No menu items!

டிவி பார்த்தால் பணம்! – Myv3Ads சதுரங்க வேட்டையா?

டிவி பார்த்தால் பணம்! – Myv3Ads சதுரங்க வேட்டையா?

எம்.எல்.எம். திட்டங்களுக்கு இந்தியாவில் தடை உள்ள நிலையில், கோவையில் ‘மைவி3 ஆட்ஸ்’ என்ற எம்.எல்.எம். நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததை எதிர்த்தும், நிறுவனத்தை ஆதரித்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த திடீர் போராட்டத்திற்கு என்ன காரணம்?

கோயம்புத்தூர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சக்தி ஆனந்தன். இவர், கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3Ads என்ற செயலியை நடத்தி வருகிறார். இந்த செயலி வாயிலாக ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார். யூடியூபில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது.

Myv3Ads யூ டியூப் சேனலில் தினமும் 2 மணிநேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும் புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என இவர் விளம்பரம் செய்துள்ளார். அதில், 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும் தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும் புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கேட்டால் சதுரங்க வேட்டை திரைப்படம்தான் நினைவுக்கு வரும்.

இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் இதில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும் தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் எனவும் ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்.

இதேபோல, பாமகவின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கடந்த 11-ம் தேதி MYV3ADSMdForum என்ற சேனலில் உறுப்பினர்களாக சேர்ந்து தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களிடம் மோசடி செய்வதாக மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார்கள் அடிப்படையில், பரிசு சீட்டுகள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் (தடை) சட்டம் 1978, கட்டுப்பாடற்ற வைப்புத் திட்டங்களுக்கான தடை உத்தரவு, 2019 ஆகிய சட்டங்களின் கீழ் MYV3ADS நிறுவனத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, வழக்குப் பதிவை கண்டித்து, ’மைவி3ஆட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் சக்தி ஆனந்த், “பல லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வரும் நம் நிறுவனத்தை பற்றி கடந்த சில மாதங்களாகவும் கடந்த சில நாட்களாகவும் சமூக விரோதிகள் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் நீலாம்பூர் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கூடுமாறும் தெரிவித்திருந்தார்.

இதன் பேரில் கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச் சாலையில் நேற்று (ஜன. 29) ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும் தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

‘நாங்கள் முதலீடு செய்யவில்லை. பணம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளோம். இந்த நிறுவனத்தினால் பலரது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தினால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. யாரையும் மோசடி செய்யவில்லை. ஆனால், மோசடி செய்ததாக பொய் புகார் அளித்து இந்த நிறுவனத்தை மூடப் பார்க்கிறார்கள். இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக Myv3Ads நிறுவனத்துக்கு எதிராக புகாரளித்த அசோக் ஸ்ரீநிதி கூறும்போது, “வழக்கமாக இம்மாதிரியான மோசடியால் பாதிக்கப்படும் மக்கள் நிறுவன உரிமையாளர் தப்பிய பிறகு போராட்டத்திற்கு வருவார்கள். ஆனால், இப்போது நேர்மாறாக நிகழ்ந்துள்ளது. இந்த மக்கள் Myv3Ads  நிறுவனத்துக்கு ஆதரவாக தானாக கூடவில்லை. இந்த வழக்கால் முதலீடு திரும்ப கிடைக்காமல் போகலாம் என வாட்ஸ் அப் மூலம் செய்தியை பரப்பியுள்ளனர். எம்.எல்.எம் போன்ற திட்டங்களுக்கு இந்தியாவில் தடை உள்ளது. இதனால் மக்கள் மோசடியில் சிக்குகின்றனர். புகார் அளித்த எனக்கும் தினமும் மிரட்டல்கள் வருகிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...