கதாநாயகியாக நடிக்கும் நடிகையை கொஞ்சவும், கண்டபடி கட்டிப்பிடிக்கவும் இன்றைய ஹீரோக்களுக்கு கிடைத்த சுதந்திரம் அன்றைய நடிகர்களுக்கு வாய்க்கவில்லை. நாடக மேதை டி.கே பகவதி சினிமா ஹீரோவானபோது அவருக்கு இந்த பாதிப்பு வந்தது.
இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்பான மேடை நாடகங்களில் நடித்தும், பாடியும், பேசத் தொடங்கிய சினிமாவில் நடித்தும் பிரபலமாக இருந்தவர் ஸ்ரீமதி எம் எஸ் விஜயாள்.
தமிழின் முதல் சமூகப்பட நாயகி இவர்தான். அந்த நாளிலேயே. ‘இனி பக்திப் படங்களில் நடிக்க மாட்டேன். சமூக மாற்றம், தேச விடுதலை சார்ந்த கதை உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்று துணிச்சலாக அறிக்கை விட்ட நடிகை இவர்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நாடக மேடைகள் மூலம் எம்.எஸ்.விஜயாள் புகழ்கொடி நாட்டியிருக்கிறார். ஆங்கிலேயரிடம் தேசம் அடிமைப்பட்டு இருந்த அந்த நாட்களில் நாடக மேடைகளில் தடை செய்யப்பட்டிருந்த தேசபக்தி பாடல்களை துணிவோடு பாடி இருக்கிறார்.
அந்த நாளிலேயே படத்துறையில் ஒரு புதுமைப் புரட்சியை செய்தவர் எம்.எஸ்.விஜயா என்று சொல்ல்லாம். சமூக சீர்திருத்தம், தேச விடுதலை உணர்வு கொண்ட ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் அவர் நடித்துள்ளார். 1937-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம், தீண்டாமை எதிர்ப்பு மற்றும் அரிஜன முன்னேற்றம் பற்றியது.
வடவூராரின் நாவலை நாடகமாக டி.கே.எஸ் சகோதரர்கள் நடத்தி வந்தார்கள். அந்த நாடகத்தை அவர்களே மேனகா என்ற சமூகப் படமாக்க முடிவெடுத்தார்கள். அதன் இயக்குநராக ராஜா சாண்டோ என்று முடிவானது. அதன்படி எம்.எஸ்.விஜயாள், டி.கே பகவதிக்கு ஜோடியாகவும் கே.டி ருக்மணி டி.கே. சண்முகத்திற்கு ஜோடியாகவும் நடித்தனர்.
நாடகத்தில் இல்லாத ஒரு காட்சியை படத்தில் சேர்த்தார் இயக்குநர். அந்த காட்சியில் எம்.எஸ்.விஜயாளை டி.கே.பகவதி அள்ளித் தூக்கிக் கொண்டு போய் படுக்கையறையில் போட வேண்டும். இந்த காட்சி வேண்டாம் என்றார் விஜயாள். பகவதியும், ‘அது வேண்டாம் அந்த சீன் நாடகத்திலும் இல்லை’ என்றார். இயக்குநரோ, ‘5000 ரூபாய் கொடுத்து கொண்டு வந்தவளை தொட்டு தொந்தரவு செய்யாமல் எவனாவது இருப்பானா தொட்டு தூக்குடா” என்று சொல்லிவிட்டார். அந்த காட்சியில் நடிக்க ஆரம்பத்தில் மறுத்த விஜயாள், பின்னற் அரை மனதுடன் நடித்தார்.
அவரை தோளில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் எம் எஸ் விஜயாள் திமிரிக்கொண்டு அவருடைய கையில் இருந்து நழுவ ஆரம்பித்தார். இவர் மார்போடு சேர்த்து கெட்டியாக கட்டிப் பிடித்திருந்ததால் டமால் என்று கீழே விழுந்து விட்டார் விஜயாள். எல்லோரும் சிரித்து விட்டனர்.
‘கட்டிப்புடிடா’ என்று டைரக்டர் சொல்ல மறுபடியும் அந்த காட்சியை எடுக்க வேண்டும் என்றார்கள் ஆனால் வேண்டாம் என்று மறுபடியும் எம்.எஸ். விஜயாள் அடம் பிடிக்கவும் அந்த காட்சி படத்தில். அவரை தூக்கிக் கொண்டு போவது போல் மட்டும் இருக்கும் .
புராணப் படங்களில் நடிக்க மறுத்த அவருக்கே புராணப்படங்கள்தான் மறுபடியும் கிடைத்தன 1939இல் சுகுண சரசா, 1942 ல் பக்த நாரதர் ஆகிய புராணப் படங்களிலேயே விஜயாள் நடிக்க நேர்ந்தது.