No menu items!

பாலிவுட்டுக்கு போகும் த்ரிஷா!

பாலிவுட்டுக்கு போகும் த்ரிஷா!

2024 புத்தாண்டை ரொம்பவே நம்பியிருக்கிறார் த்ரிஷா. 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும், பரபரப்பாக முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும், இடையில் த்ரிஷாவை எங்கேயும் ஆளைக்காணமுடியவில்லையே என்று கமெண்ட் அடிக்குமளவிற்கு இருந்தாலும், மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்து இப்போதுள்ள நடிகைகளுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார் த்ரிஷா.

‘பொன்னியின் செல்வன்’ கொடுத்த உற்சாகத்தில் இப்போது மளமளவென புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அதற்கேற்ற வகையில் 2024-ம் ஆண்டு த்ரிஷாவுக்கு மிக முக்கியமான ஆண்டாக இருக்கும் என்கிறார்கள். அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் ’விடாமுயற்சி’, கமலுடன் ’தக் லைஃப்’ என்று கைவசம் இரண்டு முக்கியப் படங்களை வைத்திருக்கிறார்.

இந்த இரண்டையும் விட இப்போது ஒரு புது வாய்ப்பு த்ரிஷாவுக்கு வந்திருக்கிறதாம். பாலிவுட்டின் சூப்பர் கான்களில் ஒருவரான சல்மான் கானுடன் நடிக்கும் வாய்ப்பு.

நம்மூர் விஷ்ணுவர்தன் அடுத்து சல்மான் கானை வைத்து படமொன்றை இயக்க இருக்கிறார். இது 1988-ல் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் காக்டஸ்’ என்ற அதிரடி ராணுவ நடவடிக்கையை அடிப்படையாக கொண்ட கதையாம். 1988-ல் மாலத்தீவின் அதிபரை ஒரு பிஸினெஸ் மேனிடம் இருந்து மீட்ட சம்பவத்திற்குதான் ‘ஆபரேஷன் காக்டஸ்’ என்று பெயர் சூட்டியிருந்தார்கள்.

இந்தப் படத்தில்தான் த்ரிஷா நடிக்க இருக்கிறார். இதற்கு காரணம் விஷ்ணுவர்தன்.

2010-ல் ’கட்டா மீட்டா’ என்ற ஹிந்திப்படத்தில் நடித்தார் த்ரிஷா. தமிழில் அவர் உச்சத்தில் இருந்த போது வந்த வாய்ப்பு. இதனால் மும்பையில் செட்டிலாகும் எண்ணத்துடன் பறந்த த்ரிஷா, அந்தப் படம் சரியாக போகாததால் போன வேகத்திலேயே சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார்.

இப்போது ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிந்திப் பட வாய்ப்பு வந்திருப்பதால் த்ரிஷா உற்சாகத்தில் இருக்கிறார். அநேகமாக இப்படத்தின் ஷூட்டிங் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.


ஒடிடி-க்கு ஓட்டமெடுக்கும் பூஜா ஹெக்டே!

சினிமாவில் படங்கள் ஓடும் வரைதான் படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவ்வளவு ஏன் படம் பார்க்கும் ரசிகர்களும் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தால் போதும், சுற்றி ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். அம்போவென விட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள்.

இப்படியொரு சூழலில்தான் இருக்கிறார் பூஜா ஹெக்டே. தமிழில் இவர் பெரிதாக எடுப்பட முடியாமல் போனாலும், தெலுங்கு சினிமாவில் இவர் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுடன் இவர் நடித்தப் படங்கள் அடுத்தடுத்து ஹிட். இதனால் பூஜா ஹெக்டே தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு ‘ராசியான அம்மாயி’ ஆக இருந்தார்.

ஒரு படத்தில் நடிக்க 3.5 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கும் காஸ்ட்லியான ஹீரோயினாகவும் இருந்த பூஜா ஹெக்டேவுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் அடி வாங்கவே, கால்ஷீட் டைரியில் எதுவும் நிரப்ப முடியாமல் வீட்டிலேயே சும்மா உட்கார வேண்டியதாயிற்று.

