No menu items!

‘தமிழ்நாட்டு ஜாபாலி’ என்றார் ராஜாஜி

‘தமிழ்நாட்டு ஜாபாலி’ என்றார் ராஜாஜி

வால்மீகி ராமாயணத்தில் வரும் புரட்சிகரமான துறவிதான் ஜாபாலி, நாத்திகராக முழங்கியவர்; சொர்க்கமாவது நரகமாவது என்றார்! ராமர் காட்டிற்கு புறப்படுவதை கண்டித்தார். “போய்… சிம்மாசனத்தில் ஏறு” என்று கட்டளையிட்டார். சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜாஜி, தனது உற்ற நண்பராக இருந்த பெரியரை அவரது 80ஆவது பிறந்தநாளில் ‘தமிழ்நாட்டு ஜாபாலி’ என்று வாழ்த்தினார். ‘கல்கி’ பத்திரிகை அதே தலைப்பில் வாழ்த்து கூறியது.

சேலத்தில் ராஜாஜியும் ஈரோட்டில் பெரியாரும் நகராட்சி சேர்மேனாக இருந்தார்கள். பெரியார் செய்த சாதனைகளை வியந்தார் ராஜாஜி. ஈரோடு நகராட்சியில் வரவு செலவுகள் ஒரு பைசா கூட விடாமல் எழுதப்பட்டது. சைக்கிள் ரிக்‌ஷாவில் நகரை சுற்றிவருவார் பெரியார்.

ஏழை மக்கள் குடிசை பகுதிகளில் குடிநீருக்கு படும்பாட்டை கண்டார். காவேரியில் இருந்து குடிநீர் கொண்டுவர குழாய்கள் போடப்பட்டன. குடிதண்ணீர் குழாய்கள் முதலில் ஏழைகள் வசிக்கும் பகுதியில் போய்தான் மற்ற பகுதிகளுக்கு செல்லுமாறு அமைக்கப்பட்டது. ‘தீட்டு’ என்று வைதீகர்கள் சில வாரங்கள் குடிநீர் குழாயை தொடவில்லை. ஆனால், தண்ணீர் கொட்டுவதை கண்டு வேறு வழி இன்றி தீட்டு கழிய குழாய்களுக்கு பூஜை போட்டு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இந்த காட்சிகளை பார்த்து சிரித்தவாறு பயணித்தார் பெரியார்.

இந்த சீர்த்திருத்தங்களை கண்டு வியந்து ராஜாஜி காங்கிரசுக்கு பெரியாரை இழுத்தார். கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தார் பெரியார். விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஆனார்.

ஒருமுறை காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் ஒன்றை கடுமையாக எதிர்க்குமாறு பெரியாரை கேட்டுக்கொண்டார் ராஜாஜி. அந்த தீர்மானத்தை பெரியார் மிக கடுமையாக வாதித்து எதிர்த்தார். தீர்மானம் தோற்றது. பின்னர், “எதற்காக இந்த தீர்மானத்தை எதிர்க்க சொன்னீர்கள்” என்று ராஜாஜியிடம் கேட்டார் பெரியார்! ‘நீங்கள் தான் காரணத்தை பட்டியல் போட்டீர்களே” என்றார் ராஜாஜி!

காங்கிரஸ் ஆதாரவோடு நடந்த குருகுலம் ஒன்றில் சிறுவர்களிடையே சாதி பாகுபாடு காட்டப்பட்டதை கண்டு பெரியார் ஆத்திரம் அடைந்தார். அதற்கு வழங்கி வந்த தொகையை நிறுத்திவிட்டார். எதிர்ப்பு கிளம்பியது. காந்தியடிகள் கவனத்திற்கும் அது போனது. மாகாத்மாவை பெரியார் சந்தித்து தன் திட்டவட்டமான முடிவுக்கு உள்ள காரணத்தை கூறினார். காந்தி ஏகப்பட்ட கேள்விகளை கேட்கும் வழக்கம் உள்ளவர். பெரியார் தன் வாதங்களை முன்வைத்தார்.

“உங்கள் நண்பர் ராஜாஜி கூட ஆதரிக்கவில்லை” என்றார் காந்தி.

‘‘ராஜாஜி மிகச்சிறந்த தேசபக்தர். சுயநலமற்றவர். என் நண்பர் தான். ஆனால், சாதி விஷயத்தை கைவிட தயக்கம் காட்டுகிறார்” என்றார் பெரியார்!

