No menu items!

கடவுள் @ காவோ சான் ரோட் – அராத்து

கடவுள் @ காவோ சான் ரோட் – அராத்து

இடம்:

காவோ சான் ரோட்

தாய்லாந்து பேங்காக் நகரத்தில் இருக்கும் ஹேப்பனிங்கான ஒரு இடம்தான் காவோ சான் ரோடு. இது ஒரு சிறிய தெருதான். 410 மீட்டர்தான் நீளம். (ஒரு கிலோ மீட்டரில் பாதிக்கும் குறைவு – மீட்டர் கணக்கு தெரியாதவர்களுக்காக.) பேங்காக்கில் ஆடம்பரமான, செலவு பிடிக்கும் பல கிளப்புகள் உள்ளன. காவோ சான் ரோட் என்பது ‘பேக் பேக்கர்ஸ்’ மற்றும் ஏழை எளிய டிராவலர்ஸ்களுக்கான சொர்க்கம். சுற்றுலாவாசிகள், பயணிகள் அல்லாமல் லோக்கல் தாய்லாந்து மக்களும் மாலை மற்றும் இரவு வேளைகளில் கூடிக்களிக்கும் இடம். இந்த தெரு முழுக்க பார்கள், உணவகங்கள், கஞ்சா விற்பனை நிலையங்கள் மட்டுமே. தெருவிலும் ஐஸ் பெட்டி வைத்து பியர் விற்பார்கள். தள்ளுவண்டி உணவகங்களும் உண்டு. தேள், கரப்பான் பூச்சி, பூரான், தவக்களை போன்றவைகளை அவைகளின் அனாடமி கெடாமல் பொறித்து வைத்து விற்பார்கள். கருந்தேள் மட்டும் கொஞ்சம் காஸ்ட்லி, 250 ரூ. மற்ற பூச்சிகளெல்லாம் 100 ரூபாய்க்கே கிடைக்கும்.

வர்ணனை:

இரவு 10 மணி. லேசான தூறல் இருந்தது. காவோ சான் ரோடு முனையில் டாக்ஸிகள் வந்து நிற்பதும் களிக்க விரும்பும் கூட்டம் அதிலிருந்து இறங்கி காவோ சான் சாலையில் கரைவதுமாக இருந்தார்கள். மழை காரணமாக சில பெண்கள் டிரான்ஸ்பரண்டான, மெல்லிய வெள்ளை நிற ரெயின் கோட் அணிந்திருந்தனர். அவர்கள் ஒரு பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளே இருப்பது போல இருந்தது. மேல் முலை மற்றும் தொடை தெரியாத பெண்களே இல்லை என்று சொல்லிவிடலாம். முலைகளும் தொடைகளும் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் நுழைந்தால் குவிந்து கிடக்கும் கேரட்டும் கத்தரிக்காயும் நமக்கு சலனத்தையா ஏற்படுத்துகின்றன?

மழையின் காரணத்தால் கூட்டத்துக்கு எந்தக் குறையும் இல்லை. அனைத்து பார்களும் நிரம்பி வழிந்தன. பார்கள் என்றால் நம்மூர் பார்கள் போல பெரிய கதவு, பவுன்ஸர் என நினைத்துக்கொள்ளக்கூடாது. தெருவோரத்திலேயே நெருக்கமாக மேசைகள் நாற்காலிகள் போடப்பட்டு இருக்கும். உள்ளேயும் மேசை நாற்காலிகள் உண்டு. மேசை நாற்காலிகளைத் தாண்டி பலர் நின்று கொண்டே குடித்துக்கொண்டு இருப்பார்கள். எல்லா பார்களிலும் இசை பெருக்கெடுத்து ஓடும். ஒரு பாரை ஒட்டியே அடுத்த பார் என்பதால், இந்த பாரின் கடைசி வரிசை நாற்காலியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் ஒருத்தியின் முதுகை, அடுத்த பார் கடைசி வரிசை நாற்காலியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருப்பவன் முதுகு ஒத்தி எடுக்கும். நான்கைந்து பார்களின் இசை ஒன்றாகக் கலந்து தெருவில் வேறு ஒரு இசையாக புழங்கிக்கொண்டு இருக்கும்.

அந்தத் தெருவில் நீங்கள் நடந்து போனால், 6 தப்டிக்கு ஒரு முறை இசை மாறும். தெருவில் யாரும் நடந்து செல்வதில்லை. ஆடியபடியேதான் செல்வார்கள். தெருவின் அகலமும் 12 அடி இருந்தால் பெரிய விஷயம்.

