இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசா பகுதியில் ஒருபக்கம் அனல் பறந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இரண்டாவது களம் ஒன்றை மெல்லத் திறந்தனர் யேமன் நாட்டில் உள்ள ஊத்தி அமைப்பினர்.
அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள சிறிய நாடு யேமன். இந்த நாட்டின் ஒரு பகுதி, ஊத்தி தீவிரவாதிகளின் கையில் இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாசுக்கு ஆதரவாகவும் இந்த ஊத்தி தீவிரவாதிகள், செங்கடல் பகுதியில் அக்டோர் மாதம் 7ஆம்தேதி ஒரு புதிய போரை ஆரம்பித்தார்கள். செங்கடல் வழியே செல்லும் இஸ்ரேல் தொடர்புள்ள கப்பல்கள் மீது ஏவுகணைகள், டுரோன்களை அனுப்பி தாக்குவது தான் அந்த புதிய போர்.
முக்கிய கடல்வழி
உலகின் முக்கிய கடல் வணிகக் பாதைகளில் ஒன்று செங்கடல். அதன் ஒருமுனை இஸ்ரேல் அருகே சூயஸ் கால்வாயைத் தொடுகிறது. மறுமுனை பாபெல் மாண்டெப் நீரிணை அருகே யேமன் நாட்டைத் தொடுகிறது. செங்கடலுக்குள் உள்நுழையும் குறுகிய வழியான பாபெல் மாண்டெப் நீரிணை பகுதியில் வரும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களை ஊத்திகள் உற்சாகமாகத் தாக்கத் தொடங்கினார்கள். குறுகிய காலத்தில் 12 கப்பல்கள் தாக்கப்பட்டன.
செங்கடல் பகுதி, உலக கப்பல் போக்குவரத்தில் 12 சதவிகித கப்பல் போக்குவரத்து நடைபெறும் பகுதி. ஆண்டுக்கு, ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பெட்ரோலிய எண்ணெய், பொருட்கள் செங்கடல் வழியாகத்தான் செல்கின்றன.
ஊத்திகளின் தாக்குதலையடுத்து மாஸ்க் உள்பட பல கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியே கப்பல்களை அனுப்புவதை நிறுத்திக் கொண்டன. பழைய வழக்கப்படி, ஆப்பிரிக்கா வைச் சுற்றிப் போகப்போவதாகஅவை அறிவித்தன. தலையைச்சுற்றி மூக்கைத் தொடு வதைப் போல, கப்பல்கள் இப்படி செங்கடல் பாதையைத் தவிர்த்து ஆப்பிரிக்காவைச் சுற்றி வலம் வந்தால், உலக அளவில் முதன்மைப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை உயரும். காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமீயம் அதிகரிக்கும். இன்னும் பலப்பல சிக்கல்கள் ஏற்படும்.
ஊத்தி அமைப்பின் தாக்குதல்களை அடுத்து அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் உடனே செங்கடல் பகுதியில் களமிறங்கப்பட்டன. ஊத்திகளின் ஏவுகணைகள் எதுவும் பறந்து வந்தால் அவற்றை முனைமுறிக்கும் வேலையில் அமெரிக்கக் கடற்படை இறங்கியது. உதவிக்கு பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் வந்தன. அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களான ஜெரார்ட் ஃபோர்ட், டிவைட் ஐசனோவர் கப்பல்கள் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டன.
செங்கடலில் உள்ள ஆப்பிரிக்க நாடான ஜிபுதியில் இருந்த சீனாவின் 3 போர்க்கப்பல்கள் மட்டும், செங்கடல் பிரச்சினையைக் கண்டுகொள்ளவே இல்லை. செங்கடலில் ஊத்திகள் நடத்திய ஏவுகணை, டுரோன் தாக்குதல்களால் 20 சதவிகித கப்பல் போக்குவரத்து தடைப் பட்டது.
அரபிக்கடலில் தாக்குதல்
இந்தநிலையில், ஜப்பானுக்குச் சொந்தமான எம்.வி.செம் புளூட்டோ என்ற டேங்கர் கப்பல், சௌதி அரேபியாவின் ஜூபைல் துறைமுகத்தில் இருந்து, இந்தியாவின் புதுமங்களூரு துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த நேரம்.
கடந்த 23ஆம்தேதி சனிக்கிழமையன்று அந்த கப்பல் மீது ஆளில்லாத ஒரு டுரோன் பறந்து வந்து தாக்குதல் நடந்தது. கப்பல் தீப்பற்றி எரிய, கப்பலில் இருந்து 21 இந்திய மாலுமிகளும், ஒரு வியட்நாமிய மாலுமியும் அரும்பாடுபட்டுத் தீயை அணைத்தார்கள். நல்லவேளை. யாருக்கும் காயமில்லை. அதன்பின் கப்பல், பழுது பார்ப்புப் பணிக்காக மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
செம் புளூட்டோ டேங்கர் கப்பல் மீது நடந்த தாக்குதல், முதன்முறையாக செங்கடலுக்கு வெளியே அரபிக்கடலில் நடத்தப்பட்ட தாக்குதல். அதனால் உலகம் அதிர்ந்துபோன நிலையில், இந்தியாவும் அதன்பங்குக்கு அதிர்ச்சியில் மூழ்கியது. காரணம் இந்தியாவின் குஜராத் மாநிலம் துவர்க்காவில் இருந்து வெறும் 200 கடல் மைல் தொலைவில் நடத்தப்பட்ட தாக்குதல் இது. இந்தியக் கரையில் இருந்து 370 கிலோ மீட்டர் தூரத்தில் தாக்குதல் நடந்தது இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாக்குதலுக்குள்ளான கப்பல், இஸ்ரேல் நாட்டு கோடீஸ்வரர்களில் ஒருவரான இதான் ஓபருடன் தொடர்புடைய கப்பல். இந்தநிலையில், ‘ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய டுரோனைப் பயன்படுத்தி ஈரான் நாடுதான் இந்த தாக்குலை நடத்தியதாக அமெரிக்க ராணுவ அமைப்பான பெண்டகன் குற்றம் சாட்டியது. ஈரான் அதை மறுக்க ஒரே பரபரப்பு.
