No menu items!

தடுமாறும் பாலிவுட்

தடுமாறும் பாலிவுட்

வெள்ளிக்கிழமைகள் இந்திய திரையுலகுக்கு தீபாவளி பண்டிகை போல. காரணம் தங்களுடைய ஃபேவரிட் ஹீரோக்களின் புதிய படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமையை ரசிகர்கள் கொண்டாடுவது ஒரு பாரம்பரியமாக இருந்து வந்தது.

ஆனால் இந்த வெள்ளி கிழமை கொண்டாட்டங்கள் தற்போது பாலிவுட்டில் களை இழந்து வருகின்றன.

பெரிய பட்ஜெட். ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம். பிரம்மாண்டமான ப்ரமோஷன். இந்தியா முழுவதிலும் ரிலீஸ். இப்படி பாலிவுட்டின் ராஜ்ஜியம் மிகப்பெரியதாக விரிவடைந்து இருந்தாலும், இந்திய சினிமாவில் பாலிவுட்டின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது.

திரையரங்குகளில் படம் பார்க்க ஆவலோடு நிற்கும் ரசிகர்களின் நீண்ட வரிசைகள் இல்லை. டிக்கெட்களை தேடிப் போய் வாங்கும் பரபரப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தள்ளாடுகின்றன. படங்கள் வந்த வேகத்தில் திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஏன் இப்படியென தெரியாமல் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். தங்களுடைய ஷேர் கிடைக்குமா என விநியோகஸ்தர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். வார இறுதி நாட்களாவது டிக்கெட்கள் விற்பனையாகுமா என திரையரங்கு உரிமையாளர்கள் பீதியில் இருக்கின்றனர்.

பாலிவுட்டிற்கு ஏன் இந்த திடீர் சறுக்கல்…

சமீபத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில், அதிக எதிர்பார்புக்குள்ளான சில ஹிந்திப் படங்கள் வெளியாகின. இந்த வருடத்தின் முதல் பாதியில் வெளிவந்த 20 படங்களில் 15 படங்கள் ப்ளாப். இந்தப் படங்களுக்கு திரையரங்குகளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.

ஆமீர்கான் நடித்த லால் சிங் சத்தா. அக்‌ஷன் குமாரின் ரக்‌ஷா பந்தன் மற்றும் சாம்ராட் ப்ரித்விராஜ். ரன்பீர் கபூரின் ஷம்ஷெரா மற்றும் பிரம்மாஸ்திரா.,அடுத்து ’ஜெர்ஸி,’ ’பச்சன் பாண்டே’, ’தாகட்,’ ’ஜாயெஷ்பாய் ஜோர்தார்’ என இப்படி பட்டியல் நீள்கிறது.

‘கங்குபாய் கதியாவடி’, ‘பூல் புலாயா – 2’ மற்றும் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற ஒற்றை இலக்கத்திலான படங்கள் மட்டுமே பாலிவுட் பாக்ஸ் ஆபீஸூக்கு ஆறுதலாக இருந்திருக்கின்றன.

இந்த அடுத்தடுத்த ப்ளாப் படங்களின் மூலம் ஏறக்குறைய 100 மில்லியன் டாலர்கள் வரை பாலிவுட்டிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

இந்தவருடம் பாலிவுட்டில் திரையரங்கு வருமானம் 450 மில்லியன் டாலர்களை தாண்டாது என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அரை பில்லியன் டாலர் மதிப்பில் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் சோகம்.

பொதுவாக பாலிவுட் படங்களில் கவர்ந்திழுக்கும் கதை அம்சம் சுமாரான ஒன்றாக இருந்தாலும் கூட சொல்லுமளவிற்கு கலெக்‌ஷனை அள்ளும். ஆனால் இப்போது கண்டெண்ட் முக்கியமான அம்சமாகி இருக்கிறது. அதுவும் கோவிட் தாக்கத்திற்கு பிறகு கண்டெண்டிற்கு மவுசு அதிகரித்து இருக்கிறது என்கிறார்கள்.

பிரபல ‘கொய்மொய்’ வெப்சைட், இந்த வருடத்தில் வெளியான ஹிந்திப் படங்களில் 77% ப்ளாப் என்கிறது. மேலும் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் வெறும் 6000 கோடிகள்தான். அதில் ஹிந்திப்படங்களின் பங்கு வெறும் 34%தான். இது கோவிட் லாக்-டவுனுக்கு முந்தைய அளவை விட மிகக்குறைவு என்கிறது மீடியா கன்சல்ட்டிங் நிறுவனமான ஆர்மேக்ஸ் மீடியா.

இந்த லாப நஷ்ட கலெக்‌ஷன் சமாச்சாரம் ஒரு பக்கம் இருந்தாலும், ஹிந்தி பாக்ஸ் ஆபீஸை ஆக்ரமித்திருப்பது டப் செய்யப்பட்ட பிராந்திய மொழிப் படங்கள்தான். அதிலும் குறிப்பாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘கே.ஜி.எஃப் -2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டிருக்கும் கன்னடப் படமான கே.ஜி.எஃப் – 2 வசூலில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்திருக்கிறது என்கிறார்கள். அதேபோல் இதே மொழிகளில் டப் செய்யப்பட்ட தெலுங்குப் படமான ‘ஆர்.ஆர்.ஆர்.’ பாக்ஸ் ஆபீஸில் சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துவிட்டதாகவும் பேச்சு அடிப்படுகிறது. மறுபக்கம் தமிழ் மற்றும் டப் மூலம் கமல் ஹாஸன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் நடித்த ‘விக்ரம்’ படம் 63 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டி ஆச்சர்யமூட்டி இருக்கிறது.

