No menu items!

விஜயகாந்த் அடக்கம் விதியை விலக்கிய அரசு –  மிஸ் ரகசியா

விஜயகாந்த் அடக்கம் விதியை விலக்கிய அரசு –  மிஸ் ரகசியா

கருப்பு நிற உடையில் ஆபீசுக்கு வந்திருந்தாள் ரகசியா.

“கேப்டனுக்கு அஞ்சலியா? கருப்பு ட்ரெஸ்?”

“கேப்டனோட இறுதி யாத்திரைல கலந்துக்க போனதால நேத்தைக்கு என்னால வர முடியல. அதனால் இன்னைக்கு வந்தேன். விஜயகாந்த்  கடைசியா  நடிச்ச படம் விருதகிரி. இந்த படம் ரிலீஸாகி 13 வருஷம் ஆச்சு ஆக்டிவ் பாலிடிக்ஸ்ல இருந்து அவர் ஒதுங்கி 5 வருஷங்களுக்கு மேல ஆச்சு. அப்படி இருந்தும் லட்சக்கணக்கான மக்கள்  அவரை மறக்காம இறுதி அஞ்சலி செலுத்த வந்தாங்கன்னா  உண்மையிலயே பெரிய விஷயம்தான். மக்கள் மேல அவர் வச்சிருந்த பாசத்துக்கு அவங்களும் விஜயகாந்தை கம்பீரமா வழியனுப்பி வச்சிருக்காங்க” என்று  சோகமாக சொன்னாள் ரகசியா.

 “விஜயகாந்த் இறந்ததுல நிறைய ஸ்கோர் பண்னது திமுக அரசுதான் போல. நிறைய பாராட்டு வருதே?”

 “ஆமாம். டெத் நியூஸ் கேள்விப்பட்டதும் முதல்ல போய் அஞ்சலி செலுத்துனாரு. அவரோட உடலை அரசு மரியாதையோட அடக்கம் செய்யவும் உத்தரவு போட்டிருக்கார். விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தின பிறகு பிரேமலதாகிட்ட பேசின முதல்வர்,  ‘கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த நிறைய பேர் வருவாங்க. ஏதாவது ஒரு பொது  இடத்தில் அவர் உடலை வச்சா நல்லது.  தீவுத்திடல்,  பச்சையப்பன் கல்லூரி மைதானம்,  ஒய்எம்சிஏ மைதானம் ஆகிய இடங்கள்ல ஏதாவது ஒரு இடத்துல அவர் உடலை அஞ்சலிக்கு வைக்கலாம்’னு சொல்லி இருக்கார். அதுக்கு பிரேமலதா, ‘கேப்டன் தன்னோட உடலை கட்சி அலுவலகத்தில் வைக்கணும்னுதான் விரும்பினார். அதனால இங்கயே வைக்கறோம்’ன்னு சொல்லி இருக்கார். ஆனா பிற்பாடு முதல்வர் சொன்ன மாதிரியே அதிக கூட்டம் கூட ஆரம்பிச்சுடுச்சு.   கோயம்பேடு மற்றும் அதை சுற்றி இருக்கற இடங்கள்ல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுச்சு. அதனால சென்னை மாநகர காவல் ஆணையர் பிரேமலதாவை சந்திச்சு, “போக்குவரத்து நெரிசலால் பாதுகாப்பு குளறுபடி நடக்க வாய்ப்பு இருக்கு. விஐபிகள் மற்றும் அமைச்சர்கள் வந்தா நெரிசல் இன்னும் அதிகமாகும். சமாளிக்கறது கஷ்டம். அதனால அவரோட உடலை தீவுத் திடல்ல அஞ்சலிக்கு வைக்கலாம்’னு சொல்லி இருக்கார்.  அதுக்கு பிறகுதான் பிரேமலதா சம்மதிச்சு இருக்காங்க.” 

“ஓ..இப்படிதான் நடந்ததா? முதல்வர்தான் முதல்ல கேட்டாங்களா?”

“ஆமாம். விஜயகாந்த் விஷயத்துல முதல்வர் ரொம்ப எமோஷனலா இருந்தார். உதயநிதிகிட்ட சொல்லி எல்லா ஏற்பாடையும் பண்ணச் சொன்னார். உதயநிதியும் பிரேமலதாகிட்ட தொடர்ந்து பேசி எல்லாத்தையும் ஸ்மூத்தா பண்ணிட்டார். ஒரு பிரச்சினையும் இல்லை. இதுல தேமுதிகாரங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்”

“அப்போ நாடாளுமன்றத் தேர்தல்ல திமுக – தேமுதிக கூட்டணி வருமா?”

“வரலாம். தன்னுடைய பேச்சுல முதல்வருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் நிறைய நன்றி சொன்னார். இதுல திமுககாரங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சிதான்”

“தேமுதிக அலுவலகத்துல விஜயகாந்தை அடக்கம் பண்ணுவதற்காக விதியை மாத்திட்டாங்கனு சொல்றாங்களே?”