இந்த தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில், செங்கடல் பகுதியில், கேபன் நாட்டு கொடி யுடன் சென்ற டேங்கர் கப்பல் ஒன்று டுரோன் மூலம் தாக்கப்பட்டது தனிக்கதை.
களமிங்கிய கப்பல்கள்
செம் புளூட்டோ டேங்கர் கப்பல் மீது நடந்த தாக்குதலையடுத்து இந்தியா செய்ததுதான் அதிர்ச்சிகரமான வேலை. அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளைக் கொண்ட ஐந்து போர்க் கப்பல்களை உடனே அரபிக்கடலுக்கு இந்தியா அனுப்பி வைத்தது. அதில், ஐ.என்.எஸ். கொல்கத்தா, செங்கடலின் நுழைவு வாயிலான பாபேல் மாண்டெப் பகுதி நிறுத்தப் பட்டுள்ளது. ஐ.என்.எஸ். கொச்சி, யேமன் அருகில் உள்ள சகோத்ரா தீவு அருகே நிறுத்தப்பட்டது. ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ். சென்னை, ஐ.என்.எஸ். மர்ம கோவா போர்க்கப்பல்கள் முறையே அரபிக்கடலின் வடக்கு, நடுப்பகுதி, மேற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
போதாக்குறைக்கு நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிராக செயல்படக்கூடிய போயிங் பி81 ரக விமானத்தை இந்திய கடற்படை ரோந்துப் பணியில் இறக்கி விட்டுள்ளது. கூடவே ஆளில்லாத பிரிடேட்டர் உளவு டுரோன்களும் அரபிக்கடல் முழுவதும் பறந்து வலம் வருகின்றன. டுரோன்களை ஏவி தாக்குதல் நடத்தும் சந்தேகத்துக்கு இடமான கப்பல்கள், படகுகளை அவை தேடி வருகின்றன.
இந்திய கடலோரக் காவல்படை அதன் பங்கு டோர்னியர் கண்காணிப்பு விமானங்கள், காவல்சுற்றுப் படகுகளை இறக்கிவிட்டுள்ளது. ஆக, மொத்தம், அரபிக்கடலில் வரலாறு காணாத அளவுக்கு இந்தியப் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஒரு பதற்றப் பகுதியாக மாறியிருக்கிறது அரபிக்கடல்.
இந்த ஐந்து போர்க்கப்பல்களும் எரிபொருள் நிரப்புவதற்காக, 25 ஆயிரம் டன் எடையுள்ள ஸ்வர்ணமாலா கப்பலை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
‘செம் புளூட்டோ டேங்கர் கப்பலைத் தாக்கிய டுரோன் ஈரான் நாட்டுக்குச் சொந்தமான சாகேத் 136 என்ற டுரோன்’ என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. மறுபுறம், செம் புளூட்டோ டேங்கர் கப்பலில் தடயவியல் ஆய்வு நடத்தி எந்தவகையான வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது? அது எந்த நாட்டின் டுரோன் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய புலனாய்வு அமைப்புகள் இறங்கியுள்ளன. தாக்குதல் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
யேமன் நாட்டில் உள்ள ஊத்தி கிளர்ச்சியாளர்கள், ஈரான் ஆதரவுடன் இயங்கி வருபவர்கள். காசாவில் இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் அமைப்பினரும், லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹெஸ்புல்லா அமைப்பினரும்கூட ஈரான் நாட்டின் ஆதரவாளர்கள் தான். இந்தநிலையில், அரபிக்கடலில் இஸ்ரேலுடன் தொடர்புடைய ஒரு கப்பல் மீது டுரோன் தாக்குதல் நடந்திருப்பதால் ஈரான் மீது சந்தேகம் வருவது இயல்புதான்.
இந்தநிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு அரபிக் கடலில் இந்திய கடற்படை தன் பலத்தைக் காட்ட கையை நீட்டியிருப்பது அரபிக்கடல் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, காசா போர் உலக அரங்கை, தொடர்ந்து அதிர வைத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், உலகநாடுகள் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. இதில், இஸ்ரேல் ஆதரவு நாடுகள் இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க விரும்புகின்றன. இதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகம்தான் செம் புளூட்டோ டேங்கர் கப்பல் மீதான தாக்குதலோ என்ற சந்தேகமும் உள்ளது.
உலகின் போர்முறை இப்போது மாறிவருகிறது. உக்ரைன்-ரஷியப் போரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளற்ற, ஆயுதம் தாங்கிய டுரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் டுரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் உலக அளவில் சில நாடுகளின் கடற்படைக்கு மட்டுமே இருக்கிறது. இந்திய கடற்படை, டுரோன் தாக்குதல் களை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.