No menu items!

கட்சி ஆரம்பிக்கும் விஜய்… கடுப்பில் தயாரிப்பு நிறுவனம்! – மிஸ் ரகசியா

கட்சி ஆரம்பிக்கும் விஜய்… கடுப்பில் தயாரிப்பு நிறுவனம்! – மிஸ் ரகசியா

“மகாத்மா காந்தி பற்றி வாவ் தமிழா வெப்சைட்ல எழுதியிருந்ததை படிச்சேன். திமுகவைப் போல மகாத்மா மேல உங்களுக்கும் திடீர் பாசம் வந்திருக்கே?” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“தேசத் தந்தை மேல பாசம் காட்டுறதுக்குகூட காரணம் கண்டுபிடிப்பியா என்ன?”

“நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா திமுகவினர் பிஜேபியை எதிர்க்கிறதுக்காக காந்தியை கையில எடுத்திருக்கிறதா ஒரு பேச்சு அரசியல் வட்டாரத்துல ஓடுது.”

“காந்தி தேசத் தந்தை இல்லை. நேதாஜிதான் தேசத் தந்தைன்னு சமீபத்துல ஒரு நிகழ்ச்சியில ஆளுநர் சொல்லி இருந்தாரே… அதுக்காக இப்ப திமுகவினர் காந்தியை கொண்டாடறாங்களா?”

“அதுவும் ஒரு காரணம். ஆனா அதைவிட முக்கிய காரணம் வேற ஒண்ணு இருக்கு.”

“அது என்ன காரணம்?”

“சில மாதங்கள் முன்னாடி வரைக்கும், பாஜக பத்தி அவ்வளவா கவலைப்படாத மனநிலைல திமுக இருந்துச்சு. தங்களோட எதிரி அதிமுக மட்டும்தான்னு அவங்க நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனா இப்ப முதல்வரும், உதயநிதியும் டூர் போன பல இடங்கள்ல பாஜக கொடிகளும் திராவிட கட்சிகளுக்கு சரிசமமா இருக்கறதைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி ஆகி இருக்காங்க. அதனால பாஜகவுக்கு எதிரான பிரச்சாரங்களை பெரிய அளவுல செய்ய திட்டமிட்டு இருக்காங்க. அதுல ஒரு பாகமாத்தான் மகாத்மா காந்தியோட நினைவு நாளை முன்னிட்டு ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்க. அதுல ‘மதவெறிக்கு மகாத்மா பலியான’ங்கிற வார்த்தையை அழுத்தமா பதிஞ்சிருக்காங்க. தமிழகத்தின் பல ஊர்கள்ல இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கு. அதோட எப்பவும் இல்லாத வகையில இந்த வருஷம் காந்தி நினைவு நாளில் அவரைப் பத்தின தலையங்கத்தை முரசொலியில வெளியிட்டு இருக்காங்க. இதையெல்லாம் வச்சுதான் திமுக அரசியலுக்காக காந்தியை கையில் எடுத்திருக்கறதா சொல்றாங்க.”

“காந்தி நினைவு நாள்ல இன்னொரு விஷயத்தையும் திமுக அரசு செஞ்சிருக்கே… நீ அதை கவனிச்சியா?”

“மகளிர் உரிமைத் தொகையைப் பத்தி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வெளியான விளம்பரத்தைத்தானே சொல்றீங்க.”

“பரவாயில்லையே… நீ கண்டுபிடிச்சுட்டியே”

“உங்க சிஷ்யையாச்சே… கவனிக்காம போவேனா… நாடாளுமன்ற தேர்தல்ல மகளிர் உரிமைத் தொகை மிகப்பெரிய அளவுல வாக்குகளை பெற்றுத் தரும்னு முதல்வர் ஸ்டாலின் நம்பறார். அதனால இப்போதில் இருந்தே அதைப்பற்றின பிரச்சாரங்களை பெருசா செய்யணும்னு கட்சித் தலைவர்களுக்கு அவர் உத்தரவு போட்டிருக்காராம்.”

“விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டுல திருமாவளவனைப் பத்தி அபாரமா புகழ்ந்திருக்காரே முதல்வர்.”

“இதன் மூலமா நாடாளுமன்ற தேர்தல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடத்தான் கூட்டணி. பாமக கூட்டணி இல்லைங்கிறதை அவர் மறைமுகமா சொல்லி இருக்கார். பாமக வந்தா 5 சீட் வரைக்கும் கேட்பாங்க. ஆனா விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 சீட் கொடுத்தாலே சந்தோஷமா வாங்கிப்பாங்க. மாநிலம் முழுக்க அவங்களுக்கு வாக்கு வங்கியும் இருக்குன்னுதான் அவங்களை கூட்டணியில தக்க வச்சுக்க முதல்வர் முடிவு செஞ்சிருக்கிறதா கட்சியில பேசிக்கறாங்க.”

“விடுதலை சிறுத்தைகளோட மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் சூப்பரா இருந்துச்சே.”

“இப்பல்லாம் அரசியல் கட்சிகளோட மாநாடுகளையும், பொதுக் கூட்டங்களையும் ஒருங்கிணைச்சு நடத்தறது சில தனியார் நிறுவனங்கள்தான். அந்த வகையில விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டு ஏற்பாடுகளை ‘வாய்ஸ் ஆப் காமன்’ங்கிற ஒரு தனியார் நிறுவனம்தான் செஞ்சிருந்தது. சமூக வலைதளங்களில் மாநாடு பற்றிய செய்திகளை வெளியிடறது, தொண்டர்களை திரட்டறது, மாநாடு ஏற்பாடுகளை கவனிக்கறதுன்னு எல்லா வேலைகளையும் அந்த நிறுவனம்தான் செஞ்சிருக்கு. இந்த நிறுவனத்தோட உரிமையாளர் ஆதவ் அர்ஜுனா. இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினோட மருமகன். இவர்தான் விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் வியூகம், உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கறது போன்ற வேலைகளையும் செஞ்சுட்டு வர்றாராம். இந்த முறை பொதுத் தொகுதி வாங்கி அவரை எம்.பி. ஆக்கறது பத்தி ஆக்குவது திருமா யோசிச்சு வர்றாராம்.”

“திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அறிவாலயத்துக்கு வரச் சொல்லி ஆலோசனை நடத்திட்டு இருக்காங்களே?”

“இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதின்னு நிறைய பேர் இருந்தாலும், உதயநிதிதான் அதிகமா பேசறாராம். மத்தவங்க அவர் பேசறதை கேட்டுட்டுதான் இருக்காங்களாம். சேலம் மாவட்ட நிர்வாகிகளை சந்திச்சப்ப, ‘சேலம் எடப்பாடிக்கு சொந்தமான மாவட்டம். சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒரு தொகுதியில்தான் நாம் வெற்றி பெற்றோம். இந்த முறை அப்படி கோட்டை விட்டுறக் கூடாது’ன்னு உதயநிதி சொல்லி இருக்கார். சில மாவட்ட நிர்வாகிகள்கிட்ட பேசும்போது, ‘உங்கள் மாவட்டத்தில் கோஷ்டி பூசல் ஜாஸ்தியா இருக்கு. இதெல்லாம் தலைமைக்கு தெரியாதுன்னு நினைக்காதீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க’ன்னு அட்வைஸ் பண்னி இருக்கார்.”

“உதயநிதிக்கு வாய்ஸ் அதிகமா இருக்குன்னா அவர் கேட்டபடி திமுகல இளைஞர் அணிக்கு 5 சீட் ஒதுக்குவாங்களா?”

