிக்ஸின் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு செளகரியமான இடத்தில் இருந்து கொண்டு, நெட்ஃப்ளிக்ஸை பயன்படுத்தும் வாய்ப்பைக் கொடுத்தது. இந்த வசதி டவுன்லோட் செய்த வீடியோவை பார்த்து முடித்துவிட்டால், அதன் அடுத்த எபிசோட் தானாகவே டவுண்ட்லோட் ஆகிவிடும். அதையும் தங்களுக்கு வசதியான நேரத்தில் வாடிக்கையாளர்கள் நெட்ஃப்ளிக்ஸ் அப்-பில் பார்த்து ரசிக்கலாம் என்று ட்ரெண்டை கொண்டு வந்தது.

ஒரிஜினல்ஸ் என்று வரும் போது தனக்கு இருக்கும் போட்டியை எப்படி சமாளிப்பது என இப்போது யோசிக்க ஆரம்பித்தது நெட்ஃப்ளிக்ஸ். டிஸ்னி, போன்ற பெரும் ஸ்டூடியோக்களை சமாளிக்க, பிரபலமான டெலிவிஷன் மேக்கர்களான ஷோண்டா ரைம்ஸ் [Shonda Rhimes] மற்றும் ரயான் மர்ஃபி [Ryan Murphy] ஆகிய இருவருடன் 2017-ல் ஒப்பந்தம் ஒன்றை செய்தது நெட்ஃப்ளிக்ஸ். ‘மினி மார்வல்’ [Mini Marvel] என்ற பெயரில் களத்தில் இறங்கியது. கார்மன் சாண்டியாகோ [Carmen SanDiego], ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் [Stranger Things] என நெட்ஃப்ளிக்ஸின் ஒரிஜினல்கள் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தன.

ஒரு நாளில் எப்பொழுது பார்த்தாலும் கூட விளம்பரங்களின் தொந்தரவு இல்லாமல் ஸ்ட்ரீமிங்கை கண்டுகளிப்பதை சாத்தியமாக்கியது நெட்ஃப்ளிக்ஸின் மாபெரும் வெற்றிக்கு காரணம்.

நினைத்த நேரத்தில், செளகரியமான இடத்தில் இருந்து ஸ்ட்ரீமிங்கை பார்க்கலாம். அனைத்து நிகழ்ச்சிகளும் ஹை-டெபினிஷனில் துல்லியமாக இருக்கும். டிவி சிரீஸ் அல்லது திரைப்படம் எதுவாக இருந்தாலும் வரம்பே இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கென தனி ப்ரொபைல்கள், வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார் என்பதை அறிந்து அவரது ரசனைக்கு ஏற்ற பரிந்துரைகளை அளிக்கும் அல்காரிதம் என வாடிக்கையாளர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கியது பெரும் மாற்றத்தை உருவாக்கியது.

அமெரிக்காவைத் தாண்டி இதர நாடுகளில் தனது சேவையை தொடங்க நினைத்த நெட்ஃப்ளிக்ஸ், அந்தந்த நாடுகளின் நகரங்களைச் சார்ந்த கண்டெண்ட், அதை பிரதிபலிக்கும் கலாச்சாரம் என ஒரிஜினல்களை எடுக்க ஆரம்பித்தது இதன் ஆதிக்கத்தை அமெரிக்காவிலிருந்து ஆண்டிப்பட்டி வரை அதிகரித்திருக்கிறது.

தொழில்நுட்பத்தில் வித்தை காட்டியது நெட்ஃப்ளிக்ஸின் அசுரத்தனமான வெற்றிக்கு காரணமாக இருந்தாலும், சின்னசின்ன விஷயங்களிலும் அக்கறைக் காட்டியது அதன் துல்லியமான வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது. உதாரணத்திற்கு மொபைல் ப்ரிவியூ. இந்த மொபைல் ப்ரிவியூ மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியையோ திரைப்படத்தையோ மிகவேகமாக தேடி கண்டுபிடிக்க முடியும். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா.. இந்த ப்ரிவியூவை பார்க்க வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போனை கிடக்கையாக திருப்ப வேண்டிய அவசியமில்லை. போன் பேசும் போது எப்படி பிடித்திருப்போமோ அப்படியே இருந்தால் போதுமானது. ஸ்லைட் ஷோ போல ப்ரிவியூவை பார்க்கமுடியும்.

இது உங்களுக்கு ஒரு சாதாரண விஷயமாக தெரியலாம். தன்னுடைய வாடிக்கையாளர்கள் ஒரு கணம் கூட யோசித்து, அதை தவிர்த்துவிட கூடாது என்பதில் நெட்ஃப்ளிக்ஸ் மிகத் தெளிவாக இருக்கிறது.

இதுதான் தெளிவும், துல்லியமும், நெட்ஃப்ளிக்ஸின் மாபெரும் வெற்றிக்கு காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...