No menu items!

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 03

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 03

இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம். வரும் நாட்களில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அளவு; பணம் இருந்தாலும் வாங்க பொருட்கள் இருக்காது எனும் நிலை வரும் என்று ஆட்சியாளர்களே எச்சரிக்கிறார்கள். ஏன் இலங்கை இப்படியொரு நெருக்கடிக்குள்ளானது? இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? வரும் நாட்கள் எப்படி இருக்கும்? இந்த மினி தொடரில் விளக்குகிறார் ஈழத் தமிழ் மூத்த பத்திரிகையாளர் கருணாகரன்…

யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய (64 வீதமான வாக்குகளைப் பெற்று) வெற்றியைப் பெற்ற இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே மக்களால் விரட்டப்பட்டுள்ளார். தோல்வியடைந்த கோட்டாபய நாட்டிலேயே இருக்க முடியாதென்று அவசர அவசரமாக மாலைதீவுக்குச் சென்றார். அங்கேயும் எதிர்ப்பாளர்கள் அவரை விடவில்லை. இதனால், அங்கிருந்து வெளியேறி சிங்கப்பூரில் இறங்கியிருக்கிறார். அங்கிருந்தே உத்தியோகபூர்வமான பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். அடுத்ததாக சிங்கப்பூரிலிருந்து எங்கே செல்வார் என்று தெரியவில்லை. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அவர் தஞ்சமடைய முடியாது. ஏன் அவுஸ்திரேலியாவில் கூட. அங்கெல்லாம் சென்றால் எதிர்ப்பாளர்களைச் சந்திக்க நேரிடும். ஏறக்குறைய ஒரு அரசியல் அநாதை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கோட்டாபய.

இனி அவர் அநேகமாக அரபு நாடொன்றுக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் அங்கே அவருக்குப் பாதுகாப்புக் கிட்டலாம். பொதுவாகவே அரபு எமிரேட்ஸ் இவ்வாறானவர்களுக்கு பாதுகாப்பான நாடு. இதுதான் காலத்தின் விந்தை. பதவியில் இருந்தபோது முஸ்லிம் வெறுப்பைக் கடுமையாக வெளிப்படுத்தியவர் கோட்டாபய. சிங்கள பௌத்த தீவிரவாத நிலைப்பாடுடையோரைத் திருப்திப்படுத்துவதற்காக பொதுபலசனா, இராவணசேனா, மகசோன் படை போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து வளர்த்தவர். தீவிர பிற சமூக எதிர்ப்பாளரான ஞானசார தேரருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆட்சியில் அவரை முன்னிலைப்படுத்தியவர். இவையெல்லாம் தமிழ், முஸ்லிம் வெறுப்புவாதத்தைக் கொண்டவை. அதிலும் ‘மெத் செவன’ என்ற பெயரில் பொது பல சேனாவின் பௌத்த தலைமைத்துவ அகடமியை (Buddhist Leadership Academy of Bodu Bala Sena) கோட்டாபய போய்த் திறந்து வைத்தது இதில் முக்கியமானது. இதன் மூலம், பொதுபலசேனாவோடு பகிரங்கமாக, தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கோட்டா சிங்களத் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்தினார்.

கோட்டாபயவினுடைய இந்த முஸ்லிம் வெறுப்புவாதம் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், இலங்கையில் முஸ்லிம்களின் எதிர்காலம் எப்படி என்ற கேள்வி எழுந்தது. அந்தளவுக்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டனர். ஒடுக்கப்பட்டனர். அவர்களுடைய பள்ளிவாசல்கள், வணிக நிலையங்கள், செறிந்து வாழும் நகரங்கள், பிரதேசங்கள் எங்குமே நெருக்கடிகள் உருவாக்கப்பட்டன.

அடாவடிகள், தாக்குதல்கள், அழிப்புகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. அளுத்தமகவில் ஞானசார தேரரின் தூண்டுதலில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல், அப்படியே கண்டி – திகண தொடக்கம் குருநாகல், அம்பாறை எனத் தொடர்ந்தது. அம்பாறையில் நடந்த சம்பவம் மிகச் சாதாரணமான ஒன்று. ஆனால், அதை அவர்கள் உருவாக்கிய விதம் இனவாதத்தின் கசப்பு எப்படியானது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

கொத்துரொட்டிக் கடையில் (பரோட்டாக் கடை) உணவில் கருத்தடை மாத்திரையைக் கலந்திருக்கிறார்கள் என்று முஸ்லிம்கள் மீது சிங்களத் தரப்பினால் குற்றம் சுமத்தப்பட்டது. கடையை நடத்தியவர்கள் முஸ்லிம்கள். சம்பவம் நடந்த நகரம் சிங்கள மக்கள் அதிகமாக வாழுமிடம். ஓரிரவில் இது முஸ்லிம் விரோதமாக வளர்ந்து பெரும் தாக்குதல்களெல்லாம் நடந்தன. இதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதிலாக மேலும் இதை ஊக்குவிக்கும்விதமாகவே பௌத்த மதகுருக்கள் தொடக்கம் அரசுத் தரப்பின் நடத்தைகள் வரை அனைத்தும் இருந்தன.

