No menu items!

Kantara Vs Pushpa – இரண்டும் ஒன்றா?

Kantara Vs Pushpa – இரண்டும் ஒன்றா?

இந்திய சினிமாவில் ‘பான் – இந்தியா’ என்கிற வார்த்தை அதிகம் உச்சரிக்கப்படும் சூழலில் சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படும் படங்களாக முக்கியத்துவம் பெற்றிருக்கும் இரண்டுப் படங்கள் ’புஷ்பா’ மற்றும் ’காந்தாரா’

திரைப்பட ரேட்டிங் குறித்த மிகப்பெரும் இணைய தளமான .ஐஎம்டிபி-யில் ‘புஷ்பா’ படத்திற்கு 7.6 ரேட்டிங்கும், ‘காந்தாரா’ படத்திற்கு 9.1 ரேட்டிங்கும் கிடைத்திருக்கிறது.

’புஷ்பாவின்’ பக்காவான பாக்ஸ் ஆபீஸ்  வசூலை இப்போது வந்திருக்கும் ‘காந்தாரா’ ஓவர் டேக் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் காந்தாரா படத்தைப் பார்ப்பதற்கு விற்பனையான டிக்கெட்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக கன்னட சினிமாவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரு படங்களும் பார்க்கும் போது வேறு விதமான உணர்வை உருவாக்குகின்றன. இருந்தாலும் இந்த இருப்படங்களுக்கும் இடையே ஒற்றுமைகள் சொல்லிக்கொள்கிற மாதிரி இருக்கின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா?

இரு படங்களின் வெற்றிக்கான காரணங்களை முதலில் பார்ப்போம்.

புஷ்பா

பெரும் வர்த்தக மதிப்புடைய தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் அசுரன். காட்டிற்குள் மரம் வெட்டுபவன் சிண்டிகேட்டை அசைத்துப் பார்க்கும் நாயகனாக ஆச்சர்யப்பட வைக்கிறான். சுகுமாரின் மேக்கிங் அவரை கமர்ஷியல் சினிமாவின் கிங் ஆக்கி இருக்கிறது. அல்லு அர்ஜூனின் உடல்மொழியும், வேகமும் வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ராஷ்மிகாவின் ஆட்டம், இந்தியாவெங்கும் கொண்டாட்டமாகி இருக்கிறது. வசனத்தில் பொறி பறக்கிறது. கமர்ஷியல் அம்சங்களுக்கான தேவையை திரைக்கதையில் வைத்திருப்பதை சரியாக திரையிலும் காட்டியிருந்ததால் பாக்ஸ் ஆபீஸில் புஷ்பா கமர்ஷியல் ஃபயராக பற்றிக்கொண்டது.

காந்தாரா

’காந்தாரா’ மிகச்சிறிய வர்த்தகம் உள்ள கன்னட சினிமாவில் இருந்து வெளிப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. இன்று ‘காந்தாரா’ இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுவதற்கு காரணம் கதையில் பின்னி பிணைந்து இருக்கும் அரசியல், புராண அம்சங்கள். சிறு தெய்வமும், கலாச்சாரமும் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் விதம் இப்படத்தை கவனிக்க வைத்திருக்கிறது. அமானுஷ்யமான அம்சங்களுக்கு இங்கு ரசிகர்களிடையே எப்பொழுதும் ஒரு வரவேற்பு இருக்கும். அதை மிகச்சரியாக காட்சிகளில் கலந்து இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. புராணத்தை கூடவே வைத்து கொண்டு கர்நாடகாவின் கலாச்சாரத்தை காட்டியிருப்பது இதுவரை பார்க்காத ஒரு காட்சி அனுபவமாக அமைந்திருக்கிறது.

கர்நாடகாவின் அழகும் பலமும் அங்கிருக்கும் புதிர்கள் நிறைந்த காடுகள். அந்த காட்டை சூழ்ந்திருக்கும் புதிர்களுடன் திரைக்கதையை நகர்த்தியிருப்பதில் ரிஷப் ஷெட்டி புகுந்து விளையாடி இருக்கிறார்.

இந்நிலையில் ‘புஷ்பா’ மற்றும் ’காந்தாரா’ இரு படங்களும் வேறு வேறு கதை களத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கும் போது எப்படி இந்த இரு படங்களுக்கும் இடையில் ஒற்றுமைகள் இருக்க முடியுமென நீங்கள் யோசிக்கலாம்.