ஜூலை – செப்டம்பர், 2022 காலக்கட்டத்தில், கோவிட்டுக்கு முந்தைய அளவை ஒப்பிடும் போது பாலிவுட் படங்களின் வருமானம் 45% ஆக சரியக்கூடும் என்கிறது எலாரா கேபிட்டல்.

தென்னிந்திய திரையுலகுடன் பாலிவுட்டை ஒப்பிடும்போது, இங்கே பாக்ஸ் ஆபீஸில் பெரும் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. ‘ஆர்.ஆர்.ஆர்., ‘கே.ஜி.எஃப் -2’ ’புஷ்பா’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்கள் 1000 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியிருக்கின்றன.

இதன் மூலம் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் 50% தென்னிந்தியப் படங்களின் பங்களிப்பாகவே இருக்கிறது.

தொடர்ந்து ரசிகர்களை தங்களது மாயஜால ஹீரோயிஸ இமேஜ் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நட்சத்திரங்களின் படம் கூட மரண அடியை வாங்கியிருக்கின்றன.

இதைப் பார்த்து அரண்டுப் போன ஆமீர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘பாலிவுட் வெகுஜன மக்களுக்கான படங்களை எடுப்பதை நிறுத்திவிட்டது. கண்டெண்ட்டிற்கு இன்று மவுசு அதிகம். அதனால் இது ஒரு மறு தொடக்கத்திற்கான ஆரம்பமாகவும் இருக்கலாம். மாஸ் ஆடியன்ஸை பார்த்தே ஆக வேண்டுமென தூண்டுகிற படங்களை எடுக்கவேண்டியது கட்டாயம்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

’கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் ரசனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக பொது முடக்கத்தினால் தங்களது வீட்டிலேயே பொழுதைக் கழித்த மக்கள் தற்போது உலகத்தர கண்டெண்ட்களை கண்டு ரசித்திருக்கிறார்கள். இதனால் தான் நட்சத்திரங்களின் முகங்களுக்கு கூட இதுவரையில் இருந்து வந்த மவுசை விட கண்டெண்ட்களுக்கு மவுசு அதிகரித்து இருக்கிறது. கவர்ந்திழுக்கும் கண்டெண்ட் இல்லாததால் பாலிவுட்டில் பெரும் வீழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. கோவிட்டுக்கு முந்தைய காலக்கட்டத்தைவிட 30% அளவுக்கு ரசிகர்களின் வருகை குறைந்திருக்கிறது’’ என்கிறார் எலாரா கேபிட்டலைச் சேர்ந்த பிரபல திரைப்பட துறை புள்ளிவிவர நிபுணர் கரண் தவ்ரனி.

பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட், ‘’கதை சொல்லும் பாணியில் மாற்றம் தேவைப்படுகிறது. பொதுமுடக்கத்தின் காரணமாக மக்களிடையே ஒடிடி-க்கு முக்கியத்துவம் உருவாகி இருக்கிறது. இதனால் ஆடியன்ஸூக்கு எது நல்ல கண்டெண்ட் என்பது எளிதில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதனால் கோவிட் பொதுமுடக்கத்திற்கு முன்பு கொடுத்த வழக்கமான கண்டெண்டகளை கொடுத்தால் இனியும் மக்களிடையே எடுப்படாது. பாலிவுட் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த தலைமுறையின் ரசனை மாறி வருகிறது. பாலிவுட் மாறாவிட்டால், இழப்பு பாலிவுட்டிற்குதான். பாலிவுட்டில் இப்பொழுது செட்-அப் செய்கிறார்கள். படங்கள் எடுக்கவில்லை. இப்படி செய்யும் செட்-அப் இனி எடுப்படாது. படங்கள் மட்டுமே மக்களிடையே சென்றடையும்’’ என்கிறார்.

ஒரு பக்கம் கண்டெண்ட் விஷயத்தில் பாலிவுட் இன்னும் மாற வேண்டியிருக்கிறது என்று முக்கியப்புள்ளிகள் சொன்னாலும், மற்றொரு பக்கம் புதிதாக கிளம்பியிருக்கும் boycott கலாச்சாரமும் படமெடுக்கும் போதே கவனத்தில் கொள்ளவேண்டிய புது செக் லிஸ்டை உருவாக்கி இருக்கிறது. 2015-ல் ஆமீர்கான் மத சகிப்புத்தன்மை குறித்து சொன்ன கருத்திற்கு 2022-ல் எதிர்வினை நிகழ்ந்திருக்கிறது. இந்த பாய்காட் கலாச்சாரமும் ரசிகர்கள் வருகையை வெகுவாக பாதிக்கும் அம்சமாக மாறி வருகிறது.

பாக்ஸ் ஆபீஸை பாதிக்கும் இந்த அம்சங்களில் இப்பொழுது பாலிவுட்டின் கவனம் திரும்பியிருக்கிறது என்கிறது ராய்டர்ஸ் ரிப்போர்ட். தயாரிப்பாளர்கள் ஒரு புதிய படம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் இப்போது அலச ஆரம்பித்திருக்கிறார்கள். பட்ஜெட் முதல் நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது வரை மாற்றங்கள் நிகழ்வதாக ராய்டர்ஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

ஆக ஒரு ஆஸிட் வாஷ்ஷூக்கு தயாராகி இருக்கிறது பாலிவுட்.

இது ஒரு தற்காலிகமானது மட்டுமே. 2023 மீண்டும் பாலிவுட் தனது ராஜ்ஜியத்தை மீட்டெடுக்கும் என்று நம்புவோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...