No menu items!

தவாங்: இந்திய – சீன எல்லை நகரம்

தவாங்: இந்திய – சீன எல்லை நகரம்

நோயல் நடேசன் 

தலாய் லாமா, இந்தியாவில் எல்லை நகரான தவாங் சென்றபோது, சீன அரசினர் ஆட்சேபித்தார்கள். சரி, நாம் போய் பார்ப்போம், என்ன நடக்கிறது என்பதை அறிவோம் என்ற எண்ணத்துடன் அங்கு போனேன். சீனா ஆட்சேபிக்காதபோதும், எனது அருணாசலப் பிரதேச பயண அனுபவம் இலகுவாக இருக்கவில்லை. வயிற்றில் புளியைக் கரைக்கும் தன்மையுடன் இருந்தது.

இந்தியா- சீனா எல்லைப் பிரதேசமான அருணாசலப் பிரதேசம் ஒரு காலத்தில் தென் தீபெத் ஆக இருந்தது. பிரித்தானியர் ஆண்ட காலத்தில் தீபெத் அரசுடன் செய்த ஒப்பந்தத்தில் இந்தியாவோடு இணைத்தார்கள். சீனர்கள், தீபெத்தை கைப்பற்றிய பின் இந்தப் பிரதேசமும் எங்களது என 1962இல் படையெடுத்து பெரும்பகுதியை கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து பின்வாங்கினார்கள் என்பது வரலாறு.

அருணாசலப் பிரதேசம் தற்போது இந்திய இராணுவம் பெருமளவில் உள்ள மாநிலமாகும். இங்கு செல்வதற்கு உள்நாட்டவரும் அனுமதி பெறல் வேண்டும். வெளிநாட்டவர்கள் பிரத்தியேக அனுமதிப் பத்திரம் எடுக்க வேண்டும். அதனால் மெல்பனிலிருந்தே விண்ணப்பித்திருந்தேன்.

அசாமின் வடபகுதியில் உள்ளது அருணாசலப் பிரதேசம். செல்லும் வழியில் ரெஸ்புர் (Tezpur) என்ற இடத்தில் எனது கைத்தொலைபேசி தொலைந்து விட்டது. அது தொலைந்ததை பொலிசில் சொல்லி ஒரு ரிப்போர்ட் பெறவேண்டும் என்பதற்காக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் உள்ளே சென்றபோது, பெண் போலீஸ் ஒருவர் இன்ஸ்பெக்டர் வெளியே நிற்பதாகச் சொன்னார். வெளியே வந்தபோது பான்பாக்கு போட்டபடி ஆய்வாளர் நின்றார். அவர் பேசும்போது ஊரில் குளிக்கும்போது சீமெந்துத் தரையில் சிதறும் குடாநாட்டு தண்ணீர்போல் சிவந்த தூவானம் வாயிலிருந்து வந்தது. நான் எட்டத்தில் நின்றேன்.

அவரிடம் எமது சாரதி, எனது கைத்தொலைபேசி விடயத்தைச் சொன்னபோது, முறைப்பாடு எழுதித் தரும்படி சொன்னார். அப்பொழுது ஒருவர் என்னை ஆய்வாளர் என எண்ணியவாறு ‘சார் ‘ என விளித்தவாறு விண்ணப்பம் ஒன்றை என்னிடம் தந்தார். நான் சிரித்தபடி ஆய்வாளரிடம் அதனை எட்டிக் கொடுத்தேன்.

அருகில் கடையிலிருந்த ஒருவரிடம் நூறு ரூபாய் கொடுத்து அரைப் பக்கத்தில் முறையீடு எழுதினோம். அதில் ஒப்பம் வைத்துக்கொடுத்து அதனது பிரதியைக் கேட்டபோது , நான்கு நாட்கள் கழித்து வரச்சொன்னார்கள். நல்லவேளை அந்த வழியால் நாங்கள் மீண்டும் வருவதால் அது பிரச்சினையில்லை என நிம்மதியானோம்.

இந்தியாவின் சிறந்த போலீஸ், தமிழ்நாட்டு போலீஸ் என அடிக்கடி தமிழ்ப்படங்களில் சொல்வது உண்மையான வார்த்தையென அப்பொழுது நினைத்துக்கொண்டேன். அவர்களது ஸ்டேசனிலுள்ள சிறைக்கூடத்தையும் எட்டிப் பார்த்தேன். அங்கே எவரும் இல்லாது மிகவும் சுத்தமாக இருந்தது. பல வட மாநிலங்களில் போலீஸுக்கும் குற்றவாளிகளுக்குமிடையே புரிந்துணர்வு உள்ளது என எனது வட இந்தியப் பத்திரிகையாளனான நண்பன் ஒருவர் சொன்னது மனதில் வந்துபோனது.

