ரதன்
இந்தியாவில் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் நாடு திரும்பிய கனடா பிரதமர் ரூடோ கனடிய பாராளுமன்றத்தில் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். பிரிட்டிஷ் கொலாம்பியாவில் சீக்கிய ஆலயம் குருநானக் சீக்கிய குருத்வாரா (Guru Nanak Sikh Gurdwara); முன்னால் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலையின் பின்னால் இந்திய அரசுக்கு நேரடி தொடர்புகள் உள்ளன என்பதுதான் அந்த குண்டு. அத்துடன் நின்றுவிடாது இந்திய உயர் தூதரகலாயத்தில் பணியாற்றிய இந்திய உளவியல் அதிகாரி பவன் குமார் ராய் (Pavan Kumar Rai) கனடாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது, ஒட்டாவா. பதிலுக்கு இந்தியா, இந்தியாவில் உள்ள கனடிய உயர் தூதகரலாயத்தில் உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஆலிவர் சில்வெஸ்ட்ரே (Olivier Sylvestre)-ஐ ஐந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
கனடா – இந்தியா இடையேயான இந்த மோதலுக்கு என்ன காரணம்?
கனடாவின் பொருளாதார சிக்கலும் சீக்கியர்கள் நிலையும்
கனடா இன்று மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலில் உள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்கின்றது. வட்டி வீதம் தொடர்ந்து அதிகரிக்கின்றது. வீட்டு அடமானக் கடனின் மாதாந்திர தொகையை கட்டமுடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவுடனான இந்த முரணின் அவசியம் என்ன?
கனடிய மத்திய அரசின் நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநரிடம் வட்டி வீதத்தை குறைக்குமாறு கேட்க, ஆளுநர் மறுக்கின்றார். மாறாக ஒனராரியோ உட்பட்ட பல மாகாண முதல்வர்கள் வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விட்டனர். இது வழமைக்கு மாறான ஒரு விடயம். மத்திய கொன்சவேற்றிவ் கட்சித் தலைவர், தான் ஆட்சிக்கு வந்தால் மத்திய வங்கி ஆளுநரை வெளியேற்றுவேன் என சூளுரைத்துள்ளார்.
கடந்த பல தசாப்தங்களாகவே கனடிய மத்திய வங்கி சுதந்திரமாகவே இயங்கி வருகின்றது. 1961இல் அப்போதைய கொன்சவேற்றிவ் பிரதமர் ஜான் டிஃபென்பேக்கர் (John Diefenbaker) – அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் ஜேம்ஸ் கோய்ன் (James Coyne) இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. சி114 சட்டம் உருவாக்கப்பட்டது. இறுதியில் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரை அப்போது ஊடகங்கள் கம்யூனிஸ்ட் என்று விமர்சித்தன.
ஆளுநரை வெளியேற்ற அல்லது பதவி நீக்கம் செய்ய சட்டம் இல்லை. ஆனால், கனடிய அரசுக்கு ஆளுநரிடம் வட்டி வீதத்தை குறைக்கச் சொல்ல, அல்லது அதிகரிக்க வேண்டாம் என்று சொல்ல அதிகாரம் உண்டு.
