இலங்கையை மீண்டும் போராட்ட மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளையும் மீறி கொழும்பு வீதிகளில் போராட்டக்காரர்கள் குவிந்து வருகிறார்கள். ‘கோ ஹோம் கோட்டா’ போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டம் வெடிக்குமா? இலங்கையில் இருக்கும் தமிழ் கவிஞர் தீபச்செல்வனுடன் பேசினோம்.
“ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான வழிகாட்டுதல்கள், நடவடிக்கைகள் மற்றும் ஊழல்களால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியான போது மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள். அதனால், ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு ரணில் விக்கிரமசிங்கே பொறுப்புக்கு வந்தார். ஆனால், ராஜபக்சேகளுக்கும் ரணிலுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்பதுதான் தமிழர்கள் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடம். ராஜபக்சேகள் முரடர்களாகவும் ரணில் மென்மையானவராகவும் வெளியில் தெரிவார்கள். இந்த தோற்ற வேறுபாடு கடந்து இருவருமே கடுமையான போக்கு கொண்டவர்கள்தான். இதனால்தான், போராட்ட காலத்தில் தேர்தலை புறக்கணிக்கும்படி புலிகள் வலியுறுத்தினார்கள். அதனை இப்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பொருட்களின் விலைகள் குறைவடைந்து, நாடு வழமைக்கு திரும்புகின்றது என்பது போல் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அப்படியொன்றும் பொருட்கள் விலை குறைந்துவிடவில்லை. 100 ரூபாய் விலை ஏற்றிவிட்டு 10 ரூபாய் குறைப்பதை விலை குறைப்பு என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும். உதாரணமாக, முன்பு அரிசி கிலோ 80 – 90 ரூபாய்க்கு விற்பனையானது 300 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது; இப்போது 250 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இப்படி கடந்த சில மாதங்களில் ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் பல மடங்கு அதிகரித்து கொஞ்சம் கொஞ்சம் குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் இன்றும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
பெரும் பணக்காரர்களால் மட்டும்தான் சமாளிக்க முடியும் என்னும் நிலையே இப்போதும் தொடர்கிறது. இன்றும் மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையில் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் கூட பல குடும்பங்கள் இருக்கின்றன.
போர் காலங்களில் தமிழர்கள் இதனைவிட மோசமான நிலையை கடந்து வந்துள்ளார்கள். எனவே, தமிழர்கள் பகுதிகளில் பொருளாதார நெருக்கடி காரணமான போராட்டங்கள் இல்லை. ஆனால், உணவின்றி பசியில் வாடுவது தமிழர்கள் பகுதிகளிலும் உள்ளது. இதனால், நாட்டைவிட்டு மக்கள் வெளியேறுவது தொடர்ந்துதான் வருகிறது. இன்றுகூட இலங்கை மன்னாரில் இருந்து மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 தமிழர்கள் படகு மூலம் தமிழ்நாடு தனுஷ்கோடி போய் இறங்கியுள்ளனர்.
கொழும்பில் முதலில் மக்கள் போராட்டத்தை என்ன காரணங்களுக்காக தொடங்கினார்களோ அந்த காரணங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. எனவேதான், போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. ஆனால், ராஜபக்சேகளைவிட மோசமாக, கடுமையான நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார், ரணில். மென்மையானவர் என அறியப்பட்ட ரணிலின் இந்த ஒடுக்குமுறை சிங்களவர்களுக்கு புதிது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கி போராடும் மக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனால், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை கைவிட வேண்டும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், புனர்வாழ்வு சட்ட மூலத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி கொழும்பில் நவம்பர் 2ஆம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இலங்கைப் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிடப்பட்ட இடத்திற்கு செல்வதைத் தடுத்தனர்.