அங்கிருந்து அருணாசலப் பிரதேசத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்த போது அனுமதிப் பத்திரம் எனது வாகன சாரதிக்கு வரவில்லை. மாநில வாசலில் உள்ள கண்காணிப்பு நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பினார்கள். நானும் சோகத்துடன் திரும்பி வந்து வாகனத்தில் அமர்ந்தேன். நான்கு நாட்கள் அருணாசலப் பிரதேசத்தில் பதிவு செய்த விடுதிகள் எல்லாம் வீணாகிவிடும். துக்க நினைவுகளின் சகதியில் மூழ்கிக் குளித்து நனைந்தேன்.

பத்து நிமிடத்தில் சாரதி, வாகனத்தின் கண்ணாடியில் தட்டி என்னை வெளியே வரச் சொன்னார். அப்பொழுது அனுமதி வந்திருந்தது. எனது கடவுச்சீட்டைக் காட்டியதும் எல்லை பாதுகாப்புப் படையினது அனுமதி கிடைத்தது. பீகாரி ஒருவர், “சார் உங்களைப் பார்த்தால் இந்தியர் போல் இருக்கிறீர்கள். ஆஸ்திரேலியர் போல இல்லை“ என்றார். நான் இந்தியன் இல்லை என்று சொல்லாது, ஆஸ்திரேலியாவில் 35 வருடங்களாக வாழ்கிறேன் என்றேன். அதன் பின்பு என்னைப் பிரியும்போது எல்லோரும் கைலாகு தந்தனர். நண்பர்களாகப் பிரிந்தோம்.

எல்லையிலிருந்து அருணாசலப் பிரதேசத்திலுள்ள பொம்டல்லா என்ற இடத்தில் தங்குவதற்கான எமது பயணம் தொடர்ந்தது. மலைப் பிரதேசம். பாதை தொடர்ச்சியாகக் கொண்டை ஊசி வளைவுகளாகச் சென்றது. கிட்டத்தட்ட ஐம்பது கிலோ மீட்டர் பாதையில் கருமுகில்கள் வழியெங்கும் காட்டு யானைகளாகப் படுத்து வழியை மறைத்தன. வாகனத்தில் முன் சீட்டிலிருந்த எனக்கு, வெளியே 10 அடி தூரம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. வாகனம் 20 கிலோமீட்டர் வேகத்தில் அவசர விளக்கைப் போட்டபடி இரு மணி நேரத்திற்கு மேல் ஓடவேண்டியிருந்தது.

பாதையில் இருபுறமும் உள்ள இரண்டு கோடுகளே சாரதிக்கு வழியைக் காண்பித்தன. இத்தனை வருடகாலத்தில் நினைத்தே பார்க்காதவன், இந்த தெருக்கோடுகள்தான் நமக்குக் கை கொடுத்து உயிரைத் தக்கவைப்பன என்பதை அன்றே உணர்ந்தேன். ஆனால், பல இடங்களில் பாதை சரிந்து அழிந்த தடத்தில் கோடுகளுக்குப் பதில், குண்டும் குழியுமாக இருந்தது. அங்கு வாகனம் ஓட்டுபவரே உலகப் படத்தில் நாம் பூமத்தியரேகையை வரைவதுபோல் கற்பனையான கோட்டைக் கீறி அதன்படி பாதையில் வண்டியைச் செலுத்தவேண்டும்.

ஒரு பக்கம் மலை, மறுபக்கம் இமய மலையின் பல ஆயிரம் அடி பள்ளத்தாக்கு. ஆனால், கண்ணுக்கு ஏதும் தெரியவில்லை. பனிப்புகாராக இருந்தது. கரணம் தப்பினால் மரணம். முன் சீட்டில் இருந்த எனக்கு, ‘இந்த 67 வயதில் இந்தப் பிரயாணம் தேவையா? அருணாசலப் பிரதேசத்தில் வந்து இம்மலைச் சாரலில் எங்கோ ஒரு பள்ளத்தாக்கில் ஏன் இறக்க வேண்டும்? உடலை எடுப்பதற்கே பல நாட்கள் ஆகும்! உடல் கண்ணி வெடியில் சிதைந்ததுபோல் இருக்கலாம். கூட்டி அள்ளவேண்டி வரும். மிருகங்களுக்கு சில பகுதிகள் இரையாகலாம்! எனது மனைவி சியாமளாவிற்கு மிச்சம் மீதி கிடைக்க வாய்ப்புண்டு. போதாக்குறைக்கு எனது நண்பனான அப்பாவி திருச்செல்வத்தையும் இந்த இடத்திற்குக் கூட்டி வந்தேன்’ என்ற அங்கலாய்ப்பு. பயவுணர்வு, கல்யாண வீட்டு முறுக்காக தொடர்ச்சியாக வயிற்றில் பொரிந்து கொண்டிருந்தது.

