No menu items!

வீரப்பனை கொன்ற தினம் – என்ன நடந்தது?

வீரப்பனை கொன்ற தினம் – என்ன நடந்தது?

வீரப்பன் மரணம் எப்படி நிகழ்ந்தது? என்கவுண்டரில் என்று போலீஸ் சொல்கிறது; ‘இல்லை, மோரில் விஷம் கலந்துகொடுத்துதான் வீரப்பன் கொல்லப்பட்டார்’ என்று இன்னொரு தரப்பு சொல்கிறது. எது உண்மை? வீரப்பன் என்கவுண்டரில் முக்கிய பங்காற்றியதாக சொல்லப்படும் அணியின் தலைவரும் பணி நிறைவு பெற்ற எஸ்.பி.யுமான எஃப்.எம். ஹுசைன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.

பல வருடங்களாக நீடித்த வீரப்பன் தேடுதல் வேட்டையை முடிவுக்கு கொண்டு வந்த க்ளைமாக்ஸ் என்கவுண்டரில் நீங்கள்தான் முக்கிய பங்காற்றியிருக்கிறீர்கள் என்று கூறப்படுகிறது. நீங்கள்தான் வீரப்பனை சுட்டீர்கள் என்று காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அன்று என்ன நடந்தது?

மிஸ்டர் விஜயகுமார் ஐபிஎஸ் தான் அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். அந்த ஆபரேசன் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னாடி, ஒரு டீமை தயார் செய்யுங்கள் என்று சொன்னார். ஏற்கெனவே இருந்தவர்கள் திறமையானவர்கள் தான். அதிலும் தேர்ந்தெடுத்த ஒரு அணியை தயார் செய்து பயிற்சி கொடுத்தேன். இந்நிலையில் ஒரு நாள் காலையில், ‘உடனே கிளம்பி பாப்பாரப்பட்டி வாருங்கள், சிவில் டிரஸ்ஸில் வாருங்கள்’ என்று மெசேஜ் வருகிறது. டிசர்ட், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு, ஒரு திறந்த லாரியில், என் டீமுடன் கன் மேனையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

வழியில் டிராபிக் ஜாம் காரணமா கொஞ்சம் லேட் ஆகிடிச்சி. போன உடனே பொசிசன் எடுத்துங்க என்றார். ஏற்கெனவே திட்டமிட்டபடி கட்டிடம் மேலே இரண்டு டீமை நிற்க வைத்தோம். எதிர்புறம் ஒரு லாரியை நிற்க வைத்திருந்தார்கள். அதில் சப் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் ஒரு டீம். நானும் என் கன் மேனும் வண்டிக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டோம்.

கொஞ்சம் தள்ளி சாலையோரம் கரும்பு லோடுடன் இன்னொரு  லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஸ்வீட் பாக்ஸ் என்று அதற்கு பெயர் வைத்திருந்தார்கள். அதில் இண்டலிஜென்ஸ் டீம் இருந்தது.

வீரப்பன் வரும் வண்டியில் டிரைவரும் வெள்ளத்துரையும் வருகிறார்கள். அவர்கள் துப்பாக்கி சூட்டில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதால் வண்டிக்கு எதிர்புறம் ஒரு ரிப்ளெக்டர் வைக்கச் சொன்னோம்.

திட்டமிட்டபடி எல்லாம் தயாராக இருந்தது. வீரப்பன் வந்த வண்டி வந்தது. வெள்ளத்துரை கிரானைட் போட்டுவிட்டு வெளியே குதித்தார். உடனே அவரை நான் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டு திரும்பினேன்.

செந்தாமரைக்கண்ணன் மைக்கில் வீரப்பனுக்கு எச்சரிக்கை செய்தார். “உன்னை சுற்றி வளைச்சாச்சி. சரண்டர் ஆயிடு” என்று சொன்னார். ஆனால், கொஞ்ச நேரம் வண்டியில் இருந்து எந்த பதிலும் இல்லை. சப் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வீரப்பனை அரஸ்ட் செய்வதற்காக வெளியே வந்தார். அப்போ உள்ளே இருந்து துப்பாக்கி சூடு, உடனே பதிலுக்கு நாங்கள் சுட்டோம். அந்த துப்பாக்கி சூட்டில் என் கன்மேனுக்கு அடிபட்டது.

கொஞ்ச நேரம் ஆனதும் நான் ரோட்டை கிராஸ் செய்து வீரப்பன் இருந்த வண்டியை நெருங்கினேன். அப்போது வண்டி ஆடியது. உள்ளே இருந்தவர்கள் துடித்ததால் வண்டி ஆடியிருக்கலாம். ஆனால், நாங்கள் அவர்கள் மீண்டும் துப்பாக்கி சூட்டுக்கு தயாராகிறார்கள் என்று மீண்டும் சுட்டோம். அதன்பிறகு சைலண்டாகிவிட்டது.

“ஸார், நான் வண்டிக்குள் போய் பார்க்கிறேன்” என்று விஜயகுமாரிடம் சொன்னேன். “ஒகே நான் கவர் பையர் கொடுக்கிறேன். நீங்கள் போங்க” என்றார்.

நான் உள்ளே போய் ஸ்டண்ட் கிரானைடை போட்டுவிட்டு, வண்டியில் எல்லா பக்கமும் பையர் செய்தேன். புகையெல்லாம் குறைந்த பின்னர் பார்த்தேன். வண்டியில் இடதுபக்கம் சேத்துக்குளி கோவிந்தனும் இன்னொருத்தனும், வண்டிக்கு வலதுபக்கம் வீரப்பனும் சந்திரகவுடாவும், டிரைவருக்கு பின்னால் இன்னொருத்தன்.

அப்போது ஸ்வீட் பாக்ஸ் வண்டியில் இருந்து காளிதாஸ் வந்துவிட்டார். சப் இன்ஸ்பெக்டர் சார்லஸூம் வந்தார். முதலில் அவர்கள் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகளை நீக்கினோம்.

அதன்பிறகு வீரப்பன் தலைமுடியை பிடித்து தூக்கி பார்த்தேன். மீசை இல்லாமல் ஆளே மாறிப் போயிருந்தது. வலது பக்கம் ஜன்னலில் இருந்து விஜயகுமார், “என்னாச்சி ஹுசைன்” என்று கேட்டார். “சார் தவறான ஆள் என்று நினைக்கிறேன்” என்று சொன்னேன். “நல்லா பாருங்க” என்றார். அதன்பிறகு முகத்தில் இருந்த மச்சத்தை எல்லாம் பார்த்துதான் வீரப்பன் என்று உறுதி செய்தேன். “வாழ்த்துகள் சார், நாம் முடித்துவிட்டோம்” என்றேன்.

இதுதான் நடந்தது.

ஆனால்,  மோரில் விஷம் கலந்துதான் வீரப்பன் கொல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் தாக்குதல், என்கவுண்டர் என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...