செல்வம் தயங்கி மருத்துவமனைப் படி ஏறினான்.
ஞாயிறு என்பதால் கூட்டம் இல்லை மருத்துவமனையில். துர்கா இங்குதான் சென்றிருப்பதாகச் சொன்னார்கள் வீட்டில். துர்காவை எங்கு தேடுவது? யாரிடம் கேட்பது? என்று தெரியவில்லை.
மருத்துவமனையின் பிரம்மாண்டமே அவனை பயமுறுத்தியது. இந்த மாதிரி இடத்திற்கு வருவது இதே முதல் முறை. படிக்காதவன், கூலி வேலை வேறு. ரொம்ப ஆடம்பரமான இடங்களைப் பார்த்தால் இயல்பாக ஒரு தயக்கம் எழுந்தது. தயங்கி முன்புறமிருந்த ரிசப்ஷனை நெருங்கினான்.
“யார் சார்? என்ன வேணும்?”- அங்கிருந்த இளம்பெண்.
செல்வம் தயங்கி, “ என் சம்சாரம் இங்க வந்ததா சொன்னாங்க கிராமத்துல.”
“என்ன கிராமம்?”
“இங்கதான் நல்ல கவுண்டன் பாளையம்.”
கசங்கிய லுங்கி, சின்னக் கட்டம் போட்டு கையருகில் தையல் விட்டிருந்த சட்டை. கோடான மீசை. அருகில் சின்ன மச்சம். கருத்த நிறம். மெலிந்த தோற்றம். பேச்சில், நடையில் தயக்கம், அவனின் வறுமையை எடுத்துக் காட்டியது.
“உங்க சம்சாரம் பேரு துர்காங்களா?”
“ஆமாங்க.”
“இப்படியே நேரப் போய் படி ஏறினா சின்ன வராண்டா வரும். அங்க இருப்பாங்க. போங்க.”
இருந்தாள். இவனைப் பார்த்ததும் எழுந்து வந்தாள்.
“நீங்க எப்படி வந்தீங்க? யார் சொன்னாங்க?”-கண்ணில் பயம் தெரிந்தது.
“டீக்கடை அண்ணன் சொல்லிச்சு. எதுக்கு வந்தே?”
துர்காவின் முகத்தில் லேசாகப் பயம் தெரிந்தது. ஏழ்மை தாண்டவமாடும் குடும்பம். இதில் தான் செய்ததை என்ன சொல்வானோ என்ற பயம். செல்வத்திற்கு கட்டிட கூலி வேலை. அப்பா இல்லை. அம்மா மட்டுமே. துர்கா நாலு வீடுகளுக்கு வேலை செய்கிறாள். இது தவிர பூ கட்டி விற்கிறாள்.
ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்பினாலும் முன்பு போல் அதிக வேலை இல்லை. பூ வியாபாரமும் இல்லை. ஜல்லி எடுக்கும்போது மேலிருந்து கீழே விழுந்து முழங்கை எலும்பு உடைந்து வைத்தியச் செலவு, வேலையும் இல்லை. மூன்று மாதமாக ஒருவேளை சாப்பாடே திண்டாட்டம். அவ்வப்போது கிடைக்கும் வேலை, ரேஷனில் இலவசமாகக் கொடுக்கும் பொருள்களில் வயிறு நிரம்புகிறது. இதில் துர்கா காசு வேறு சேர்க்கிறாள், ஒரு குழந்தைச் செல்வம் வேண்டி.
திருமணம் ஆகி பத்து வருஷம் ஆகிறது. குழந்தை இல்லை. கேட்காத பேச்சுகள், ஏளனம், கேலி எல்லாம் கேட்டு, வெம்பி வைத்தியம், கோவில் என்று போயும் கண் திறக்கவில்லை தெய்வம். துர்கா மனதளவில் பைத்தியம் ஆகிவிட்டாள். சில சமயம் வெகாளம் வந்தது போல் கத்தி கூச்சல் போட்டு, பொருள்களை விட்டெறிந்து பேயாட்டம் ஆடுவாள். சில சமயம் மௌனமாக எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி கண்ணீர் வழிய அமர்ந்திருப்பாள்.