வட்டி வீதம் என்பது பல விடயங்களில் தங்கியுள்ளது. உலகப் பொருளாதார நிலைமை, அமெரிக்க வட்டி வீதம், பண வீக்கம், கனடிய தேசிய உற்பத்தி, கனடிய வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு காரணிகளையும் மத்திய வங்கி கணக்கிலெடுக்க வேண்டும். கனடிய அரசு மக்கள் நலனை கவனத்திலெடுத்து சிறந்த பொருளதாரக் கொள்கைகளை அமுல்படுத்தினால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். ஆனால், மாறாக அவர்கள் குண்டுகளை தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து இன்றைய சிக்கலை பார்க்கும் முன்னால் சீக்கியர்கள் கனடாவிற்கு வந்த வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாம்…
1914 மே மாதம் Komagata Maru என்ற ஜப்பானிய கப்பல், 376 இந்தியர்களை (340 சீக்கியர்கள், 12 இந்துக்கள், 24 முஸ்லீம்கள்) ஏற்றிக்கொண்டு, பிரிட்டிஷ் கொலாம்பியாவின், வன்கூவர் துறைமுகத்தை அடைந்தது. அப்போதைய கனடிய அரசு கப்பலில் வந்த சீக்கியர்களுக்கு கடுமையான துயரங்களைக் கொடுத்தது. இறுதியாக அதே ஆண்டு ஆடி 23ஆம் தேதி கப்பல் திருப்பி இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. இந்தியக் கரையை அடைந்தவர்களை அன்றைய பிரிட்டிஷ் அரசு, பயங்கரவாதிகள் எனக் கூறி சிறையிலடைத்தது. இந்த சம்பவத்திற்கு 2016ஆம் ஆண்டு மே 16இல், தற்போதைய கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கனடாவின் மொத்த சனத்தொகையில் 2 வீதமே சீக்கியர்கள் (7,70,000). அப்படியிருந்தும் அவர்களது அரசியல் பலம் வீரியமானது.
கனடாவில் சீக்கியர்கள் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பலம் பொருந்தியவர்களாக உள்ளனர். தற்போதைய பாராளுமன்றத்தில் 15 எம்.பி.கள் சீக்கியர்கள். ரூடோ முதலில் பிரதமராக பதவியேற்ற பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் நான்கு சீக்கியர்கள் அமைச்சர்களாக இருந்தனர். பாதுகாப்பு அமைச்கராக Harjit Singh Sajjan இருந்துள்ளார்; Amarjeet Sohi, minister of infrastructure and communities; Bardish Chagger, minister of small business and tourism; Navdeep Bains, minister of science and economic development – என முக்கிய அமைச்சர்களாக சீக்கியர்கள் நியமிக்கப்பட்டனர்.
எதிர்கட்சிகளிலும் பல சீக்கியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். என்.டி.பிக் கட்சியின் தலைவரான Jagmeet Singh ஒரு சீக்கியராவார். இந்தியாவிற்கு வெளியே அதிகளவு சீக்கியர்கள் கனடாவில் தான் உள்ளனர். (சீக்கியர்கள் மட்டுமல்ல, தமிழர்கள் (ஈழம், தமிழ்நாடு) சோமாலியர்கள், எதியோப்பியர்கள் என பல நாட்டினைச் சேர்ந்தவர்கள் தங்களது நாடுகளை அடுத்து வெளியே அதிகளவு வாழ்வது கனடாவாகத்தான் உள்ளது.)
கனடாவில் சீக்கியர்கள் குருத்வாரா (Gurudwara) அமைப்பினூடாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட குருத்வாராக்கள் கனடாவில் உள்ளன. இங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். குருத்வாராக்கள் சீக்கியர்களின் ஆலயம் மாத்திரமல்லாது அங்கேயே பல தீர்மானங்களும் எடுக்கப்படுகின்றன. தேர்தல் காலங்களில் குருத்வாராக்களின் தலைவர்கள் கூறுவதற்கு அதிக மரியாதையுண்டு.
