No menu items!

தமிழ் சினிமா உலக சினிமா ஆகுமா?

தமிழ் சினிமா உலக சினிமா ஆகுமா?

தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா.

உலக சினிமாவை நோக்கி…

உலக சினிமாவிற்கான முயற்சி.

இப்படியெல்லாம், சில தமிழ்ப்படங்களின் விளம்பரங்களில் குறிப்பிடப்படுவது உண்டு. தினசரிகளில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களில்தான், மக்கள் கொண்டாடும், பத்திரிகைகள் கொண்டாடும் ஒரு உலக சினிமா என்றெல்லாம் வார்த்தைகளில் தெறிக்க விட்டிருப்பார்கள்.

தமிழ் சினிமா, ஹிந்தி சினிமா, இந்திய சினிமா, கொரிய சினிமா, ஈரானிய சினிமா, ஃப்ரெஞ்ச் சினிமா எல்லாம் புரிகிறது. ஆனால் இந்த உலக சினிமா என்றால் என்ன? உலக சினிமாவின் களம் எது? அது யாருக்காக எடுக்கப்படுகிறது? அதன் பார்வையாளர்கள் யார்? என்ற கேள்வி உங்களுக்குள் என்றைக்காவது எழுந்தது உண்டா?

’உலக சினிமா’ என்ற களத்தை, தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமை, ஆளுமை கொண்ட, இலக்கியவாதிகளையே சேரும். அந்நிய மொழிப்படங்களில் வெளியான யதார்த்தமான, உணர்வுகளை அழகாய் பதிவுச் செய்யும் திரைப்படங்களைக் குறித்தும், அதில் இயக்குநர் கையாண்ட கதைக்களம், படமாக்கியவிதம் ஆகியவற்றையும், பல பக்கங்கள் அளவில் அலசப்பட்டு விமர்சிக்கப்படுவது வழக்கம்.  இத்தகைய விமர்சன கட்டுரைகளில் ’உலக சினிமா’ என்ற பொதுவான வார்த்தை பிரயோகம் மட்டும் இருக்கும். விமர்சனத்துக்குள்ளாக்கப்படும் திரைப்படம் எந்த வகையான உலக சினிமா என்பதைப் பற்றிய விவரங்கள் இருப்பதில்லை.

உண்மையில் ‘உலக சினிமா’ என்பது அயல் சினிமா (Foreign film). சினிமாவின் தலைமை நகரகமாக கொண்டாடப்படும் அமெரிக்காவின் ‘ஹாலிவுட்’டை தவிர்த்து, ஆங்கிலம் மொழி பேசாத நாடுகளில் எடுக்கப்படும் அயல்மொழி திரைப்படங்களுக்கே ‘வேர்ல்ட் சினிமா’ என்ற முத்திரைக் குத்தப்பட்டது. மேலும் ஹாலிவுட்டின் வர்த்தகரீதியிலான ஆக்‌ஷன், ஃபேன்டஸி மற்றும் பிரம்மாண்ட பில்டப்களை தாக்கம் எதுவுமில்லாமல் மக்களையும், அவர்களின் வாழ்வியல் சூழலைப் பிரதிபலிக்கும் படங்கள் உலக சினிமாவாகவும் முன்னிறுத்தப்பட்டன. இதனால் நுணுக்கமான கலைவடிவம், ஆடம்பரமில்லாத யதார்த்தம், கதையை விட்டு விலகாத காட்சிமொழி ஆகியன உலக சினிமா எனப்படும் திரைப்படங்களின் முக்கிய குணாதிசயங்களாக முன்வைக்கப்பட்டன என்பதே இதுவரை நடந்திருக்கிறது. திரைப்படக் கோட்பாடு பற்றிய ஆய்வுகளில் ஈடுப்பட்டு வரும் கல்வியாளர்கள் டேனிசன் மற்றும் லிம் ஆகியோரின் ஆய்வுகளும் இதையே குறிப்பிடுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, திரைப்பட கோட்பாடுகளைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுப்பட்டு வரும் கல்வியாளர்கள், உலக சினிமா என்றால் என்பது குறித்து சூடான விவாதங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவையே திரைப்படங்கள் மற்றும் மேற்கத்திய இசையின் ‘பெரியண்ணன்’ ஆக மையப்படுத்தி, இதர நாடுகளின் கலைகளை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை குறித்து விவாதம் செய்து வருகிறார்கள். திரைப்பட கோட்பாட்டாளரான டபாஷி, ஒவ்வொரு நாட்டின் தேசிய சினிமாக்களின் ஒட்டுமொத்தத்தையும் உலக சினிமாவாக கருத்தில் கொள்ளலான் என்கிறார். ஆக உலக சினிமா என்பது, மதிப்பீட்டை உயர்த்தும் ஒரு நகாசு வார்த்தையாகவே இருக்கிறது.

