No menu items!

Sukesh Chandrasekar – மோசடி மனிதனின் அரசியல்

Sukesh Chandrasekar – மோசடி மனிதனின் அரசியல்

குஜராத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் சுகேஷ் சந்திரசேகர்.குற்றச்சாட்டுக்களை சொல்லும் சுகேஷ் சந்திரசேகர் இப்போது இருப்பது டெல்லி மண்டோலி ஜெயிலில். இந்தியா முழுவதிலும் நடத்திய பல கில்லாடி மோசடிகளுக்காக கைது செய்யப்பட்டு 2017லிருந்து சிறையில் இருக்கிறார்.

அமமுக தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற ஒரு வழக்கு ஒன்று இருக்கிறது. 2017ல் அதிமுக உடைந்திருந்த நிலையில் இந்த வழக்கு பரப்பரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில்தான் இப்போது சுகேஷ் சந்திரசேகர் உள்ளே இருக்கிறார்.

அதிகாரிகளுக்கு லஞ்சம் என்றால் எதோ நம்மூர் ஆர்டிஓ ஆபிஸ், தாசில்தார் ஆபீஸ், பத்திரப் பதிவு ஆபிசில் நடக்கும் லஞ்சப் பரிவர்த்தனைகள்போல் எண்ணிவிட வேண்டாம். சுகேஷ் தலையிடும் விஷயங்கள் எதுவும் ஐம்பது கோடி ரூபாய்க்கு கீழே இருக்காது. அவரது மினிமம் ப்ராஜக்டே 50 கோடி ரூபாய் அளவில்தான் தொடங்கும்.

யாரையும் எப்படியும் எந்த விதத்திலும் சுகேஷால் ஏமாற்றிவிட முடியும். அவர்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணம் கறந்துவிட முடியும். இது சுகேஷின் தனித் திறமை. பெரும் கோடீஸ்வரர்கள், நடிகர்கள், நீதிபதிகள், அதிகாரிகள்..என இவரிடத்தில் ஏமாந்தவர்கள் அனைவரும் விஐபிக்கள்.

இந்தியா முழுவதிலும் அவருக்கு சொகுசு பங்களாக்கள் உண்டு. இவரிடம் இருக்கும் கார்களின் மதிப்பே பல கோடி ரூபாய்களைத் தாண்டும்.

அவரது சாமார்த்தியத்துக்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஒரு கோடீஸ்வரப் பெண்ணை ஏமாற்றி கொஞ்சம் அல்ல…200 கோடி ரூபாய் பறித்திருக்கிறார் என்றால் சுகேஷின் திறமையைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ரான்பாக்சி நிறுவனம் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருந்து கம்பெனி. 6000 கோடிக்கு மேல் பணப்புழக்கம் உள்ள நிறுவனம். அந்த கம்பெனியின் முதலாளி ஒரு வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போய்விட்டார். அவருக்கு ஜாமீன் வாங்கித் தருவதாக கூறி அவரது மனைவி மட்டும் உறவினர்களிடமிருந்து… மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். 200 கோடி ரூபாய் வரை கறந்திருக்கிறார். படித்தவர்கள், மிகப் பெரிய நிறுவனத்தை நடத்துபவர்கள், அவர்களுக்கு ஆலோசனை கூற ஏராளமானோர் உண்டு…இப்படி சகல வசதிகளை கொண்டவர்களிடம் 200 கோடி ரூபாய் ஏமாற்ற முடியுமென்றால் சுகேஷின் திறமையைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

ரான்பாக்சி நிறுவனம் மிகப் பெரிய நிறுவனம். அந்த நிறுவன முதலாளிகளையே சுகேஷ் ஏமாற்றியிருக்கிறார் என்றால் அவரது சாமர்த்தியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஏமாற்று வேலை இப்போது வந்ததல்ல. பெங்களூரில் பள்ளி படிக்கும்போது 17 வயதிலேயே கார் ஓட்டுவாராம். லைசென்ஸ் கிடையாது. ஆனால் லைசென்சுக்குப் பதில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கடிதத்தைப் போல் ஒன்றை தயாரித்தார். இவருக்கு 17 வயதில் கார் ஓட்ட கமிஷனர் அனுமதி அளித்ததுபோல் கமிஷனர் கையெழுத்துடன் கடிதம் இருந்தது. 17 வயதில் அவர் செய்த இன்னொரு குற்றமும் இருக்கிறது. நண்பனின் தந்தையை ஏமாற்றி 1.5கோடி ரூபாய் பறித்தது. தனக்கு கர்நாடகத்தில் பெரிய அரசியல்வாதியைத் தெரியும், வேலையை முடித்து தருகிறேன் என்று கூறி 1.50கோடி பறித்திருக்கிறார்.

அதன் பிறகு பல மோசடிகள், குற்றங்கள்…இப்போது சுகேஷுக்கு 33 வயதாகிறது. மற்றவர்களை ஏமாற்றியே கொஞ்சமல்ல.. 2000 கோடிக்கு மேல் சம்பாதித்திருக்கிறார் என்கிறார்கள்.

