ட்விட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் ஊடக தளத்தை $44 பில்லியனுக்கு வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார். அதன் சின்னமான நீல பறவை சின்னத்திலிருந்து “X” ஆக மாறும் என்று எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகுதியில் மாற்றம் ஏற்படும் என்று மஸ்க் கூறினார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி “X” என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
“இது விதிவிலக்காக அரிதான விஷயம் – வாழ்க்கையிலோ அல்லது வியாபாரத்திலோ – மற்றொரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும்,” என்று அவர் ட்வீட் செய்தார். “ட்விட்டர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் நாங்கள் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றியது. இப்போது, எக்ஸ் மேலும் சென்று உலகளாவிய வர்த்தகத்தை மாற்றும்” என்று கூறியுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் – நாடாளுமன்றம் 3-வது நாளாக முடக்கம்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 3-வது நாளாக இன்று நாடாளுமன்றம் முடங்கியது.
மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 3-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை, மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலங்களவை அலுவல் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் : இலங்கை அணி 166 ரன்களில் ஆல்அவுட்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 166 ரன்களில் ஆல்அவுட் ஆகியுள்ளது.
பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸில் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த்து. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளும்,நசீம் ஷா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஓப்பன்ஹெய்மர் – சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் பாலுறவுக் காட்சிகளின்போது பகவத் கீதை வரி இடம்பெற்றது சர்ச்சையான நிலையில், அக்காட்சிகளை நீக்க சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவுறுத்தியுள்ளார்.
‘அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்று வரும் பகவத் கீதை வரி இப்படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது. படத்தின் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் இந்த வரிகள் இடம்பெறுகின்றன.
இதற்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் வெட்டப்பட்டு இந்தியாவில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மேற்சொன்ன காட்சியை கத்தரிக்காமல் விட்டது ஏன் என்று சென்சார் வாரியத்துக்கு பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.