‘‘இந்த சர்சையில் நாயக்கர் சொல்வதில் நியாயம் தெரிகிறது” என்று ஹரிஜன் இதழில் எழுதினார் காந்தி! ஆனால், இந்த சாதி பாகுபாடு காரணமாக பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார். பிரிட்டிஷ் ஆட்சியில் அவருக்கு பெரிய பதவிகளை வழங்க தயாராக அழைத்தனர். பெரியார் அதை மதிக்கவில்லை.

1952-ல் ராஜாஜி தமிழக முதல்வராக வந்தவுடன் கடவுள் மறுப்பு – சாதி எதிர்ப்புகளை தீவிரப்படுத்தினார் பெரியார். பிள்ளையார் சிலை உடைப்பு அறிவித்தார்! பெரியார் தொண்டர்கள் பிள்ளையார் சிலைகளை அச்சு எடுத்து கீழே போட்டு உடைத்தனர். ராஜாஜி “உடைப்பது பிள்ளையார் சிலைகளே இல்லை. பூஜை செய்தால்தான் பிள்ளையார்” என்று கூறிவிட்டார்.

எந்த ரகளையும் பெரிதாக இல்லை. பெரியார் கைது செய்யப்படவில்லை. ஆனால், அவரை மரியாதையுடன் தன் அறையில் தங்க வைத்திருந்தார் போலீஸ் கமிஷ்னர் பார்த்தசாரதி ஐயங்கார். திரைச்சிலைகள் வழியே எட்டிப் பார்த்த நிருபரிடம், “அது பெரியார் அல்ல. தாடி வைத்திருக்கும் ஒரு பெரியவர். குழந்தைகளுக்கு மிட்டாய் விற்பவர்” என்று தமாஷ் செய்தார் கமிஷ்னர்.

ஒருமுறை பெரியார் பிறந்தநாளும் பிள்ளையார் சதுர்த்தியும் செப்டம்பரில் ஒரே நாளில் வந்தது! பத்திரிகைகள் அதை தமாஷ் செய்தன.

பெரியாரை மணியம்மையார் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்ததை விடுதலை ஆசிரியர் வீரமணி உருக்கமாக கூறுவதுண்டு.

பெரியார் மணியம்மையை மணந்த அன்று அவருக்கு புதிய புடவை வாங்கி கொடுத்திருந்தார். பெரியாரின் இறுதி யாத்திரை புறப்பட இருந்த நேரம். ராஜாஜி மண்டபத்தில் எல்லாரையும் போக சொல்லி பெரியார் உடலுக்கு தன் திருமணத்தின்போது அவர் அணிந்திருந்த உடைகளை அணிவித்தார் மணியம்மை. தனக்கு திருமணத்தின்போது பெரியார் அளித்த புடவையை தானும் அணிந்துகொண்டார். மணியம்மையின் இந்த இறுதி அஞ்சலி கண்கலங்க வைத்தது.

கடைசியாக ஒரு தனி செய்தி…

பெரியாரின் செயலாளராக சம்மந்தம் இருந்தார். பெரியாருடன் பிரச்சார பயணம் செல்லும்போது குளிக்கவோ உடைகளை துவைக்கவோ நேரமே கிடைக்காது.

டெர்லின் துணி அப்போது தான் அறிமுகம். சோப்பில் நனைத்து காயப்போட்டால் போதும். கசங்கலே இல்லாமல் காய்ந்துவிடும்.

பயணத்திற்கு இதுவே நல்லது என்று மூன்று டெர்லின் சட்டைகளை வாங்கினார் சம்மந்தம். ஒன்றை அணிந்து அன்று பிரச்சார பயணத்திற்கு தயாராக பெரியார் முன் வந்து நின்றார்.

‘‘இது என்ன மாப்பிளை வேஷம்…? இந்த வேஷம் எல்லாம் நம் பிரச்சாரத்திற்கு சரி கிடையாது. வழக்கம் போல கைத்தறி சட்டையை அணிந்துவா!” என்று கூறிவிட்டார் பெரியார். சம்மந்தம் கூறிய காரணங்களை அவர் ஏற்கவில்லை. உடை எளிமையாக இருக்க வேண்டும்! பெரியார் உத்தரவு!

தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டாலும் பெரியார் போட்ட பாதை அப்படியே இரும்புபோல உறுதியாக இருக்கிறது – வழிகாட்டியப்படி!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...