No menu items!

ஒரு நடிப்பு அசுரன் கதை!

ஒரு நடிப்பு அசுரன் கதை!

தனுஷ்.

இதுதான் அந்த நடிப்பு அசுரனின் பெயர்.

தமிழ் சினிமாவில், கதாநாயகன் என்றால் இப்படியெல்லாம் இருக்கவேண்டுமென தோற்றம், நிறம், குரல், உடல்மொழி என வரிசையாக பட்டியல் போட்டு வைத்திருந்த அனைத்து அம்சங்களையும் தகர்த்தெறிந்த அசகாய நடிகன்.

சுமாராக படித்து கொண்டிருந்த பையன், சூப்பர் நடிகனானது அந்த விடலைப் பையனே எதிர்பார்க்காத ஒன்றுதான். உண்மையில் ’துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்க அந்தப் பையனுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவனது அப்பா கஸ்தூரி ராஜா ஆசைப்பட்டார். வேறுவழியில்லாமல் கேமரா முன் நின்றான்.

இந்தப் படத்திற்கு பிறகு நமக்கு யாரும் படம் கொடுக்கப் போவது இல்லை என்று நினைத்தபடி ஜாலியாக நின்றான். அப்பா சொல்ல சொல்ல அதை தன்னுடைய பாணியில் வெளிக்காட்டினான்.

அந்தப் படம் வெளியானது. ஆனால் அந்த வாலிபனுக்கு எந்த எதிர்பார்பும் இல்லை. அடுத்து தொடர்ந்து படிக்க கிளம்பவேண்டுமா என்ற சோம்பேறித்தனம் மட்டும் இருந்தது.

படம் வெளியானதும் அவன் நினைத்த மாதிரியே யாரும் அந்த மெல்லிசான பையனை நடிக்கக் கூப்பிடவில்லை. உற்சாகமானான். ’நல்லவேளை நான் தப்பித்தேன் என்று சந்தோஷப்பட்டவனுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கலாம் என்று ஒரு யோசனை ஏற்பட்டது.

ஆனால் விதி வேறு விதமாக இருந்தது. முதலில் அப்பா. இப்போது அண்ணன். ‘நீதான் என் படத்தில் நடிக்க வேண்டும் என்றார் அண்ணன். படத்தின் பெயர் ‘காதல் கொண்டேன்’ என்று கதையைச் சொல்லாமல் டைட்டிலை மட்டும் தம்பியிடம் சொன்னார்.

நீதான் ஹீரோ என்றார் அண்ணன். பதறிப்போனான் தம்பி. ’இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை என் தலையில் வைத்தால் நான் தாங்க மாட்டேன். வேறு யாரையாவது நடிக்க வையுங்கள்’ என்று எஸ்கேப் ஆக பார்த்தான் தம்பி.

’உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உனக்கு இது ஒரு ’டெய்லர் மேட்’ படமாக இருக்கும். தைரியமாக நடி’ அண்ணன் செல்வா நம்பிக்கை கொடுத்தார். ’நான் சொல்கிற ஹோம் வொர்க்குகளை மட்டும் பண்ணு’ என்றார். சரி அண்ணன் சொல்கிறாரே என்று கதையைக் கேட்ட பிறகு அவர் சொன்ன ஹோம் வொர்க்குகளை பண்ண ஆரம்பித்தான் அந்த விடலைப் பையன்.

இரண்டாவது படமாக இருந்தாலும், அப்போதுதான் சினிமாவின் யதார்த்தம் அவனுக்குப் புரிந்தது. சினிமா எவ்வளவு கஷ்டம் என்பதை முதல் ஷெட்யூலில் ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் புரிந்துக் கொண்டான். அதற்கு பிறகு சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான் அவன்.

அவன் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ’காதல் கொண்டேன்’ இரண்டும் அசத்தலான வெற்றியைப் பெற்றன.

வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருந்தான் அவன்.

வழக்கம் போல், அவனுடைய நண்பர்கள், உறவினர்களில் சிலர், ‘இவனுக்கு எதுக்கு சினிமா?. ஒழுங்காக ஸ்கூலுக்காவது போயிருக்கலாம். சினிமாவுல நடிக்கிறேன்னு இப்ப வீட்டுல வெட்டியாக உட்கார்ந்து இருக்கான்’ என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

காதல் கொண்டேன்’ க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் ஆடிய அந்த ஆட்டத்தைப் பார்த்து, திரையரங்குகளில் எழுந்த கைத்தட்டல்களை கேட்ட பிறகே, அவனுக்கு இது ஒரு சாதாரண மீடியா இல்லை. எவ்வளவு பெரியது. பவர் ஃபுல்லானது என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது. அதற்கு பிறகே சினிமாவை இன்னும் சீரியஸாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான்.