அந்த நேரத்தில் அவளைப் பார்க்கவே பயமாக இருக்கும். அவனின் அம்மாவும் இட்லி கடை போட்டு, தன்னால் முடிந்த காசு சேர்த்துக் கொடுக்கிறாள். தயங்காமல் சொல்லும் பரிகாரங்கள், டாக்டர்கள் எல்லாம் பார்த்தாகி விட்டது.
நிறைய பரிசோதனைகள் செய்தாகி விட்டது. எந்தக் கோளாறும் இல்லை. கிராமத்தில் லேடி டாக்டர்தான் சில பரிசோதனைகள் செய்து, குழந்தை பிறக்க செயற்கை முறைகளைப் பயன்படுத்தலாம் என்றார். அதற்காக பத்தாயிரம் வரை சேர்த்திருந்தாள் துர்கா. சோறே இல்லாமல் பட்டினி கிடந்த ஊரடங்கு நேரத்தில் கூட அந்தப் பணத்தை எடுத்ததில்லை. அதை எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் வேறு வந்திருந்தாள்.
பங்களா புதூரில் ஒரு கட்டிட வேலை ஆரம்பிக்கிறது. மேஸ்திரி வரச் சொல்லியிருந்தார். அவனின் அம்மா துர்காவுக்கு குழந்தை வரம் வேண்டி பாரியூருக்கு நடந்து போயிருந்தாள். செல்வம் மதியம் வெயிலில் வீட்டுக்கு வந்த போதுது துர்கா இல்லை. “அது கோபியில பெரிய ஹாஸ்பிடலுக்கு போயிருக்கு செல்வம்’’ என்றார் டீக்கடை அண்ணன்.
“என்னாச்சு அண்ணே?”
“தெரியலை சாமி. வூட்டுக்காரர் வந்தா சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு போச்சு. கூட எதுக்கால வூடு கிழவியும் போச்சு.”
பதறி ஓடி வந்தான் செல்வம்.
“எதுக்கு திடீர்னு இங்க வந்தே?”
“நான் எனக்குன்னு வரலீங்க”- தயங்கினாள் துர்கா.
“பின்னே?”
அவள் வந்தது எதிர் வீட்டுக் கிழவிக்காக. கட்டிட வேலைக்காக வட மாநிலத்திலிருந்து வந்த ஒரு குடும்பம். கிழவிக்கு நாலு பிள்ளைகள். அவளின் ஆதாரம். புருஷன் இல்லை. கொரானா வந்து பிள்ளைகளுக்கு வேலை இல்லை. வாழ்வே கேள்விக்குறி. இரண்டு வருடமாக ஏதேதோ வேலை தேடி எதுவும் சரிப்பட்டு வரவில்லை.
சொந்த ஊரோடு போக முடிவு செய்தவர்களுக்கு மனித நேயமும் இறந்துவிட்டது. எதற்கும் பிரயோஜனம் இல்லாத தங்கள் எண்பது வயதுத் தாயை இங்கே அநாதரவாக விட்டு விட்டு இரவோடு இரவாகக் கிளம்பி விட்டது அந்தக் குடும்பங்கள்.
கிழவி தூங்கும்போது உதறிப் போய் விட்டார்கள்
காலையில் விழித்துப் பார்க்கும்போது அவளின் கொழு கொம்பாய் இருந்த பிள்ளைகள் இல்லை. மொழியும் இன்னும் சரியாகப் பழகவில்லை.
செய்வதறியாது உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு கிடந்தது கிழவி.
மூன்று நாளாக சோறு, தண்ணீர் இல்லாமல் வீட்டுக்குள் கிடந்த அவளை ஓனர் தூக்கி வெளியில் எறிந்துவிட்டார். திண்ணையில் நடுங்கியபடி நினைப்பில்லாமல் கிடந்த கிழவியை துர்கா பார்த்துப் பதறி, ஒரு ஆட்டோவில் போட்டு இங்கு கொண்டு வந்தாள். அப்போதே பாதி உயிர் இல்லை கிழவிக்கு
“யார்கிட்டயும் சொல்ல நேரம் இல்லை. யாரும் கிட்டக்க வர மாட்டேன்றாங்க. மயங்கிப் போய் கிடந்துச்சு. பாத்துகிட்டு சும்மா எப்படி இருக்கறதுங்க. சரின்னு நானே கூட வந்துட்டேன். கொரானா டெஸ்ட் எல்லாம எடுக்கணும், குளுகோஸ் ஏத்தணும்னு பத்தாயிரம் கட்டச் சொன்னாங்க. நான் சேர்த்து வச்சதை கட்டிட்டேன்.”
