நடிகர்கள் அரசியலுக்கு வரும் ட்ரெண்டுக்கு வித்திட்டவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என்று பலரது அன்புக்கு உரியவரான அவர், எம்எல்சி பதவி பெற்ற முதல் நடிகர். பல நாடகக் கலைஞர்களை திராவிட இயக்கத்துக்கு அறிமுகம் செய்தவர் இவர்.
அக்காலத்தில் பி.யு.சின்னப்பா இல்லாத சமயங்களில் அவரது வேடத்தில் நடிக்க கே.ஆர்.ராமசாமியைத்தான் தேர்வு செய்வார்கள். ஆரம்பத்தில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருந்த அவர், பின்பு டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகக் குழுவிற்கு சென்றார். அதன் பிறகுதான் அவரது எதிர்காலம் பிரகாசிக்கத் தொடங்கியது. பின்னர் சண்முகானந்தா நாடக குழுவில் ஆரம்ப காலத்தில் பெண் வேடங்களில் நடித்து வந்தார். பிறகு கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
மனோகரா நாடகத்தில் கே.ஆர்.ராமசாமியின் நடிப்பை காண்பதற்காகவே கலைவாணர் அடிக்கடி வருவார். சங்கிலியால் கட்டப்பட்டு சபை நடுவே மனோகரனாக வந்து சங்கிலிகளை அறுத்துக் கொண்டு சிம்ம கர்ச்சனை புரிந்து அவர் நடிக்கும்போது கலைவாணர் மெய்மறந்து கைதட்டி ரசிப்பார்.
கலைவாணர் என்.எஸ்.கேவின் நாடக சபாவில் அவர் நடித்துக்கொண்டு இருந்தபோது, அங்கு பெண் வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்தான் சிவாஜி. சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் என் எஸ் கே நாடக சபை சபா நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தபோதுதான் கலைவாணர் சிறை செல்ல நேர்ந்தது கலைவாணர் கைதான பின்பு கே.ஆர்.ஆர், சிவாஜி மற்றும் பலர் பிரிந்து சென்று தனியாக கிருஷ்ண கான சபாவைத் தொடங்கினார்கள்.
கலைவாணர் பெயரில் உள்ள நாடக கம்பெனி நலிவடைவதையோ அதிலிருந்து கே.ஆர்.ஆர் விலகுவதையோ விரும்பாத அறிஞர் அண்ணா, கலைவாணர் விடுதலையாகி வரும் வரை நாடக கம்பெனி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்பினார். மதுரம் அம்மையார் தனது கணவர் பெயரில் உள்ள நாடக கம்பெனியை ராமசாமிக்கு விற்று விட முடிவெடுத்தார். ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து நாடக கம்பெனி வாங்கும் வசதி இல்லை என்று தன்னுடைய இயலாமையை அண்ணாவிடம் தெரிவித்தார் கே.ஆர்.ஆர். அண்ணாவின் ஆலோசனையை பெற்று தந்தை பெரியார் அந்த நாடகக் கம்பெனியை விலைக்கு வாங்கிக் கொடுக்க முன்வந்தார்.
அதற்காக 45 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார் பெரியார். சிக்கனமானவர். பணத்தை சரியான காரியங்களுக்கு மட்டும் செலவு செய்பவர் என்று பெயர்பெற்ற பெரியார், ராமசாமிக்கு உதவ வந்தார். பெரியார் கலையை வெறுத்ததில்லை அந்தக் கலை தமிழனின் நிலையை உயர்த்த பயன்பட வேண்டும் என்று நினைத்தார். அதனால் தான் கலைவாணர், கேஆர்ஆர் மீது அவர் அன்பை பொழிந்தார்.
குமாஸ்தாவின் பெண் நாடகத்தைப் பார்த்துவிட்டு அண்ணா விடுதலை இதழில் பாராட்டி எழுதியதோடு தந்தை பெரியாரையும் அந்த நாடகத்திற்கு அழைத்து வந்து பார்க்க வைத்தார். நாடகத்தின் மூலம் சீர்திருத்த கருத்துக்களை பரப்பிய டி.கே.எஸ் சகோதரர்களையும் கே.ஆர்.ராமசாமியையும் பாராட்டி வாரந்தோறும் அழைத்து தன் வீட்டில் விருந்து கொடுத்தார் தந்தை பெரியார்.
நாடகங்கள் மூலம் பெரும் புரட்சி செய்தவர் பேரறிஞர் அண்ணா. 1945-ம் ஆண்டு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி சொந்தமாக கலைவாணர் பெயரில் நாடகக் கம்பெனி துவக்கியபோது. அண்ணா அவருக்கு எழுதி கொடுத்த நாடகங்கள்தான் வேலைக்காரியும், ஓர் இரவும்.
.
பின்னர் வேலைக்காரியும், ஓர் இரவும் திரைப்படங்களாக உருவான போது கே.ஆர்.ராமசாமி அவற்றில் நடித்தார். அதேபோல அண்ணா எழுதிய சொர்க்கவாசல் படத்திலும் அவர் நடித்தார். ‘பராசக்தி’ படத்தில் முதலில் கே.ஆர்.ராமசாமிதான் நடிப்பதாக இருந்த்து.
“நான் எத்தனையோ நாடகங்கள் நடத்தினாலும் அறிஞர் அண்ணாவின் கருத்தோவியமான வேலைக்காரியை முதன்முதலாக அரங்கேற்ற கிடைத்த வாய்ப்பும், அதன் மூலம் பெற்ற புகழும், அண்ணாவுடன் ஏற்பட்ட தொடர்பும், இயக்கப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதும் வாழ்நாளில் நான் என்றும் மறக்க முடியாதவை ஆகும்” என்று கே.ஆர்.ஆர் குறிப்பிட்டுள்ளார்.