No menu items!

எச்சரிக்கை – மழை வெள்ளத்தால் பரவும் நோய்கள்

எச்சரிக்கை – மழை வெள்ளத்தால் பரவும் நோய்கள்

மிக்ஜாம் புயலால் சென்னையில் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை. புறநகர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் முட்டி அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பல விதமான நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன.

இந்த நோய்களில் இருந்து நம் வீட்டு குழந்தைகளை (உங்களையும்தான்) காத்துக்கொள்ள சில வழிகள்..

சுற்றுப்புறத்தில் கவனம் தேவை:

கொசுக்களுக்கு பிடித்த இடம் மழைநீர் குட்டைகள். அதனால் உங்கள் வீட்டுக்கு அருகே மழைநீர் தேங்கி இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். கொசுக்களால் பரவும் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க, வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி தேங்கி இருந்தால் வீட்டுக்குள் கொசுக்கள் வராமல் தடுக்கவேண்டும். இதற்கு கொசு வலைகளையோ அல்லது கொசு விரட்டிகளையோ பயன்படுத்துங்கள். அதோடு அழுக்குத் துணிகளை வீட்டில் சேர்த்து வைக்காமல் இருத்தல், குப்பை கூளங்களை உடனடியாக அப்புறப்படுத்துதல் ஆகியவற்றிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் விளையாடி திரும்பும்போது:

மழைநீர் தேங்கியிருக்கும் நிலையில் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவது நல்லதல்ல. ஆனால் வெளியில் சென்று விளையாடக் கூடாது என்று சொன்னால் எந்தக் குழந்தைதான் ஒப்புக்கொள்ளும்? அவர்கள் ஆடச் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கத்தான் செய்வார்கள். இதுபோன்ற சூழலில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. மேலும் குழந்தைகள் விளையாடச் செல்லும்போது அவர்கள் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாடச் செல்லும்போது, உடலில் பெரும்பாலான இடங்களை மறைக்கும்படியான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

விளையாடி முடித்து வந்ததும் வெந்நீரில் அவர்களைக் குளிக்க வைப்பது நல்லது. இல்லாவிட்டால் குறைந்தபட்சம் கைகளையாவது சோப்பு போட்டு கழுவவைக்க வேண்டும்.

வேண்டாம் ரோட்சைட் கடைகள்

மழைக்காலத்தில் சூடாக ஏதாவது சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த எண்ணம் சற்று அதிகமாகவே தோன்றும். இதன் காரணமாக தெருவோரங்களில் உள்ள பஜ்ஜி, போண்டா மற்றும் சுண்டல் கடைகளிலும், பானி பூரி, பேல் பூரி போன்ற சாட் உணவுகளை விற்கும் கடைகளிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் மழைக்காலத்தில் இத்தகைய தெருவோர கடைகளில் சாப்பிடுவது குழந்தைகளுக்கு தீங்கை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளை மழை நேரத்தில் அக்கடைகளில் சாப்பிட விடாதீர்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடிக்கும் நொறுக்குத் தீனிகளை செய்து கொடுங்கள்.

உடைகளில் கவனம் தேவை

குழந்தைகளுக்கு குளிர் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஒருசில பெற்றோர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடைகளை அவர்களுக்கு அணிவிப்பார்கள். அதற்கு மேல் ஸ்வெட்டர்களையும் அணிவிப்பார்கள். இது தவறான விஷயமாகும். இப்படி அளவுக்கு அதிகமான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அவர்கள் உடல் அதிக சூடாகி வியர்வை வரும். அதிக வியர்வை வருவதாலும் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிக வெப்பம் தரும் வகையில் பல ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிப்பதற்கு பதிலாக கதகதப்பான ஏதாவது ஒரு ஆடையை மட்டும் அவர்களுக்கு அணிவிப்பது நல்லது.

அடிக்கடி தண்ணீர் கொடுங்கள்

பொதுவாக மழைக்காலங்களில் அதிக தாகம் எடுக்காது. இதனால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்காவிட்டால், அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை கட்டாயப்படுத்தியாவது அடிக்கடி தண்ணீர் குடிக்க வையுங்கள். அந்த தண்ணீரையும் நன்றாக காய்ச்சி குடிக்கவையுங்கள். வெளியிடங்களுக்கு குழந்தைகளுடன் செல்ல நேர்ந்தால் அவர்களுக்கான கொதிக்கவைத்த தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள்.

பழங்களைத் தவிர்க்காதீர்கள்:

மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் நினைத்து அவர்களுக்கு பழங்களை கொடுக்காமல் தவிர்ப்பது சில பெற்றோரின் வழக்கம். ஆனால் அது தவறு. குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க, வைட்டமின் சி அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களின் சாறுகள் மற்றும் பால் ஆகியவற்றை குழந்தைகளுக்கு அதிகம் வழங்கவேண்டும். மேலும் தினமும் அவர்களுக்கு வழங்கும் உணவுகளில் இஞ்சி, பூண்டு, துளசி ஆகியவற்றை சிறிதளவாவது கலந்து கொடுப்பது சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் அவர்களை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...