கோட்டாபய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர். அப்படி இருந்த காலத்திலேயே அவர் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராகத் தீவிர நிலையில் செயற்பட்டார். புலிகளை அழிக்கிறோம் என்ற பேரில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை, இறுதிப்போரின்போது சரணடைந்தோரைச் சுட்டுக் கொன்றது, முகாம்களில் ஏனையவர்களை அடைத்தது, ஆயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டது – இப்படிப் பல வழிகளிலும் சிறுபான்மைச் சமூகங்களை ஒடுக்கி அச்சுறுத்தினார். கொவிட் 19இன் காரணமாக மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை (ஜனாஸாக்களை) அவர்களுடைய மரபுப்படி அடக்கம் செய்ய அனுமதிக்காமல், அவற்றை எரியூட்ட வேண்டும் என்று சட்டமிட்டார். கூடவே மாட்டிறைச்சி உண்பதற்கான தடை கொண்டு வரப்படும், ஹலால் பிரச்சினை எனப் பலவற்றை உருவாக்கினார்.

இதனால்தான் அவரைச் சிங்கள பௌத்தவாதிகள் தீவிரமாக ஆதரித்தனர். ஜனாதிபதித் தேர்தலில் 64 வீதம் வாக்குகளைப் பெறுவதற்கு இந்தத் தீவிர சிங்கள பௌத்த இனவாதம்தான் அடிப்படைக் காரணம். மறுவளத்தில் தமிழ், சிங்கள, மலையக மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க மறுத்தனர். தமது எதிரியாக – மன்னிக்க முடியாத ஆளாகக் கருதினர்.

இது கோட்டாபயவின் கோபத்தை மேலும் கூட்டியது.

தேர்தல் முடிந்த பிறகு, “நான் சிங்கள மக்களின் தலைவர். அவர்களே என்னை ஆதரித்தவர்கள். ஆகவே அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதே என்னுடைய முதல் வேலை” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். பின்னர் ஆட்சி நடைமுறைகளையும் அப்படித்தான் வகுத்துக் கொண்டார், வைத்துக் கொண்டார். இதற்கு வலுச் சேர்ப்பதாக ஞானசார தேரர், “ஒரே தேசம், ஒரே சட்டம்” என்று ஊழையிட்டார். சத்தமிட்டார்.

கோட்டாபய ஆட்சிக்கு வந்தபோது தீவிர சிங்கள பௌத்தவாதிகள் அவரைக் கொண்டாடினர். இந்த ஆதரவு அவர் முன்னர் செய்த குற்றங்களையும் தவறுகளையும் மறைத்தது. குடிநீருக்காகப் போராடிய மக்களை படையினரைக் கொண்டு அடக்கியிருந்தார். இதில் சிலர் படுகொலை செய்யபட்டுமிருந்தனர். கோட்டாபயவின் படைஅதிகாரத்தைக் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களைக் கடத்தியது, படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டுகளும் கோட்டாவின் மீது இருந்தது. ஆனால், கோட்டாவின் சிங்கள பௌத்த இனவாதம் எல்லாத் தவறுகளையும் மறைத்து அவரைப் புனிதராக்கியது. பெருந்தலைவராக வளர்த்தது. இதற்குச் சிங்கள பௌத்த பீடங்களின் ஆசியும் ஆதரவும் கிடைத்தது.

ஆட்சிக்கு வந்த கோட்டாபய, அதற்கு முந்திய அதிபர்களை விட தான் வேறுபட்டவர் என்று காண்பிக்கும் விதமாக, மிகச் சாதாரணராக எங்கும் சென்றார். அரிசிக் கடை தொடக்கம் ஆஸ்பத்திரி வரையில் அதிரடியாக சென்று மக்கள் நலன்களைக் கவனித்தார். அரச அலுவலங்களில் நேரில் சென்று மக்களுக்கான சேவை சரியாக நடக்கிறதா என்று பார்த்தார். பணிகள் சீரில்லாத இடங்களில் அவற்றை விசாரித்து உடன் நடவடிக்கை எடுத்தார். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மக்கள் நலனுக்காக இறங்கி நிற்கக் கூடியவர் ஜனாதிபதி என்று சனங்களின் மனதில் பதிய வைத்தார்.