அவன் அந்த வயதிலும் பதட்டமடையவில்லை. திரும்பவும் பள்ளிக்கூடம் போக வேண்டுமென ஆசைப்படவில்லை. ஆனால் இனியும் நாம சும்மா உட்கார்ந்திருந்தால் பெரிய நடிகனாக முடியாது. அதற்கென மெனக்கெடவேண்டும். ஹோம் வொர்க் பண்ணவேண்டும். நம்முடைய மைனஸ்களை ப்ளஸ்களாக மாற்றவேண்டும் என்பதை புரிந்து கொண்டு அவன் அன்றைக்கு எடுத்த முடிவே அவனை நடிப்பு அசுரனாக கொண்டாட வைத்திருக்கிறது.

ஒல்லியான உடம்பும், சுமாரான முகமும்தான் என்னுடைய மைனஸ் பாயிண்ட்கள். இதை எப்படி ப்ளஸாக மாற்றுவது என்று அவன் யோசித்தபோது, அதற்கேற்ற மாதிரியான நல்ல வாய்ப்புகள் அவனைத் தேடி வந்தன. அந்த விடலைப் பையனும் அவனால் எவ்வளவு முடிந்ததோ அவ்வளவு உழைப்பைக் கொடுத்தான்.

அப்போது அவனிடம் இருந்தது ஆர்வம் இல்லை. அது வெறி. மைனஸ்களை எல்லாம் ப்ளஸ் ஆக மாற்றவேண்டும். என்னைக் கிண்டலடித்தவர்கள் எல்லோரும், என்னை பாராட்ட வேண்டுமென்ற வெறி அவனை சும்மா இருக்கவிடவில்லை.

தினமும் வீட்டில் கண்ணாடி முன்னாடி நின்று நடித்துப் பார்க்க ஆரம்பித்தான். கொடுத்த வசனங்களை பேசிப் பார்ப்பான். சோம்பேறியான ஒரு நாயின் பாடிலாங்வேஜ்ஜையோ அல்லது டிஸ்கவரி சேனலில் வருகிற ஒரு சிங்கத்தின், புலியின் ஆக்ஷனையோ தன்னுடைய பாடிலாங்வேஜ்ஜில் செய்து பார்ப்பான். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஹோம் வொர்க் செய்யாமல் போக்கு காட்டியவன், இப்பொழுது நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து நடிப்பதற்கு ஹோம் வொர்க் பண்ண ஆரம்பித்தான்.

’எந்த தைரியத்தில் இவர் நடிக்க வந்தார்’ என்று ’துள்ளுவதோ இளமையின்’ விமர்சனங்களில் என்னைப் பற்றி குறிப்பிட்டிருந்தது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பொதுவாக சிலர் என்னைப் பற்றி இன்னும் மோசமாக கமெண்ட் அடித்திருக்கிறார்கள். அதையும் மீறி என்னைப் பார்த்து, ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு புதுமுகங்கள் நம்பிக்கையோடு அதிகம் நடிக்க வருகிறார்கள் என்று சொல்வதைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இதை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. என்னை அப்படி ஒரு நல்ல உதாரணமாக பார்த்தால் எனக்கு சந்தோஷம்தான். இதைவிட முக்கியமாக சொல்லவேண்டுமென்றால், ‘கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு என்னை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.’ ஆறடி வேண்டாம். சிக்ஸ் பேக் வேண்டாம். கலர் வேண்டாம் என எதுவும் இல்லாதபோது கடின உழைப்பால் ஜெயிக்க முடியும் என்பதற்கு சரியான உதாரணமாக என்னைச் சொல்லலாம்’

’கடவுளுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் ஏன் என்னுடைய தலையில் தொட்டு ஆசிர்வதித்தார் என்று தெரியவில்லை. அதேநேரம் எனக்கு அமைந்த எல்லா இயக்குநர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னிடம் எது இருக்கிறதோ அதை சரியாக புரிந்துக் கொண்டு அதை வெளிக் கொண்டு வந்தவர்கள் அவர்கள்தான். அதற்கு பிறகு அடடா இவனும் நம்மளை மாதிரியே இருக்கானே என்று என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று உணர்ச்சிப் பொங்க அந்த வாலிபரிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.