இந்தியாவுக்கு வெளியே காலிஸ்தான் போராட்டம்
1930களில் காலிஸ்தான் அமைப்பு உருவாக்கப்பட்டது. சீக்கியர்களுக்கான தனி நாடு உருவாக்கமே காலிஸ்தான் அமைப்பின் முக்கிய நோக்கமாகும். சீக்கியர்கள் இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகார், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்திலும் அதிகளவு வாழ்கின்றனர். இதில் சிம்லா, லாகூரை காலிஸ்தானின் தலைநகராக அமைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர். எனினும் காலிஸ்தானின் வரையறுக்கப்பட்ட நிலம் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக கனடா, இங்கிலாந்து போன்றனவற்றில் அதிகளவு வாழும் சீக்கியர்களும் காலிஸ்தான் அமைப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் தொடர்ச்சியாக ஆயுத போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 1984 ஆனி மாதம் இந்திய இராணுவம் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation Blue Star) என்ற பெயரில் கோல்டன் ஆலயத்துக்குள் (Golden Temple) சென்று சீக்கிய ஆயுததாரிகளை கைது செய்தது. சுமார் 10 நாட்கள் ஆலயத்தை இராணுவம் ஆக்கிரமித்து இருந்தது. 554 தீவிரவாதிகளும் 83 இராணுவத்தினரும் இறந்ததாக உத்தியோகபூர்வமாக கூறப்பட்டுள்ளது. எனினும் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 700க்கு மேல் எனவும் 5000-7000 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. சுமார் 41 சீக்கிய ஆலயங்களுக்குள்ளும் இந்திய இராணுவம் புகுந்து சீக்கியர்களைக் கொன்றது.
அப்போது இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். அதன் பின்னர் காலிஸ்தான் ஆயுதப் போராட்டம் ஓரளவிற்கு இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், இந்தியாவிற்கு வெளியே அது விருட்சமாக மாறத் தொடங்கியது. 1984 அக்டோபர் 31ஆம் தேதி இந்திரா காந்தி டெல்லியில் சீக்கிய ஆயுததாரிகளால் கொல்லப்பட்டார்.
1985 ஜூலை 15… ரொன்ரோவிலிருந்து மும்பைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணமானது. மொன்றியல், லண்டன் நகரங்களில் இறங்கி மும்பை செல்வதாகவிருந்தது. மொன்றியலில் நின்றபோது சர்ச்சைக்குரிய மூன்று பார்சல்கள் இந்த விமானத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டன. அதன் பின்னர் பயணத்தை தொடர்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஹனிஸ்கா (Air india flight 182, Kanishka) விமான நிலையத்தை சென்றடைய முன்னர் வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த 329 பேரில் 27 பிரித்தானிய பிரசைகள். 22 பேர் விமான ஓட்டி உட்பட்ட பணியாளர்கள். 268 கனடியர்கள். 131 உடல்களே கடலிலிருந்து மீட்கப்பட்டன. தல்விந்தர் சிங் பர்மர் (Talwinder Singh Parmar) இச் சம்பவத்தின் சூத்திரதாரி என கனடிய பாதுகாப்பு படையினர் கருதினர். எனினும் இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இவர் இந்தியாவில் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தர்ஜித் சிங் ரேயாட் (Inderjit Singh Reyat) மற்றுமொரு குற்றவாளி. 2003இல் பத்து வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ரிபுதமன் சிங் மாலிக், அஜய்ப் சிங் பக்ரி (Ripudaman Singh Malik, Ajaib Singh Bagri) ஆகியோர் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக போதியளவு சாட்சிகள் இல்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டனர். ரிபுதமன் சிங் மாலிக் 2022இல் – இனந்தெரியாத ஆயுதாரி(கள்) சரே – பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
2006இல் கனடா விசாரணை குழுவை அமைத்தது. 2010இல் இதன் அறிக்கை வெளியானது. அதில் கனடிய உளவுப் பிரிவிற்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் முறையாக விடயங்கள் பரிமாறப்படாமை சுட்டிக் காட்டப்பட்டது.
