No menu items!

சிறுகதை: அம்மாவைப் பார்த்தீர்களா ஸார் – எஸ். செந்தில்குமார்

சிறுகதை: அம்மாவைப் பார்த்தீர்களா ஸார் – எஸ். செந்தில்குமார்

சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு கோவிலில் கூட்டமில்லை. முன் மண்டபத்தில் வழக்கம் போல அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஜோடிகள் யாருமில்லை. தூண்களும் காய்ந்த புற்களும் சில காகங்களும் நின்றிருந்தன. மாடுகள் இன்னமும் வரவில்லை. கற்தூண்களுக்கு வெள்ளையடிப்பு சமீபத்தில்தான் நடந்து முடிந்திருந்தது. சன்னதியிலிருந்து வெளியே வந்து படிகட்டில் அமர்ந்தேன்.

தினமும் காலையில் செய்தித்தாளை இப்படிக்கட்டில் பரப்பி வைத்து சம்மனக்கால் போட்டு மெதுவாக ஒருமணிநேரத்திற்கும் குறையாமல் வாசிப்பேன். பிறகு அலுவலகத்திற்குச் செல்வேன். இது என்னுடைய வழக்கம். வேலைக்குச் சேர்ந்த புதிதில் இப்படி பத்திரிகையை வாசிக்கும் என்னை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கு பழகிவிட்டது. இப்போது பார்ப்பதில்லை.

முதல் பக்கத்தை விரித்து வைத்து கண்ணாடியை அணிந்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன். வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. ஒன்பது மணிக்கு மேல் வருகிற ஃபோன் எதற்காக ஒருமணி நேரத்திற்கு முன்கூட்டி வருகிறது என்கிற பதட்டத்தில் அவசரமாக எடுத்தேன். என்னுடைய கை நடுங்குவது என்னால் பார்க்க முடிந்தது. காலை உணவு முடிந்ததா, என்ன சாப்பிட்டீர்கள், மாத்திரை விழுங்கியாயிற்றா, கோயிலுக்குப் போகவில்லையா இப்படியான கேள்விகளில் மனைவி பேச்சைத் தொடங்குவாள். நேரடியாக விசயத்திற்கு வருகிற குணத்தை என் மகளிடம் பார்க்க முடியும். ஃபோனை எடுத்தவுடன் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யுங்க, வரும் போது எதுவும் வாங்கிட்டு வரவேண்டாம், இங்க வந்த பிறகு பாத்துக்கலாம் என்பதைத் தெளிவாகச் சொல்வாள். ஆனால், மனைவியானவள் அப்படியில்லை.

“உப்புத்தண்ணி மோட்டார் ரிப்போராகியிருச்சு. ஹவுஸ் ஓனருக்கிட்ட சொன்னா யாருக்கு வந்த விதியோன்னு இருக்காரு.”

நாங்கள் வாடகை வீட்டில் குடியிருக்கிறோம். சொந்த வீட்டை பழுது பார்க்க திராணியற்று புதிதாக கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய வீட்டிற்கு வந்துவிட்டோம். மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. கோயமுத்தூரில் என்னுடைய தம்பியின் வீட்டில் தங்கியிருந்த அம்மா திடீரென புறப்பட்டு வந்ததும் பூட்டிய வீட்டைத் திறந்து குடிவைத்தோம். வீட்டுக்கும் அம்மாவுக்கும் நல்ல பாதுகாப்பு என்கிற பொய்யான சொல் எல்லோருக்கும் நிம்மதியைத் தந்தது.

பெரியதாக பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், ஒன்று வந்தால் அதைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருக்கும்படியான அமைப்பு என்னுடையது. முதலில் மோட்டாரில் ஆரம்பித்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

“ஹவுஸ் ஓனரு ரிப்போர் செலவில ஆளுக்குப் பாதின்னா சரியான்னு கேக்குறாரு. நான் தரமாட்டேன்னு சொல்லிட்டேன்” என்று சொன்னவளின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கு அடுத்த வார்த்தை என்னவென்று எனக்குத் தெரியும்.

