No menu items!

TN GO 115 – அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?

TN GO 115 – அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?

தமிழ்நாடு அரசுப்‌ பணிக்கு ஆட்சேர்ப்பு, பயிற்‌சி தொடர்பாக மனித வள மேலாண்மைத்‌ துறை வெளியிட்ட அரசாணை 115 விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்பட அரசுப் பணியாளர் சங்கங்கள், அதிமுக, பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனையடுத்து அரசும் தற்போது அரசாணை 115-ஐ மறுபரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளது.

ஏன் இந்த எதிர்ப்பு? அரசாணை 115-இல் அப்படி என்னதான் உள்ளது?

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த 18-03-2022 அன்று 2022-23ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்தார்‌. அதில், “பணியமர்த்தல்‌ மற்றும்‌ பயிற்சிக்கான விதிகளில்‌ சில திருத்தங்கள்‌ மேற்கொள்ளும்‌ பணியினை இவ்வாண்டு தொடங்கி உள்ளோம்‌. மனிதவளம்‌ தொடர்பான சீர்திருத்தங்கள்‌ மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறு மாத கால அளவிற்குள்‌ முன்மொழிவதற்கான மனிதவள சீர்திருத்தக்‌ குழு ஒன்று அமைக்கப்படும்‌” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்ற மாதம், 18-10-2022 அன்று மனிதவள சீர்திருத்தக்‌ குழுவினை அமைத்து அரசாணை 115-ஐ அரசு வெளியிட்டது. மனிதவள சீர்திருத்த குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எம்.எப். பரூக்கி, சந்திரமவுலி, ஜோதி நாகராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். அரசாணையில், இந்த குழுவின் எல்லைகள் என்னென்ன என்பதை வரையறுத்திருந்த அரசு, இந்த குழு அடுத்த ஆறு மாதத்திற்குள் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும்,

• பன்முக வேலைத் திறனோடு, ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு அமைய வேண்டும்.

• அரசின் பல்வேறு பணிகளை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது

• பிரிவு சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது

• அரசின் உயர்நிலை பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, வேலைத்திறன் மற்றும் மதிப்பீடுகளை ஆராய்வது

• பணியாளர்களை ஒப்பந்தமுறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் செயல்பாடுகளை கவனித்த பின் அரசு பணிக்குள் கொண்டு வருவது

போன்றவைகளும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இதற்குதான் அரசுப் பணியாளர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘இதில் ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து வரம்புகளுமே பணியாளர்‌ விரோத நடவடிக்கை என்பதோடு, சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்‌’ என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தலைமைச்‌ செயலகத்தில்‌ தொகுதி டி என்ற பிரிவின்‌ கீழ்‌ வரும்‌ அலுவலக உதவியாளர்கள்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ உள்ளிட்ட பணியாளர்களின்‌ ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில்‌ 50 விழுக்காட்டிற்கு மேல்‌ காலியாக உள்ளது. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை எப்போதோ அரசால்‌ கைவிடப்பட்டுவிட்டது. அதே நிலைமைதான்‌, தமிழ்நாட்டின்‌ அனைத்து நிலை தொகுதி பணியிடங்களுக்கும்‌ காணப்படுகிறது. அப்பணியிடங்களை வெளி முகமை மூலமாக ஒப்பந்தப்‌ பணியிடங்களாக நிரப்புவதற்கான ஆலோசனைகள்‌ பல்வேறு தலைமைச்‌ செயலகக்‌ துறைகளால்‌ தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

தொகுதி ‘டி’ காலிப்‌ பணியிடங்களுக்குத்தான்‌ இந்த அவலநிலை என்றிருந்தால்‌, தற்போது அரசாணை 115 தொகுதி ‘சி’ பணியிடங்களையும்‌ தனியாரிடம்‌ தாரை வார்ப்பதற்கான முகாந்திரங்களுக்கு சிவப்புக்‌ கம்பளம்‌ விரித்துள்ளது.

பணியாளர்களின்‌ பணித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதில்‌ யாருக்கும்‌ மாற்றுக்‌ கருத்து இல்லை. ஆனால்‌, அனைத்தையும்‌ தனியார்‌ வசம்‌ ஒப்படைக்கும்‌ நடவடிக்கையை ஏற்க இயலாது. இனிமேல்‌ அரசுப்‌ பணி என்பதற்கே வாய்ப்பில்லை என்ற நிலையை ஏற்படுத்தக்கூடியதாக அரசாணை 115 அமைந்துள்ளது. அரசுப்‌ பணியின்‌ மதிப்பீடு என்பது லாப நட்டக்‌ கணக்குப்‌ பார்க்கக்கூடிய விஷயமல்ல. தனியார்‌ வசம்‌ ஒப்படைக்கும்போது, அவர்கள்‌ லாப நோக்கத்துடன்‌ இயங்குவார்களே அன்றி சேவை மனப்பான்மையோடு செயல்பட வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், ‘அரசியலமைப்புச்‌ சட்டத்தின் கீழ்‌ அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலமாக அரசுப்‌ பணிக்குப்‌ பணியாளர்களை தேர்வு செய்யாமல்‌ வெளிமுகமை / ஒப்பந்த அடிப்படை / தனியார்‌ வசம்‌ என சில பணிகளை விடுவது என்பது முற்றிலுமாக தமிழ்நாடு அரசு பின்பற்றுகின்ற 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரானதாகும்‌” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரும் அரசாணை 115-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டனர்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் அரசாணை 115 குறித்து கோரிக்கை மனு அளித்தார்.

இந்நிலையில், ‘அரசாணை (நிலை) எண் 115 குறித்த மனித வள சீர்திருத்தக் குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும்’ என தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மனிதவள சீர்திருத்தக்‌ குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும். எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும்’ என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...