‘பீஸ்ட்’ கலவையான விமர்சனத்தைப் பெற்ற போதிலும், லிங்குசாமி ‘பையா 2’-வில் நடிக்க பூஜா ஹெக்டேவை அணுகியிருக்கிறார். கொஞ்சம் கூட யோசிக்காமல் 4 கோடி சம்பளம் என்றதும் லிங்குசாமி ஷாக் அடித்த சாமியாக திரும்பிவிட்டார்.

இப்பொழுதும் கூட தனது சம்பளத்தைக் குறைக்க பூஜா ஹெக்டே தயாராக இல்லை என்று அவரது மேனேஜர் தரப்பு தெரிவிக்கிறது.

இதனால் பூஜா ஹெக்டேவுக்கு சினிமா என்பது இப்போது இல்லாமல் போகவே, வேறு வழியில்லாமல், தமன்னா, சமந்தா பாணியில் ஒடிடி பக்கம் தனது கவனத்தைத் திரும்பி இருக்கிறார். நாலைந்து ஒடிடி ஒரிஜினல்கள் நடித்துவிட்டால், பான் – இந்தியா ஹீரோயின் ஆகிவிடலாம் என்ற திட்டத்தோடு பூஜா ஹெக்டே இப்போது ஒடிடி-க்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறாராம்.

’டிமாண்ட்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ மற்றும் விக்ரமை வைத்து ‘கோப்ரா’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துதான் இப்போது பூஜா ஹெக்டேவுக்கு கைக்கொடுக்கும் நண்பராகி இருக்கிறார். இவர் இப்போது ஒடிடி சிரீஸ் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.

இந்த வெப் சிரீஸ்ஸை நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்க இருக்கிறது. இது ஹாரர் த்ரில்லர் வகையறா வெப் சிரீஸ் என்றும் இதில் பூஜா ஹெக்டேவுக்கு கவர்ச்சியான கதாபாத்திரம் என்று தகவல் கசிந்திருக்கிறது.


லோகேஷ் – விஜய் இணையும் ’லியோ 2’ எப்போது?

லோகேஷ் கனகராஜ், ஒரு வழியாக ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் பட வேலைகளுக்குள் மும்முரமாக நினைத்தாலும், இந்த நெட்டிசன்கள் அவரை சும்மா இருக்க விடுவதில்லை. அவரிடமிருந்து ஏதாவது ஒரு தகவலை வாங்கிவிட வேண்டுமென்பதில் குறியாகதான் இருக்கிறார்கள்.

இந்த வகையில் லோகேஷூம் விஜயும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜயின் ரசிகர்கள். அதாவது ‘லியோ 2’ படம் வருமா, வந்தால் எப்போது அது நடக்கும் என்ற கேள்விகளால் லோகேஷை பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்காமல் லோகேஷ் கனகராஜ் வாய் தவறி எதிர்கால திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.

இப்போது ரஜினி நடிக்கும் ’தலைவர் 171’ படத்தின் எழுத்து சம்பந்தமான வேலைகளில் மும்முரமாக இருப்பதால், அடுத்த ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பித்துவிடும். இந்தப் படம் முடியவே ஆறு மாதங்கள் பிடிக்கும் என்பதால் அடுத்த 2024 வரை ரஜினி பட வேலைகள்தான்.

’தலைவர் 171’ படம் வெளியானதும், அடுத்து ‘கைதி 2’ வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். ’கைதி’ எனக்கு மிகவும் நெருக்கமான கதை. படம். அதனால் அதில் எப்போது இறங்கினாலும் மளமளவென வேலைகளை முடித்துவிடுவேன் என்றும் மனம்விட்டு பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த இரண்டுப் படங்களும் முடிந்தப்பிறகு அநேகமாக ’லியோ 2’ படம் பற்றி யோசிக்க வாய்ப்புகள் இருப்பதாக லோகேஷ் கனகராஜ் வட்டாரம் தெரிவிக்கிறது. விஜயுடன் இணைந்து பணியாற்றுவது என்பது உற்சாகமான ஒன்று. அதனால் அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் மீண்டும் இணைவோம் என்றும் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

’லியோ 2’ எடுப்பதற்கு ஏற்ற வகையில் அதன் கதையும் அமைந்திருப்பதால், அதுவும் நடக்கும் என்கிறது லோகேஷூக்கு நெருங்கிய வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...