திமுக துணைப் பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். செந்தில்குமாரின் மனைவியும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளுமான மெர்சி செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக பதிவு செய்த கருத்துகள் திமுக கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெர்சி செந்தில்குமார், “உதயநிதி ஸ்டாலின் குறித்து எந்த கருத்துகள் தெரிவித்தாலும் புன்னகையோடு கடந்து செல்வார். எந்தவித பந்தா இல்லாத மிக எளிமையான மனிதர். கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும். நீங்கள் தமிழ்நாட்டின் அமைச்சராக வரும் காலத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்பது ஒவ்வொரு திமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை திமுக கட்சியினர் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மாநிலங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவை வழங்க வேண்டும்: பிடிஆர் வலியுறுத்தல்
டெல்லியில் இன்று மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய பிடிஆர், ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கான ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகையான 11ஆயிரத்து 185 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளியை களைய வேண்டும். சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பஙகளிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 2023-2024 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு உரிய ரெயில்வே திட்டங்களை வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.
பிறழ்சாட்சியான சுவாதி: 30ஆம் தேதி மீண்டும் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், “தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார். இதனால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர் முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது. சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், “23.6.2015 அன்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா? அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா?” என கேட்டனர். ஆனால், சுவாதி அன்று பார்க்கவில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கோவிலில் பதிவான வீடியோவை காண்பித்து அதில் உள்ள பெண், பின்னால் வரும் ஆண் யாரென கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சுவாதி தெரிவித்தார். பின்னால் வருவது கோகுல்ராஜ் போல் உள்ளது என பதில் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள் சுவாதியை பார்த்து கூறுகையில், “மாஜிஸ்திரேட்டிடம் கூறிய வாக்குமூலத்திலும், தற்போது கூறிய வாக்குமூலத்திலும் வேறுபாடுகள் உள்ளது. வீடியோவில் உங்களை பார்த்து நீங்கள் தெரியவில்லை என கூறுகிறீர்கள். ஜாதியை விட சத்தியம் முக்கியம். நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும். சத்தியம் என்றைக்கானாலும் சுடும்” என கோபத்துடன் நீதிபதிகள் கூறினர். இதனை கேட்டவுடன் சுவாதி கண்ணீர் விட்டு கதறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சுவாதி கர்ப்பமாக இருப்பதால் பரிசோதனைக்காக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சுவாதி வரும் 30-ம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பெயரால் மோசடி: சைபர் க்ரைம் எச்சரிக்கை
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடந்து வருகிறது. இப்போட்டிகளுக்கு ரசிகர்களிடம் உள்ள வரவேற்பைப் பயன்படுத்தி, வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன. இந்த பதிவில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்க்க, 50 ஜிபி செல்போன் டேட்டா இலவசமாக வழங்கப்படுவதாகவும், குறிப்பிட்ட இணைப்பில் நுழைந்தால் இந்த சலுகை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை உண்மை என நம்பி, அந்த இணைய இணைப்பிற்குள் சென்றவர்கள், செல்போன் டேட்டா கிடைக்காமல் ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார், “உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, இலவச செல்போன் டேட்டா தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது. இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் நுழைந்தால், உங்கள் செல்போன் போன் முடக்கப்படவும், அதில் உள்ள தகவல்கள் திருடப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த மோசடியான பதிவுகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக புகார்களை, 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.