குடும்பத்தில் உருப்படாத ஒருத்தன், அரியர் வைத்திருக்கும் காலேஜ் ஸ்டூடண்ட், அப்பாவை மதிக்காத மகன் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் அரட்டை, சேட்டை என காதலித்து கொண்டு சுற்றித்திரியும் கதாபாத்திரங்கள் வரவேற்பை கொடுத்தாலும், பாலு மகேந்திரா, வெற்றி மாறன், செல்வராகவன் இயக்கத்தில் அடுத்த கட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைத்தன.

உண்மையைச் சொன்னால் சினிமாவில் தனுஷ் பயணிக்க நினைத்த பாதை வேறு. ஆனால் ரசிகர்கள் அவனது நடிப்புத்திறமையைப் பார்த்து போட்டுக் கொடுத்த பாதை வேறு. அவர்கள் கொடுத்த பாதையை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்.

’எனக்கு முழு சந்தோஷத்தை இந்த பாதை கொடுக்கிறது. அது பெர்ஃபார்மன்ஸா என்று கேட்டால், எனக்குள்ளே ஒருத்தன் இருக்கிறான். அவன் ஒரு இயக்குநர். எனக்கு நடிப்பில் அ..ஆ..இ..ஈ.. சொல்லிக் கொடுத்தது, சரியான பாதையில் அழைத்துச் சென்றது செல்வா சார். அதற்கு பிறகு என்னை நானே டெவலப் பண்ண கற்றுக்கொண்டேன். ஹோம்வொர்க்குகளில் என்னை நானே வருத்திக்கிற முறைகள் கொஞ்சம் கெடுபிடிகளாக இருக்கும். படம் திரையில் பார்க்கும்போது தெரிகிற மைனஸ்களை திருத்திக் கொண்டே வருகிறேன். அது பெர்ஃபார்மன்ஸ் என்றால் எனக்கு அமைந்த இயக்குநர்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்று வெற்றிப் பெற்ற பிறகும் கூட பேட்டிகளில் மனம்விட்டு பேசினார்.

’’எனக்கு ஒன்று வொர்க் அவுட்டானால் அதை செய்வதற்கு எந்தளவிற்கும் உழைக்க தயாராக இருப்பேன். என் அப்பா, செல்வா அண்ணன், நான் என நாங்கள் எல்லோருமே வாழ்க்கையில் அடிப்பட்டு அடிப்பட்டுதான் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு வார்த்தையை தவறாக விட்டால் கூட அது எந்த எல்லைவரைக்கும் பாதிக்கும் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் நான் அதிகம் பேசுவதில்லை. ஒரு பப்ளிக் ஃபிகராக இருக்கும்போது நம்முடைய வார்த்தையை எல்லோரும் கவனிக்கிறார்கள். அதனால் தவறான ஒரு வார்த்தையைக் கூட சொல்லக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி தானாக வந்துவிட்டது. எல்லோருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும். எல்லாமே வாழ்க்கை கற்றுக் கொடுத்ததுதான்’ என்று அவர் சொல்லும் இந்த வார்த்தைகளில் இருக்கும் பக்குவம் அவரை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து சென்றது.

தனுஷ் ஒரு ஸ்கூல் டிராப் அவுட். காலேஜ் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. வாழ்க்கையில் அவர் கற்றுக் கொண்டவை எல்லாமே அனுபவங்கள் மூலமாகதான். ’என்னுடைய வயதுக்கு நான் அதிகம் பார்த்துவிட்டேன். ருசித்த வெற்றிகளும் சரி, அடைந்த தோல்விகளும் சரி எல்லாமே அனுபவங்களாக அமைந்தன. என்னை சந்தோஷப்படுத்தியவர்கள், என்னை காயப்படுத்தியவர்கள் எல்லோருமே எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாமே எனக்கு பாடங்கள்தான். என்னைப் பொறுத்தவரை நான் நம்புவது ஒரே பழமொழிதான். அது ‘ நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’. ஒரு முறை நான் பட்டால் அதை திரும்ப செய்யவே மாட்டேன்’ என்கிற தனுஷ் உண்மையில் ஒரு கடும் உழைப்பிற்கான ஒரு அடையாளம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...