மழை இன்னும் விட்டபாடில்லை. எல்லா பார்களிலும் நியான் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. கொஞ்சம் குண்டான தாய் பெண் சர்வர்கள் ஒவ்வொரு பாரிலும் பெரிய பெரிய பியர் டவர்களை தூக்கிக்கொண்டு பாம்பும் புழுவும் ஊர்வது போல கூட்டத்தினிடையே ஊர்ந்து கொண்டிருந்தார்கள். பலர் சிலுசிலுக்கும் மழையில் நடுத்தெருவில் கூட்டமாக கையில் மதுப்புட்டிகளை வைத்தபடி நடனமாடிக்கொண்டு இருந்தார்கள். காவோ சான் தெருவில் நடனம் என்பது சாதாரணமானதுதான். எந்த பாரில் நல்ல பீட்டுடன் இசை ஒலிக்கிறதோ அந்த பாருக்கு வெளியே சிறு கூட்டம் சேர்ந்து நடனமாட ஆரம்பிக்கும்.

சிறுகதை ஆரம்பிப்பதற்கு முன் சிறுகதையின் கதாபாத்திரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

காவோ சான் ரோட் முடியும் இடத்தில் இருந்து 300 அடி தூரத்தில் ஒரு தங்கும் விடுதி இருக்கிறது. குளிர் சாதன வசதியுடன் கூடிய நாகரீகமான அறைதான் என்றாலும் ரூ. 1300 தான் வாடகை. அந்த அறைகளில் நால்வர் இருக்கின்றனர். இரண்டு அறைகள் எடுத்துள்ளனர். அவர்களுக்கு நாளை மதியம் இந்தியா திரும்ப விமானம். இந்த சிறுகதையில் இவர்களுக்கு பெயர் முக்கியம் இல்லை. வயதும் முக்கியம் இல்லை. ஜெண்டர் வேண்டுமானால் முக்கியமாக இருக்கலாம். நால்வரும் ஆண்கள், வெவ்வேறு வயதுடையவர்கள். 30 முதல் 70 என வரை என வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒருவர் டீட்டோலர், இன்னொருவர் கஞ்சா பழக்கம் உள்ளவர்.

இந்த நால்வரில் ஒருவர் அறையிலேயே பியர் அடித்துக்கொண்டு இருக்கிறார். இன்னொருவருக்கு பெரிதாக பியர் அடிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும், அடுத்தவர் செய்வதை செய்யும் பழக்கம் கொண்டவராக இருப்பதால் அவரும் பியர் அடித்துக்கொண்டு இருக்கிறார்.

சிறுகதை:

நால்வரும் தங்கள் விடுதியிலிருந்து வெளிவந்தார்கள். வெளிவந்த உடனேயே அவர்கள் முகத்தில் மூர்க்கமாக மழை அடித்தது. மழையை முதலில் எதிர்கொள்ளும் போது மூர்க்கமாகத்தான் தோன்றும். அது சிறு தூறலாக இருந்தாலும். அந்த நால்வரில் வயதில் மூத்தவராக இருந்தவர், “மழை நச நசன்னு இருக்கு. எனக்கு மழையே பிடிக்காது… போயிடலாம்” என்றார்.

“கொஞ்ச நேரம் நின்னு பாக்கலாம், மழை விட்டிச்சின்னா போலாம். ரூமுக்குப் போய் என்ன செய்யப் போறோம்” என்றான் அவர்களில் ஒருவன்.

நால்வரும் சாலையோரம் இருக்கும் கடைகளின் கூரையினூடாக நகர்ந்து நகர்ந்து காவோ சான் ரோட் முகப்புக்கு எதிரே வந்து நின்றார்கள்.

காவோ சான் ரோட் முகப்பில் ஒரு அட்டகாசமான கஞ்சா ஷோ ரூம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. உள்ளேயே கஞ்சா அடிக்க வசதி இருந்தது. அதை அந்த நால்வரில் ஒருவன் ஆசையாகப் பார்த்தான்.

“போய் வேணா ஒரு இழுப்பு இழுத்துட்டு வர்ரது?”

“இல்ல, வேலை முடிஞ்சதும் பாத்துக்கறேன்.”

தூறல் இன்னும் விடவில்லை.

“தூறல் விட்ட மாதிரி இருக்கு” என்று சொன்னபடியே ஒருவன் காவோ சான் ரோடுக்குள் ஓடிப் புகுந்தான்.

வேறு வழியில்லாமல் மழை பிடிக்காதவர், பிடிக்குமா பிடிக்காதா எனத் தெரியாதவர் என அனைவரும் காவோ சான் ரோடுக்குள் புகுந்தனர். காவோ சான் ரோடுக்குள் புகுந்த பிறகு மழை என்பது ஒரு விஷயமாகவே இல்லை. பெய்ஞ்சாலும் ஒண்ணுதான் பெய்யலைன்னாலும் ஒண்ணுதான் என்ற நிலைமைக்கு உள்ளானது மழை.