“எல்லாம் ஏந்தலையெழுத்து. சொந்த வீட்டை விட்டு வரணுமுன்னு எழுதியிருக்கு. எங்கப்பா அம்மா சொந்த வீடு இருக்குன்னுதானே உங்களுக்கு என்னய கட்டிக் கொடுத்தாங்க.”

என்னுடைய அமைதியை அவள் நன்கு பயன்படுத்திக் கொள்வாள். அமைதியாக இருக்க இருக்க பேசிக்கொண்டே செல்வாள். அவளுடைய மனதிலிருக்கும் கஷ்டங்களை இப்படியாவது சொல்லி முடிக்கட்டும் என்று அமைதியாக இருப்பேன். அவள் வேறு யாரிடம் சொல்ல முடியும். சொன்னாலும் யார் என் போல் அமைதியாக காது கொடுத்துக் கேட்க முடியும்.

“சரி, நான் ஹவுஸ் ஓனருக்கிட்டே பேசிக்கிடுறேன்.”

“நீங்க ஒன்னும் பேசவேண்டாம். இரண்டு நாளைக்கு ஒங்க வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு சமைச்சுட்டு இருக்கோம். அந்தாளும் தண்ணிக்கு என்ன செய்யுறாருன்னு பாப்போம். மூஞ்சி முகரையக் கழுவுறதுக்காச்சு வேணுமில்ல” என்று நக்கலாகச் சொன்னாள்.

“சரி போயிட்டு வா.”

“இப்ப அங்கிருந்துதான் பேசுறோம்” என்றாள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷம் என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தேன். திரும்பவும் செய்தித்தாளை வாசிக்க ஆரம்பித்தேன். நியூஸ் பேப்பரில் என் மனைவி மகள் வீட்டிற்கு சென்றிருப்பது செய்தியாக வரவில்லை. ஆனால், நட்சத்திரப் பலனில் எங்களது மூன்று நபர்களுக்கும் பாதாகமான பலன் இருந்தது.

அலுவலகத்திற்குப் புறப்பட வேண்டும் என்று நியூஸ் பேப்பரை மடித்து வைத்தேன். தண்ணீர் பாட்டில் வைத்திருக்கும் பையில் பேப்பரை சுருட்டி வைத்துவிட்டு படிக்கட்டிலிருந்து இறங்கும் போது அழுகை சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். சற்றுத் தள்ளி இரண்டு தூண்களுக்கு இடையில் அமர்ந்திருந்த வயதானப் பெண்ணின் உருவம் வெளிச்சமாகத் தெரிந்தது. அவளுக்கு முன்பாக இரண்டு கட்டைப் பைகள். அதில் நிறைய சேலையைத் திணித்து வைத்திருப்பது தெரிந்தது. தூண்களின் அருகில் சென்று முகத்தைப் பார்த்தேன். குளித்து மஞ்சள் பூசிய முகம். நெற்றியில் பொட்டு இல்லை. பட்டையாக தீற்றிய விபூதியும் கழுத்தில் தொங்கி சிவப்பு பாசி மாலையும் அந்த முகத்திற்கு பொருந்தாமல் தனித்திருந்தது.

என்னைப் பார்த்ததும், “தம்பி செல்ஃபோன் கொடுங்க தம்பி. வீட்டை விட்டு வர்றப்ப எடுத்துட்டு வர மறந்துட்டேன்” என்று அழுத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னாள். துணிகள் அடங்கிய கட்டைப் பையிலிருந்த சிறிய நோட்புக்கை எடுத்து பக்கங்களைப் புரட்டினாள். இன்னமும் அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிவதுத் தெரிந்தது. அவசர அவசரமாக மடித்து அள்ளித் திணித்துக் கொண்டு வந்து துணிகள். இரண்டு பைகளும் புடைத்துக் கொண்டிருந்தன. அவள் என் முகத்தைப் பார்த்தாள். ஜோப்பிலிருந்த செல்ஃபோனை எடுத்துத் தயக்கத்துடன் நீட்டினேன். அப்பெண் எண்களைச் சொன்னாள். ரிங் சென்றது. கட் ஆனது. திரும்பவும் எண்களை அழுத்தினேன். ரிங் சென்று கட் ஆனது.