நுனிநாக்கு ஆங்கிலம், டிப் டாப் உடை, பணக்கார தோரணை…இவையெல்லாம் சுகேஷுக்கு முதலீடுகள். இந்தியின் டாப் நடிகைளில் ஒருவரான ஜாக்குலீன் ஃபெர்ணாண்டசையே ஏமாற்றி ஊர் சுற்றியிருக்கிறார். இப்போது அவரும் இவருடன் சேர்ந்ததால் வழக்குகளில் சிக்கியிருக்கிறார். சுகேஷுக்கு லீனா மரியா பால் என்ற மனைவியும் உண்டு. அவரும் இப்போது சிறையில்தான் இருக்கிறார். அங்கு ஜாம் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொண்டிருக்கிறார் என்று செய்தி.

தினகரன் வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டபோது சுகேஷ் பரபரப்பாக பேசப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு சுகேஷ் மோசடிகளை விசாரிக்கும் அமலாக்கத் துறை இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை விசாரிக்கத் தொடங்க மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார் சுகேஷ். சுகேஷின் பல தோழிகளில் ஜாக்குலினும் ஒருவர். சென்னை பண்ணை வீட்டில் அவர்கள் எடுத்தப் புகைப்படங்கள் வைரலாகின. ஜாக்குலினுக்கு 6 கோடி ரூபாய்க்கு பரிசுகள் கொடுத்திருக்கிறார் சுகேஷ். பரிசுகளை வாங்கிக் கொண்டு இப்போது பரிதாபமாய் கோர்ட்டுகளுக்கு அலைந்துக் கொண்டிருக்கிறார் ஜாக்குலின்.

இப்போது மீண்டும் சுகேஷ் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றிருக்கிறார். இந்த முறை அரசியல் காரணங்களுக்காக.

சிறையிலிருந்துக் கொண்டு டெல்லி கவர்னருக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி மீதும் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு 50 கோடி ரூபாய் தந்ததாகவும் தனக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி பெற்று தருவதாக ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்ததாகவும் தனது முதல் கடிதத்தில் சுகேஷ் குறிப்பிட டெல்லி அரசியல் தீப்பற்றியது. பணத்தை வாங்கியதாக சுகேஷ் குறிப்பிட்ட டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் சிங் குற்றச்சாட்டை மறுத்தார்.

அடுத்த கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு 500 கோடி ரூபாய் கொடுக்கக் கூடிய நபர்களாக 20, 30 பேரை அழைத்துவரச் சொல்லி கெஜ்ரிவால் என்னைக் கட்டாயப்படுத்தினார் என்று கெஜ்ரிவால் மீதே குற்றம்சாட்டினார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

சிறையிலிருக்கும் ஒரு மோசடி மன்னன் கூறும் குற்றச்சாட்டுக்கள் இப்போது முக்கியத்துவம் பெறுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு எழுதப்பட்டவை. அவர் பாஜகவை சேர்ந்தவர்.

அது மட்டுமில்லாமல் குஜராத் தேர்தல் பரப்புரைகள் வேகமெடுத்துக் கொண்டிருக்கின்றன. குஜராத் தேர்தலில் இந்த முறை ஆம் ஆத்மி கட்சி வீரியமாக களமிறங்கியிருக்கிறது. அதிக வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இப்படி அரசியல் மாறிக் கொண்டிருக்கும் பின்னணியில் ஆம் ஆத்மி மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுகேஷ் வைப்பதைப் பார்க்க வேண்டும்.

ஊழலில்லாத கட்சி என்ற பிம்பத்துடன் களமிறங்கிய கட்சி ஆம் ஆத்மி. கடந்த சில மாதங்களாக அதன் மீது தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள். மது விற்பனை ஊழல் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி அமைச்சர்கள் சிக்கியிருக்கிறார்கள். இப்போது சுகேஷின் குற்றச்சாட்டுக்கள்.

ஆம் ஆத்மி கட்சி மீது சமீபமாய் வைக்கப்படும் குற்றசாட்டுக்களுக்கும் குஜராத் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கிறாதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யாரும் எதிர்பாராத வகையில் பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை தோற்கடித்து ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி டெல்லியைத் தாண்டி வளர்வதில் பாஜகவுக்கு அரசியல் ரீதியான சங்கடங்கள் இருக்கின்றன.

அதன் எதிரொலிதான் இதுவரை வாய் திறக்காமல் இருந்த சுகேஷ் ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டுக்களை வைப்பது என்று கூறுகிறார்கள் ஆம் ஆத்மி தலைவர்கள்.

உண்மைகள் வெளியே வருமா அல்லது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சுகேஷின் குற்றச்சாட்டுக்களும் முடிந்துவிடுமா.

பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...