இடது பக்கம் இருந்த பார் சற்றே நாகரிகமாக இருப்பது போலத் தோன்றியதாலும், ஆண்களை விட பெண்கள் அதிகம் இருப்பது போன்ற ஒரு காட்சிப்பிழையை தந்துகொண்டிருந்ததாலும், இடமும் கொஞ்சம் இருப்பது போலத் தெரிந்ததாலும், நல்ல இசை ஓடிக்கொண்டிருந்ததாலும் என்றெல்லாம் எழுதிக்கொண்டே சென்றாலும், ஒரு குழு ஒரு பாரை தேர்ந்தெடுக்கும் சாத்தியக்கூறு மற்றும் மனநிலையை விஞ்ஞானத்தாலும் மெய்ஞானத்தாலும் விளக்கி விட முடியாது.

நால்வரும் அந்த பாருக்குள் நுழைந்தனர். ஒரு டவர் பியர் ஆர்டர் செய்தனர். ஒரு டவர் 3 லிட்டர், 5 லிட்டர்களில் அங்கே கிடைக்கிறது. 3 லிட்டர் ஆர்டர் செய்தனர். பெரும் கூட்டத்தினிடையே கிடைக்கும் நாற்காலிகளை சேகாரம் செய்து, ஒரு மேசையை இழுத்துப்போட்டு தற்காலிகமாக ஒரு ஏற்பாடு செய்துகொண்டனர். இந்த மேசை நாற்காலி எல்லாம் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் குடித்துவிட்டு ஆடலாம். ஒரு புது சிகரத்தை ஏறுவதற்கு முன் அமைத்துக்கொள்ளப்படும் ‘பேஸ் கேம்ப்’ போன்றது பப்களில் இந்த மேசை நாற்காலி செட் அப்.

பியர் டவர் வந்தது. டீட்டோலரைத் தவிர மற்றவர்கள் ஆளுக்கொரு கோப்பை பியரை ஊற்றிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தனர். அன்று சனிக்கிழமை. வெளிநாட்டு ஆசாமிகள், சுற்றுலாவாசிகள் கூட்டத்தை விட தாய்லாந்து உள்ளூர் ஆட்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. தங்கள் பாய்ஃபிரண்டு மற்றும் கேர்ள் ஃபிரண்டுகளுடன் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தனர் தாய்லாந்து மக்கள். நால்வரின் மேசை பக்கத்தில் சாட்சாத் நம்மூர் போலவே ஒரு மேசை இருந்தது. ஆம் அதில் இருந்த நால்வரும் தாய்லாந்து ஆண்கள். அவர்கள் ஏற்கனவே கடும் போதையில் இருந்தனர். ஆனால், நம்மூர் கடும் போதை அல்ல. அவர்கள் முகத்தில் இந்தியர்களைப் பார்த்த ஒரு சிநேகமான பாவம் இருந்தது.

இவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் மாடிக்கு செல்லும் வழி இருந்தது. அங்கே வழக்கமாக மேசை வைக்கமாட்டார்கள் என்பது பார்த்தவுடனே தெரியும். அங்கே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு ஒருவன் அமர்ந்திருந்தான். வயது 30க்குள் இருக்கலாம். பரந்து விரிந்த தோள்களும் நல்ல உயரமும் உடைய அவன் ஒரு வெளிநாட்டுக்காரன். ஸ்டைலான முண்டா மனியன், கிழிந்து தொங்கும் ஜீன்ஸ். ஜீஸஸுக்கு இருப்பது போன்ற கேசம். கௌ பாய் படங்களில் இருப்பது போன்ற மீசை, தாடி. எந்த நாடு என கணிக்க முடியவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இல்லை. அமெரிக்காவும் இல்லை. வேறு எதோ ஒரு கேடுகெட்ட நாடு. அவன் கையில் ஒரு பியர் பாட்டில் இருந்தது. அவன் காலடியில் 16 வயது மதிக்கத்தக்க ஒரு தாய்லாந்து யுவதி மயக்கமாக விழுந்து கிடந்தாள். கதையில் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக 16 வயது என்று வருகிறது என நினைத்துக்கொள்ளலாகாது. கதை அவளது கைப்பைக்குள் போய் அவளது தாய்லாந்து அடையாள அட்டையை சரிபார்த்து விட்டு வந்து சொன்ன தகவலின் படி அவளுக்கு 16 வயதுதான்.

அவள் அவ்வப்போது எழுந்தாள், பின் மீண்டும் அவன் காலடியில் மயங்கி விழுந்தாள். அவளுடைய வெயிட் 40 கிலோ இருக்கலாம். மிகவும் ஒல்லியாக இருந்தாள். டாப்ஸ் மற்றும் முட்டிக்கால் வரை இருக்கும் பாவாடை ஒன்றும் அணிந்திருந்தாள். அவளுடைய கால்கள் குச்சி குச்சியாக இருந்தன. அவளுடைய முலைகள் ஊட்டி ப்ளம்ஸ் அளவுக்கு இருக்கலாம். அவள் பேட் எதுவும் வைத்திருக்கவில்லை. அவள் கீழே மயங்கிக் கிடப்பதை குறுநகையுடன் பார்த்தபடியே அந்த வெளிநாட்டுக்காரன் மது அருந்திக்கொண்டு இருந்தான்.