காலிஸ்தானால் கனடா – இந்தியா இடையே எழுந்த சிக்கல்
இந்தியன் ஏர்லைன்ஸ் விமான குண்டு வெடிப்பு குற்றவாளிகளை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு இந்தியா பலமுறை கேட்டும் கனடா மறுத்துவிட்டது. World Sikh Organization (WSO), Khalistan Tiger Force (KTF), Sikhs for Justice (SFJ), Babbar Khalsa International (BKI) போன்ற அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் எனவும் இவ் அமைப்புக்கள் கனடாவில் சுதந்திரமாக இயங்குகின்றன எனவும் இந்தியா தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்றது. குர்வந்த் சிங், குர்பிரீத் சிங் (Gurwant Singh, Gurpreet Singh) ஆகியோரை நாடு கடத்த இந்தியா விடுத்த கோரிக்கை இன்னமும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது. வேறு பலரையும் இந்தியா நாடு கடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸில் குண்டு லண்டனுக்கு மேலாக வெடித்திருந்தாலும், குண்டு கனடாவிலிருந்தே அனுப்பப்பட்டது. கனடாவில் அதற்கான விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை முறையாக வழங்கப்படவில்லை. வழக்கு விசாரணை சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகச் சென்றது. குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் அநேகமானோர் கனடியர்கள். அப்படியிருந்தும் கனடா முறையான விசாரணையைச் செய்யத் தவறிவிட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜர் மீது இந்தியா பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. இவர் ஒரு பயங்கரவாதி என இந்தியா கருதுகின்றது. அப்படியிருந்தும் அவருக்கு கனடா தனது பிரஜாவுரிமையை வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வருடம் பிரித்தானிய இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். அதே போல் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகமும் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. பிரம்ரன்-ஒன்ராரியோவில் நடைபெற்ற காலிஸ்தான் ஆதரவு ஊர்வலம் ஒன்றில் இந்திரா காந்தி உருவத்தை ஒரு ஆயுததாரி சுடுவதாகவும் இரத்தம் சிந்தப்படுவதாகவும் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள் கொண்டு செல்லப்பட்டன.
ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட குருத்வாராவில் காலிஸ்தான் பிரிவினைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சீக்கியர்கள் இங்கு வாக்களித்திருந்தனர். மற்றுமொரு வாக்கெடுப்பு கனடா முழுவதும் நவம்பர் மாதம் நடத்தப்படுகின்றது. இதே நாள் உலகெங்கும் கூட வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இது தனிநாட்டுக் கோரிக்கைக்கான புலம்பெயர் சீக்கியர்களால் அளிக்கப்படும் வாக்குகள். ஆனால், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 58 வீதமானோரே சீக்கியர்கள்.
இந்நிலையில்தான் அண்மையில் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற்றது.
கனடாவை கைவிட்ட நட்பு நாடுகள்
ஜி20 மாநாட்டிற்கு சென்ற ரூடோவை இந்திய அரசு முறையாக நடத்தவில்லை. அவரை அவமானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது என்று கூறப்பட்டது. ரூடோ 2018இல் சென்ற போது, அவர் பஞ்சாப் மாநில நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமையை இந்தியா விரும்பவில்லையென்றும் தெரிகிறது. சீக்கிய தீவிரவாதிகள் கனடாவில் களம் அமைத்திருப்பதையும் இந்தியா எதிர்த்து வந்தது.
கனடா திரும்பிய பின்னர் ரூடோ இந்தியாவில் தனக்கு நேர்ந்த ’அவமானத்துக்கு’ ஈடுகட்டவும், பொருளாதார சிக்கல்களில் இருந்து தப்புவதற்கும் சரேயில் நடைபெற்ற கொலையின் பின்னணனியில் இந்தியா இருக்கலாம் என கனடிய பாதுகாப்பு அமைப்பு நம்புகின்றது என கூறியிருந்தார். இவை குற்றச்சாட்டுக்களே. ரூடோ இவற்றிற்கான முழுமையான சாட்சியங்கள் உள்ளதாகக் கூறவில்லை. இதில் சம்பந்தப்பட்டவர் எனக் கருதப்பட்ட அதிகாரியை நாடு கடத்தியது.
