No menu items!

திமுக வளையத்துக்குள் கமல்ஹாசன்! – மிஸ் ரகசியா

திமுக வளையத்துக்குள் கமல்ஹாசன்! – மிஸ் ரகசியா

”தீபாவளிக்கு ஜெயில்லதான்னு சொன்னாங்க. இப்ப தீபாவளியை சுதந்திரமா கொண்டாடப் போறாரே..பிஜேபி ஹேப்பியா?” உள்ளே நுழைந்த ரகசியாவிடம் கேட்டோம்.

“அமர்பிரசாத் ரெட்டி ஜாமீனை சொல்றீங்களா? ஆனா அந்த ஜாமீன் அத்தனை சுலபமா கிடைக்கல. ரொம்ப போராடிதான் வாங்கியிருக்கிறார். அது மட்டுமில்லாம நீதிபதி சொன்ன கருத்தை கவனிச்சிங்களா?”

“என்ன?”

“55 அடில கொடிக் கம்பம் நட்டா அதை யார் பார்க்க முடியும்? காக்கா உக்காரதான் பயன்படும்னு சொல்லியிருக்கிறார். அது மட்டுமில்லாம அரசுக்கு சொந்தமான இடங்கள்ல கொடிக் கம்பம் நடக்கூடாதுனும் சொல்லியிருக்கார். அத்தோட நிக்கல டெய்லி காலைலயும் சாயங்காலமும் கானத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வந்து கையெழுத்து போடணும். இதெல்லாம் பாஜகவினருக்கு அத்தனை ஹேப்பி இல்லை”

“தீபாவளிக்கு வெளில வந்துருவார்ல…அதுல ஏதாவது டவுட் இருக்கா. அவர் மேல நிறைய வழக்கு இருக்கே”

“இன்னைக்கு வெள்ளிக் கிழமை. தீபாவளி ஞாயிற்றுக் கிழமை. அதுக்குள்ள கோர்ட் ஆர்டர் கிடைச்சு வெளில வருவார்ன்றது டவுட்தான் என்கிறார்கள். தீபாவளியை குடும்பத்தோடு கொண்டாடுனா மகிழ்ச்சிதான்”

”அமர் மாதிரியே ஓபிஎஸ்க்கும் இந்த தீபாவளி சோக தீபாவளி ஆகிருச்சு போல”

“ஆமாம். அதிமுக கொடியை அவர் பயன்படுத்தக் கூடாதுனு உத்தரவு வந்ததுமே நொந்து போய்ட்டாராம். அப்போ அவர் சிங்கப்பூர்ல இருந்திருக்கார். கோர்ட் உத்தரவு வந்த பிறகு ஒண்ணும் செய்ய முடியாதுன்றதுனால சிங்கப்பூர்ல இருந்து திரும்புனதும் ஏர்போர்ட்லயே கார்லருந்து அதிமுக கொடியை கழற்றிட்டார். அதிமுக கரை வேட்டியையும் மாத்திட்டார்”

“கஷ்டம்தான், அடுத்து என்ன செய்யப் போறார்?”

”வழக்கமா செய்யறதுதான். மேல் முறையீடு செஞ்சிருக்காங்க. அந்த வழக்கு தள்ளிப் போகுது. இப்ப ஓபிஎஸ்க்கு இருக்கிற பிரச்சினை, தன்னோடு இருக்கிற கொஞ்சம் ஆதரவாளர்களையும் எடப்பாடி பக்கம் போகாம காப்பாத்துறதுதான்”

“அவருக்கு ஆதரவாளர்கள் இன்னும் இருக்காங்களா?”

“தர்மயுத்தம் பண்ணவரை கிண்டல் பண்ணாதிங்க. சரி, எ.வ.வேலு வீட்டு சோதனை பத்தி நீங்க ஒண்ணுமே கேக்கலையே?”

“அது வழக்கமா நடக்கிறதுதானே…ஏதாவது புதுசா இருக்கா?”

“அந்த ரெய்டுக்கு அகில இந்திய கூட்டணித் தலைவர்கள் யாருமே கண்டனம் தெரிவிக்கலனு திமுக தலைவருக்கு வருத்தம் இருக்கிறதா அறிவாலயத்துல பேச்சு இருக்கு. ஏன் யாருமே கண்டனம் தெரிவிக்கலனு விசாரிங்கனு டி.ஆர்.பாலுகிட்ட சொன்னதாகவும் தகவல் இருக்கு”

“அவங்களுக்கே ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கு. மமதா பானர்ஜி கட்சி எம்.பி. தலைக்கு மேல கத்தி தொங்குது, அர்விந்த் கெஜ்ரிவால் உள்ள போவாரானு இருக்கு..இப்படி ஒவ்வொரு பக்கமும் சிக்கல் இருக்கும்போது அவங்க எ.வ.வேலுவ எப்படி கவனிக்கப் போறாங்க”

“கரெக்ட்தான். திமுகவுக்கு உள்ளூர் கூட்டணிக் கட்சிகள் மேலயும் கொஞ்சம் அதிருப்தி”

“ஏன்? என்னாச்சு?”