திடீரென்று அவள் மயக்கம் தெளிந்து எழுந்திருப்பது போல எழுந்தாள். ஒரு பாடல் முடிந்து வேறு ஒரு பாடல் ஒலிக்கப்பட்டது கூட காரணமாக இருக்கலாம். அவள் நடனமாட முயற்சித்தாளா அல்லது நிற்க பேல்ன்ஸ் செய்தாளா என்று தெரியவில்லை. தடுமாறி கீழே விழுந்தாள். ஆனால், மட்டையாக வில்லை. நாய்க்குட்டி போல முட்டி போட்டுக்கொண்டு தலையை ஆட்டினாள்.

இந்த வெளிநாட்டுக்காரன் துள்ளி எழுந்தான். அவள் முட்டிப் போட்டுக்கொண்டு இருக்கும் இடத்தின் முன் போய் நின்று கொண்டு தன்னுடைய ஜீன்ஸின் ஜிப்பை அவிழ்த்து சிரித்தான். அவனின் செய்கையை பாரில் இருக்கும் பெரும்பாலானோர் பார்க்கவில்லை. இந்த நால்வர் மற்றும் ஓரிருவர் மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவன் ஜீன்ஸின் ஜிப்பை அவிழ்த்தது அந்த இளம்பெண்ணுக்கு உறைக்கவில்லை. அவள் கடும் போதையில் இருந்தது காரணமாக இருக்கலாம். அவள் ஏதோ விளையாட்டு போல, நாய் போல முட்டி போட்டிக்கொண்டே, தலையை தலையை ஆட்டிக்கொண்டு இருந்தாள். ஜீன்ஸ் ஜிப்பை அவிழ்த்து விட்ட படியே அந்த வெளிநாட்டுக்காரன், லேசாக ஆடியபடியே அவளை நோக்கி முன்னேறினான். அவளுக்கு இருந்தது வெறும் மது போதை போலத் தெரியவில்லை. தாய்லாந்தில் இருக்கும் தொழில் ரீதியான விலைமாதுக்கள் இதில் விவரமானவர்கள். விஸ்கி 8 ரவுண்ட் அடித்தாலும் தாங்கக் கூடியவர்கள். மேலும் நான்கைந்து டக்கீலா ஷாட் அடிக்கக் கூடியவர்கள். இந்த வெளிநாட்டுக்காரன் வேறு ஏதோ போதை மருந்து கலந்து கொடுத்திருக்க வேண்டும் என்பது யூகம். அந்த இளம்பெண்ணும் தொழிலுக்கு புதிதாக வந்திருக்கலாம். அல்லது இதுவரை தொழிலுக்கே வந்திராத பெண்ணை, அவளுடன் பழகி அழைத்து வந்திருக்கலாம்.

அவன் அவளருகில் சென்றதும் அவள் மீண்டும் தவளை போல கால்கள் பரப்பி சரிந்தாள். அவளை ஒரு குழந்தையைத் தூக்குவது போலத் தூக்கினான் அவன். அவனுடைய நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவளை சிறுகுழந்தையை மார்பில் போட்டுக்கொள்வது போல போட்டுக்கொண்டான். அவள் அட்டை போல அவனுடன் ஒட்டிக்கொண்டாள். அவன் தோள்களில் தலையை ஒப்புக்கொடுத்து தூங்க ஆரம்பித்தாள். அவன் அவளின் முதுகைத் தடவிக்கொண்டே குடிக்க ஆரம்பித்தான். பாரில் இசையின் ஓசை அதிகரித்து இருந்தது. எல்லோருக்கும் போதை. அவரவர் தனித்தனி குழுவாக ஆட ஆரம்பித்து இருந்தார்கள்.

அந்த வெளிநாட்டுக்காரன் செல்ஃபி எடுப்பதுமாகவும் லைவ் விடியோ போடுவதுமாகவும் இருந்தான். யாரும் அவனை கண்டிக்கவில்லை. பார் வேலையாள் ஒருவர் மட்டும் கடமைக்கு ஏதோ எச்சரித்தார். ஆனால், அவன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவனும் போதையில் இருந்ததால் அவன் அதை ஒரு பாராட்டாகாகக் கூட எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். அந்த இளம் பெண் அவன் மீது படுத்தவள் படுத்தவள் தான். ஓரசைவும் இல்லை.