கோட்டாபயவின் இந்த நடவடிக்கைகளால் மிகத் துரிதமாக அரச சேவை மையங்கள் சீராகின. துரிதமாக மக்கள் சேவைகளில் ஈடுபட்டன. இதைக் கண்ட மக்கள், வரலாற்றுப் புதினமாக – தீராத அதிசயமாக, ‘இவரே எங்களுடைய தலைவர். சரியான ஆளைத்தான் அதிபராகத் தெரிவு செய்திருக்கிறோம்’ என்று எண்ணினர். ஊடகங்கள் பலவும் கோட்டாபயவுடைய கடந்த காலத்தை விட்டுவிட்டு, அவருடைய புதிய அணுகுமுறையைக் குறித்து ஆச்சரியத்தோடு பாராட்டின. ஆனால், எல்லாமே ஓராண்டு அதிசயம், ஆச்சரியமாகிச் சுருண்டு வாடிவிட்டன. கொவிட் -19இன் போது கூட சிறப்பாக நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சிறந்த நாடு என்று கோட்டாபய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் பாராட்டியது. ஆனால், அடுத்த ஆண்டுகளுக்குள் நிலைமை முற்றாகவே மாறியது.

கோட்டாவை ஆதரித்து, ஆட்சிக்குக் கொண்டு வந்த ‘வியத்கம’ என்ற புத்திஜீவிகள் அணியைச் சுருக்கித் தன்னுடைய சட்டைப் பையுக்குள் வைத்துக்கொண்ட கோட்டாபய, தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவளித்து வந்த, அவரை அரசியல் அரங்கிற்கும் ஆட்சி அறிமுகத்துக்கும் கொண்டு வந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவைக் கூட மீறிச் செயற்படத் தொடங்கினார்.

நாட்டை முழுமையாக இராணுவ மயப்படுத்தும் விதமாக சிவில் நிர்வாகத்துறைகளில் இராணுவ ஆதிக்கத்தை ஏற்படுத்தினார். பல சிவில் துறைகளுக்கும் படை அதிகாரிகளே நியமிக்கப்பட்டனர். இராஜதந்திரிகள் மட்டுமல்லாமல், உள்ளுரில் ஆளுநர்கள், அமைச்சுக்களின் முக்கிய பொறுப்பில் உள்ளோர் எனப் பல பதவிகளிலும் இராணுவத்தை நிறுத்தினார். இது ஜனநாயகவாதிகள், மனித உரிமையாளர்களிடையே கடுமையான எதிர்ப்பை உண்டாக்கியது. ஆனாலும் இதைக்குறித்து கோட்டாபய பொருட்படுத்தவேயில்லை.

இதைப்போல தன்னிச்சையான முறையில் நிதிக் கையாள்கையையும் செய்யத் தொடங்கினார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற அரசியலதிகாரம் கோட்டாவின் நடவடிக்கைக்கான வெளியைத் தாராளமாக அளித்தது. அந்த வெளியில் அவர் தன்பாட்டுக்கு விளையாடினார்.

உண்மையில் பதவியேற்ற மூன்று ஆண்டு காலமும் கோட்டாபய விளையாட்டுப் பிள்ளையைப்போலவே நடந்திருக்கிறார். இது உடனடியாக வெளிப்பட்டது, பொருளாதார வீழ்ச்சியில். இதற்கு காரணங்களில் ஒன்றாக இருந்தது, கொவிட் 19. கொரோனாவுடன் வரிச்சலுகைகளை தாராளமாக்கினார். அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தாராளமான அரச நியமனங்கள், அளவுக்கதிகமான நிவாரணங்கள், உதவித்திட்டங்கள், மானியங்கள் எனப் பலவற்றையும் அறிவித்துச் செய்தார். இது சக்திக்கு மீறிய செயல். இதனால், யாரும் எதிர்பார்த்திராத வகையில் பொருளாதார நெருக்கடி உருவாகியது. பொருளாதார நெருக்கடியின் முதல் வெளிப்பாடு உடனடியாக மக்களைத் தாக்கும். அதுதான் நடந்துமிருக்கிறது. இப்பொழுது அது மக்களை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்து என்ன செய்வது? இனி என்ன நடக்கும்? என்று தெரியா நிலையில் சனங்கள் அல்லாடத் தொடங்கினர். நகரப்புற மக்களுக்கு எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் தடை போன்றவை பெரும் பிரச்சினையை உண்டாக்கின. இவை அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் வலுக்கள். இதோடு நாடு முழுவதிலும் உள்ள மக்கள் உணவுப் பொருள் தொடக்கம் அனைத்துப் பொருட்களையும் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. விலையும் நாளாந்தம், மணிக்கு மணி என ஏறிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் சீர்ப்படுத்துவதற்கு ஜனாதிபதியால் முடியவில்லை. ஆனால், அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி இதே எல்லாப் பிரச்சினைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

