No menu items!

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி – என்ன காரணம்?

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி – என்ன காரணம்?

அமெரிக்க மத்திய வங்கி கடன்களுக்கான வட்டி விகித்தத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. இன்று ஒரு அமெரிக்க டாலர் 81 ரூபாய் 26 காசு என்ற நிலையில் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் வீழிச்சியடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, ஒரு டாலர் 90 ரூபாய் என்ற நிலைக்கு செல்லலாம் என்ற அச்சத்தை சில பொருளாதார நிபுணர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

ரூபாய் மதிப்பின் இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்? இது நமது பொருளாதரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவு கடந்த ஜூன் மாதம் 9.1 சதவிகிதமாக உயர்ந்தது. இதனையடுத்து பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா மத்திய வங்கி இறங்கியது. அதன் ஒரு பகுதியாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. முந்தைய இரண்டு கூட்டங்களில் வட்டி விகிதத்தை ஒவ்வொரு முறையும் 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது. இதனால், பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அது 8.3 சதவிகிதம் என்னும் நிலையில்தான் இருந்தது. இதனையடுத்து மூன்றாவது முறையாக தற்போது மீண்டும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

பொதுவாக அமெரிக்க மத்திய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தத்தை மாற்றி அமைக்கும் போதெல்லாம் அது உலகளவில் மற்ற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக டாலரை மையப்படுத்தி வர்த்தகம் செய்யும் நாடுகள் அனைத்திலும் பிரதிபலிக்கும்.

எப்படி?

அமெரிக்காவில் அதிக வட்டி கிடைப்பதால், சர்வதேச சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் அதனை எடுத்து அமெரிக்காவில் முதலீடு செய்வார்கள். இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் சரியும். இன்னொரு பக்கம், டாலர் கரன்ஸி வெளியேறிவிடும் என்பதால், டாலரை மையப்படுத்தி வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு டாலர் தேவைப்படும். இதனால் டாலருக்கான ‘டிமாண்ட்’ அதிகரித்து, அதன் மதிப்பு கூடும். இப்படி டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. அமெரிக்காவின் பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது.

இதன் தாக்கம்தான் இப்போது இந்திய பங்கு சந்தையிலும் இந்திய ரூபாய்  மதிப்பிலும் தெரியத் தொடங்கியுள்ளது. நமது இறக்குமதி வர்த்தகம் பெருமளவு டாலரை மையப்படுத்திதான் உள்ளது. அதாவது, இறக்குமதி செய்யும் ஒரு பொருளுக்கான மதிப்புக்கு பதிலாக இந்திய ரூபாய் கொடுக்க முடியாது. டாலரை கொடுத்துதான் இறக்குமதி செய்யும் பொருளை வாங்க வேண்டும். இதனால் டாலர் தேவை அதிகரித்து அதன் மதிப்பு கூடுகிறது. இதற்குப் பதிலாக நமது கையிருப்பில் உள்ள டாலரை கொடுத்தால் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து நிலையற்ற தன்மை ஏற்படும்.

இப்படித்தான், அமெரிக்க மத்திய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தத்தை உயர்த்தும்போதெல்லாம் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. இப்போதும் அதுதான் நடந்துள்ளது.

ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக இந்திய ருபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இப்போது அமெரிக்கா கடனுக்கான வட்டியை அதிகரித்துள்ளதால் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்படி பல காரணங்கள் சேர்ந்து இந்த ஆண்டு மட்டும் இதுவரை ரூபாயின் மதிப்பு சுமார் 8.48 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 24.26 சதவிகிதம் குறைந்துள்ளது.  அதாவது, 2017 அக்டோபரில் 65 ரூபாய் இருந்தது தற்போது 81.26 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதனிடையே சீனா – தைவான் இடையேயான பிரச்சினை வேறு புகைந்து கொண்டிருக்கிறது. இதுவும் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி எதாவது நிகழ்ந்தால் அதுவும் இந்திய ரூபாய் மதிப்பை விழச் செய்யும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தாலும் அதனை சரிசெய்யும் முயற்சியில் இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி இறங்கவில்லை. ஏனெனில், இந்திய பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் சூழலில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சிகள் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை பாதிக்கும் என கருதப்படுகிறது. எனவே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்வது இன்னும் சில நாட்கள் தொடரவே வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இன்னொரு பக்கம், தற்போது அமெரிக்க மத்திய வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளதுடன் பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், பணவீக்கத்தை மீண்டும் 2 சதவீதமாகக் குறைப்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். இது மேலும் பல வட்டி உயர்வுகள் வரவிருப்பதையும் 2024 வரை இது தொடரக்கூடும் என்பதையே சுட்டிக்காட்டுவதாக கணிக்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த உள்ளதால், வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து டாலர் வெளியேறுவது தொடரும். டாலர் நிலை வலுவாகும். இதுவும் இந்திய சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையும் சேர்ந்து இந்திய ரூபாய் மதிப்பை இன்னும் வீழ்ச்சியடைய வைக்கலாம் என்பதே பொருளாதார நிபுணர்கள் கணிப்பு.

இந்திய ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி கண்டிப்பாக சந்தை செயல்பாடுகளில் தலையிட்டே ஆக வேண்டும். ஆனாலும், அந்த தலையீடு ஒரு தற்காலிக ஆதரவாகவே இருக்கும். அது இந்திய ரூபாய் மதிப்பு சரிவை முழுமையாக மாற்றாது என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...