தங்கள் நாட்டுப் பெண்ணை ஒருவன் இப்படி போதையேற்றி அப்யூஸ் செய்கிறானே என்ற எந்த ஒரு உணர்வும் அங்கிருக்கும் தாய்லாந்து ஆட்களிடம் இல்லை. வெளிநாட்டு ஆசாமிகள் நம் நாட்டில் வந்து நம் நாட்டு யோனியை ஆட்சி செய்கிறார்களே என்ற உணர்வை தாய்லாந்து ஆட்களிடம் பார்க்கவே முடியாது. இந்தியர்கள் என்று தெரிந்தால் “பூம் பூம்” என்று சிரித்துக்கொண்டே கேட்பார்கள். ‘பூம் பூம்’ என்றால் மேட்டர். நாம் தான் நம் தாய்நாட்டையும் யோனியையும் ஒரே அளவில் வைத்துப் பார்த்து மரியாதை செய்கிறோம் மற்றும் அப்யூஸ் (abuse) செய்கிறோம். இங்கே ஒரு வெள்ளைக்காரன் நம்மூர் பெண்ணை சர்வ சாதாரணாமாகத் தள்ளிக்கொண்டு போக முடியுமா? பார் அல்லது பப்பில் வைத்து இப்படிக் கூத்தடிக்க முடியுமா? கூட்டிக் கொடுத்தாலுமே சாதி, மதம், இனம் பார்த்து கூட்டிக்கொடுப்பவர்கள் அல்லவா நாம்? தாய்லாந்தில் அப்படி அல்ல. விபச்சாரத்தை அவர்கள் ஒரு ப்ரொஃபஷனாகப் (proffession) பார்க்கிறார்கள். இதற்கே விபச்சாரத்தால் வரும் வருமானம் தாய்லாந்தின் வேறு வருமானங்களை ஒப்பிட்டால் மிக சொற்பம். சுற்றுலா வருமானமே ஒப்பீட்டளவில் ஏனைய வருமானங்களை விட குறைவுதான். அது ஒரு மனப்பாங்கு.

நால்வரும் இதைப் பார்த்து பொங்கினாலும், நால்வரில் ஒருவன் இதைக் குறிப்பிட்டு என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினான்.

மற்ற மூவர் முகத்திலும் சோகம், கோபம், கையறு நிலை, இன்னும் பிற உணர்ச்சிகள் பொங்கி மறைந்தன. ஆடிக்கொண்டிருந்த அவர்கள் நாற்காலிகளை இழுத்துப்போட்டு அமர்ந்தார்கள்.

ஒருவரைத் தவிர மற்றவர்கள் ஆளுக்கொரு கோப்பை பியர் அருந்தினார்கள். இன்னொரு டவர் ஆர்டர் செய்தார்கள்.

“அவன் மூஞ்சில எவ்ளோ திமிர் தெரியிது பாத்தீங்களா.”

“எதோ தாய்லாந்தையே சாய்ச்சிட்ட மாதிரி ஒக்காந்து இருக்கான் பாத்தீங்களா.”

“அல்ப 2000 பாட் குடுத்துருப்பான், அதுக்கு இவ்ளோ சீன்.”

“எதோ லவ் பண்ணி கரக்ட் பண்ணவன் மாதிரி அவன் மொகத்துல ஒரு பெருமை பாருங்களேன்.”

“அது பெருமை இல்லீங்க திமிர், பணத்திமிர்.”

“பணத்திமிர் மட்டுமில்ல, வெள்ளைக்காரன்ற திமிர்.”

“ஆமா நம்மள எவனும் கேக்க முடியாதுன்ற திமிர்.”

இப்படி பேசிக்கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அமைதியானார்கள். ஆளுக்கொரு மடக் பியர் அடித்தார்கள். மீண்டும் அவனைப் பார்த்தார்கள். அவன் ஏகாந்தமான புன்னகையுடன் மயங்கிக் கிடக்கும் அவளை மார்பில் போட்டுக்கொண்டே பியர் குடித்துக்கொண்டு இருந்தான்.

“நாமளும் மனுஷங்கதானே, அதனால இந்த கோவம், எரிச்சல் எல்லாம் நமக்கு பொறாமையால வருதுன்னு கூட சொல்லுவாங்க.”

“இதுல என்னங்க பொறாம? காசு குடுத்தா எல்லாருக்கும்தான் இங்க பொண்ணு கெடைக்கும். அந்த சின்னப்பொண்ண திமிர்ல அப்யூஸ் பண்ணி அசிங்கப்படுத்திகிட்டு இருக்கான்… அதான் கோவம், இதுல பொறாமை எங்க வருது?”

“இல்ல, இல்ல… நான் அப்டி சொல்லல… செல பேரு அப்புடி சொல்லுவாங்கன்னு சொன்னேன்.”

“சோ?”

இருப்பதிலேயே வயதில் அதிகம் இருப்பவரைப் பார்த்து, “நீங்க இதப்பத்தி என்னா சொல்றீங்க?”

“நான்… இதைப்பத்தி…”

“இல்ல… ஒரு நிமிஷம் இருங்க… நீங்க… நீங்களா சொல்லக் கூடாது… கடவுள் இங்க இருந்து இதப்பாத்து என்ன சொல்வாரோ… அப்டி யோசிச்சி சொல்லுங்க.”

கேள்வி கேட்கப்பட்டவர் யோசிக்க ஆரம்பிக்க, டீட்டோட்டலர், “ஏன் அப்டி சொல்றீங்க” என்றார்.