”சமீபத்துல முதல்வர் ஸ்டாலினை வைகோவும், திருமாவளவனும் சந்திச்சு பேசியிருக்காங்க. அப்ப ஒரு விஷயத்தை அவங்க தெளிவுபடுத்தி இருக்காங்க. ’எங்க கட்சிக்கு தேர்தல் ஆணையத்தோட அங்கீகாரம் தேவைப்படுது. அதனால இந்த முறை நாங்க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். எங்களுக்கு விருப்பமான சின்னத்தில் போட்டியிடறோம். இந்த விஷயத்துல இதுக்கு மேல எங்களை வற்புறுத்தாதீங்க’ன்னு அவங்க சொல்லி இருக்காங்க. அதுலயும் குறிப்பா வைகோ, ‘என் மகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பல’ன்னு சொல்லி இருக்கார். அதேபோல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடறதுன்னா நான் போட்டியிடவே விரும்பவிலைன்னு ரவிக்குமார் சொல்லிட்டதா திருமாவளவன் முதல்வர்கிட்ட சொல்லியிருக்கார்.”

“முதல்வர் என்ன சொன்னாராம்?”

“தேர்தல் நேரத்துல பாத்துக்கலாம்னு சொல்லியிருக்கிறார். ஆனா, கூட்டணி தலைவர்கள் சின்னம் விஷயத்துல பிடிவாதமா இருந்திருக்காங்க. இதுல முதல்வர் கொஞ்சம் அப்செட்”

”திமுக வழக்கறிஞர் பிரிவு மேலயும் அவர் வருத்தமா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

“உங்களுக்கு பாம்பு காது. திமுக வழக்கறிஞர் அணிக்கு சட்ட நுணுக்கங்கள் தெரிஞ்ச விவரமான அணின்னு ஒரு பேர் இருக்கு. டான்சி ஊழல் வழக்கு, ஜெயலலிதாவை தகுதி நீக்கம் செய்து சிறைக்கு அனுப்பிய வழக்கெல்லாம் திமுக வழக்கறிஞர் அணி ஏற்பாடு செஞ்சதுதான். ஆனால் பொன்முடி வழக்குலயும், செந்தில்பாலாஜி வழக்குலயும் அவங்களால எதையும் சாதிக்க முடியல. செந்தில்பாலாஜியை இன்னும் ஜாமீன்ல எடுக்க முடியலை. ‘உதயநிதி ஸ்டாலின் மீதான சனாதன தர்ம வழக்கை எதிர் கொள்ள முடியாம நாம் சட்டரீதியா தோத்துட்டு இருக்கோமோ’ங்கிற சந்தேகம் முதல்வர் ஸ்டாலினுக்கு வரத் தொடங்கி இருக்கு. அதனால வழக்கறிஞர் அணி மேல அவர் வருத்தத்துல இருக்காராம்.”

“கமல்ஹாசன் பிறந்தநாள்ல அவருக்காக தமிழக அமைச்சர்கள் காத்திருந்திருக்காங்களே?”

“ஆமாம். அமைச்சர்களுக்கு கொஞ்சம் டென்ஷன் தான். ஆனா சின்னவர் உத்தரவு. சத்தம் போடாம இருந்துருக்காங்க”

“என்ன நடந்தது?”

“இந்த முறை கமல்ஹாசன் தனது பிறந்த நாளை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார். அந்த மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை அன்பளிப்பா தந்தார். இந்த நிகழ்ச்சிக்காக கமல் வர்றதுக்கு முன்பே அமைச்சர்கள் சேகர்பாபுவும், மா.சுப்பிரமணியமும் வந்து காத்திருந்தாங்க. இதெல்லாம் உதயநிதி ஸ்டாலினோட ஏற்பாடுதான்னு சொல்றாங்க. கமல் திமுக கூட்டணியில நின்னா தேர்தல் செலவைக்கூட திமுக பார்த்துக்கும்னு உதயநிதி ஸ்டாலின் உறுதியளிச்சு இருக்காராம். அந்த நம்பிக்கையிலதான் பிறந்த நாள் விழா கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மையத்தின் குரல் ஒலிக்க வேண்டும்னு கமல் சொல்லி இருக்கார். திமுக வளையத்துக்குள் கமல்ஹாசன் வந்துவிட்டார் என்று மநீம நிர்வாகிகள் சொல்றாங்க”

“திரையுலகம் சார்பா கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடறாங்களே… விஜய் அஜித்தெல்லாம் வருவாங்களா?”

“ரஜினி, கமல்னு மூத்த நட்சத்திரங்கள் வந்தாலும் விஜய், அஜித்தெல்லாம் இந்த கூட்டத்துக்கு வருவார்களாங்கிறது சந்தேகமா இருக்கு. விழா ஏற்பாட்டாளர்கள்கிட்ட இதுபத்தி பேசின உதயநிதி ஸ்டாலின், “எங்க தாத்தா ஏற்கெனவே நிறைய புகழ் சேர்த்து வச்சிருக்கார். யாரையும் வற்புறுத்தி எங்கள் தாத்தாவோட புகழை பாடச் சொல்ல வேண்டாம்’னு சொல்லி இருக்காராம். அதாவது விஜய், அஜித்தை கூப்பிட வேண்டாம்னு இதன் மூலமா அவர் மறைமுகமா சொல்லி இருக்கார்.”

”கமல், ரஜினி ஆதரவு இருந்தா போதும்னு நினைகிறாரா சின்னவர்?”

“சினிமா கவர்ச்சிலாம் முன்ன மாதிரி இல்ல. விஜய் அரசியலுக்கு வந்தாகூட எடுபடாதுனு தன்னோட நெருங்கிய வட்டாரத்துல பேசினார்னும் அறிவாலயத்துல தகவல் இருக்கு”

“சரி, இந்த தீபாவளிக்கு என்ன ப்ரோக்ரம்?”

”கண்டிப்பா ஜப்பான் போகல. இங்கதான்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...