அப்பெண்ணிடம், “ரிங் போகுது ஆனா எடுக்கல” என்று சொன்னேன்.

“இந்நேரம் குளிச்சிட்டு இருக்குற நேரம். கொஞ்ச பொறுங்க தம்பி அவளே திரும்பவும் கூப்பிட்டாலும் கூப்பிடுவா” என்று சொன்னாள்.

எனக்கு காத்திருக்க நேரமில்லை. என்னுடைய அலுவலகத்தின் சாவி என்னிடமிருக்கிறது. அலுவலகத்தைக் கூட்டி மேஜைகளை சுத்தம் செய்வதற்கு தினமும் காலையில் ஒரு பெண் வருவாள். அவள் வரும் போது கதவு திறந்து ரெடியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அலுவலகம் பூட்டியிருக்கிறது என்று எம்.டிக்கு நேராக ஃபோன் செய்துவிட்டுச் சென்றுவிடுவாள்.

அதற்காகவே சீக்கிரமாக அலுவலகத்திற்குச் சென்றுவிடுவேன். ஐந்து நிமிடம் இருக்கிறது. காத்திருக்கலாம் என்று அவள் முன்பாக நின்றேன்.

அப்பெண் எதுவும் பேசவில்லை. தன்னுடைய கையில் வைத்திருந்த நோட்புக்கை புரட்டி வேறு எண்களை தேடிக்கொண்டிருந்தாள். பிறகு சிறிய பர்ஸின் ஜிப்பை திறந்து சுருட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து நீவிவிட்டு எண்ணினாள். திரும்பவும் மடித்து பர்ஸ்சுக்குள் வைத்துக் கொண்டாள். எனக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நடந்து சென்றுவிடலாம் என்று நினைத்தேன்.

“நான் போறேம்மா எனக்கு ஆபிசுக்கு நேரமாச்சு” என்று சொன்னேன்.

“தம்பி தம்பி ஒரே ஒரு நிமிஷம்” என்று எழுந்து என்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டாள். எனக்கு சங்கடமாக இருந்தது. தேவையில்லாமல் பிரச்சினையை செல்ஃபோன் கொடுத்து வாங்கி விட்டோமே என்று பயமாகவுமிருந்தது. அங்கிருந்துத் தப்பித்துச் செல்வதற்கு யோசித்த போதுதான் அழைப்பு வந்தது. வயதான அம்மா என்னிடம் சொல்லிய எண். மூன்று ஐந்து ஐந்து மூன்று என்று முடியும் எண். செல்ஃபோனை அந்த அம்மாளிடம் கொடுத்தேன்.

“சுதா, நாந்தான்டி பேசுறேன்.”

“என்னோட ஃபோனை வீட்டுல வெச்சிட்டு வந்துட்டேன்டீ.”

“கோயில்ல இருந்து பேசுறேன். யாருன்னு தெரியல கோயிலுக்கு வந்தவரோட ஃபோனு.”

“பஸ்ஸை பிடிச்சு ஊருக்கு வந்துர்றேன்டீ.”

“உங்க மாமியா இருந்தா என்னா. அவங்க ஒரு மூலையில இருக்கட்டும் நா ஒருபக்கமாக இருக்கேன்.”

“திரும்பவும் அங்க போகலடீ. அவ முகத்தில இனிமேற்ப்பட்டு முழிக்கமாட்டேன். என்னய என்ன மாதிரி பேசிட்டான்னு தெரியுமா.”

எனக்கு அலுவலகத்திற்கு நேரமானது. அந்த அம்மா பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் புகுந்து எனக்கு ஆபிசுக்கு நேரமாகிறது என்று சொன்னேன். என் பேச்சைக் கேட்காமல் பேசிக் கொண்டிருந்தார்.