கனடா தனது நட்பு நாடுகளை தனக்கு ஆதரவிற்கு அழைத்தது. ஆனால், நட்பு நாடுகள் இந்தியாவை பகைக்க விரும்பவில்லை. இதே போன்ற நிலைமை முன்னர் ஒரு தடவை கனடாவிற்கு நடைபெற்றது. அதுவும் ரூடோவின் காலத்திலேயே நடைபெற்றது. 2018இல் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர்களை சவூதி அரேபியா கைது செய்தமையை கனடா கண்டித்திருந்தது. அதன் போதும் நட்பு நாடுகள் கை விரித்தன. இந்திய விவகாரத்திலும் கனடாவை நட்பு நாடுகள் கைவிடும் சூழ்நிலையே உள்ளது.
இந்தியாவை பகைப்பதனால் கனடாவிற்கு என்ன நட்டம், என்ன லாபம்?
கனடாவிற்கும் இந்தியாவிற்குமான வணிக உறவு மிக மிகக் குறைவு. ஏற்றுமதி 1.2 வீதம், இறக்குமதி 1 வீதம். கனடாவிற்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம். அதே சமயம் இந்தியா செல்லும் கனடியர்கள் சுமார் 23 வீதம் வருமானத்தை இந்திய வணிகர்களுக்கு கொடுக்கின்றனர். எனவே, இந்த உறவு முறிவினால் கனடா அதிகம் பாதிக்கப்படப் போவதில்லை. மேலும், கனடா நேட்டோவில் ஒரு முக்கிய நாடு. ஜி7 நாடுகளில் ஒன்று.
ரூடோவின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?
அண்மைக் காலங்களில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களை சிறுபான்மையினரே தீர்மானிக்கின்றனர். வாக்கு வங்கிகளுக்காக சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் செவிசாய்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. டொனால்ட் ரம்ப் ஜெருசலேத்தை தலைநகராக அறிவித்ததன் பிண்ணனியும் இதுவேயாகும்.
இன்னொரு பக்கம், சீனா உட்பட்ட நாடுகள் கனடாவின் அரசியலில் தலையிடுவதாகவும் அரசியல் தலைவர்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சீனப் போலிஸ் நிலையங்கள் கனடாவில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒளிவு மறைவின்றி ரூடோ அரசு, சீனாவின் அரசியல் தலையீடு பற்றி விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக ரூடோ அரசின் மீது தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. அப்படியிருக்க இந்தியா மீதான குற்றச்சாட்டை முன்வைத்து ரூடோ அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
கனடாவில் கொல்லப்பட்ட நிஜார் அல்ல முக்கியம். 2022இல் மாலிக், 2023இல் நிஜார் என கனடிய மண்ணில் அந்நிய சக்தியால் கொலைகள் நடத்தப்படுகின்றது என்பதுவே இங்கு முக்கியம். கனடாவில் ஒரு கொலை நடைபெற்றது என்றால் அது அமெரிக்காவின் பிரச்சினையாகவே கருதப்படும். A Murder in Canada is U.S Problem என நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இக் கொலையில் நேரடியாக பங்கு பற்றியதற்கான ஆதாரங்களை ஐ5 (Australia, Canada, New Zealand, the United Kingdom and the United States – ஆங்கிலத்தை பிரதான மொழியாகக் கொண்ட நாடுகள்) நாடுகளில் ஒன்றே நேரடியாக வழங்கியதாக கனடா தெரிவித்துள்ளது. அது அமெரிக்கா என்பது தெளிவு.
இப்படி ரூடோவின் குற்றச்சாட்டின் பின்னால் பல்வேறு காரணிகளும் இயங்குகின்றன. அதே சமயம் இந்தியாவும் தனது நாட்டில் வாழும் சிறுபான்மையினர் பயமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த தவறிவிட்டது என்ற பின்னணியில் பார்த்தால் ரூடோ இந்திய விடயத்தில் ஒரு முறையான முடிவையே எடுத்துள்ளார் எனலாம்.
ஆனாலும், இந்த விவகாரத்தைச் சுற்றி நடக்கும் பல்வேறு நடவடிக்கைளால் ரூடோ எதிர்காலம் இருண்டேயுள்ளது.
ரதன் – கனடாவில் வாழும் இலங்கை தமிழ் எழுத்தாளர்