ஒரு வழிப்பாதை என்பதால் வீதியில் நிறுத்தி மேகங்கள் கலையும் வரையும் தேநீர் குடித்தோ, புகைத்தோ வீதியோரக் கடையில் ஓய்வெடுக்க முடியாது. மேகங்களை வேறு இடத்திற்கு தூதனுப்பிய காளிதாசனது மேக தூதம் நினைவில் வந்தது.

இப்படிப் போய் வரத் தேவை இல்லை. திரும்பிப் போவோம் எனத் திரும்பமுடியாது. விருப்பமோ இல்லையோ போய்க்கொண்டே இருக்கவேண்டும். ஒருவிதத்தில் நமது ஊர்த் தற்கொலை போராளியின் நிலைமையும் அப்படியானதே என்ற நினைவுகள் வந்தன.

எனது மனம் பல திசைகளில் பயணங்கள் செய்திருந்தாலும், வாய் பேசவில்லை. அசாமியச் சாரதி மிகவும் கவனமாக ஓட்டிவந்தார். எந்த இடத்திலும் அவர் கவனம் விலகியதை அவதானிக்க முடியவில்லை. இரண்டு மணிநேரம் நான் வாய் பேசவில்லை. காரணம், சாரதியின் கவனத்தைத் திருப்பவோ நண்பர் திருச்செல்வத்தை பயமுறுத்தவோ விரும்பவில்லை.

சில மணி நேரத்தின் பின்பாக மலையின் அடுத்த பக்கம் எனக்குச் சொர்க்கத்தின் வாசலாகத் தெரிந்தது. இளம் சூரியன் புதிதாகக் காதல் கொண்ட மடந்தையின் கண் ஒளியை எங்கள் மீது அள்ளித் தெளித்தது. இதுவரையும் இறப்பை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த என்னால் நாளையை மட்டுமல்ல பல விடயங்களையும் அசைபோட முடிந்தது. வழியெங்கும் தொடர்ச்சியாக இராணுவத்தின் அலுவலகங்களும் குடியிருப்புகளும் தென்பட்டன.

பொம்டில்லோ (Bomdila) என்ற சிறிய நகரத்திற்கு வந்து சேர்ந்தபோது இருண்டுவிட்டது. அங்கு இரவு தங்கிவிட்டு காலையில் எங்கள் பயணத்தை வடக்கு நோக்கித் தொடங்கினோம். வழியில் மிகப்பெரிய தீபெத்தியப் பிக்குகள் பாடசாலை இருந்தது. அங்கு போனபோது மாணவர்களை வெளியே அழைத்து காலை வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அங்கு ஒரு தமிழ் குடும்பத்தைக் கண்டேன். அவர்கள் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்தே டாக்சியில் முழு அருணாசலப் பிரதேசத்தையும் சுற்றிவிட்டுப் போவதாகச் சொன்னபோது, நானும் “பல வருடங்கள் முன்பாக கோவாவில் இருந்து கன்னியாகுமரி வரை பல இடங்களில் தங்கிச் சென்றேன். தற்பொழுது எதையும் பதிவு செய்து விட்டுச் செல்வதே நல்லது என நினைக்கிறேன்” என்றேன்.

நாங்கள் இருவரும் தமிழர்கள் எனச் சொல்லிக்கொண்ட பின்னும் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசினோம். இதைத் தமிழ்நாட்டில் படித்தவர்கள் பலரிடம் கண்டுள்ளேன். ஆனால், இலங்கைத் தமிழராக இருந்தால் தமிழில்தான் தொடங்குவோம். தமிழ்நாட்டில் இந்தி வெறுப்பால் பயனடைவது ஆங்கிலமாக இருக்கிறதோ என்ற கேள்வியுடன் அவரிடம் இருந்து விடைபெற்றேன்.