“இல்ல, அவன் செய்யறது அராஜகம். ரொம்ப சீப்… இல்ல டூ மச் டர்ட்டி ஆக்‌ஷன்… இப்டித்தான் எல்லாம் சொல்வாங்க.”

“ரைட்டு.”

“பட்… இந்த இடத்துல இத யாரும் கண்டுக்கல…”

“ம்ம்.”

“இப்டி செய்யறதுக்கும்… அதும்… பப்ளிக்கா செய்யறதுக்கும் ஸ்பேஸ் இருக்கு… நம்ம ஆயிரத்தெட்டு நொட்டு நியாயம் சொல்லிட்டு இருந்தாலும் பாத்துட்டுதான இருக்க முடியிது. சோ… நமக்கு கருத்து சொல்ல எந்த உரிமையும் இல்ல…”

“அதனால கடவுளா?”

“அது ஒரு லாஜிக்… இன்னொண்ணு, நமக்கு… நாம உருவாக்கி வச்சிகிட்ட நியாய தர்மம்… அது அந்தந்த காலத்துக்கும் நம்ம கம்ஃபர்டுக்கும் (comfort) ஏத்த மாதிரி இருக்கும்.”

“என்னாது? அறம், நியாய தர்மம்லாம் நம்ம கம்ஃபர்டுக்கு ஏத்த மாதிரியா? கம்ஃபர்டுக்கு எதிராத்தானே இருக்கும்.”

“மேம்போக்கா பாத்தா அப்டி தெரியும்… ஆனா அப்டி இல்ல.”

“புரில.”

“அடுத்தவங்க சொத்துக்கு ஆசப்படக்கூடாது, அடுத்தவங்க கிட்ட இருந்து திருடக்கூடாதுன்றதுதான நியாய தர்மம்?”

“ஆமா.”

“கிட்டத்தட்ட 2000 வருஷமா இந்த நியாய தர்மம் இருக்கு இல்லியா?”

“ஆமா.”

“தேவைக்கதிகமா சொத்து சேக்கக் கூடாது, சேத்தாலும் ஏழைகளுக்கு உதவி பண்ணனும், தர்ம காரியங்களுக்கு குடுக்கணும்ன்றதும் நியாய தர்மம் தானே? இதும்தானே சொல்லிகிட்டு இருக்காங்க?”

“ஆமா.”

“ஆனா, அடுத்தவங்க சொத்துக்கு ஆசப்பட்டாலோ, திருடினாலோ குற்றவுணர்ச்சி வரும். மாட்டிகிட்டா தண்டனையும் கிடைக்கும் இல்லியா?”

“ஆமா.”

“பட், தேவைக்கதிகமா சொத்து சேத்தாலோ, தர்ம காரியம் பண்ணலைன்னாலோ, ஏழைகளுக்கு உதவி பண்ணலைன்னாலோ…, ஆத்திச்சூடி மொதக்கொண்டு, நன்னெறி, திருக்குறள்ள சொல்லியிருக்குற எந்த அறத்தையும் பின்பற்றல்லன்னாலும் குற்றவுணர்ச்சி வராது. தண்டனையும் கிடையாது.”

“ஆமா… அதெல்லாம் தானா தோணி…”

“ஹலோ… ரெண்டும் அறம் தானே… ரெண்டும் நியாய தர்மம்தானே? அதான் சொன்னேன்… நம்ம கம்ஃபர்ட்… அதாவது உலகத்துல இருக்குற பெரும்பான்மையான மக்களோட கம்ஃபர்ட்… அத வச்சிதான் நியாய தர்மம், சட்டம் எல்லாம்.”

“ம்ம்… புரியிது… அதுக்கும் இதுக்கும்… கடவுளுக்கும்…”

“அதான்… நம்ம நியாய தர்மம் எல்லாம் செலக்டிவ் அம்னீஷியா மாதிரி. சும்மா ஒரு சேஞ்சிக்கு கடவுள் இந்த சீனை (scene) எப்பிடி பாப்பாருன்னு ஒரு ஆர்வம்… அவ்ளோதான்.”

“ப்ரோ, நான் வேணா ஜாயிண்ட் நாலு இழுப்பு இழுத்துட்டு சொல்லட்டுமா?”

“நோ நோ நோ… ஜாயிண்ட் கடவுள் எல்லாம் வேணாம். நிஜமா கடவுளா மாறி யோசிச்சி சொல்லணும்” என்று சொன்னவன், மீண்டும் வயது அதிகமாக இருந்தவரைப் பார்த்து, “நீங்க டிரை பண்றீங்களா?” என்றான்.

அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

“கடவுளா எப்டி யோசிக்க முடியும்? ரொம்ப கஷ்டமாச்சே” என்றான் டீட்டோட்டலர்.

“இல்லங்க, கடவுளா மாறறதுதான் ரொம்ப ஈஸி (easy)… பட் யாரும் டிரை பண்றதில்ல.”

“சும்மா… சொல்லாதீங்க… கடவுள்னா என்னா சும்மாவா?”