அப்படி நீங்கள் யோசித்தால் கீழே நாம் முன்வைக்கும் விஷயங்களை நிதானமாக படியுங்கள்.

முதலில் ’புஷ்பா’ மற்றும் ’காந்தாரா’ படங்களின் நாயகர்கள் இருவருமே காட்டிற்குள் இருக்கும் ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்திற்கு ராஜாவாக விஸ்வரூபம் எடுக்கிறார்கள். எதிரிகளால் அசைக்க முடியாத ஹீரோக்கள். இரு படங்களின் கதை நிகழும் களம் வேறு என்றாலும், இரு படங்களிலும் கதை, காட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள் சந்திப்புகள் என பயணிக்கிறது. புஷ்பாவின் முழுக்கதையும் காட்டிற்குள்ளும் அது தொடர்பான சம்பவங்களாகவும் நடக்கிறது. சிவாவின் பெரும்பாலான பொழுது காட்டிற்குள்ளேயே கழிகிறது. அல்லு அர்ஜூன், ரிஷப் ஷெட்டி இருவரின் தோற்றமும் ஏறக்குறைய தாடி வைத்த வீரர்களாகவே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிவாவுக்கு கோபம் அதிகம். புஷ்பா பக்காவான ஃபயர். இந்த இரு கதாபாத்திரங்களுக்கான உடல்மொழியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றன.

இரண்டாவதாக, புஷ்பாவும் சிவாவும் தங்களது கிராமத்தில் இருக்கும் ஏழைகளுக்காக குரல் கொடுக்கும் நாயகர்களாக காட்டப்படுகிறார்கள். இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச முடியாத மக்களாகதான் இருக்கிறார்கள். அதேபோல் தங்களது மக்களுக்கு எதிராக யார் எதைக் கூறினாலும் புஷ்பாவும் சிவாவும் அதை காது கொடுத்து கேட்காத கோபக்காரர்கள். ஒட்டுமொத்த கிராமமும் சிவா சிவா என முணுமுணுக்கிறது. புஷ்பாவை பற்றி எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

மூன்றாவதாக, புஷ்பா, சிவா இரு கதாபாத்திரங்களின் அம்மாக்கள் கல்பலதா மற்றும் கமலா, ஒரே மாதிரியான அம்மாக்களாகவே உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இருவரும் ஏழை. இருவராலும் எந்தவிதமான உதவ முடியாத சூழலில் வாழ்கிறார்கள். கணவர் துணை இல்லாத சிங்கிள் அம்மாக்களாக தங்களது மகன்களை வளர்த்து ஆளாக்குகிறார்கள்.

நான்காவதாக, இப்படங்களின் நாயகிகள் ஸ்ரீவள்ளி, லீலா இருவருக்குமே ஒரே மாதிரியான தோற்றத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். புஷ்பாவும்., சிவாவும் தங்களது காதலிகள் மீது காட்டும் காதல் அலாதியானது. ஹீரோயின்கள் இருவருக்கும் இருக்கும் கடவுள் பக்தி அதே அளவானது என பல ஒற்றுமைகள்.

இறுதியாக, ஹீரோக்கள், ஹீரோயின்கள், கதைக்களம் என ஒற்றுமைகள் இருந்தால் வில்லன்களுக்கும் ஏன் ஒற்றுமை இருக்க கூடாது என்று நீங்கள் நினைக்கலாம். அதிலும் இருக்கிறது விஷயம். புஷ்பாவில் பஹத் ஃபாசிலின் பன்வார் சிங் கதாபாத்திரம் அவரது டயலாக் டெலிவரிக்கும், எக்ஸ்பிரஷன்களுக்கும் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் காந்தாரவில் கிஷோர் குமார். இருவருமே காவலர் சீருடையில்தான் காட்சிகளில் வந்து போவார்கள். ஒரேயொரு வித்தியாசம், கிஷோர் ஆரம்பத்தில் வில்லனாக  இருப்பார். ஆனால் இறுதியில் ஹீரோவாக முடிப்பார்.

புஷ்பாவும், காந்தாராவும் இரு வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களாக இருந்தாலும் இந்த ஐந்து விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கும் போது இருக்கும் ஒற்றுமைகள் கொஞ்சம் யோசிக்க வேண்டியவைதான்.

’கோழி குருடான்னு பார்க்காதீங்க. குழம்பு ருசியாக இருக்கான்னு பாருங்க’ என்ற உங்களது மைண்ட் வாய்ஸ் இங்கு வரை கேட்கிறது.

நல்லப் படங்களைக் கொண்டாடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...