தொடர்ச்சியான பயணத்தின் பாதியில் சீலே என்ற மலைப் பிரதேசம் வந்தோம். 13700 அடிகள் உயரமானது. அங்கு இறங்கியதும் தலை கொஞ்சம் ‘தண்ணீர்’ அடித்ததுபோல் இலேசாகியதாக இருந்தது. கால்கள் ‘பலே’ நடனம் ஆட எத்தனித்தன. ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதனால் பழக்கமற்றவர்களுக்கு ஏற்படும் நிலையென உணர்ந்தேன். இதற்கு முன்பு தென்னமெரிக்காவில் புனே என்ற நகரத்தில் இதே உணர்வு ஏற்பட்டது.

“பதினைந்து நிமிடங்கள் மட்டும் அங்கு நின்று படங்கள் எடுத்துவிட்டு மீண்டும் போவோம். கீழே பாதை இறங்குகிறது“ என்றார் வாகன சாரதி.

நாங்கள் இறங்கிய சீலேயில் ஒரு பெட்டிக் கடையே இருந்தது. பெட்டிக்கடையுள் கோப்பி குடிக்க நுழைந்தபோது ஒரு மத்திய வயதுப் பெண்ணை பலர் ஈயாக மொய்த்தார்கள். அந்த கவுண்டரை எட்டிப் பார்த்தபோது, அந்தப் பெண் கறுப்புத் திரவகத்தைச் சிரித்தபடி கிளாசில் ஊற்றி விநியோகித்தபடியிருந்தார். “அங்கு காபியுடன் ரம் விற்கப்படுகிறது“ என்றார் எனது சாரதி.

அந்த குளிரான இடத்தில், உடலில் ஒரு முறுக்கு ஏறி நாமும் வாங்கிக் குடிப்போம் எண்ணம் வந்தபோது ஒரு சிவப்பு விளக்கு மூளையில் எரிந்தது.  ஆக்ஸிஜன் குறைவான இடம் – பகல் நேரம் – குடிப்பது தவறு என முன் மூளை அறிவுறுத்தியது. காப்பி மட்டும் அருந்தி விட்டு வெளியேறினோம். அதன் பின்பாக ஒரு மணி நேரத்தில் 1962இல் இறந்த இந்திய இராணுவ வீரர்கள் நினைவிடமிருந்தது. அங்கு பத்து ரூபாய்களுக்கு மிகவும் சுவையான சமோசா விற்றார்கள். அத்துடன் கோப்பி இலவசமாகக் கொடுத்தார்கள்.

மீண்டும் பயணம்… மக்மோகன் எல்லைக்கோடு சீனாவையும் இந்தியாவையும் பிரிக்கிறது. அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் 10000 அடி உயரத்தில் உள்ளது, தவாங் நகரம். தவாங் நோக்கி நகர்ந்தபோது மீண்டும் எனது விவரங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. எனது கடவுச்சீட்டில் நான் பிறந்த இடம் யாழ்ப்பாணம் என இருந்தாலும், வெளிநாட்டில் வாழும் இந்தியனாக என்னைக் கருதி அவர்கள் என்னுடன் இந்தியில் பேசிக்கொண்டார்கள். யாழ்ப்பாணம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை அந்த இடத்தில் நான் ஆட்சேபிக்கவில்லை. மெல்பன் நகரத்தை அவர்கள் கிரிக்கெட் நடக்கும் இடமாக நன்கு அறிந்திருந்தார்கள். என்னை மிகவும் மரியாதையாக உட்கார வைத்தார்கள்.

அருணாசலப் பிரதேசம் முழுவதும் இந்திய இராணுவத்தின் படைத்தளங்கள் (Garrison Town) பரவலாக இருந்தன. எனது சாரதி, “இந்த மாநிலத்தின் ஜனத்தொகையில் அரைக்கரைவாசி இராணுவம் உள்ளது“ என்றார். அது உயர்வு நவிற்சி என நினைத்தேன்.

ஏன் பிரித்தானியர்கள் அருணசலப் பிரதேசத்தை கைப்பற்றினார்கள் என்பது எனக்கு இப்பொழுது புரிந்தது; எங்கும் மலைகள் நிறைந்த பிரதேசம். இந்த மலைகளுடாக எந்த ராணுவ கனரக வண்டிகளும் அக்காலத்தில் நகரமுடியாது. எங்களது வாகனமே இக்காலத்தில் இருபது கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்கிறது. கால்நடையாக (infantryman) மட்டுமே வரமுடியும். வந்தாலும் தொடர்ந்து இருக்க முடியாது. எந்த உணவு, தளபாடங்களும் தொடர்ச்சியாக வரமுடியாது. தகவல்த் தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாது.