உலக சினிமாவை குறித்து மறைந்த ’இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர் ஒரு நேர்க்காணலில் குறிப்பிடுகையில் ”உலக சினிமா எல்லாமே நல்ல சினிமா இல்லை. நல்ல சினிமாதான் உலக சினிமாவாக இருக்க முடியும். நுணுக்கமாகச் சொல்ல வேண்டியதை நுணுக்கமாகவும் விரிவாகச் சொல்ல வேண்டியதை விரிவாகவும் சொல்வதே நல்ல சினிமாவாக இருக்கமுடியும். சத்யஜித் ரேவும், அடூர் கோபாலகிருஷ்ணனும் எடுத்தவை உலகத்தரமானவை. ஆனால் அது எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடிகிற படமாக இருக்க வாய்ப்பில்லை. உலகத்தரம் வாய்ந்த ஜனரஞ்சக சினிமா என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. யதார்த்த கதைகள் என்பவை கேமரா சொல்லும் கதையாக இருக்க வேண்டுமே தவிர, கம்ப்யூட்டர் சொல்லும் கதையாக இருக்கக் கூடாது. நான் சொல்வதை இன்றைக்கு நிறைய பேர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.. அதுதான் என் கருத்தும்”. என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

’உலக சினிமா’, ’அதன் கட்டமைப்பு’, ’செவ்வியல் தன்மை’, ’ஆகர்ஷிக்க கூடிய கலைவடிவம்’ என சாமானிய ரசிகனுக்கு எட்டாத இலக்கியத் தரமிக்க வார்த்தைகளால் தங்களது வலைப்பக்கத்தில் பக்கமாக பக்கமாக எழுதித் தள்ளும் இலக்கியவாதிகளில் பலருக்கு, வெகுஜன திரைப்படங்களுக்கு கதையோ அல்லது வசனமோ எழுதுவதில்தான் மோகம் அதிகமிருக்கிறது. வர்த்தகரீதியிலான கமர்ஷியல் படங்களை வரிந்துக்கட்டிக் கொண்டு கிழித்தெடுக்கும் இவர்கள் அப்படியே சந்தடிசாக்கில் வசனமோ கதையோ எழுதியப் படங்கள் அனைத்தும் செவ்வியல் படங்கள் அல்லவே. எப்படியாவது வெகுஜன திரைப்பட சந்தைக்குள் நுழைந்துவிட வேண்டுமென்பதற்காகவே, இவர்கள் முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களைப்பற்றி குறிப்பிடும்போது ‘உலக சினிமா’ என்ற பொதுவாக மட்டுமே குறிப்பிடுகிறார்கள். சிற்றிதழ்களில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அப்படமானது உலகின் மற்ற நாடுகளுக்கு, ஒரு தேசிய சினிமாவாக எந்த வகையிலான கருத்தை, படைப்பை முன்வைக்கிறது என்பதைப் பற்றி  குறிப்பிடுவதில்லை. ஆக இந்த உலக சினிமா என்னும் மாயை நமக்கு தேவையில்லை.  உருப்படியான படங்களைக் படைப்பாளிகள் கொடுத்தாலே போதும்.

உண்மையில் ஒரு இயக்குநர், சமூக சார்ந்த பிரச்னைகளையோ, அரசியல் சார்ந்த விஷயங்களையோ, மக்களின் வாழ்வியல் நடைமுறைகளையோ கருவாக கொண்டு எடுக்கும் திரைப்படமானது, வர்த்தகரீதியில் இருந்தாலும் உலகெங்கும்  இருக்கும் மக்களுக்கு நம்மைப்பற்றிய அடையாளத்தைத் தருவதாக இருக்குமானால், அதுவும் நல்ல சினிமாதான். ஆடல்பாடல், சண்டைக்காட்சிகள் நம் வாழ்வுடன் இணைந்தே இருப்பது. பிறப்பது முதல் இறப்பது வரை இசையையும், கதைக் கேட்பதையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் வாழ்வின் அங்கமாக கொண்டிருப்பதால், அவை நம்மைக் குறிக்கும் ஒரு குறியீடாகவே எடுத்து கொள்ளலாம். ஆனால் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளில் கம்ப்யூட்டர்களின் கைவண்ணத்தில் கொஞ்சம் அதிகம் கற்பனையைக் கொட்டுவதுதான் நம்மை மற்றவர்கள் மத்தியில் நகைப்புக்கு உள்ளாக்குகிறது என்பதே உண்மை.

இறுதியாக, உலக சினிமா குறித்த நம் படைப்பாளிகளில் சிலரைப்பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், இதோ ஒரு ஃப்ளாஷ்பேக். முன்பு ஒரு சூழ்நிலையில், கலைப் படைப்பாளியாகவும், நெறியாழ்கையாளராகவும் தன்னைத் தானே பிரகனடப்படுத்தி கொண்ட ஒருவர், இலக்கியக் கூட்டமொன்றில் ஒரு வார இதழைக் குறிப்பிட்டு, ’அந்த புத்தகத்தில் எழுதுவது என்பது மஞ்சள் பத்திரிகையில் எழுதுவதற்கு சமம். இது போன்ற பாவத்தை கழுவ இலக்கிய பத்திரிகைகளில் எழுதிதான் தீர்க்க வேண்டியிருக்கிறது’ என்றரீதியில் கூறினார். அங்கே ஒரு கட். சில மாதங்கள் கழித்து அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அது வெளியானதும் அவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு. ‘நான் எடுத்திருப்பது வெறும் படம் அல்ல. கொண்டாடப்பட வேண்டிய படைப்பு. இந்த கலைப்படைப்பு பெரும்வாரியான மக்களைச் சென்றடைய வேண்டுமானால், (முன்பு மஞ்சள் பத்திரிகை என்று குறிப்பிட்ட அதே வார இதழ்) பத்திரிகையில் விமர்சனம் நன்றாக வரவேண்டும். உங்கள் பத்திரிகையில் எனது படத்திற்கான விமர்சனம் வருவது எனக்கு கிடைக்கும் கெளரவம்” என்றார். இதுதான் தமிழ் சினிமாவில் ’உலக சினிமாவின்’ யதார்த்தம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...