“ஆமாங்க சும்மாதான். சும்மா தான் ரொம்ப ஈஸி… அதே சமயத்துல கஷ்டம். ஆனா கஷ்டமா இருக்குறது போலத் தோணும். அப்படித் தோண்றதைக் கடந்துட்டா ஈஸி.”

“அவ்ளோ ஈஸின்னா சொல்றீங்க?”

“ஆமாங்க… இப்ப நம்ள மாதிரி மனுஷங்களுக்குத்தான் ஆயிரத்தெட்டு பயஸ்…(bias) பிறப்பால கெடைக்கும் சாதி, மதம், நாடு, மொழி, கலாச்சாரம்… அது இல்லாம ஆயிரத்தெட்டு ஜெனடிக் பர்டன்ஸ் (genetic burdens). இதுல எதுவும் கடவுளுக்குக் கெடையாதே? கடவுளா மாறறது ரொம்ப ஈஸி.”

“அப்டீங்கறீங்க?”

“அஃப்கோர்ஸ் (Ofcourse) நாம எல்லாருமே கடவுளா கொஞ்சூண்டு நாள் இருந்துதான் மனுஷனா மாறி இருக்கோம்னு வைங்களேன். இன்னொரு அட்வாண்டேஜும் கடவுளுக்கு இருக்கு. எல்லாருக்கும் எல்லாத்துக்கும் மேல அவர, அவரு வச்சிக்கலாம். அவரு என்ன வேணா சொல்லலாம்.”

“ஓக்கே கேம் ஸ்டார்ட்ஸ்” என்றான் ஜாயிண்ட் பார்ட்டி.

ஒரு பியர் குடுவையைக் காலி செய்து வைத்த வயதில் அதிகமானவர், “நான் கடவுளா சொல்றேன்” என்றார் .

எல்லோரும் அவரைப் பார்த்தனர்.

அப்போது அந்த வெள்ளைக்காரன், அவன் மேல் மயங்கிக்கிடக்கும் பெண்ணின் புட்டத்தை கிள்ளி கிள்ளி விட்டுக்கொண்டு பியர் அடித்துக்கொண்டு இருந்தான். கிள்ளி என்றால் செல்லமாக அல்ல, அவளின் பிருஷ்டத்தில் இல்லாத சதையைத் தேடிப்பிடித்து திருகினான்.

“எதுவுமே தவறில்லை” என்றார் அவர்.

“இல்ல… இது தத்துவம் மாதிரி இருக்கு… கடவுள் பேசற மாதிரி இல்ல.”

“இல்ல கடவுள் இப்டித்தான் பேசுவார்.”

“இதுவும் கடவுள் பேசற மாதிரி இல்ல.”

இன்னொரு டவர் பியர் ஆர்டர் செய்யப்பட்டது. பப்பில் ஆட்டம் உச்சத்தில் இருந்தது. தெருவில் தூறல் விடவில்லை. ஆனாலும் தூறலை யாரும் மதிக்கவில்லை. தெருவில் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் டி ஷர்டை கீழே இறக்கி போதையேறிய யாரோ ஒருவன் அவளின் முலையை முத்தமிட்டான். அந்தச் செய்கையின் ஏதோ ஒரு கணத்தில் காமம் இல்லாததை கண்டு கொண்ட, அல்லது காமம் இல்லாததைக் கண்டுகொண்டது போல நினைத்துக்கொண்ட அந்தப் பெண் அவனை தாய் போல அரவணைத்தாள். அந்தப் பெண்ணின் பாய்ஃபிரண்ட் மூத்திரம் தாங்க முடியாமல் அதற்கு ஓரிரு வினாடிகள் முன்புதான் ரெஸ்ட் ரூம் தேடிப்போய் வரிசையில் நின்றுகொண்டு இருந்தான்.

“சரி, இப்டி சொல்றேன், அவள் விரும்பிப் போகும் பாதையில் இதுவும் இருக்கிறது” என்றார் அந்த சீனியர்.

“இது கொஞ்சம் நல்லா இருக்கு, ஆனாலும் இதுவும் ஒரு சாமியார் சொல்வது போலவும் எளிய தத்துவம் போலவும்தான் இருக்கு.”

“ஆமா ஜென் மாதிரி இருக்கு” என்றான் டீட்டோட்டலர்.

“அதாவது, கடவுள் காவோ சான் ரோட்ல ஒக்காந்துட்டு தண்ணி அடிச்சிட்டு இருக்காரு. அவரு இந்த சீன பாக்கறாரு. அப்ப அவர் என்னா சொல்வாரு, இல்ல என்னா செய்வாரு? இதான் மேட்டர்.”

“நான் பாட்டுக்கும் ஒக்காந்துட்டு பீர் அடிச்சிட்டு இருப்பேன்” என்றான் கஞ்சா பார்ட்டி.