பொம்டில்லாவிலிருந்து ஆறு மணிநேர பயணத்தின் பின்னர், தவாங் (Tawang) வந்தபோது, மாலை நான்கு மணியாகிவிட்டது. இங்கு நான்கு மணிக்கு மாலையாக இருண்டு விடும். எங்களது தங்குமிடம் இந்தியப் பயணிகளால் நிரம்பியிருந்தது. கொரோனா நோயின் அச்சத்தைக் காணமுடியவில்லை. சகல வசதிகளும் உள்ள ஆஸ்திரேலியா இன்னமும் திண்டாடுகிறது. ஐரோப்பா, அமரிக்காவிலும் இதே நிலையே. இந்தியா போன்று மக்கள் தொகையுள்ள சீனா, நாட்டு மக்கள் எல்லோரையும் வெளியே செல்லத் தடைசெய்து வேற்று நாட்டவர்களை உள்ளே விடாது தடைசெய்துள்ளது. இரண்டு வருடங்கள் மேலாக மலச்சிக்கல் வந்தவர்போல் முக்குகிறது…? இந்நிலையில், கொரோனோ நோயை இந்தியா கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

தவாங்கில் போலீஸ் மேலதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்று மீண்டும் என்னைப் பதிவு செய்தேன். இந்த நகரில் நான் இரண்டு நாள் தங்குவதற்கு மூன்று இடங்களில் பதிவு செய்தேன்.

தவாங்கில் 400 வருடங்கள் புராதனமான மிகப்பெரிய பிக்குகளின் தங்குமிடமும் அதில் ஒரு பிரார்த்தனைக் கூடமும் உள்ளது. இந்த மடத்தை 1962இல் சீனர்கள் கைப்பற்றிப் பின்வாங்கினார்கள்.

நகரத்தின் மத்தியில் பெரிய புத்தர் சிலை உள்ளது. மாநிலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் தீபெத்திய புத்த மதம் சார்ந்தவர்கள் 13 வீதமானபோதிலும், பெரும்பாலானவர்கள் தவாங்கில் வசிக்கிறார்கள். நான் சென்ற அரச மற்றும் போலீஸ் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் அவர்களே. மற்றைய இடங்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களுமாக பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் அருணாசலப் பிரதேசம், இலங்கையைவிட நிலப்பரப்பில் பெரிய மாநிலம். கிழக்கே பர்மா, மேற்கே பூட்டான்,- வடக்கே சீனா என்பதால் மத்திய அரசால் கேந்திர முக்கியத்துவமுடைய பிரதேசமாக விசேடமாகக் கவனிக்கப்படுவது தெரிகிறது. பல கட்டுமான வேலைகள் நடக்கின்றன.

அருணாசலப் பிரதேசம் பெரும்பகுதி காடாகவும் ஆறுகள் பல உருவாகும் இடமாகவும் தெரிகிறது. நாங்கள் சென்ற காலம் கோடைக் காலம். மழைக்காலமோ அதிகமான குளிர்காலமோ அல்லாதபோதிலும், இரவில் குளிர் 5-6C பாகை சென்றது. எனது சென்னை நண்பரோ மூன்று உடைகள் சகிதம் குல்லாவும் போட்டவாறு நடுங்கியபடி இருந்தார்.

இந்திய இராணுவ முகாமருகே உள்ள திறந்த வெளியரங்கில் 1962 போரின் காரணங்கள், சம்பவங்களைத் திரைப்படமாக காட்டினார்கள். இந்தி மொழியானதால் பெரும்பகுதி புரியவில்லை. ஆனால், முழு நேரமும் இருந்து பார்த்தேன்.

1962 போரின் தோல்விகளின் விளைவுகளைத் தொடர்ந்து காணமுடியும். எக்காலத்திலும் சீனாவோடு சுமுக உறவு வருவதற்கான சாத்தியமில்லை என்பதுடன், இந்தியாவின் வெளிவிவகார கொள்கை மற்றைய நடவடிக்கைகள் அதையொட்டியே இருந்தது.

திரும்பி வரும்போது டிராங் ( Dirang) என்ற இடத்தில் ஆறும் பள்ளத்தாக்கும் உள்ளதால் அங்கு விவசாயத்தைக் காணமுடிந்தது. அங்கும் பிக்குகள் மடமும் அதைச் சுற்றிய அழகான நந்தவனமும் இருந்தது.

அருணாசலப் பிரதேசத்தில் மக்களது கலாச்சாரம், மற்றும் பவுத்த மடங்களைப் பார்த்தபோது, பர்மா – தாய்லாந்து சென்று வந்த அனுபவத்தைத் தந்தது, ஒரு விதத்தில் மறக்க முடியாத பயணமாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...