No menu items!

அடுத்தடுத்து 5 பேர் பலி: வெள்ளியங்கிரி மலையில் என்ன நடக்கிறது?

அடுத்தடுத்து 5 பேர் பலி: வெள்ளியங்கிரி மலையில் என்ன நடக்கிறது?

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 2 பேர் ஏற்கெனவே பலியாகியிருந்த நிலையில், கடந்த 2 நாட்களில் மலை ஏறிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியங்கிரி மலையில் என்ன நடக்கிறது? மலையேற செல்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

வெள்ளியங்கிரி மலைக்கு ஏன் செல்கிறார்கள்?

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை 7 மலைகளை கொண்டது. இங்கு 7ஆவது மலையில் உள்ள சிவலிங்கம் இயற்கையாகவே எழுந்த சுயம்பு லிங்கம் எனவும் இந்த மலையில் சித்தர்கள் ஸ்தூல வடிவில் நடமாடுகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இதனால், ஏழு மலைகளைக் கொண்ட இங்கு பங்குனி, சித்திரை மாதங்களில் சிவகோஷம் விண்ணை பிளக்கும்.

வெள்ளியங்கிரி மலைகள் செங்குத்தானவை. சரியான பாதையும் படிக்கட்டுகளும் இல்லாததால் முன்பெல்லாம் இந்த மலைகளுக்கு தவழ்ந்துதான் செல்ல வேண்டும். இப்போது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், செங்குத்தான இந்த மலைப் பகுதியை ஏற சிவன் அருள் இருந்தால்தான் முடியும் என்று நம்பப்படுகிறது. அதிலும் முதல் மலை ஏறுவது மிகவும் சிரமம். இங்குள்ள வழுக்குப்பாறை, கைதட்டி சுனை உள்ளிட்டவை உள்ளன. கைத்தட்டி சுனை உள்ள மூன்றாவது மலையில் சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் அங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்குகளில் இருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது.

வெள்ளியங்கிரி மூன்றாவது மலையில் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. பீமன், அர்ச்சுனன் தவம் செய்த இடங்களாக 5ஆவது மலை கருதப்படுகிறது. ஆறாவது மலை இறக்கங்களை கொண்டது. இங்கு திருநீற்றுமலை என்ற ஒன்று உள்ளது. இங்குள்ள வெள்ளை நிற மணலை இறைவனுடைய திருநீறாகவே கருதி பக்தர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.

வெள்ளியங்கிரியில் முதல் மலையைப் போல் 7ஆவது மலையும் ஏறுவது மிக சவால்கள் நிறைந்தது. இங்கு தான் வெள்ளியங்கிரி என்ற சுயம்பு இருக்கிறார். இந்த மலைகளில் அரிய வகை மூலிகைகள் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஏழாவது மலையில் சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்து வண்னம் உள்ளனர். ஆண்டு தோறும், பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபடுகின்றனர்.

வெள்ளியங்கிரியில் அதிகரிக்கும் உயிர் பலிகள்

அண்மை வருடங்களாக வெள்ளியங்கிரியில் மலை ஏறுவோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மலை ஏறும்போது மயங்கி விழுவோரை காப்பாற்ற மேலே மருத்துவ வசதிகளும் இல்லை என பக்தர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இதனால், பிப்ரவரி – மே சீசன் நேரத்திலாவது மருத்துவ முகாம்களை அமைத்து உயிர்களை காக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த வருடம் கடந்த மாதம் வெள்ளியங்கிரி மலைக்கு வந்தவர்கள் 2 பேர் பலியாகினர். இதனால் இதய பிரச்சினை இருப்பவர்கள், ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள், வேறு ஏதேனும் உடல் நலப் பிரச்சினை உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், வெள்ளியங்கிரியில் கடந்த இரு நாட்களில் மலை ஏறிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவை சேர்ந்த சுப்பாராவ் (வயது 57) 4ஆவது மலையிலும், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (வயது 35) முதல் மலையிலும் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தனர்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 46) இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கபட்டு உள்ளதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற போது பாண்டியன் உயிரிழந்து உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை மீட்ட மலை அடிவாரம் கொண்டு வந்த வனத்துறையினர் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மலை ஏற டாக்டர் அட்வைஸ்

இதுதொடர்பாக ஆலோசனை தரும் பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, “வெள்ளியங்கரி மலை என்றில்லை பொதுவாகவே மலையேற்றம், நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, மிதிவண்டி பயிற்சி, உடற் பயிற்சிக் கூடத்தில் பளுதூக்குதல், பேட்மிண்டன் விளையாடுதல் ஆகிய அனைத்தும் உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை. வெறுமனே சோம்பேறித்தனமாக படுக்கையில் படுத்துக்கொண்டும் போன்களைப் பார்த்துக் கொண்டும் இருப்பதை விடவும் இவைகள் இதயத்துக்கும் ரத்த நாளங்களுக்கும் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் நன்மை தரக்கூடியவைதான். ஆயினும் நமது பலம் பலகீனம் அறிந்து நமது உடலின் தேவைக்கு ஏற்ப பயிற்சிகளில் ஈடுபடுவது முக்கியமான ஒன்றாகும்.