“அந்த நம்பிக்கையிலதான் இளைஞர் அணி நிர்வாகிகள் இருக்காங்க. இளைஞர் அணி சார்பில் தூத்துக்குடி ஜோயல், ஈரோடு பிரகாஷ், திருத்துறைப்பூண்டி இளையராஜா, ஏற்கனவே இளைஞரணி சார்பா எம்.பியா இருக்கற அண்ணாதுரை, தனுஷ்குமார் ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியல்ல நிச்சயம் இடம் இருக்கும்னு அவங்க நம்பறாங்க.”

“விஜய்யோட கட்சிக்கு பேரு வச்சதா ஒரு தகவல் ஊரெல்லாம் சுத்துதே?”

“நாடாளுமன்ற தேர்தல்ல நின்னா விஜயகாந்த் இடத்தை நாம பிடிச்சுடலாம்னு விஜய்யோட ஆதரவாளர்கள் அவருக்கு ஓதி விட்டிருக்காங்க. அதை நம்பித்தான் விஜய் நாடாளுமன்ற தேர்தலுக்குள்ள கட்சி ஆரம்பிக்க ஆர்வம் காட்டறார். ஆனா இதனால பாதிக்கப்பட்டது ஏஜிஎஸ் நிறுவனம்தான். இந்த நியூசை கேள்விப்பட்டதும் கடுப்பாய்ட்டாங்க. விஜய்யோட அடுத்த படத்தை ஏராளமா செலவு செஞ்சு அவங்கதான் எடுத்துட்டு இருக்காங்க. விஜய் அரசியலுக்கு வந்துட்டா நாம எடுக்கப்போற விஜய் படத்தோட வியாபாரம் பாதிக்குமோன்னு அவங்க பயப்படறாங்க. அரசியல் கட்சி சார்ந்தவர்கள் படத்தை பொதுமக்கள் தவிர்க்கிறார்கள்னு அவங்க நினைக்கறாங்க.”

“பாவம்தான். ஆமா… ஓபிஎஸ் திரும்பவும் சுறுசுறுப்பாயிட்டாரே?”

“எடப்பாடி இல்லாத ஒன்றுபட்ட அதிமுகதான் அவரோட நோக்கம். இதுக்காக சசிகலாவைக்கூட சந்திச்சு பேச அவர் தயாரா இருக்கார். ஆனா… ஓபிஎஸ்சை சந்திக்க சசிகலா தயாரா இல்லை. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துல ஓபிஎஸ் தன்னைப் பத்தி தப்பா சொல்லிட்டதால அவர் கோபத்துல இருக்காராம்.”

“ஆளுநர் ரவி கீழ்வெண்மணிக்கு போயிருக்காரே?”

“கீழ்வெண்மணியில் பண்ணையார்கள் 44 விவசாயிகளை குடிசையில் போட்டு எரித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்டு கம்யூனிஸ்ட் கட்சிதான் வழக்கு தொடுத்து போராடிச்சு. அதனால கீழ்வெண்மணி விவசாயிகள்ல பெரும்பாலானவங்க கம்யூனிஸ்ட் ஆதரவாளராத்தான் இருப்பாங்க. ஆளுநர் ரவி வர்றதா தகவல் கிடைச்சதும், கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்த்திருக்காங்க. குடிசைத் தீயில தப்பிச்ச பழனிவேலை ஆளுநர் சந்திக்கப் போறதா நியூஸ் வந்துச்சு. பழனிவேலும் ஆளுநரை சந்திக்க விரும்பல. ஆனா பிறகு ஆர்எஸ்எஸ்ல இருக்கிற பழனிவேலோட மருமகன் அவரைச் சம்மதிக்க வச்சிருக்கார். இதைத்தொடர்ந்து ஆளுநர் அங்க வந்திருக்கார். எப்படியோ ஆளுநரால கீழ்வெண்மணியில பாஜக நுழைஞ்சுடுச்சு.”

“கவர்னர் வந்ததை பாஜக நுழைஞ்சிடுச்சுனு சொல்றா?”

“சொல்லக் கூடாதா? எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதானே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...