“தங்கச்சி வீட்டுக்கும் போகமுடியாதுடீ.”

“இப்பத்தான ஒருமாசம் அவ வீட்டுல இருந்துட்டு வந்தேன். பிள்ளை பெத்த பிறகு வாம்மான்னு சொல்லியிருக்காடீ.”

“காலையில சாப்பிடல. சுகர் மாத்திரை பிரஷர் மாத்திரை எதையும் எடுத்துட்டு வரல.”

“அதெல்லாம் வரமாட்டான். போன தடவை சண்டை போட்டுட்டு கோவிச்சுட்டு உங்க வீட்டுக்கு வந்துட்டு திரும்பவும் அங்க போனப்ப பேசவே இல்ல. ஏன்டா பேசமாட்டேங்குறேன்னு கேட்டா, ஓங்கூட பேசுனா ஏம்பொண்டாட்டி கோவிச்சுட்டு அவ வீட்டுக்குப் போயிருவான்னு சொல்லுறான்.”

அந்த வயதான அம்மா, “இத்தன பிள்ளைகளையும் பெத்துட்டு யாருமில்லாம அனாதையா நிக்குறேன். இப்ப யாரு வீட்டுக்குடீ போறது” என்று திரும்பவும் அழத் தொடங்கினாள். கண்களை துடைத்துக்கொண்டு செல்ஃபோனை என்னிடம் கொடுத்தார்கள். ரொம்ப நன்றி தம்பி என்று சொன்னார்கள். செல்ஃபோனை வாங்கிக்கொண்டு வேகமாக அலுவலகத்திற்கு சென்றேன்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அலுவலகத்தை கூட்டி சுத்தம் செய்யும் பெண் காத்திருந்தாள். “ஸார் வாங்க ஸார்” என்று சிரித்துக்கொண்டாள்.

அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டு வாசலில் வந்து நின்று கொண்டேன். சாலையில் போகும் வாகனத்தையும் ஆட்களையும் வேடிக்கைப் பார்க்கும் போது மனம் யாவற்றையும் மறந்துவிடும். ஒரு கவலையை மறக்க அதன் மேல் மற்றொரு கவலை வந்து விழுந்தால் முதல் கவலை மறந்துவிடும் என்பது தத்துவம். இன்னொரு கவலை வந்தால் கோவிலில் பார்த்த வயதான அம்மாவின் முகமும் அவர்கள் பேசிய பேச்சும் மறந்துவிடுமென்று நினைத்தேன். இன்னொரு பிரச்சினை எதுவும் வரவில்லை. வருகிற நேரந்தான். என்னுடைய ராசிப்படி.

அலுவலகத்தைக் கூட்டிவிட்டப் பெண் மேஜைகளைத் துடைக்க ஆரம்பித்திருந்தாள். நேற்றிரவு கடைசியாக நானும் டைப்பிஸ்ட்டும் அலுவலகத்தில் இருந்தோம். எனவே, ஒழுங்காக அனைத்தும் கணினிகளையும் சரி பார்த்து மேஜைகளை மூடி வைத்திருந்தோம். பென்சில் எதுவும் தரையில் இல்லை.

என் மனைவியிடமிருந்து ஃபோன் வந்தது. “ஏங்க இவ்வளவு நேரம் யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க. அவசர ஆத்திரத்துக்குக் கூப்பிட்டா பேசுங்க.”

“சரி சொல்லு.”

“உங்கம்மாவுக்கு எனக்கும் பெரிய சண்டை. பக்கத்து வீட்டுக்காரங்க வந்து விலக்கிவிட்டாங்க. உங்க அம்மாவுக்கு கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா? வயசு பிள்ளையை வெச்சுட்டு உங்க வீட்டுக்கு விருந்தாளியாவா வந்திருக்கேன். தண்ணி விழுகல. உப்பு தண்ணி மோட்டார் ரிப்பேர். சரி செஞ்சதும் போயிடுவோம் சொல்லியிருக்கேன். மூணு மணி நேரங்கூட முழுசா முடியல அதுங்குள்ள சண்டை.”