போதாக்குறைக்கு விவசாயிகளின் மடியிலும் கையை வைத்தார். விவசாயச் செய்கைக்குத் தேவையான உர இறக்குமதியையும் தடுத்து, மாற்று ஏற்பாடாக உள்ளுர் உரத்தைப் பயன்படுத்துமாறு கட்டளையிட்டார். இதில் உண்டான சாத்தியக் குறைபாடுகளைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. இது விவசாய உற்பத்தியைப் பாதித்ததோடு, விவசாயிகளிடத்திலும கோபத்தை உண்டாக்கியது.

இந்த மாதிரி எல்லாத் தரப்பிடத்திலும் இருந்து எழுந்த கூட்டுக் கோபமே கோட்டாபயவை விரட்டுவதற்கான காரணமாகியது – வலுவாகியது. அந்தக் கோபம் சாதாரணமானதல்ல. அது அத்தனை அதிகாரத்தையும் (நிறைவேற்று அதிகாரம், அதன் வழியே உள்ள முப்படைகளின் தளபதி என்ற அதிகாரம் எனச் சகலவற்றையும்) தூசியாக்கிப் பறக்க விட்டிருக்கிறது. இது ஆசியப் பிராந்தியத்தில் அண்மையில் நடந்த மிக முக்கியமான – கவனிக்கத்தக்க ஒரு மக்கள் போராட்டமும் அதன் வழியான மாற்றமும் ஆகும்.

ஆனால், கோட்டாபய பதவியை, அதிகாரத்தை இழந்து தப்பியோடினாலும், அவருடைய கட்சியான பொதுஜன பெரமுன (மொட்டுக்கட்சி) இன்னும் பலமாகவே உள்ளது. இந்தப் பலத்தில்தான் பதில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க தாக்குப் பிடித்து நிற்கிறார். இலங்கை அரசியலமைப்பின் படி அடுத்த ஒரு மாதத்திற்குள் புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும். அதற்கான போட்டிகள் உருவாகி விட்டன. முன்னரைப்போல பதில் ஜனாதிபதியாக தொடர்ந்தும் நீடிப்பதற்கு ரணிலுக்குச் சாதமான சூழல் இல்லை. Go Home Gotta என்பதைப்போல Go Home Ranil என்ற குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. ஆனாலும், அவர் இந்தக் குரல்களைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் பதவியில் – அதிகாரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறார்.

இப்பொழுது போராட்டத்தை முன்னெடுத்தோர் தாம் கைப்பற்றிய ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை போன்றவற்றை விட்டு நீங்கி உள்ளனர். அடுத்த அரசியல் நகர்வை அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதைப்பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி எல்லாம் மிகக் கவனமாக, மக்கள் நலனை முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

இப்படி போராட்டத்தரப்பினர் எச்சரித்தாலும் எதிர்க்கட்சிகளும் சரி, ஆளும் தரப்பும் சரி அதையெல்லாம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அடுக்கடுக்காகப் பல அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார் சபாநாயகர். அரசியலமைப்பின் பிரகாரம், இந்த மாதிரி நெருக்கடி நிலையின்போது நிதானமாகச் செயற்பட வேண்டியவரும் அதிகாரமுடையவரும் சபாநாயகரே. ஆனால், அவர் குழப்பங்களை உருவாக்கும் விதமாக அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில் எப்படியோ அடுத்த வாரம் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் பாராளமன்றத்தில் நடக்கவுள்ளது. அதற்கு இப்பொழுது மூன்று பேர் போட்டியிடுவர் என்று தெரிகிறது. ஒருவர் ரணில் விக்கிரமங்க, மற்றவர் ஆளும் தரப்பிலுள்ள டலஸ் அழகப்பெரும, மற்றவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாஸ. இதில் யார் தெரிவு செய்யப்படுவார் என்பதை உறுதியளிக்க முடியாது. அப்படியான நெருக்கடியான – குழப்பமான கள நிலைவரம்.

அப்படித்தான் யாராவது ஒருவர் வந்தாலும் அவரால் என்ன செய்ய முடியும்? அவருக்கான இயங்கு வெளியை இந்தியாவும் அமெரிக்காவும் (பிராந்திய சக்தியும் சர்வதேச வல்லரசும்) எந்தளவுக்கு அளிக்கும்? என்பது கேள்வியே.

குழம்பிய இலங்கையில் மேலும் குழப்பங்களே நீடிக்கப்போகின்றன.

(தொடரும்)

இத்தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க…

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 01

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 02

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...