நான் மேற்கூறிய உடல் பயிற்சிகள் எதுவாய் இருப்பினும் தங்களின் உடல் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்த தன்னிலை உணர்தல் அவசியமாகிறது. எனது நண்பன் சென்றான், நானும் செல்கிறேன்; எனது உறவினர் செய்கிறார், நானும் செய்கிறேன் என்று இண்ஸ்பிரேசன் அடைவது நல்லது. ஆனால், அதற்கு முன்பு பின்வரும் பரிசோதனைகளை செய்து பார்த்து மருத்துவரிடம் காட்டி தங்களின் தேகத்தின் நிலை உணர்தல் அவசியம்.

ரத்த அணுக்கள் எண்ணிக்கை, ரத்த க்ளூகோஸ் அளவுகள், எச்பிஏ – ஒன் – சி, சிறுநீரக செயல்திறன், கல்லீரல் செயல்திறன், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவுகள், சிறுநீர் புரதப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் வயிற்று மற்றும் இடுப்பு பகுதி, ட்ரெட் மில் – ஓடும் போது ஈசிஜியில் மாற்றங்கள் வருகின்றவா? எனும் பரிசோதனை, எக்கோ கார்டியோகிராம் ஆகியவற்றை செய்து பார்த்து நமது உடலின் திறனை சோதித்துப் பார்த்து பிறகு அதற்கு சிறிது சிறிதாக பளு கூட்டுவதே நல்லது.

இதுவரை நடைபயிற்சி கூட முறையாக பல மாதங்கள் செல்லாதவர் திடீரென கடுமையான உடல் பயிற்சிகளிலோ விளையாட்டுகளிலோ மலையேற்றப் பயிற்சிகளிலோ ஈடுபடுவது நன்மையை விடவும் பாதகங்களை அதிகமாக்கும்.

உடலுக்கு நடையோ பளுவோ விளையாட்டோ சிறிது சிறிதாக குறைவானதில் இருந்து கூடுதல் என்று நாட்கள் செல்லச் செல்லக் கூட்டிக் கொண்டே செல்வதே நல்லது. விரைவாக இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை விடவும் நீண்ட காலம் இந்த வாழ்வியல் மாற்றத்தில் தொடர வேண்டும் என்ற நீண்ட கால இலக்கே சிறந்தது.

பல நேரங்களில் மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி ஆன்மிக நாட்டம் கண்ணை மறைப்பதும் கண்கூடு. நான் கடந்த ஒரு மாதத்தில் ரமலான் மாத நோன்பு நோற்க வேண்டாம் என்று அறிவுறுத்திய சிலருள் தற்போது அவர்களாகவே அவர்களின் சுய ஆன்மிக உந்துதலின் பேரில் நோன்பு நோற்று ரத்த சர்க்கரை அளவுகளும் ரத்த அழுத்தமும் அதிகமாகி என்னை சந்திக்க வந்துள்ளார்கள். இதனாலும் சில மரணங்கள் நடக்கின்றன.

என் மனதிற்கு நெருக்கமான தாத்தா – கொரோனா மூன்றாம் அலை சுழன்று அடித்துக் கொண்டு இருந்த காலத்தில் என்னிடம், “சபரி மலை செல்ல இருக்கிறேன் டாக்டர்” என்றார். நான் அவரை அன்புடன் எடுத்துக் கூறி, “தற்போது வேண்டாம் ஐயா, கொரோனா அலை ஓய்ந்ததும் நானே கூறுகிறேன். அப்போது செல்லுங்கள்” என்றேன். ஆனால், அவர் கேட்கவில்லை. சபரி மலை யாத்திரை சென்றார். சென்று வந்தவருக்கு அடுத்த ஒரு வாரத்தில் காய்ச்சல் இருமல் வந்து, கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இறந்தார். இன்னும் அந்த இழப்பின் வடு என்னிடம் இருக்கிறது.

இது போன்றே நீரிழிவு பாதித்த ஒரு அப்பா… எனது அறிவுரையைப் புறந்தள்ளி கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கினார். கால்கள் வெந்து போய், அவரது நீரிழிவுடன் கால் புண்ணை குணமாக்க நெடுங்காலம் எடுத்துக்கொண்டது. பல மாதங்கள் அவரால் பணிக்குச் செல்ல இயலவில்லை.

நான் ஆன்மிக நாட்டத்தைக் குறை கூறவில்லை. மனிதனைப் பண்படுத்த ஆன்மிகத்தின் தேவையும் இருக்கிறது. எனினும், நமது உடல் என்ன கூறுகிறது? அதன் பலம் பலகீனம் என்ன? மருத்துவரின் அறிவுரை என்ன? என்பதையெல்லாம் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தயவு கூர்ந்து சமயம் சார்ந்த கடமைகள், சடங்குகள், யாத்திரைகள் என எதை முடிவு செய்வதாக இருந்தாலும் உங்களின் உடல் நிலையைப் பாருங்கள். உடல் பயிற்சிக்கு முன் கட்டாயம் முன் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் விருப்பு வெறுப்பற்ற, மருத்துவம் சார்ந்த, தேக நலன் சார்ந்த முடிவுகளை மதியுங்கள். இதுவே சிறந்தது” என்கிறார் டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...