“அதை எந்தச் செலவுக்கும் எடுக்க மாட்டியே துர்கா”
துர்கா பதில் பேசாமல் எங்கோ தூரத்தில் தெரிந்த மலைகளை வேடிக்கை பார்த்தபடி நின்றாள்.
என்ன பதில் சொல்வது? செல்வம் கை உடைந்து கிடந்தபோது கூட மேஸ்திரிதான் நஷ்ட ஈடு என்று வைத்தியச் செலவு செய்தார். மாமியார் சொன்னபோது கூட, “இல்லைங்க அத்தை” என்று மறுத்துவிட்டாள்.
இப்போது அவளை எது செலுத்தியது?
தன்னை உற்று நோக்கும் செல்வத்தின் பார்வையை தவிர்க்க நகர்ந்து நின்றாள் துர்கா.
“சரி, கிழவியை இங்க விட்டாச்சில்ல. போலாம்.”
“இருங்க டாக்டர் என்ன சொல்றாருன்னு தெரியலையே?”
“ஏன், கிழவியை கூட்டிட்டுப் போய் அவங்க புள்ளைகிட்ட விடப் போறியா?”
“- – – – – – – – – – – “
அதற்குள் டாக்டர் வெளியில் வந்தார்.
“துர்கா, நல்ல காரியம் செஞ்சம்மா. இன்னும் ஒருநாள் போச்சுன்னா உயிர் போயிருக்கும். எனக்குத் தெரிஞ்ச ஆதரவற்ற இல்லம் இருக்கு. அங்க அனுப்பிடறேன். பெத்த பிள்ளைகள் உதறிட்டுப் போன இந்த நேரத்துல நீ தெய்வமா நின்னு காப்பாத்தி இருக்கே. நல்லவேளை கொரானா தொற்று இல்லை.”
டாக்டர் துர்காவைப் பாராட்டி விட்டுச் சென்றார்.
“உள்ள போய் பாட்டியைப் பாருங்க”- நர்ஸ்.
இருவரும் உள்ளே போய் கிழவியைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வெளியில் வந்தார்கள். கிழவி அவர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, கண்ணீர் விட்டது. மௌனமாக வெளியில் வந்த பிறகு செல்வம் கேட்டான்.
“இருந்த பணத்தை அந்தக் கிழவிக்குக் கட்டிட்டே. நாளைக்கு உன் சிகிச்சைக்கு என்ன பண்ணப் போறே?
“திருப்பியும் சேக்கலாம்க.”
“எத்தனை வருசத்துக்கு? காசு என்ன தோட்டத்துல காய்க்குதா?”
“மனசுல காய்க்குதுங்க.”
செல்வம் மௌனமாக இருக்க, அவளே பேசினாள்.
“என் வயித்துல ஒரு உசிர் வளருவதை விட, துடிக்கிற ஒரு உசுரை காப்பாத்தறது முக்கியமில்லைங்களா? தாய்மைங்கறது என்னங்க? எல்லோர்கிட்டயும் அன்பு காட்டறதுதானே?”
அவள் மெதுவாகத்தான் பேசினாள். செல்வம் அவள் கையைப் பற்றிக் கொண்டான். தொண்டை நனைந்து உப்புக் கரித்தது. அவள் வார்த்தைகள் நெஞ்சைத் தொட்டது.
சிறந்த கதை மனிதாபிமானம் மிக்க மனிதர்கள் எளியவர்கள்.
அருமையான கதை அக்கா. வாழ்த்துகள்.
ரெம்ப அருமையாக இருந்தது மேம்,
மனமார்ந்த வாழ்த்துகள்????????????
தாய்மை என்பது உயிரை சுமப்பது மட்டுமல்ல, போக இருக்கும் உயிரை காப்பதும் ஆகும்…