இப்போது அவன் முகம் தீர்க்கமாகி இருந்தது. கிடைத்த கேப்பில் (gap) ரெண்டு மூன்று கிளாஸ் பியர்களை காலி செய்திருந்தான். இருந்தும் முகத்தில் போதையில்லை. முகம் நிர்மலமாகக் காணப்பட்டது. அவன் அந்த வெள்ளைக்காரனை நோக்கினான்.

அந்த வெள்ளைக்காரன், மயக்காமாகிக் கிடக்கும் அந்த இளம் பெண்ணை ஃபக் (fuck)செய்வது போல உடலை ஆட்டிக்கொண்டு, குடித்துக்கொண்டு இருந்தான்.

“இதே போல வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு உயிரனங்கள் செய்து கொண்டேயிருக்கின்றன” என்றான். இதை ஆங்கிலத்தில் சொன்னான் கஞ்சா பார்ட்டி. ஆனால், அவன் இப்போது கஞ்சா அடித்திருக்கவில்லை.

பக்கத்து மேசையில் இருந்த தாய்லாந்து ஆடவர் நால்வர் அணி, இந்த டயலாக்கால் கவர்ந்திழுக்கப்பட்டு பியர் கிளாஸைத் தூக்கிக்கொண்டு அருகில் வந்தது.

“வீ லவ் இந்தியா” என்றது.

“ஹலோ… அப்ஸ்டிராக்டா (abstract) பேசினா கடவுளா? இந்த பர்டிக்குலர் (particular) விஷயத்தைப் பத்தி சொல்லுங்க” என்றான். தாய்லாந்து ஆட்கள் சேர்ந்ததால் இவனும் ஆங்கிலத்தில் பேசினான்.

அந்த தாய்லாந்து ஆட்கள் அதற்குள் கஞ்சா பார்டிக்கு கஞ்சா சிகரட் கொடுத்திருந்தார்கள். அதை வாங்கி இரண்டு இழுப்பு இழுத்தவன், அந்த வெள்ளைக்காரனையும் அந்த இளம்பெண்ணையும் பார்த்தான்.

“இவை அனைத்தும் இவர்களுக்கு மறந்து போகும்” என்றான்.

தாய்லாந்து ஆட்கள் ஆர்ப்பரித்தார்கள்.

“நினைவில் நிலைக்காத விஷயங்களை செய்யுங்கள்.”

“ஓஹ் மை காட், ஹீ ஈஸ் ரியலி எ காட்” போதையில் இருந்த தாய் ஆசாமி, “காட், காட்” என்று கத்திக்கொண்டே பப் முழுக்க ஓடினான். பப்பில் சிலர் கஞ்சா பார்ட்டியை பார்த்தார்கள். அனைவருக்கும் தன்னுடைய கண்களால் பரவசத்தையும் அருளையும் அனுப்பினான். சிலருக்கு போதை குறைந்தது போல இருந்தது. அவசர அவசரமாக அடுத்த பியர் கோப்பையை காலி செய்தார்கள்.

“நீங்கள் எப்படி ஸ்வாமி?”

“எனக்கு நினைவே கிடையாது. நான் பூஜ்ஜியத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.”

“இந்த முன் பின், வினை எல்லாம்?”

“முன்னும் இல்லை, பின்னும் இல்லை, வினையும் இல்லை.”

“அட ஏங்க, இவனும் சும்மா சாமியார் மாதிரி உளறுரான்.”

“சரி, ப்ராக்டிக்கலா பேசறேன்… நீங்க எல்லாரும் தான் அவன். எந்த சின்னப்பெண் கிடைத்தாலும் இப்படி செய்யத்தான் உங்கள் எல்லோருக்கும் ஆழ்மன விருப்பம்.”

“என்ன சாமி? ஃபெமினிஸ்ட் மாதிரி பேசறீங்க?”

அவன் நிமிர்ந்து பார்த்தான். இவர்களுடன் எல்லாம் என்ன பேசுவது என்பது போல இருந்தது அவன் பார்வை. இவர்களை ஏளனமாகப் பார்த்தபடி நாற்காலியில் இருந்து எழுந்தான். நடந்து அந்த வெள்ளைக்காரனிடம் சென்றான். அந்த வெள்ளைக்காரன் இவனிடம் தன் மொபைல் போனைக் கொடுத்து படம் எடுக்கச் சொன்னான். இவனும் படம் எடுத்துக் கொடுத்து, அந்தப் பெண்ணின் முதுகைத் தடவினான். அவள் எழுந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். இவனைக் கட்டிக்கொண்டாள்.

கடவுள் ஆதூரமாக அவளுக்கு உதட்டில் முத்தமிட்டார். அவள் கடவுளை விடுவித்துக்கொண்டு, விறு விறுவென்று நடந்து சென்று காவோ சான் சாலையில் கலந்தாள். அந்த வெள்ளைக்காரன் ஏதும் நடக்காதது போல தன் வயிற்றை தடவி விட்டுகொண்டு அதே போல பியர் அடித்துக்கொண்டுக் கிடந்தான்.

ஓவியம்: அச்சுதன் ரவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...