“ஆமாம். சென்னை சிட்டி லிமிட்ல தனியாருக்கு சொந்தமான இடத்துல யாரையும் அடக்கம் பண்ண அனுமதி கிடையாது. ஆனா விஜயகாந்துக்காக இந்த விதி மாத்தப்பட்டிருக்கிறது. இது முன்னாடி ஜேப்பியாருக்கு அவங்க காலேஜ்லேயே அடக்கம் பண்ணியிருக்காங்க. ஆனா அது சிட்டி லிமிட்டுக்கு வெளில இருக்கு. சிட்டிக்குள்ள தனியார் இடத்துல அடக்கம் செய்யப்பட்ட முதல் மனிதர் விஜயகாந்த்தான். இதுக்காகா கார்ப்பரேஷன் ஸ்பெஷல் மீட்டிங் போட்டு அவருக்கு விலக்கு கொடுத்திருக்காங்க. இதெல்லாம் பெரிய விஷயம்”

”ஆமாம்…பெரிய விஷயம்தான். கருணாநிதிக்கு அதிமுக ஆட்சில இடம் கொடுக்க மறுத்ததுதான் ஞாபகத்துக்கு வருது. சரி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்ல பாஜகவுக்கு எதிரா ஒரு தீர்மானம்கூட இல்லையே. அவங்க திரும்பவும் சமாதானமாகப் போறாங்களா?”

 “தீர்மானம் போடாட்டி என்ன?… அதுக்கு பதிலாத்தான் பொதுக்குழு முடிஞ்ச பிறகு செய்தியாளர்களை சந்திச்ச ஒவ்வொரு அதிமுக தலைவரும் பாஜகவை தாக்கி பேட்டி கொடுத்திருக்காங்களே? அதுலயும் பாஜகவுக்கு நெருக்கமான தலைவரா சொல்லப்படற தம்பிதுரையே  நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லைன்னு சொல்லி இருக்கார். இப்படி எல்லா தலைவர்களும் சொல்லிட்டதால, தேர்தல்ல இனி பாஜகவோட அதிமுக கூட்டணி அமைக்காதுங்கிறதுல அந்த கட்சி தொண்டர்கள் தெளிவாகி இருக்காங்க.”

”நான் வாயைத் திறந்தா எடப்பாடி திகார் ஜெயிலுக்கு போகவேண்டி வரும்னு ஓபிஎஸ் எச்சரிச்சு இருக்காரே?”

 “இதை ஓபிஎஸ்ஸோட ஆதரவாளர்களே ரசிக்கல. ஓபிஎஸ் முதல்வரா இருந்தப்ப எடப்பாடி அமைச்சர். அவர் முதல்வரா இருந்தப்ப ஓபிஎஸ் துணை முதல்வர்.  இது எல்லாமே கூட்டுப் பொறுப்புங்கிறதுகூட  அவருக்கு தெரியாதான்னு அவங்க கேட்கறாங்க.  அதேபோல் ஜெயலலிதாவுக்கு 2  கோடி கடன் கொடுத்தேன்னு ஓபிஎஸ்  சொன்னதையும் அவங்க  ரசிக்கவில்லை.  அது கட்சிப் பணம்தானே?. இவர் ஏதோ தன் சொந்த பணத்தை கொடுத்த மாதிரி பேசறாரேன்னு சொல்றாங்க”

 “அண்ணாமலையோட நடைப்பயணம்  எந்த அளவுக்கு இருக்கு?”

 “அண்ணாமலை நடைப்பயணம் போன  நாட்களை விட அதை ரத்து செஞ்ச நாட்கள்தான் அதிகம்னு பாஜக தலைவர்களே கிண்டல் பண்றாங்க. திருநெல்வேலி தூத்துக்குடியில் வெள்ளம்னு சொல்லி  போன வாரம் நடைபயணத்தை ரத்து செஞ்சார்.  இந்த வாரம் கும்பகோணம் வரைக்கும் வந்தவர், விஜயகாந்த் மரணம்னு செய்தி கேள்விப்பட்ட்தும் 3-ம் தேதி வரைக்கும் நடைப்பயணத்துக்கு லீவ் விட்டுட்டார். இதனால நடைப்பயண நிகழ்ச்சிக்கு காசு செலவு செஞ்ச தொண்டர்களுக்குதான் பணம் வேஸ்ட் ஆகுது. அதோட அடுத்த்தா அண்ணாமலை நடைபயணம் போற நாளுக்கும் அவங்க செலவு செய்ய வேண்டியிருக்கு. இதைச் சொல்லி அவங்க புலம்பறாங்க”

 “இந்தியா கூட்டணியில தொகுதிப் பங்கீடு பத்தி பேசத் தொடங்கினதா கேள்விப்பட்டேனே?”

 “ஆமாம் தொகுதி பங்கீடு சார்பா பேச கார்கே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கார். அந்த கூட்டத்துல திமுக சார்பா கனிமொழியும், டி.ஆர்.பாலுவும் கலந்துக்கறாங்களாம். இதுக்கு நடுவுல தமிழகத்துல காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 15 தொகுதிகள் பட்டியலோட டெல்லிக்கு  போயிருக்கார் கே.எஸ்.அழகிரி. இந்த கூட்டத்தில் கலந்துக்க ப.சிதம்பரம்,  டாக்டர் செல்வகுமார்,  மாணிக் தாகூர், செல்வப் பெருந்தகைக்கும் அழைப்பு அனுப்பி இருக்காங்களாம்.”

”15 சீட் கொடுப்பாங்களா?”

“போன தடவை கொடுத்த சீட்டையே தருவாங்களான்றதே டவுட்தான்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...