கோவிலில் பார்த்த வயதான அம்மாவின் முகமும் அவர்கள் பேசிய பேச்சும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டது. என் கண் முன்பாக என்னுடைய அம்மாவும் என் மனைவியும் வந்து நின்றார்கள்.

“சரி நீ அமைதியா இரு.”

“அமைதியாத்தேன் இருக்கேன். அமைதியா இல்லாம ஆடிகிட்டா இருக்கோம்” என்று ஃபோனை வைத்துவிட்டாள்.

இன்னும் சிறிது நேரத்தில் என்னென்ன பிரச்சினைகள் உருவாகும் என்று சொல்ல முடியாது. அம்மாவும் என் மனைவியும் ஆளுக்கொரு பக்கமாக ஆட்களை திரட்டி என்னிடம் பேசச் செய்வார்கள். முதலில் அம்மா என்னுடைய அக்காவையும் பிறகு தம்பியையும் பேசச் செய்வார். அவர்கள் நீதிபதிகளின் தோரணையில் எனக்கு தண்டனைகளை வழங்குவார்கள். குறைந்தபட்ச தண்டனையாக நீதிபோதனை வழங்குவார்கள். மன்னிப்பு தருவதற்கு யோசிப்பதாக சொல்வார்கள். இதனால் யாருடைய செல்ஃபோன் அழைப்பையும் இந்த மாதிரியான நேரத்தில் எடுப்பதில்லை. சிறிது நாட்கள் விட்டு வைத்திருந்தால் அணைந்துவிடும்.

ஃபோனை பாக்கெட்டில் வைத்துவிட்டு என்னுடைய மேஜைக்கு சென்றேன். நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். அலுவலகத்தைக் கூட்டும் பெண் என்னிடம் வந்து, “ஸார் இன்னமும் சாப்பிடல நூறு ரூபாய் கொடுங்க ஸார்” என்று அருகில் வந்து நின்றாள்.

“நாலு இட்டிலிக்கு இருபது ரூபாய் போதும். எதுக்கு நூறு ரூபாய்.”

“எங்க நாத்தனாகாரி அவுங்க வீட்டுல சண்ட போட்டுக்கிட்டு வந்துருக்கா ஸார், மூணு நாள் இருப்பா. எதாச்சும் கறிபுளி எடுத்துப் போட்டு அனுப்பனும் ஸார். வவுத்து பிள்ளைக்காரி” என்றாள். அவளுக்கு நூறு ரூபாய் கொடுத்தேன்.

“மேனேஜருக்கிட்டே சொல்லாதிங்க ஸார். சம்பளத்தில கழிச்சுக்குருவாங்க. நான் தனியா உங்களுக்குத் தர்றேன்” என்று சொன்னவள் வேகமாக அலுவலகத்தை விட்டுச் சென்றாள். அலுவலகத்தில் நடக்கும் மாதாந்திர இரவு நிகழ்ச்சிகளுக்கு அவளுடைய வீட்டிலிருந்துதான் மீன் குழம்பும் இட்டிலியும் வரும். வாரக்கணக்கில் அலுவலகம் முழுக்க மணந்து கிடக்கும்.

அலுவலகத்திற்கு முதலில் வந்தது ரமேஷ்குமார். கையெழுத்திட்டு விட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வீட்டில் காலை உணவு உண்பதில்லை. தினமும் ஏசியில் அமர்ந்து காலை உணவு சாப்பிட வேண்டுமென்பதுதான் அவருடைய விருப்பமாகும். அப்படியே செய்வார். ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள்.

பாட்டுச்சத்தம், செல்ஃபோன் அழைப்பு, கடுமையான வாதங்கள், சிரிப்பு, தேநீர் இடைவெளியின் போது ஒருவரையொருவர் புகழ்ந்து பேசிக்கொள்வது, தன் முன்பாக நின்றிருப்பவர் சென்றதும் அவருக்கு முதுகில் கத்தி வைப்பது என்கிற சம்பிரதாயமான நடவடிக்கைத் தொடர்ந்தது.

