No menu items!

EB Adhar இணைப்பு – சிக்கல் எப்போது தீரும்?

EB Adhar இணைப்பு – சிக்கல் எப்போது தீரும்?

தமிழ்நாடு முழுவதும் வீடுகள் மற்றும் விவசாயத்துக்கான மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்போது திடிரென்று ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களை மிகுந்த அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டோம்.

தற்போது பெரும் பகுதி வாடிக்கையாளர்கள் மின்சார கட்டணத்தை மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம்தான் செலுத்தி வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் மின்சார அலுவலகங்களில் நேரடியாக கட்டி வருகின்றனர். ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களும் சரி, நேரடியாக கட்டுபவர்களும் சரி ஆதார் எண்ணை இணைத்திருந்தால்தான் பணம் கட்ட முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை இணைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நேரடியாக மின் கட்டணம் செலுத்துவோர் தங்கள் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இப்படி இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்தி வந்தவர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்கள்.

(Read: ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? ஒரே ஆதார் எண்ணை பல மின் இணைப்புடன் சேர்ப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?)

மின்வாரிய இணையதளத்தில் ஆதார் எண்ணையும் மின் நுகர்வோர் எண்ணையும் இணைப்பதற்கு வழி செய்யப்பட்டிருந்தாலும் அதில் பல சிக்கல்கள் நீடிக்கின்றன. கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முயற்சிப்பவர்களுக்கும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தியுள்ளது. எனவே, கெடுதேதி முடிவடைந்தும் பலர் மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த சிலருக்கும்கூட மின் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, ஆதார் எண்ணை இணைத்த சிலருக்கு மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்பதாகவும், இன்னும் சிலருக்கு தங்களது ஆதார் பதிவு ஏற்கப்படவில்லை, மீண்டும் முயற்சிக்கவும் என பதில் வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சிக்கல் குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதாரை இணைக்கும் போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இணையதளம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஆதார் எண்ணை அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்பே இணைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம்” என்று தெரிவித்தனர்.

இதனால், ‘மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க உரிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்; ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணமே செலுத்த முடியும் என்ற கெடுபிடியை தளர்த்த வேண்டும்’ என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மின்சார வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கையால் எழுந்துள்ள சிக்கல்களுக்கு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “லட்சக்கணக்கான மக்கள் மின்சார கட்டணம் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதோடு, மின்சாரம் கட்டணம் செலுத்தாதவர்கள் மின் இணைப்பை துண்டிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. உரிய தேதியில் பணம் கட்ட முடியாததால் பின்னர் அபராத கட்டணம் சேர்த்து கட்ட வேண்டிய நெருக்கடிக்கும் மக்கள் உள்ளாகியுள்ளார்கள். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பரிதவிக்கும் மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம், “ஆதாரை இணைக்காமல் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலை வந்துவிட்டதால் சில மாவட்டங்களில் மின்வாரிய அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கும் இந்த நடவடிக்கையானது பணிச்சுமையை அதிகரித்துள்ளது. அரசாங்கம் புதியதொரு நிர்வாக சீர்திருத்தம் கொண்டுவரும்போது, மக்களுக்கு அலைச்சல் இல்லாத வகையில் பொறுமையாக அதனைச் செயல்படுத்த வேண்டும். இல்லையேல், இத்திட்டத்தின் மீது எரிச்சலும் எதிர்மறை உணர்வும்தான் உருவாகும். அது அரசின் நோக்கத்தையே சிதைத்துவிடும். பொதுமக்களுக்கு 3 மாத கால அவகாசம் கொடுத்து ஆதாரை இணைக்க எளிய வழிமுறைகளை மின்சார வாரியம் செய்துதரவேண்டும். ஆதாரை இணைப்பதில் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக மின்கட்டணம் செலுத்தத் தாமதமாகும் பட்சத்தில் அதற்கு அபராதம் விதிக்கப்படாது என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடவேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மின்வாரிய சீர்திருத்தத்துக்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக்கூடாது. ஆதார் இணைப்புக்கான ஆன்-லைன் வழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்புதான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல” என்று கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுவான வசதிகளுக்குரிய மின் இணைப்புடன் யார் ஆதார் எண்ணை இணைப்பது என்ற சிக்கல் காரணமாக அந்த மின் கட்டணத்தை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுவான சேவை இணைப்புகள் 1டி பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘ஆதார் இணைப்பு என்பது வீடுகள் மற்றும் விவசாய இணைப்புகளுக்கு மட்டுமே; 1டி வகை கட்டணத்தின் கீழ் வரும் வணிக அல்லது பொதுவான சேவை இணைப்புகளுக்கு அல்ல” என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆனாலும், மின் இணைப்புடன் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும் என்ற செய்தி கட்டண சாளரத்தில் ஒளிர்வதால் ஆன்லைனில் பில்களை செலுத்த முடியவில்லை என அடுக்குமாடி குடியிருப்போர் சங்க தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த சிக்கலுக்கு ஓரிரு நாளில் தீர்வு காணப்படும். பில் செலுத்துவதற்கான காலக்கெடுவை இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு பொது சேவைக்கான மின் இணைப்பை பொறுத்தவரைக்கும் குடியிருப்போர் சங்க தலைவர்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம்” என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...