ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 152 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 100 ரன்களை சேர்த்தது. கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
நாளை நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானை இறுதி போட்டியில் எதிர்கொள்ளும்.
மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர் முருகன் கோயில்களில் செல்போனுக்கு தடை
திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர் சீதாராமன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக பலர் செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தை படம் பிடிக்கின்றனர். கோயில் சிலைகள் முன்பு நின்று கொண்டு செல்பி எடுக்கின்றனர். இவர்களின் செயலால் உண்மையிலேயே தரிசனம் செய்யும் நோக்கத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘தமிழ்நாடு கோயில்களில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலை உள்ளது. கோயில்களில் அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களின் தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் வெளியிடுகின்றனர். இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. திருப்பதி கோயில் வாசலில்கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. எனவே, திருச்செந்தூர் கோயில் உள்ளே செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்து இந்து அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் செல்போன் பயன்பாட்டுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவி சொத்துக்கள் முடக்கம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜ மாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. மொத்தமாக ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
போருக்குத் தயாராக இருங்கள்: சீன ராணுவத்துக்கு அதிபர் ஜி ஜின்பிங் போட்ட திடீர் உத்தரவு
தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். இந்நாட்டை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்கிறது, சீனா. ஆனால் தைவான், தாங்கள்தான் உண்மையான சீனா என்கிறது. இதனால் தைவானை முன்வைத்து சர்வதேச அரசியலில் குழப்பம் நிலவுகிறது. தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தைவானை ஆக்கிரமிக்க சீனா முயலுமானால், அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் என அது அறிவித்துள்ளது. இதனிடையே, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்குப் பிறகு சீனா – தைவான் உறவு மேலும் சிக்கலாகி உள்ளது.
இந்தநிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கூட்டு ராணுவ தலைமையகம் அமைந்துள்ள மத்திய ராணுவ ஆணையகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் ஜி ஜின்பிங், ராணுவம் தனது பயிற்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போரையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்ததாக ஆஸ்திரேலியாவின் ‘ஸ்கை நியூஸ்’ தெரிவித்துள்ளது.