No menu items!

சூர்யாவும் புறநானூறு பஞ்சாயத்தும்

சூர்யாவும் புறநானூறு பஞ்சாயத்தும்

சமீப காலத்தில் சூர்யாவுக்கு பெயரைப் பெற்று கொடுத்தப் படம் ’சூரரைப் போற்று’. ‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்த வெற்றிக்கு பிறகு சூர்யாவும் சுதாவும் மீண்டும் இணைய திட்டமிட்டார்கள். அந்தப் படத்திற்குதான் ‘புறநானூறு’ என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.

2020-க்குப் பிறகு நான்கு வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைய இருந்ததால் பெரும் எதிர்பார்பும் கிளம்பியது.

ஆனால் சொன்ன தேதியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவே இல்லை. இப்போது அப்போது என இரண்டு முறை தள்ளிப் போடப்பட்டு இருக்கிறது. இதனால் இப்படம் கைவிடப்பட்டு இருப்பதாக ஒரு கிசுகிசு உருவானது. ஆளாளுக்கு தங்கள் மனதிற்கு தோன்றியதை வைத்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டதால், பதட்டமடைந்த சூர்யாவும், சுதாவும் இணைந்து ஒரு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். காரணம் இப்படத்தை தயாரிப்பது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான்,

ஆனால் ‘புறநானூறு’ படத்தின் உண்மை நிலவரம் என்ன?

இந்தப் படத்தின் கதை ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்த காலக்கட்டத்தில் நடக்கும் கதையாம். கல்லூரி மாணவராக தோன்றும் சூர்யா, ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு குரல் கொடுக்கும் காட்சிகள் இருக்கின்றன.

இதனால் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை மதுரை அமெரிக்க கல்லூரியில் எடுக்க திட்டமிட்டு இருந்தார்களாம். கல்லூரித் தேர்வுகள் முடிந்ததும் படப்பிடிப்பை வைக்கலாம் என்றிருந்த போது, இப்போது தேர்தல் வந்துவிட்டதால், படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஒருபக்கம். தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பே இனி ஷூட்டிங்கை கல்லூரிகளில் வைக்க முடியும். இதுவும் ஷூட்டிங் தள்ளிப்போக ஒரு காரணம்.

அடுத்து மும்பைவாசி ஆகியிருக்கும் சூர்யா, ஜோதிகாவின் விருப்பத்திற்கு இணங்க ஒரு ஹிந்திப் படமொன்றிலும் நடிக்க இருக்கிறாராம். அதன் ஷூட்டிங் ஜூலையில் நடக்க இருக்கிறதாம். தற்போது சூர்யா – ஜோதிகா ஜோடி மும்பையில் இருந்தபடியே ஹிந்திப் படங்களுக்கு நிதியுதவியும் செய்வதாக ஒரு தகவல் இருக்கிறது.

இதனால் ஏப்ரல், மே என இரு மாதங்களுக்குள் ‘புறநானூறு’ ஷூட்டிங்கை முடிக்க முடியாது. இந்த இரண்டு காரணங்களால்தான் ஷூட்டிங் தள்ளிப் போயிருப்பதாக அப்படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் மற்றுமொரு காரணமும் இருக்கிறதாம். இப்படம் 1960-களில் நடந்த மொழி உரிமைப் போராட்டம் தொடர்பானது. அதனால் 1960 காலக்கட்டத்தை திரையில் கொண்டு வரவேண்டுமானால் அதற்கான அரங்க வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும். இதன் செட்டுகளுக்கே பெரும் செலவு பிடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

செட்டுகள் போட்டு, அதில் நூற்றுக்கணக்கானோர் நடிக்கும் காட்சிகளை பல் நாட்கள் ஷூட் செய்ய வேண்டியிருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பு செலவைக் குறைக்க என்ன வழி என்று யோசனையில் இருக்கிறார்களாம்.

பொதுவாக சுதா கொங்கரா தனது படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் தொடர்பான எழுத்து வேலைகள் முடிந்ததும், நட்சத்திரங்களை வைத்து ஒரு முறையாவது பயிற்சி பட்டறையை வைத்துவிடுவார். இதன்மூலம் எந்த காட்சியை எப்படி எடுப்பது, எவ்வளவு நேரம் ஆகும், எப்படி பேச வேண்டும், எப்படி செயல்படவேண்டுமென அனைத்தையும் குழு விவாதம் மூலம் திட்டமிட்டு விடுவார்.

அப்படி பார்க்கையில் இப்படம் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதாவது ஷூட்டிங் போவதற்கு முன்பாகவே இவ்வளவு நீளம் என்றால், ஷூட்டிங் போன பிறகு சில காட்சிகள் மாறலாம். இன்னும் சிரத்தையோடு எடுக்கலாம் என்று தோன்றலாம். இதனால் ஷுட்டிங் நாட்கள் திட்டமிட்ட காலத்தைவிட அதிகம் எடுக்கலாம். இதனால் திட்டமிட்ட ஷெட்யூலுக்கு தாண்டி ஷூட்டிங்க் நடந்தால், அதுவும் ஆபத்துதான். பட்ஜெட் எகிறிவிடும்.

பொதுவாகவே பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படமென்றால், ஒரு நாள் ஷூட்டிங் நடத்த சுமார் 35 லட்சம் முதல் 40 லட்சம் பிடிக்கலாம். அப்படி கணக்கு பார்த்தால், முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு செலவு மட்டுமே 40 கோடிக்கும் மேல் செலவு போய்விடும்.

இதனால் கொஞ்சம் அதிர்ச்சியுற்ற சூர்யா தரப்பு, செலவைக் கட்டுப்படுத்த படத்தின் நீளம் இரண்டரை மணிநேரம் இருக்கும் வகையில் பக்காவாக சுருக்கிய பின்னர் ஷூட்டிங் போகலாம் என சொல்லப்பட்டிருக்கிறதாம்.

ஆனால் சுதா கொங்கரா தரப்பில் திரைக்கதையில் கதை வைக்க விருப்பமில்லையாம், ஏதாவது ஒரு காட்சியைத் தூக்கினாலோ அல்லது சுருக்கினாலோ, படத்தின் சாராம்சம் கெட்டுவிடும் என்கிறாராம்.
அப்படியே நீளத்தை குறைக்க வேண்டுமென்றால், முழுமையாக மீண்டும் கதையில் அமர வேண்டும். அதற்கு கூடுதல் அவகாசம் தேவை என சுதா கொங்கரா தரப்பில் கூறப்பட்டதாம்.

செலவையும் குறைக்க வேண்டும், கதை மற்றும் திரைக்கதையும் விறுவிறுவென இருக்கவேண்டுமென்பதால் இப்போதைக்கு ஷூட்டிங் தேதி எதுவும் முடிவாக வில்லை. இதனால் சூர்யாவும் மெளனமாகிவிட்டாராம்.

’புறநானூறு’ கதை திரைக்கதையில் தேவையான மாற்றங்களை செய்யும் வேலைகளில் சுதான் கொங்கரா குழு இறங்க, சூர்யா ஹிந்திப் பட ஷூட்டிங்கிற்கு செல்ல இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...