பிற்பகல் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். எனக்கு ஃபோன் வந்தது. மூன்று ஐந்து ஐந்து மூன்று என்று முடியும் எண். அழைப்பை எடுக்க யோசித்தேன். பேச்சைத் தொடர வேண்டுமா என்பதுதான் யோசனை. திரும்பத் திரும்ப அழைப்பு வந்தபடி இருந்தது. என்னையும் என்னுடைய அலைபேசியையும் அமைதிப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால், அந்த எண்ணிலிருந்து அழைப்பு விடாமல் வந்தபடி இருந்தது. ஒரே ஒரு முறை எடுத்து பேசிவிட்டால் போதும் என்கிற மனநிலைக்கு வந்தேன்.

ஹலோ என்று சொல்வதற்கு முன்பாக, “ஸார் எங்க அம்மா வீட்டுக்கு இன்னும் போகல ஸார். கோபத்தில அங்கயே இருக்காங்க. கொஞ்ச நீங்க போய் சமாதானம் செய்ய முடியுமா ஸார்” என்று அப்பெண் என்னிடம் கெஞ்சினாள்.
என்னுடைய அலுவலக பிரச்சினைகளைச் சொல்லி வெளியூரிலிருந்து வந்து வேலை பார்க்கிறேன் என்பதனை விளக்கி மன்னித்துவிடும்படியாகச் சொன்னேன். அப்பெண் கெஞ்சினாள்.

“ஸார், சூசைட் செஞ்சிட்டாங்கன்னா பெரிய பிரச்சினை ஸார். தயவு செய்து போய் பாத்து பேசுங்க ஸார்.”

எனக்கு கோபம் வந்தது. அதேநேரம் பயமாகவுமிருந்தது. அந்த வயதானப் பெண் பேசியதிலிருந்து தற்கொலை செய்துகொள்கிற எண்ணம் எதுவுமில்லையென்றுதான் தோன்றியது. ஆனால், ஒருவேளை தற்கொலை செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்ளாமலிருக்க என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். அலுவலகத்தில் எம்.டி. இன்னமும் வரவில்லை. மனேஜரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு கோயிலுக்குச் சென்றேன். அந்த வயதான அம்மா அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கு யாருமில்லை. கோயில் முழுக்கத் தேடினேன். இல்லை.

ஃபோன் செய்து அந்தப் பெண்ணிடம் சொன்னேன். “உங்கம்மா இல்லம்மா. கோயில் முழுக்கத் தேடிட்டேன். நீங்க வேற யாருக்காச்சும் ஃபோன் போட்டு தேடிப் பார்க்கச் சொல்லுங்க” என்றேன்.

அவள் பதில் எதுவும் பேசவில்லை. அழுவது மாதிரி கேட்டது. நான் ஃபோனை துண்டித்துக் கொண்டேன். மதிய சாப்பாட்டிற்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வறைக்குச் சென்று தொலைக்காட்சிப் பார்த்தேன். நியூஸ் சேனல்களை திரும்பத் திரும்பப் பார்த்து தேநீர் குடிக்கும் நேரத்திற்கு வெளியே வந்தேன்.

என் மகளிடமிருந்து ஃபோன் வந்தது. வீட்டில் நடந்த சண்டையால் சமையல் செய்யவில்லை என்று வருத்தமாகச் சொன்னாள். பள்ளிக்கூடத்திற்கு வெறும் டிபன் பாக்ஸை கொண்டுச் சென்று பிஸ்கட்டும் மிட்டாயுமாக தின்று வந்திருக்கிறாள். ஃபோனை அம்மாவிடம் கொடுக்கச் சொன்னேன்.

அவள் சமைக்கவில்லையென்பதைப் பற்றி எதுவும் கேட்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு ஃபோனை கொடுத்தாள்.

