No menu items!

சரத்பாபு மரணம் – காரணம் கேன்சர்: ரஜினி, கமல், சுஹாசினி உருக்கம்

சரத்பாபு மரணம் – காரணம் கேன்சர்: ரஜினி, கமல், சுஹாசினி உருக்கம்

தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல நடிகர் சரத்பாபு (வயது 71) நேற்று ஹைதராபாத்தில் காலமானார். அவரது உடல் இன்று சென்னை கிண்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, சென்னை தி-நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சரத்பாபுவின் உடலுக்கு திரைத்துறையினர் உட்பட பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு இன்று காலை நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நடிகை சுஹாசினி மணிரத்னம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சரத்பாபு கடந்த 92 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உறவினர்கள் அனைவரும் பெங்களூருவில் இருந்ததால், முதல் 2 மாதங்கள் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதலில் அவருக்கு லேசாக காய்ச்சல்தான் ஏற்ப்பட்டது. பின்னர்தான் அவருக்கு மல்டிபிள் மைலோமா என்கிற கேன்சர் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் அவரது தங்கை இருந்ததால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அப்போது நானும் சிரஞ்சீவியும் அந்த மருத்துவமனை சென்று மருத்துவர்களிடம் பேசினோம். தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்ற முயல்வதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவர்கள் எவ்வளவோ முயற்சி பண்ணியும் சரத்பாபுவை காப்பாற்ற முடியவில்லை.

நான் சரத்பாபு உடன் 30 முதல் 40 படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய முதல் படமான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ முதல் என்னுடன் சரத்பாபு நடித்திருக்கிறார். சரத்பாபுவுக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது. அதோடு நன்கு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக் கொள்பவர். அப்படி இருந்தும் மல்டிபிள் மைலோமாவால் அவர் பாதிக்கப்பட்டார்.

மல்டிபிள் மைலோமா பாதிப்பு தீவிரமடைந்து நான்காவது ஸ்டேஜில்தான் தெரியவந்தது. இதனால்தான் அவரை இழக்க நேரிட்டது. அவர் ரொம்ப பிட்டா இருந்தார். சைவம் தான் சாப்பிடுவார். இயற்கை உணவுகள் தான் அதிகமும். அப்படி இருந்தும் அவருக்கு இந்த நிலைமை” என கூறினார்.

சரத்பாபுவின் நெருங்கிய நண்பரும் தனது ‘அண்ணாமலை’, ‘முத்து’ படங்களில் அவரை நடிக்க வைத்தவருமான ரஜினிகாந்த் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “சரத்பாபு எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் மெகாஹிட் ஆகின. ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் சிகரெட் பிடிப்பதை பார்த்தால் உடனே சிகரெட்டை பிடிங்கி கீழே போட்டு அணைத்துவிடுவார். அந்த அளவுக்கு என்மீது அன்பு வைத்திருந்தார். என்னை ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு, இப்போ அவர் சீக்கிரமாவே போனது வருத்தமா இருக்கு” என உருக்கமாக பேசினார்.

சரத்பாபு மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள  கமல்ஹாசன், “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...