ஹவுஸ் ஒனரிடம் பேசி சமாதானம் செய்கிறேன். இரண்டு மூன்று நாட்களில் தண்ணீர் பிரச்சினை சரியாகிவிடும். பட்டினி கிடக்காமல் சமைத்து சாப்பிடுங்கள் என்று சொன்னேன். “சரி சரி சமைச்சு கொட்டுறேன்” என்று வெடுக்கென்று பேசி துண்டித்தாள்.

தேநீர் கப்பை வாங்கிக்கொண்டு பால்கனிக்குச் சென்றேன். ஏற்கனவே, ரமேஷ்குமாரும் சில பணியாளர்களும் நின்றிருந்தனர். சினிமா பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. நயன்தாரா பொங்கல் வைக்கும் காட்சியை செல்ஃபோனில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் ஆட்கள் சிலர் பரபரப்பாக ஓடிச் செல்வதைப் பார்த்தேன். செக்யூர்ட்டியிடம் விசாரிக்கச் சொன்னேன்.

செக்யூரிட்டி விசாரித்துவிட்டு, கோயில் குளத்தில் யாரோ பெண் விழுந்து விட்டதாக சொன்னார். அப்பெண்ணை காப்பாற்றுவதற்காக தீயணைப்பு ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று தகவல் கொடுத்தார். மாடியிலிருந்து கீழே இறங்கும் போது திரும்பவும் அந்த எண்ணிலிருந்து ஃபோன் வந்தது. எடுக்கவே இல்லை. மெயின்ரோட்டுக்குச் சென்று குளத்திற்கு ஒடினேன். ஓடும் போதுதான் தெரிந்தது கால்களில் செருப்பு அணியவில்லை என்பதை. குளத்தின் கரையில் நின்றிருந்தவர்களை ஒதுக்கிவிட்டு எட்டிப் பார்த்தேன். தீயணைப்பு துறை வீரர்கள் நின்றருந்தனர்.

திரும்பவும் ஃபோன் வந்தது. உடம்பு முழுக்க நடுங்கியது. வியர்த்தது. என்னையறியாமல் ஃபோனை பாக்கெட்டிலிருந்து எடுத்து பேசினேன்.

“ஹலோ.”

“ஸார் அம்மா எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க ஸார். தகவல் சொல்லுறதுக்காகத்தான் கூப்பிட்டேன்” என்றாள் அந்தப் பெண்.

நான் எதுவும் பேசவில்லை. ஃபோனை துண்டித்துவிட்டு குளத்தின் படிக்கட்டில் நடந்தேன். கரையின் ஒருபுறத்தில் ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. தீயணைப்பு பணியாளர்கள் அப்பெண்ணை காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

“தவறி விழுந்துட்டாங்களா” என்று கரையில் நின்றிருந்தவரிடம் கேட்டேன்.

“இல்ல ஸார் பிள்ளைகளோட பேசிட்டு இருந்தாங்க. திடீருன்னு குளத்தில குழந்தைகளோட விழுந்துட்டாங்க. குழந்தைகள இங்கிருந்தவங்க எல்லாம் சேந்து தூக்கிட்டாங்க. அந்தம்மாவை விட்டுட்டாங்க.”

“குழந்தைங்க பொழைச்சுக்கிச்சா.”

“ம் இரண்டு குழந்தைக்கும் மூக்கிலயும் வாயிலயும் தண்ணி போயிருச்சு. காப்பாத்திட்டாங்க.”

“அந்தம்மா பொழைச்சுவாங்களா” என்று கேட்டேன். அவர் என்னை பார்க்காமல் குளத்தைப் பார்த்தார். படிக்கட்டில் இரண்டு கட்டைப் பைகள் தனியாக கிடந்தன. அதில் மடித்தும் மடிக்காமலும் சுருட்டி திணிக்கப்பட்ட சேலைகள் குழந்தைகளின் பள்ளிக்கூடச் சீருடைகள் இருந்தன. நான் வேகமாக அந்த பைகளின் அருகே சென்றேன். அந்த பையிலிருந்து செல்ஃபோனின் சத்தம் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

ஓவியம்: பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...